தோழமையுடன்

Saturday, September 18, 2010

எல்லாம் அவன்? எல்லாம் அவன் செயல்?


-->
இறைவனின் அருட் கொடையாய் கிடைத்த என் ஞானாசிரியர் (ஷெய்கு நாயகம்) சில ஆண்டுகளுக்கு முன் வெளிரங்கமாக எங்களை விட்டு பிரிந்தார்கள். என் போன்ற பலரின் வாழ்வில் இறைநேசமும், மனித நேயமும் பெருக காரணமாய் இருந்த அந்த மகத்தான தோழமையின் இழப்பு அதைப் போன்ற அறிஞர்களின் சகவாச பாக்கியம் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சரித்திரத்தில் மட்டுமே படிக்க நேரும் ஒரு மகத்தான ஆளுமையுடன் உயிரும் உணர்வுமாய் வாழ கிடைத்தது மகத்தான வரப்பிரசாதம். 

 ஆன்மீகம் மட்டுமல்ல வீடு கட்டுவதலிருந்து விவசாயம் மருத்துவம், வியாபாரம், அரசியல் என சமூக வாழ்வின் பல் வேறு துறைகளிலும் இறையருளால் வழிகாட்டும் அபார ஞானம் படைத்தவர்கள் அவர்கள். என் போன்றோருக்கு இறையருள் ஞானம் கொண்டு மார்க்கத்தை இன்ப ஷரியத்தாக ஆக்கியவர்கள்.
அவர்களின் வாழ்க்கை பயணத்தில் நடந்த படிப்பினையூட்டும் சம்பவங்களின் ஒரு சிறு பகுதியை முன் வைத்து “மெய்ஞான பாதையிலே” என்ற நூல் அப்ஸலுல் உலமா,ஆன்மீக பேராசிரியர், ஜூபைர் அஹ்மது பாகவி என்ற என் அருமை நண்பரால் வெளியிடப்பட்டது. அந்த நம் சமகால வரலாற்றிலிருந்து படிப்பினைகுரிய ஓர் ஏடு உங்கள் அன்பான பார்வைக்கு…..
எல்லாம் அவன்?. எல்லாம் அவன் செயல்?
என் ஞானாசிரியர் பழம் பெருமை வாய்ந்த ஒரு ஊருக்கு மார்க்க சொற்பொழிவாற்ற சென்றிருந்தார்கள். மூன்று நாள் சொற்பொழிவு முடிந்து அவர்கள் புறப்பட ஆயத்தமாகும் போது அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது.அதில் “எல்லாம் அவனே. எல்லாம் அவன் செயலே என்பது தான் உண்மையாகும். இதற்கு மாற்றமான உண்மையிருந்தால் அதை நிருபித்து விட்டுச் செல்லவும்” என்று எழுதியிருந்தது.
அந்த பள்ளிவாசல் இமாமோ “தாங்கள் இருந்து நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கத்தில் பதில் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். வெள்ளிக்கிழமை என் ஞானாசிரியர் சொற்பொழிவை தொடங்கினார்கள். அந்த கடிதத்தில் உள்ள கொள்கையை உடையவர்கள் ‘எல்லாம் என்ன பதில் சொல்ல போகிறார்கள் பார்க்கலாம்’ என்று முன் வரிசைகளில் அமர்ந்திருந்தார்கள்.
என் ஞானாசிரியர் எல்லாம் அவனே! எல்லாம் அவன் செயலே! என்ற கொள்கை குர்ஆன் மற்றும் நபிமொழிக்கு மாற்றமானதாக இருப்பதுடன் வாழ்க்கை நடைமுறைக்கும் ஒத்துவராததாகும். அந்த கொள்கையில் நாம் உறுதியாய் இருந்தால் இவ்வுலகில் வாழ்வதே சிரமாகிவிடும்!” என்றார்கள்.

அவர்களோ என் ஞானாசிரியரை ஏளனமாக பார்த்தார்கள். தங்கள் உயர்ந்த கொள்கையின் பெருமையை எண்ணி இவர்களுக்கு புரியவில்லை என தங்களுக்குள் நகைத்துக் கொண்டார்கள்.

என் ஞானாசிரியர் பிரசங்கத்தை தொடர்ந்தார்கள்,”பாருங்கள் நீங்கள் சிரமப்பட்டு விவசாயம் செய்கிறீர்கள்.நிலத்தை உழுது, விதைவிதைத்து, நாற்று நட்டு, களை எடுத்து, வேலி அமைத்து, மருந்து தெளித்து, உரமிட்டு பாதுகாத்து பயிர் முற்றிய சமயம் வேறு எவனோ வந்து உங்கள் நிலத்தில் அறுவடை செய்து எடுத்து செல்ல நெல்லை மூட்டை கட்டுகின்றான், பதறிப்போய் நீங்கள் கேட்டால், ‘எல்லாம் அவன்! எல்லாம் அவன் செயல்!’என்று கூறினால் நீங்கள் பதில் பேச முடியாது” என்று சொல்லி நிறுத்தினார்கள்.

முன்னாலிருந்தார்களோ மீண்டும் ஏளனமாக சிரித்தார்கள். ஞானாசிரியர் உரையை தொடர்ந்தார்கள், “ இன்னொரு உதாரணம் சொல்கின்றேன் கேளுங்கள். நீங்கள் சிரமப்பட்டு ஒரு கடையை பிடித்து, முதலீடு செய்து, கொள்முதல் செய்து ஆட்களை வேலைக்கமர்த்தி வியாபாரம் செய்கின்றீர்கள். உங்கள் கடைக்கு ஒருவன் வந்து பணம் செலுத்தாமல் பொருள்களை எடுத்துச் செல்கின்றான். நீங்கள் கேட்டால், ‘எல்லாம் அவன்! எல்லாம் அவன் செயல்!’என்று கூறினால் நீங்கள் பதில் சொல்ல முடியுமா?” என்றார்கள்.

இதை கேட்டதும் இன்னும் சற்று அதிகமாக ஏளன சிரிப்பு சிரித்தார்கள். இவர்களுக்கு ரோசம் வரும்படி சொன்னால் தான் புரியும் என்பதை விளங்கிக் கொண்ட ஞானாசிரிய பெருந்தகை, “ சரி இன்னும் ஒரு உதாரணத்தையும் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் பெண்பார்த்து, மணம் பேசி, பத்திரிக்கை அடித்து, விருந்து கொடுத்து திருமணம் முடித்து உங்கள் மனைவியை வீட்டுக்கு அழைத்து வருகின்றீர்கள். அப்போது நான்கு தடியர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் மனைவியை தூக்கிச் செல்கின்றார்கள். எதிர்ப்புகள் பலனற்ற நிலையில் ‘அவளை விடுங்கடா என நீங்கள் பரிதவிக்கும் போது’, அவர்கள் ‘எல்லாம் அவன்! எல்லாம் அவன் செயல்!’என்று கூறினால் அப்போது உன் கொளகைப்படி சும்மா இருப்பாயா?” என்று கேட்டார்கள். அவ்வளவுதான் அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து சங்கடத்துடன் தலை குனிந்து கொண்டார்கள்.

அதற்கு பிறகு குர்ஆன், நபி மொழியின் அடிப்படையில் பிடறி நரம்பை விட சமீபமான இறை நெருக்கத்தின் உண்மை நிலையை (ஐனியத் - கைரியத்தை) விளக்கி பேசினார்கள்.

4 comments:

Asiya Omar said...

நல்ல பகிர்வு.

புல்லாங்குழல் said...

நன்றி சகோதரி! தொடர்ந்து உங்கள் கருத்தை பதியுங்கள்.

ஸாதிகா said...

சிந்திக்க வைத்து விட்டது சகோதரரே தங்கள் பதிவு.இது போன்று நல் ஆக்கங்களை தொடர்ந்து பகிருங்கள்!

புல்லாங்குழல் said...

சகோதரி ஸாதிகா தங்களை போன்ற எழுத்தாளர்களின் கருத்தை ஒரு துவாவாகவே கருதுகின்றேன்.நன்றி சகோதரி!