தோழமையுடன்

Wednesday, July 21, 2010

காதல் சொன்ன வேதம்


“இறைவன் மீது நம்பிக்கைக்கொள்ளல் (ஈமான்பில்லாஹ்) என்பதன் விளைவாவது, ‘இறைவனை நேசித்தலும், அவனால் நேசிக்கப்படலும்’ என்னும் உண்மையை பல்வேறு இடங்களில் குர்ஆன் அழுத்தமாக கூறுகின்றது” என தன் புகழ் பெற்ற திருமறை விரிவுரையில் கூறுகின்றார் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத். அதற்கு ஆதரமாக பின் வரும் இறைவசனத்தை சுட்டி காட்டுகின்றார். 

“நம்பிக்கையாளர்களே உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால் (அதனால் இறைவனுக்கு நஷ்டமொன்றும் இல்லை. உங்களுக்கு பதிலாக) வேறு மக்களை இறைவன் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள்”. (5:54)
ஆசாத் அவர்களின் உதாரணம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது பாருங்கள். மேலோட்டமாக படித்தால் மதம் மாறுகின்றவர் மீது இஸ்லாமிய தெய்வம் கூறும் கோப வார்த்தைகள் அவை என நினைக்கத் தோன்றும்.  இறைவன் சொல்லும் மார்க்கம் இறைக்காதல் மார்க்கம். நீங்கள் என் காதலால் கட்டுண்டு வாழும் காதல் பாதையிலிருந்து மாறிவிட்டால் நான் வேறு மக்களை கொண்டு வருவேன். ‘அவர்கள் என்னை நேசிப்பார்கள். நான் அவர்களை நேசிப்பேன்’ என்று தன் நேசர்களை அன்புடன் எச்சரிக்கின்றான் இறைவன். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை. தன் நேசர்களை நோக்கி சொன்ன வார்த்தைகள் . அதனால் தான் ஒரு வகையில் அவை ஒரு ஊடல் கொண்ட ஒரு காதல் தலைவனின் வார்த்தைகளை போல் ஒலிக்கிறது.
அடியார்களை நேசிப்பது ஆண்டவனை நேசிப்பதே
இறைவன் என்ற முறையில் தன் மேல் வைக்கும் நேசத்தை பிறருக்கு கொடுப்பதைத் தான் இறைவன் இணைவைத்தல் என்னும் கொடிய குற்றமாக கூறுகின்றான். அதே நேரத்தில் தான் படைத்த மனிதர்களை தனக்காக நேசிப்பதை தன் மேல் கொண்ட நேசத்தின் வெளிப்பாடாகவும், தன்னுடைய கருணையை(ரஹ்மத்தை) பெரும் வழியாகவும் ஆக்கியிருக்கின்றான்.  தன் நேசர்களை பற்றி திருமறையில் இறைவன் கூறுவதை பாருங்கள்:
இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். (தம்மிடம் உபகாரம் பெறுபவர்களை நோக்கி) “நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை” ( என்று கூறுவார்கள்) 76: 8,9
இந்த இறைவசனத்திற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது இறைவனுக்கும் மனிதனுக்கும் நடக்கும் உரையாடைப் போல அமைந்துள்ள இந்த நபி மொழி.
இறைவன் மறுமை நாளின் (அடியானை நோக்கி) கூறுவான்:- ஆதமுடைய மகனே! நான் நோயுற்று இருந்தேன். நீ நோய் விசாரிக்க வரவில்லையே?
அடியான்:- நீயே அகிலங்களின் இரட்சகனாக இருக்க உன்னை நான் எவ்வாறு நோய் விசாரிப்பேன்.
இறைவன்:- எனது இன்ன அடியான் நோயுற்றிருந்தான். அவனை நீ நோய் விசாரிக்கவில்லை. நோயைக்குறித்து விசாரிப்பதற்காக சென்றிருந்தால் அவனிடம் என்னையே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?
இறைவன்:- ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவு தருமாறு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லையே?
அடியான்:- இறைவா! நீயே அகிலங்கள் அனைத்தின் ரட்ஷகனாக இருக்க நான் எப்படி உனக்கு உணவளிபேன்?
இறைவன்:- எனது இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான் நீ உணவளிக்கவில்லை.நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் நீ என்னையே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?
 இறைவன்:- ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு குடிப்பாட்டவில்லையே?
அடியான்:- இறைவா! நீயே அகிலங்கள் அனைத்தின் ரட்ஷகனாக இருக்க நான் எப்படி உனக்கு குடிப்பாட்டுவேன்?
இறைவன்:- எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர்கேட்டான் நீ அவனுக்கு தண்ணீர் அளித்திருந்தால் அவனிடம் நீ என்னையே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா? (முஸ்லிம் ஷரீப், மிஸ்காத் பக்கம் 134)
இந்த நபி மொழியில் வரும் ‘(Fபவஜத்தனி  இந்தஹு) அவனிடத்தில் என்னை பெற்றிருந்திருப்பாய்’ என்ற வாசகம் மனிதனுடன் இறைவன் மிக நெருக்கமாக(அக்ரபாக) உள்ளதையும், அதே நேரத்தில் நோயாளி, பசித்தவன், தாகித்தவன் இறைவனல்ல மனிதன்தான் என்பதையும் விளக்குகிறது. ஒரு உச்சகட்ட நேசத்தில் தன் சிருஷ்டியின் நிலையை தன்னுடன் சேர்த்து சொல்லுகின்றான் அந்த மகத்தான கருணையாளன்.
குர்ஆன் வாசிப்பு
“இறைஞானம் வந்ததற்கான அடையாளம் அனைத்து சிருஷ்டிகளையும் அன்பான கண்கொண்டு நோக்குதல்” என என் ஞானாசிரியர் சொல்வார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஒரு அரபிக் கல்லூரியின் முதல்வரான இன்னொரு ஞானசிரியர். அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்.
 “உங்கள் ஞானாசிரியர் திருமறையின் ஒரே பத்தியை பலமணி நேரம் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்களிலிருந்த்து தாரை தாரையாய் ஆனந்த கண்ணீர் வடிந்து கொண்டிருக்கும். ஒரே பத்தியை விட்டு அவர்கள் பார்வை அகலாது. எத்தனை ஞான விளக்கங்கள் கிடைத்திருந்தால் அப்படி இருந்திருப்பார்கள்” என்று. உள்ளுணர்வுடன் கூடிய நுட்பமான குர்ஆன் வாசிப்பு என்பது மெய்ஞான காதல் உரையாடல்.
 தனக்கு வந்த காதல் கடிதத்தை படிக்காமல் இருக்கும் நம்மை போன்றோரை எந்த ரகத்தில் சேர்ப்பது. குர்ஆனை விளங்கிக் கொள்ள எனக்கு என் ஞானசிரியர் செய்த பரிந்துரை. ஆங்கிலத்தில் உள்ள மவுலானா யூசூஃப் அலியின் மொழிபெயர்ப்பு. அடிகுறிப்புடன் உள்ள அழகிய மொழிபெயர்ப்பது. சவுதி அரசாங்கம் வெளியிட்ட தமிழ் பெயர்ப்பை யூசூப் அலியின் மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு படிப்பது நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட எளிய வழி.
இறைவன் தந்த வேதங்கள் என்பது மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவான செய்தி. குர்ஆன் வாசிப்பு என்பது மனதை பொன்னாக்கும் மகத்தான ரசவாதம் என்பதை தேடல் உள்ள நெஞ்சங்கள் மதபேதமின்றி பதிவு செய்திருக்கின்றன. உதாரணத்திற்காக ஒன்று.  
ஜெயமோகனின் குர்ஆன் வாசிப்பு
பிரபல இலக்கியவாதிகளில் ஒருவரான ஜெயமோகன் தன் குர் ஆன்  வாசிப்பைப் பற்றி பதிவு செய்திருப்பதிலிருந்து ஒரு பகுதி.
“கணிப்பொறியின் அருகே குர் ஆனை வைத்திருக்கிறேன். காலையில் மின்னஞ்சல் பார்க்க கணிப்பொறியைத் திறக்கும் முன் சில வசனங்களை படிப்பேன். இணையத்தில் பக்கங்கள் இறங்கிவர ஆகும் நேர இடைவெளியில் சில வரிகள். பெரும்பாலும் உடனே மறந்து விடும். பிறகு சம்பந்தமில்லாமல் எதையோ செய்துகொண்டிருக்கும்போது , வேறு எதைப்பற்றியாவது பேசும்போது சட்டென ஒரு வரி நினைவுக்கு வரும். அப்போது அது முழு அர்த்த விரிவு கொண்டதாக, முளைத்து மரமாகி விழுது பரப்பியதாக,  இருக்கும். மூளையில் பொருத்துவதை விட மனதில் விதைப்பதே கவிதைகளுக்கும் ஆன்மீகநூல்கள் சிறந்த வாசிப்பு என்பது என் அனுபவம்”.
“குர் ஆனை பலவருடங்கள் பயின்றிருக்கிறேன். நித்ய சைதன்ய யதி அந்நூலை பாடம் கேட்டபோது இறுதிநாட்களில் கவனித்திருக்கிறேன். அந்நூலின் முக்கியமான வரி, ஒட்டுமொத்தமாக நூலையே சமன் செய்யுமளவுக்கு முக்கியமானது,  அவ்வரி அதன் முதல்வரியே என்று எனக்கு படுகிறது  ' அளவிலாக் கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்... ' ' செயல்கள் , இருப்புகள் அனைத்துடனும் மெளனமாக வந்து இணையும் தன்மை கொண்டது அது. எந்த நூலிலிருந்தும் மேலும் அறியாமை நோக்கி போக முடியும் என்பதை வரலாறு முழுக்க மக்கள் நிரூபித்து வந்திருக்கிறார்கள். மனிதர்களின் இயல்பான சுயநலம் எதையும் தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது. இந்துக்கள் மூலநூல்களை முடிவின்றி மறுவிளக்கம் செய்வதனூடாக அவற்றை நிராகரிக்கிறார்கள். கிறித்தவர்கள் கிறிஸ்துவை மதநிறுவனமாக்கி செயலிழக்கச் செய்துவிட்டார்கள் . இஸ்லாமியர் கைகால் கழுவிவிட்டு ஓதி வணங்கவேண்டிய புனித நூலாக குர் ஆனை மாற்றி அதன் ஆணைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் ஒவ்வொருவரும்  இம்மூலநூல்களை வெறுமே  தங்கள்  குழு அடையாளமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவ்வடையாளத்துக்காக சாகவும், கொல்லவும் தயாராகிறார்கள். உலகம் முழுக்க வரலாறு முழுக்க நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இதுவே. நானறிந்த ராமாயணம் மாபெரும் கருணையின் இதிகாசம் . தியாகம் மூலம் மனித உறவுகளைக் கனிய வைக்க முடியுமென்பதே அதன் செய்தி. பான் பராக் குதப்பித் துப்பி கொடியுடன் கொலைவெறிகொண்டு தெருவில் நடனமிடும் இன்றைய ராமபக்தர்களை தொலைகாட்சியில் பார்க்கும்போது அவர்கள் படித்த ராமாயணமே வேறு என்று படுகிறது. ஒருவேளை மதங்களிலேயே உறுதியான நம்பிக்கையை முன்வைக்கக்கூடிய மதம் இஸ்லாம்தான். ஆனால் முடிவற்ற பொறுமையை அது மீண்டும் மீண்டும் இறைநம்பிக்கையாளார்களுக்கு ஆணையிடுகிறது
 'கூறிவிடுவீர்களாக,  'ஓ நிராகரிப்பாளர்களே நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணக்குபவர்கள் அல்லர். ...உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் , எனக்கு என்னுடைய மார்க்கம் '[ அல் காஃபிரூன் 1,2,3,6]
நபி சொன்னார்  'ஓர் அவிசுவாசியை [திம்மிய்யை] எவராவது தொல்லைப்படுத்துவார்களானால் அவன் என்னையே தொல்லைப்படுத்துகிறான் '
பொறுமைக்கான இந்த ஆணையிலிருந்தே நாம் ஒரு வெறிபிடித்த மதவெறி ஆணையை பெற்றுக் கொள்ள முடியும். பெரும்சாந்தி மந்திரங்களிலிருந்தே கொலைஆயுதங்களை  உருவியெடுக்க நம்மால் முடியும். மனிதனின் அடிப்படை அப்படிப்பட்டது என வரலாறு காட்டியுள்ளது. ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் கூட குர் ஆன் அளவில் பெரிய நூல் அல்ல. சில நாட்களிலேயே நாம் அதை படித்து முடித்துவிட முடியும். ஆனால் அறிவின் மறு எல்லைகளில் நகர்ந்தபடி அவ்வரிகளை மீண்டும் மீண்டும் நாம் வாசித்தறியவேண்டியுள்ளது. கருணையாலும் அன்பாலும் எளிமையாலும் அதை நம் அகம் உள்வாங்கவேண்டியுள்ளது. ஆம், நூலை வழிபடுவதோ சுமந்து திரிவதோ அல்ல; நம் ஆத்மாவில் வாங்குவதே முக்கியமானது.

9 comments:

HM Rashid said...

ஜெய மோகனின் குர்ஆன் வாசிப்பு நம்மை யோசிக்க
வைத்துள்ளது.
மற்ற கவனச் சிதறள்களில் மனதையும்,நம்மையும் தொலைத்து நிற்க்கும் என் போன்றோற்கள்
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு,நெய்க்கு
அலையும் நிலை.
ஊடலால் அவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை,நமக்குத்தான்!
பெருமானார் குரானையும்,அதன் கருத்துக்களையும்
போதித்தார்கள்.இறைவன் மீது நேசம் உண்டானது,அது அவர்களை அர்பணம் செய்ய வைத்தது.
ஒரு மனிதருடன் ஏற்பட்ட தொடர்ப்பு இத்தனை பெரிய
மன மாற்றத்தை எப்படி ஏற்படித்தியது என யோசிக்கும் போது,ஆயிஷா நாயகியுடைய வர்த்தைகள் நியாபகத்திற்கு வருகிறது"பெருமானாரின் வாழ்க்கை குர்ரானாகவெ இறுந்தது"
"அவன் ரப்பின்னாஷ்"(இஸ்லாமிய தெய்வம் !)
அருமையான கட்டுரை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

குர்'ஆன் வாசிக்க சுலபம்; அதன்
விளக்கங்களை யோசிக்க அநேகம்.
இதன்படி படித்து ஆராய்ந்திட
வேண்டியதன் அவசியத்தை
வெகு நேர்த்தியாய் விளக்கினீர்கள்.

இன்னுமொறு சிறப்பு: எழுத்துப் பிழைகள்
இல்லாமல் இதை பதிவு செய்துள்ளதும்
பாராட்டப்பட வேண்டிய அம்சம்.

(word verification என்பதை
நீக்கிடலாம்)

புல்லாங்குழல் said...

உங்கள் கருத்துக்கு நன்றி ரஷீத் & நிஜாம்.
நிஜாம் நீங்கள் சொல்லியவாறு 'எழுத்து சரிபார்ப்பை'நீக்கி விட்டேன்.

தூயவனின் அடிமை said...

நம் கையில் இறைவன் குர்ஹானின் மொழிபெயர்ப்பை கொடுத்து கூட அதை புரட்ட மறுக்கும் மக்களை என்ன சொல்வது.

Asiya Omar said...

உங்க ப்ளாக் அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Salahuddin said...

மகத்தான பொக்கிஷமான குர்ஆனை பெரும்பாலும் நாம் 'ஓதுவதற்கு' மட்டுமே கையிலெடுக்கிறோம். அதோடு நிறுத்தி விடாமல் அதனை 'கற்று' நம் வாழ்வில் செயல்படுத்தும்போதுதான் அதன் முழுபலனை அடைந்துக் கொள்ள முடியும்.

குர்ஆனைப் பற்றிய ஜெயமோகனின் கருத்து யோசிக்கப்பட வேண்டியது. இதே ஜெயமோகன்தான் முன்பு ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தார்: "போரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர்ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான்."

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60410141&format=html

புல்லாங்குழல் said...

குர்ஆனை தகுந்த தப்ஸீரின் துணையின்றி விளங்க முயன்றால் வசன்ம் இறங்கிய சூழல், அது முன் வைக்கும் கருத்தைப் பற்றி பல நேரங்களில் தவறான் முடிவுக்குத் தான் வருவார்கள் என்பதை பல முஸ்லிம் ச்கோதரர்களே நிருபித்து கொண்டிருக்க ஜெயமோகன் தவறான கருத்தை அடைந்ததில் ஆச்சரியமில்லை.நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலத்தை கொண்ட ஜெயமோகன் குர்ஆனை விளங்க எடுத்துக் கொண்ட சிரத்தை கூட நம்மிடம் இல்ல்லையே என்பது தான்.

Nachiya said...

அல்ஹம்துலில்லாஹ்.மிக மிக அருமையான கட்டுரை தங்களுடைய பணி தொடர எல்லாம் வல்லா அல்லாஹ் துணை புரிவானாக.{ஆமின்}.நாச்சியா ரபி. சிங்கப்பூர்