தோழமையுடன்

Wednesday, April 20, 2011

ஆத்திக நாத்திக ஹம்பக்!

 ‘ஆபிதீன் பக்கங்களில்’ வந்த என் கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளேன்:

ஆத்திகம்  அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.
நாத்திகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

’ஹம்பக்’ என்றால் என்ன என்று சும்மா புரியாதவர் போல் கேட்கின்றீர்களா? இந்த ஹம்பக்கெல்லாம் நம்ம கிட்ட வேணாம் சாரே!  சரி! சரி! கோபம் வேண்டாம் விஷயத்துக்கு வருவோம்.


நீங்கள் கடவுளின் இருப்பை ஏற்பவரா? மறுப்பவரா? என்ற அடிப்படை பிரச்சனையை பிறகு பார்க்கலாம். ஆத்திகரானாலும், நாத்திகரானாலும் இருவருமே பொதுவாக விரும்பும் ஒரு விசயம் ‘நல்வாழ்வு’. சற்றே விரிவாக சொன்னால் தனிமனித மற்றும் சமுதாய நல்வாழ்வு.

‘எல்லோரும் இன்புற்றிருக்கவேயல்லாது
யானொன்றும் அறியேன் பராபரமே!’ என்பது முது மொழி
இது ஆனந்த விகடனில் வரும் வாசகம் மட்டுமல்ல நம் அனைவரின் அடிப்படை தேவையும் கூட. 

ஆனால் , சொல்வதற்கு வெட்கப்பட்டாலும் கூட அடிப்படையில் நாம் அனைவருமே சுய நலவாதிகள் தான். இந்த நல்வாழ்வு என்பது கூட நான், என் குடும்பம் எனது உறவு என தன்னலமாக ஆரம்பித்து ஊர், நாடு, உலகம் என பொது நலமாக விரியும் விசயம் தான். இது மனித இயற்கை. தவறல்ல!
ஆனால் , பொது நலம் அல்லது சமுதாய நலனின்றி நாம் சுயமாக நலமாய் இருக்க முடியாது என்ற இன்னொரு அடிப்படை விசயத்தை நாம் எளிதாக மறந்து விடுவது தான் ஒரு மகத்தான சோகம்.

யாருடைய தயவும் இல்லாமல் ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க நம்மால் முடியாது. எனக்கு சுயமாக தேநீர் போட்டு கொள்ள தெரியுமே என அவசரப்படாதீர்கள். தேநீர் என்பது தேயிலை, பால், தண்ணீர், சீனி என்ற நான்கு பொருள்களின் கலவை.  நாமே சுயமாக தேயிலையை பயிர் செய்து, மாடுவளர்த்து பால் கறந்து, கரும்பு வளர்த்து சீனியாக்கி தண்ணீரில் கலந்து அதற்கு மேல் அடுப்பில் வைத்து சூடுபண்ணி தேநீர் தயாரித்து அருந்த வேண்டும் என்றால் ஒரு தேநீராவது அருந்த முடியுமா?

’பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்கள் பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்?
காட்டாந்தரையிலே கல்லை உடைத்து
இந்த கண்ணாடி மாளிகையை யார் படைத்தார்?’

- என்ற பழைய சினிமா பாடல் ஒன்று இங்கே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நம் புத்தாடையும், சுக வாழ்வும் எத்தனையோ மக்களின் நலவாழ்வை வேண்டி நிற்கிறது. ஆக பொது நலம் என்பது தவிர்க்க முடியாத நம் சுய நலம் என்பதை மறந்துவிட கூடாது.

நாத்திகம் பேசினாலும் இதைத் தான் சுயமரியாதை இயக்கங்கள் போதிக்கின்றது.
இதைத்தான் பொதுவுடமை இயக்கங்களும் போதிக்கின்றது.
ஆத்திகம் பேசும் அத்தனை மதங்களும் போதிக்கின்றன.

இயக்கங்கள், மதங்களின் இந்த நல்ல பகுதியைத்தான் நான் ஆன்மீகத்தின் அடிப்படை என்கின்றேன்.

இந்த அடிப்படை ஆன்மீகத் தன்மையை இழந்த இயக்கத்தாராலும், மதத்தாராலும் மனித இனம் ஒருவித மிருக வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படிச் சொல்வதனால் எந்த மனிதரும் கோபித்துக் கொள்வாரோ என்பதை விட மிருகங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலையும், நல்ல வேளை மிருகங்கள் என் கட்டுரைகளை படிப்பதில்லை என்ற ஆறுதலும் வருகின்றது.

ஆன்மீகம் வந்ததற்கான அடையாளமே எல்லா உயிர்களையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் என்றார்கள் என் கண்களை விட்டு மறைந்தாலும் கருத்தில் நிறைந்திருக்கும் ஆன்மிக குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி என்ற அற்புத மகான். மேலே குறிப்பிட்ட தேநீர் உதாரணம் கூட அவர்கள் சொல்லிக் காட்டியது தான். மோகன் ஐயரும், குஞ்சு பிள்ளை அண்ணனும், என் போன்ற பலரும் அவர்களின் இல்லத்தில் இறைவேத வெளிச்சத்தில் ஏகத்துவ மெய்ஞானம் பயின்ற அந்த காலம் என் வாழ்வில் என்றும் மறவா பொற்காலம்.

குளிப்பதனால் அழுக்கு நிரந்தரமாக நீங்கி விடுவதில்லை. அதற்கு மீண்டும்  மீண்டும் குளிக்க வேண்டியது அவசியமாகிறது.ஆன்மிகம் என்பது ஒரு குளியலைப் போல அனுதினமும் தொடர வேண்டிய ஒன்று. குளிப்பதைத் தவிர அழுக்கு தீர வழியில்லை.


No comments: