தோழமையுடன்

Friday, July 30, 2010

கடவுளை காண முடியுமா?


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பேர் பேசிகொண்டிருந்ததை கவனித்தார்.
‘கடவுளை காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,
‘ஓ முடியுமே உன் கோட்டை கழற்றி விட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார்’ என்றான் மற்றவன்.

அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் ‘தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்து விட்டீர்கள்; கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது’ என்றானாம். இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளை பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டை கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடு கட்டிய டெலிவிசன் ஆன்டென்னாக்களை தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பி பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை. கோட்டையும் காணவில்லை. கோட்டில் அந்த மாத சம்பளம்…….  (கடவுள் இருக்கின்றாரா? என்ற நூலில் எழுத்தாளர் சுஜாதா.)
சுஜாதா ஒரு விஞ்ஞானியாகவும் இருந்ததால் இயற்பியல் விதிகளில், பைனரிகளில், இன்னும் பல் வேறு அறிவியல் விளக்கங்களின் வழியாக இறைவனின் இருப்பை ஆராய்கின்றார்.
இன்னொரு பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமியோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். கலை வடிவங்களை அவர் தேடும் மெய்மையை(ரியாலிட்டியை) உணர்வதற்கான மார்க்கமாக குறிப்பிடுகின்றார். பரிபூரணத்தை நோக்கிய பயணமாக தன் எழுத்துகளை வர்ணிக்கிறார். (சுந்தர ராமசாமி – விரிவும் ஆழமும் தேடி)
இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சகோதரர்களுக்கு அல்லாஹ் என்றோ கர்த்தர் என்றோ சிவன் , விஷ்ணு என்றோ பெயரிடாமல் இறைவன் என்ற பொதுப் பெயரால் அந்த ஆதியும் அந்தமுமான மெய்பொருளை அழைப்போம். ஏகனான அந்த மகத்தான உண்மை இருப்பின் அத்தாட்சியை எங்கே தேடுவது? அதற்கான வழிமுறை என்ன?
“கடவுள் என்றோ, உண்மை என்றோ , மெய்பொருள் என்றோ அல்லது அதனை வேறு எப்பெயர் கொண்டு அழைத்தாலும் சரி, அத்தகைய பொருள் ஒன்று உண்டா என்ற கேள்விக்கு விடை கூற சமய நூல்களாலோ, சமய குருமார்களாலோ, தத்துவ மேதைகளாலோ, அல்லது வேறு எவராலும் ஒரு பொழுதும் முடியாது. நீங்களே தான் அதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். அதனாலே தான் ஒருவன் தன்னை தானே முதலில் அறிதல் வேண்டும். தன்னைத் தான் முற்றும் அறியாதிருப்பதே முதிர்ச்சியின்மை. தன்னை தான் அறிவதே மெய்யுணர்வை பெறுவதற்கான முதற்படியாகும்” என தன்னை அறிதலை வலியுறுத்துகிறார் புகழ் பெற்ற நம் இந்திய தத்துவ ஞானிகளில் ஒருவரான ஜே. கிருஸ்ண மூர்த்தி அவர்கள்.(நூல்: அறிந்தவற்றிலிருந்து விடுதலை)
ஜே.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் சமய நூல்களாலோ, சமய குருமார்களாலோ, தத்துவ மேதைகளாலோ, அல்லது வேறு எவராலும் ஒரு பொழுதும் முடியாது என கூறுவதை கண்பார்வை இல்லாதவனுக்கு நிறங்களை யாராலும் காட்ட முடியாது. முதலில் உன் பார்வையை சரி செய் என்ற பொருளிலேயே அவர் சொல்வதாகவே  நான் விளங்குகின்றேன். தன்னை அறிவது என்பதன் முக்கிய அம்சம் நம் உள்ளத்தின்  பார்வையை சரி செய்வதாகும்.  அதை பற்றி பின்பு விளக்கமாக பார்க்கலாம்.
உங்களுகுள்ளேயும் நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என்கிறது குர்ஆன்.  உன் மனமே என் ஏகத்துவ ஏகாந்த இருப்பின் அத்தாட்சியாகவும், சாட்சியாகவும் இருக்க என்னை எங்கே தேடுகின்றாய்? என கேட்பதைப் போல ஒலிக்கிறது இந்த மறைவசனம்.
தன்னை அறிதல்
விடுமுறையில் இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு நாள், என் வாழ்வின் போக்கையே உன்னதமாக மாற்றிய இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஒரு இஸ்லாமிய தத்துவ ஞானியைச் சந்தித்தேன்.
அன்பே வடிவாய், அரவணைக்கும் புன்னகையுடன், மரியாதைக்குரிய தோற்றம். அவர்கள், “நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?” என என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியின் நோக்கம் நான் எங்கே வேலை செய்கின்றேன் என்பதா? இல்லை என் சொந்த ஊர் என்ன என்பதா? என விளங்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தின் தீட்சண்யம் கேள்வி மிகவும் நுட்பமானது என்பதை விளக்கியது. தயக்கத்துடன் நான் எனது ஊரின் பெயரை சொன்னோன். ‘அப்பாவி மனிதா!’ என்பது போல் புன்னகைத்தார்கள். பின் கனிவான தோரணையில், “மனிதனுக்கு உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று அம்சங்கள் இருக்கின்றன. வெளிரங்கத்தில் தெரியும் இது உங்களுடைய உடல். இன்னும் உள்ரங்கத்தில் இருப்பது உங்களுடைய உள்ளம், உங்களுடைய ஆன்மா. இப்படி “உடைய” என்னும் உடமையை (Possessiveness) குறிக்கும் சொல் வந்தாலே அது வேற்றுமையைக் குறிக்கும். உடைய என்பது வேற்றுமை உருபு. உதாரணமாக இது என்னுடைய கண்ணாடி என்றால் கண்ணாடி என்பது நான் அல்ல. இது என்னுடைய சட்டை என்றால் சட்டை என்பது நான் அல்ல. இது உங்களுடைய உடல், இது உங்களுடைய உள்ளம், இது உங்களுடைய ஆன்மா என்றால் உடல், உள்ளம், ஆன்மா என்பது நீங்கள் அல்ல. அப்படி என்றால் இந்த உடலை, உள்ளத்தை, ஆன்மாவை உடையவரான நீங்கள் யார்? அந்த நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்” என மெலிதான புன்னகையுடன் கேட்டார்கள்.
“இறப்புக்குப் பின் கேள்வி கணக்குகள், வேதனை என்பதெல்லாம் செய்யப்படும் “கப்ர்” என்பது என்ன? ஒரு விமான விபத்திலோ, அல்லது தீ விபத்திலோ முற்றிலும் உடல் அழிந்த ஒருவருக்கு (நம் அனைவரையும் அத்தகைய திடீர் மரணத்தை விட்டும் இறைவன் பாதுகாப்பானாக!) கப்ர் எங்கேயுள்ளது? அந்த உடலற்ற நிலையில் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிப்பது யார்? அல்லது எது?” இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன. 

உங்களுக்குள்ளேயும் நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என்ற இறை வசனத்தை மையமாக வைத்து அமைந்திருந்தது அவர்களின் உரையாடல்.
தேடல்
கடவுள் என்றோ, உண்மை என்றோ , மெய்பொருள் என்றோ அல்லது அதனை வேறு எப்பெயர் கொண்டு அழைத்தாலும் சரியே, எல்லா மனிதர்களுக்குள்ளும் அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்களானாலும் சரி , இறைவனை மறுப்பவர்களானாலும் சரி. ஏதோ ஒரு வகையில் தேடல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு வினாடி கூட எனக்கு இந்த தேடல் உணர்வு வந்ததே இல்லை என எவரும்  கூற முடியாது. தன்னை அறிதலின் முதல்படியாக இந்த தேடலின் மூலத்தை தேடி பயணிப்போமா?

10 comments:

சீமான்கனி said...

//கண்பார்வை இல்லாதவனுக்கு நிறங்களை யாராலும் காட்ட முடியாது. முதலில் உன் பார்வையை சரி செய் என்ற பொருளிலேயே அவர் சொல்வதாகவே நான் விளங்குகின்றேன்.//


மொத்த கட்டுரையின் உணர்வுகளை இந்த வரிகளில் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் அருமை...தொடரட்டும்...தீன் வழியில்...தொடர்வேன்....நானும்....

புல்லாங்குழல் said...

தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் சீமான் கனி!
உங்கள் புரிதலுக்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். எல்லா புகழும் இறைவனுக்கே!

எம் அப்துல் காதர் said...

அந்த சாந்தினி சௌக் முன்பே படித்தது தான் என்றாலும், புரிதலின் தத்துவத்தை மிக நுட்பமாய் எழுதி புரிய வைத்ததற்கு நன்றி!

புல்லாங்குழல் said...

சில நுட்பமான விசயத்தை எழுதும் போது எழுதுபவாரின் பங்கு பாதிதான் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனமான வாசகர் தான் அதை முழுமையடைய செய்கிறார்.நீங்களும்,சீமான்கனியும் இந்த கட்டுரையை தொடர்ந்து எழுதும் ஆர்வத்தை தூண்டியிருக்கின்றீர்கள்.தொடர்ந்து எழுத எனக்காக இறைவனை இறைஞ்ச வேண்டுகின்றேன்.

நட்புடன் ஜமால் said...

தேடல் - ஆரோக்கியம்

இன்ஷா அல்லாஹ் - வல்ல ஏகன் நம் அனைவருக்கும் காட்டிய நல் வழியிலேயே நம்மை பயணிக்க வைக்கட்டும் - ஆமின்.

புல்லாங்குழல் said...

ஆமீன்(அப்படியே ஆகட்டும்) என உங்கள் இறைஞ்சுதலில் நானும் இணைந்து கொள்கிறேன் ஜமால் நன்றி!

தூயவனின் அடிமை said...

உங்களுக்குள்ளேயும் நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என்ற இறை வசனத்தை மையமாக வைத்து அமைந்திருந்தது அவர்களின் உரையாடல்.


நீங்கள் சந்தித்த அந்த மனிதர் யார் என்பது தெரியவில்லை, அது அவசியமும் இல்லை.
நம்மை நாம் உற்று நோக்க ஆரம்பித்து விட்டாலே, எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு கிடைக்கும் .தான் பயணிக்கும் பாதை சரியானதா என்பதை உணர்ந்து விடுவார்கள்.

புல்லாங்குழல் said...

உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நாகூராரே! தூயவன் சார் உங்களுக்கு உறவா?

தூயவனின் அடிமை said...

தூயவன் சார் உடைய குடும்பத்தினர் அனைவரையும் அறிவேன். எனக்கு
முதன் முதலில் என்னுடைய ஆசிரியர் கலிபா சார் அவர்கள், தான் என் பள்ளி
பருவத்தில் தூயவன் சார் பற்றி நிறைய கூறியுள்ளார்கள் .தூயவனின் உண்மை பெயரும் என்பெயரும் ஒன்றாக இருந்ததால், அத்தோடு இளம் என்பதையும் சேர்த்து
வைத்து கொண்டேன், மற்றபடி ஒன்றும் இல்லை.

Aathira mullai said...

ஆன்மாவின் தேடல் ஒவ்வொன்றிலும் ஆன்மீகம் நிறைந்திருப்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள். பயனுள்ள பதிவு..நன்றியுடன்..