தோழமையுடன்

Wednesday, November 10, 2010

நம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை


என் சின்ன வயதில் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பிரபலமான விளம்பரதாரர் நிகழ்ச்சி இது. செம ஹிட்டு அப்ப. 
“அங்கிள் எனக்கு மனசே சரியில்லை,”  ஒரு சின்ன பாப்பாவின் கொஞ்சும் குரல் சொல்லும். கவலையோடு இருப்பவர்களுக்கும் புன்னகையை வரவழைத்து விடும் வசீகரமான குரல்.
“அப்படி சொல்ல கூடாது பாப்பா. ஸ்டார் பட்டர் டொஃபி சாப்பிடு சரியாயிடும்” என ஆறுதல் அளிக்குகும் பி.ஹெஜ். அப்துல் ஹமீது போன்ற ஒரு கம்பீர குரல்.   என் நண்பர்களின் ரூமுக்கு சென்றேன்.
 “ஆபிஸுக்கு போனா ஒரு வேலையும் செய்ய முடியல கடங்காரனுவள்ட மாரடிக்கிறதுக்கு தான் நேரம் சரியாருக்கு!”, கவலையுடன் குப்புற படுத்து கிடந்தான் நண்பன். சற்றேறக்குறைய அந்த அறையில் இருந்த ஆறு பேர்களின் குரலாக அவன் பேசினான் என்பது அவர்கள் அனைவரின் முகத்தின் ஆமோதிப்பில் தெரிந்தது.  அவர்களை பார்க்கும் போது கவலையை போக்கும் ஸ்டார் பட்டர் டொஃபி கையில் இருந்தால் நலமாக இருக்குமே என தோணியது.

மெல்ல அவர்களை சகஜ நிலைமைக்கு இழுக்க "அப்பு சொன்ன இந்த கதையை கேளுங்க!" என ஆரம்பித்தேன். சாவு வீட்டிலயும் அப்பு சிரிக்க வச்சுடுவான். மிகவும் கலகலப்பனவன்.

"நம்ப அப்பு ஒரு கனவு கண்டானாம்.  காலரா நோய் கண்டு அவன் ஊரில் நூறு பேர் செத்துட்டாங்களாம். கனவில் ஊர் கோடியில் உட்கார்ந்திருந்தான் அப்பு. காலரா நேய்க்கு காரணமான தேவதை ஊரை கடந்து போனதை பார்த்தான். கனவு தானே தைரியமா தேவதையை வழிமறிச்சு "அநியாயமா இப்படி நூறு பேரை கொன்னுட்டியே!"ன்னு கேட்டானாம். “ நீ வேறே அப்பு, நான் காலராவால சாவசிடிச்சது ரெண்டு பேரைத் தான் மீதி தொன்னூத்தெட்டு பேரு காபராலேயே (பயத்தாலெயே) செத்து போயிட்டானுவ அநியாயமா என் மேல பழி போடாதே”ன்னு தேவதை கடுப்புடன் சொல்லிட்டு மறைஞ்சுடுச்சாம். எப்டி இருக்கு அப்புட கனவு. அப்புக்கு பதில் அப்துல் கண்டிருந்தால் ஏதாவது வானவர் கனவில் வந்து இதே பதிலை சொல்லியிருப்பார். மொத்தத்தில் விசயம் இது தான் அமெரிக்காவில் ரெண்டு பேங்க், நாலு கம்பெனி திவலாக, பேங்கர்களின் பயத்தால் உலகம் முழுவதும் பண புழக்கம் குறைய, ஊதி பெருக்கி பெரிசாக்குன பில்டிங்ட மதிப்பெல்லாம் சாடார்னு கீழே விழ, தொண்ணுத்தெட்டு பேர் அந்த பயத்துக்கே பலியாகிட்டாங்க. இந்த பிரச்சனை மாறுவதற்கு முதலில் பாங்கரிலிருந்து எல்லார்டையும் பரவி கிடக்கும் பயம் போவணும்".

இங்கே சின்னதா என்னை பத்தி சொல்லிடுறேன். நான் ஒரு சூஃபி என்பது எனக்கு தெரியும். இந்த பயத்துக்கு தெரியுமா? அது பாட்டுக்கு ஜம்முன்னு மனசுல நுழைஞ்சு கட்டுலு கூட தேவையில்லைன்னு பாய போட்டு படுத்துக்குச்சு. பயம் போவதற்கு நான் கண்டு பிடித்த முதல் வழி பயமில்லாதவனைப் போல இருப்பது. இரண்டாவது, இடத்தை மாத்துறது. அதனாலே தான் வெளியே கிளம்பி இந்த நண்பர்களின் சேவல் பண்ணைக்கு வந்தேன். 

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை நின்டு கூத்தாடிச்சுன்னு சொல்றா மாதிரி இங்கே நாலு கொடுமை குப்புற படுத்து கிடந்தது. இவனுவள கொஞ்சம் நிமுத்தல இவனுவ என்னையும் சேர்ந்து கவுத்துடுவானுவ என்பதால்  குப்புற படுத்து கிடக்கும் நண்பர்களையும், கூட படுத்து கிடக்கும் என் பயத்தையும் பார்த்து பேச்சை தொடர்ந்தேன்.
ஹஸன் பஸரி என்னும் புகழ் பெற்ற சூஃபி பெரியார் இதை போல ஒரு சூழ்நிலையில் சொன்ன வார்த்தைகளை கேளுங்கள்:
“பூமி விளைச்சலே இல்லாமல் செப்புத் தகடாக ஆனாலும் சரி. ஒரு தானியம் ஒரு திர்ஹம் விற்றாலும் சரி இறைவன் உணவளிப்பவாக இருக்க நான் கவலைப்பட மாட்டேன்” என்றார்கள்.
என்று சற்று இடைவெளி விட்டவன்,

“Lose not heart;
Not fall into despair;
For you must gain mastery
If you are true in faith”. (3:139)   என்ற வேத வரிகளை ஷேக்ஸ்பியர் டிராமாவில் வரும் வசனம் போன்ற தோனியில் இரண்டு, மூன்று முறை சொல்லி காண்பித்தேன்.
 
அத்துடன் என் குரு நாதர் சொன்ன ஒரு உதாரணத்தையும் தொடர்ந்தேன்.
ஒரு இருட்டு அறையிலே நீங்க இருக்கீங்க யாரோ உங்களை அடிக்கிறார்கள். கோபம் கொண்ட நீங்கள் தட்டு தடுமாறி அடிக்கிற கையை பிடிச்சுடுறீங்க. அப்ப திடீரென விளக்கு வெளிச்சம் வர அடிச்சது யாருன்னு பார்த்தா அடிச்சது பாசமுள்ள உங்க வாப்பா. இப்ப நீங்க என்ன செய்வீங்க உங்க நெலமையே மாறிடும் இல்லையா? 
ஓரளவு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீ வந்தது. குடித்து விட்டு ஒரு நண்பனை பார்த்து,                 " வாசகங்கள் பிரிண்ட்  பன்ன பனியனை ஸ்டண்ட்ஸ் போட்டுக்கிட்டு அலைவாங்களே பார்த்திருக்கீல?” என்றேன்.
“பட்டுக்கோட்டை பிரபாகர்னு ஒரு எழுத்தாளர் பரத், சுசீலான்னு ரெண்டு பேரை வச்சு கதை எழுதுவாரு. அதில சுசீலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பனியன்ல வித விதமான வாசகங்கலோட வருவாங்க இன்ட்ரஸ்டிங்க இருக்கும்”னான்
பட்டுக்கோட்டைக்கு பக்கத்து ஊரான அந்த அதிராம்ப்பட்டனத்து பி.கே.பி ரசிகரை பார்த்து “பட்டு கோட்டை பக்கத்துல கொட்டை பாக்கு விக்கிறவன்.
பட்டணத்துக்கு வந்த பின்ன கோட்டும் சூட்டும் மாட்டிகிட்டான்”ன்னு இன்னொருவன் கேலியாக பாடியதுடன், “ அம்பி எங்க  சுஜாதாட கணெஷ், வசந்தை காப்பி அடிச்சு தான் பி.கே.பி. அப்படி எழுதுனாரு”ன்னான். அறையில் கலகலப்பு களைகட்ட ஆரம்பித்தது. அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றியது.
“ஏதோ சொல்ல வந்தியே சொல்லு!” என தொடர்ந்தேன். 
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறரால் ரொம்ப துன்பத்துக்கு ஆளான நிலையில ஒரு இறைவசனம் இறங்குனுச்சு.
“(நபியே!) உம்முடைய ரட்சகனுடைய (ரப்புடைய) கட்டளைக்காக பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக நீர் எனது கண்களில் இருக்கின்றீர்” என்று.
இந்த வசனத்தில் வரும் ரட்ஷகன் (ரப்பு) என்ற இறைவனின் பண்பு பெயருக்கு  “ஒன்றை சன்னம் சன்னமாக முழுமையை அடைய வைப்பவன்” என்பதுபொருள்.
இங்க அதுட அர்த்தம் என்னான்னா?
 ஒவ்வொரு சோதனையும் உங்க ரப்புடைய உத்தரவின்படி தான் நபியே!. பிரியமுள்ள ரப்பு ஏன் அந்த சோதனையை வெளியாக்கினான். மிக சிறந்த வழிகாட்டியா உங்களை ஆக்கனுங்கிறதுக்காக. அதனால பெறுமையா இருங்கன்னு சொல்லுது இந்த வசனம். சோதனயில நபி எவ்வளவு பொறுமையா இருந்தாங்கங்கிறது நமக்கு தெரியும் தானே! காந்திஜி போன்ற நம்ப தேசத் தலைவர்கள்  நபியின் இந்த குணங்களிலிருந்து தங்கள் முன்மாதிரியை பெற்றுக் கொண்டதா சொல்லி இருக்காங்க. நம்பளும் கொஞ்சம் கத்துக்குவோமே!
 சோதனைகளால நாம சிதைக்கபடல. செதுக்க படுகின்றோங்கிறத நபிய பின்பற்றி உணர்ந்த சூஃபி ஞானிகளில் சிலர் மேலே சொன்ன இறை வசனத்தை தங்கள் ஆடையிலே எழுதி வச்சுகிட்டு தங்களுக்கு சிரமம் வரும்போதெல்லாம் பார்த்துக்குவாங்களாம்.
“உம்முடைய ரட்சகனுடைய கட்டளைக்காக பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக நீர் எனது கண்களில் இருக்கின்றீர்”
“இறைவன் நம்ப டார்லிங் சீதேவி! அவன் எல்லாத்தயும் பார்த்துகிட்டு தான் இருக்கான். கவலப்படாதீங்க.எல்லாரும் பாவ மன்னிப்பு கேட்போம். சீக்கிரம் நெலமை சரியாயிடும். துபாய் முன்னாடி இருந்ததை விட சூப்பரா ஆயிடும்”ன்னு சொல்லிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

டாக்சிக்காக அரை மணி நேரம் நின்றும் ஒரு டாக்சி கூட காலியாக வரவில்லை. ஒரு வருசமா நெறைய டாக்சி காலியா தான் ஓடினுச்சு. பொருளாதார நெருக்கடிக்கு முன்பு தான் இப்படி டாக்சி கிடைக்காத நிலை இருந்தது. டாக்சி கிடைக்காததற்கு எரிச்சல் ஏற்படுவதற்கு பதில் மனதில் மகிழ்ச்சி நிறைந்தது. டாக்சி கிடைக்காதது நாட்டில் பொருளாதார சுபீட்சம் மீள்வதற்கான அறிகுறி. இறைவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.
Post a Comment