நித்தியானந்தாவின் மீது எல்லா பக்கத்திலிருந்தும் வசைச்சொற்களால் கல்லெறிகிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் அவர் செய்த மகத்தான மோசடியை யாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதில் இருவேறு கருத்தில்லை. எல்லா ஆன்மீகவாதிகளையும் மக்கள் தவறாக நினைத்து விடக்கூடதே என்ற கவலையில் மாற்று கருத்து கூறி அவரின் நிலையை நியாயப்படுத்துவதற்காக தந்திரா, மந்திரா என பூசி மொழுகுபவர்களின் கூற்றையும் நாம் பொருட்படுத்த தேவையில்லை.நமது கவலையெல்லாம் நம்மைப் பற்றித்தான்.
மனக்கட்டுபாடற்ற நிலையில் வாழும் நாமும் நமது சமூக அந்தஸ்த்தை காக்க பிறருக்கு மறைத்து பல சிறிய, பெரிய தவறுகளை செய்து கொண்டிருக்கும் நிலையில், அவர் மீது கல்லெறியும் தகுதி நமக்கிருக்கின்றதா? உண்மையில் அந்த தகுதி வந்தவர்கள் அப்படி கல்லெறிய மாட்டார்கள். இறைவனே அவரை மன்னித்து நேர் வழியில் செலுத்து என கையேந்தத்தான் செய்வார்கள்.
அவரை வசைபாடுபவர்களில் ஒரு சிலர் இன்றும் கூட அவரை மிகப் பெரிய அறிஞர், இளம் மேதை ஏன் இப்படி நடந்து கொண்டார் என தெரியவில்லை என கைசேதப்படுகின்றார்கள். அவரது அறிவு அவரை ஏன் காப்பாற்றவில்லை?. ஆன்மீகம் பேசி, அறிவுஜீவியாய் பிறருக்கு உபதேசிக்கும் ஆற்றல் எல்லாம் நம்மை நம் மனதின் தீமையிலிருந்து காப்பாற்றாது என்பதற்கு இன்னும் ஒரு அத்தாட்சி நித்தியானந்தா.
நித்தியானந்தா வருந்தினாரோ என்னவோ, “எத்தனை விவேகம் கைவந்த பின்னும் நம் கீழ்மை நம்மை விட்டு போகவில்லையே” என மகத்தான அறிஞர்கள் எல்லாம் வருந்தியிருக்கிறார்கள். ஏன் இத்தகைய மனோநிலைக்கு ஓரளவு நாமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றோம். இந்த நிலை ஏன்?
நித்தியானந்தா வருந்தினாரோ என்னவோ, “எத்தனை விவேகம் கைவந்த பின்னும் நம் கீழ்மை நம்மை விட்டு போகவில்லையே” என மகத்தான அறிஞர்கள் எல்லாம் வருந்தியிருக்கிறார்கள். ஏன் இத்தகைய மனோநிலைக்கு ஓரளவு நாமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றோம். இந்த நிலை ஏன்?
அறிவு என்பது நம்மை பாவ காரியங்களை விட்டும் காப்பாற்றாது. பாவம் செய்யும் போது மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைத் தான் சொல்லிக் கொடுக்கும். ஞானம் என்பது தான் நம்மை நேர்வழியில் செலுத்தும். அது என்ன ஞானம்?. ஞானம் என்பது மூளையிலிருந்து வரும் ஆளை வளைத்துப் போடும் அறிவுப் பூர்வமான கருத்துகள் அல்ல. அது இதயத்தை சென்றடைந்து இறையச்சத்தை உண்டாக்கும் அறிவு. இறைவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என குர்ஆனில் கூறும் அறிவைத் தான் ஞானம் என குறிப்பிடப்படுகின்றேன். உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவனும் நான் தான் அதனால் அவனுக்கு அதிகமாக அஞ்சுபவனும் நான் தான் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அந்த அறிவு தான் ஞானம். அதை அடைவதுதான் ஆன்மீகத்தின் முந்திய பகுதியாக கருதப்படுகின்றது. அந்த ஞானத்திற்கு தடையாய் இருப்பதே உலக வாழ்வில் நாம் கற்று தேர்ந்த, மூளையால் மட்டுமே சேகரித்த, இதயத்தை தொடாத பல வகை அறிவுகளும் அதனால் தன்னை பெரிதாக விளங்கும் ஆணவமும் அகம்பாவமும் தான். எது சரி எது தவறு என எச்சரிக்கும் மனசாட்சி என்பதெல்லாம் 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற ஆணவத்தினால் வலுவிழந்து போய் விடுவதால் மனம் என்பது வெறும் இச்சைகளின் பால் அழைக்கும் கருவியாக மட்டுமே செயல்படுகின்றது.
மனோ இச்சைகள்:
மனோஇச்சைகளை பற்றிய படிப்பினையூட்டும் இந்த குதிரை கதையை படியுங்கள் . ஒரு குதிரையொன்று இருந்தது. அது எப்போது சாணம் போட்டாலும் அங்கே நின்று அதை முகர்ந்த பின்னர் தான் மீண்டும் வண்டியை இழுக்கும், பிரியமான குதிரை என்பதால் அதை பொறுத்து பொறுத்து பார்த்த குதிரை வண்டிக்காரன் ஒரு நாள் வேறு வழியில்லாமல் சாட்டையை எடுத்தான். எப்போதெல்லாம் சாணத்தை முகர குனிகிறதோ அப்போதெல்லாம் ஒரு அடி கொடுத்தான். சில முறை அடிகள் வாங்கியவுடன் குதிரை சாணத்தை முகறுவதை நிறுத்தியது. சிறிது தூரம் இப்படி ஒழுங்காக சென்ற குதிரையை பார்த்த வண்டிக்காரனுக்கு தன் பிரியமான குதிரை மீது இரக்கம் வந்தது அதனால், “என் செல்லம் உன்னை அடிச்சிட்டேன்ல, இனிமே அடிக்க மாட்டேன்”என குதிரையை கொஞ்சியவனாய் சாட்டையை விட்டெறிந்தான். குதிரைக்கு அவன் கூறியது விளங்கியாதோ இல்லையோ அவன் கையில் இப்போது சாட்டை இல்லை என்பது மட்டும் விளங்கியது. அவ்வளவு தான் குதிரை அந்த வண்டியை அப்படியே திருப்பி பின் சென்றது இது வரை எந்த இடத்திலெல்லாம் சாணத்தை முகராமல் வந்ததோ அத்தனையும் சேர்த்து வைத்து முகர்ந்தது. குதிரைவண்டிக்காரன் கைசேதத்துடன் செய்வதறியாமல் திகைத்து நின்றான். மனதின் மிருக இச்சைகளை கட்டுபாடின்றி விட்டால் ஒரு பாவத்தையும் அது விட்டு வைக்காது என்பதுடன் இது வரை செய்யாமல் கட்டுபடுத்தி வைத்த அனைத்து பாவங்களையும் செய்ய வைத்துவிடும் என்பதை விளக்கும் கதையிது.
அறிவின் திறனைக் கொண்டு மட்டுமே யாரும் பாவத்திலிருந்து தப்பிவிட முடியாது என்பதை அறிவது தான் ஞானத்தின் முதல் படி. இந்த கீழான மிருக இச்சை கொண்ட நம் மனதின் (நப்ஸின்) தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு பெறும் வழிதான் ஆன்ம ஞானத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
மிருக இச்சை என்றால் என்ன? இச்சைகள் என்றாலே தவறா?
பசி, காமம் போன்ற பல்வேறு இச்சைகள் மனிதன், மிருகம் போன்ற உயிரினங்களின் இயல்பாய், பிரியமாய் இன்னும் தவிர்க்க முடியாத தேவைகளாய் இருக்க அந்த இச்சைகளை யார் தவறு என்று சொல்ல முடியும். பின்னர் அந்த இச்சைகள் தவறாவதும் மிருக இச்சைகள் என முத்திரை குத்தப்படுவதும் எப்போது?
மனிதன் இச்சைகள், ஆசைகள் தேவைகளை உடையவன் ஆனாலும் அவனது ஆன்மீக அந்தஸ்து மிகவும் உயரியது. மனிதன் இறைவனின் பிரதிநிதியாய் வந்தவன். மனிதன் மனிதனாய் வாழ்ந்தால் வானவர்களை விட அவன் உயர்ந்தவனாவான். இச்சைகளின் அடிமையானால் மிருகங்களை விட கேவலமாவான்.மிருகங்களுக்கு எந்தவித கட்டுபாடும், கடமையும் இல்லை. இன பெருக்கம், தற்காப்பு, உயிர் வாழ்தல் என்று குறைந்த தேவைகளுடன் அமைந்த குறுகிய வட்டத்தில் வாழும் உயிரினங்கள் அவை. அந்த தேவைகள எந்த இடத்திலும், எப்படி வேண்டுமென்றெல்லாம் அவை நிறைவேற்றிக் கொள்கிறன. அவை தம் மனம் போன போக்கில் நடக்கின்றது. அவைகளை பொருத்தவரை அவை தம் இயல்பான இச்சைகளை, தேவைகளை அடைந்து கொள்ளும் பாதைகள் தவறல்ல. மிருகம் மிருகமாய் நடந்து கொள்வது எப்படி தவறாக முடியும்?.
இறைபிரதிநிதியாக பூமிக்கு வந்த மனிதனோ அன்பு, நீதி, நேர்மை என இறையாட்சியை பிரதிபலிக்க வந்தவன். தனிமனித வாழ்க்கை மட்டுமின்றி குடும்பமாய், சமூகமாய், நாடுகளாய் கூட்டு வாழக்கை வாழக் கூடிய எல்லா நிலையிலும் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டியவன். அப்படிப்பட்ட மனிதன் முழுமையான மனித தன்மையுடன் மனிதனாய் வாழ்வதற்கு சில கடமைகளையும், சில கட்டுபாடுகளையும் இறைவன் வழங்கியுள்ளான். நம்மை உருவாக்கியவன் நம் நலவாழ்வுக்காக தந்த விதி முறைகள் அவை. அவைகளைத் தான் இஸ்லாம் 'ஷரீயத் சட்டங்கள்' என சொல்லுகிறது.
நம் ஆசைகளை, தேவைகளை அடைவதில் இறைவன் நல்வழிகாட்டலாய் விதித்துள்ள கட்டுப்பாட்டையும், கடமையையும் மீறி மனம் போன போக்கில் நடக்கும் போது அந்த இச்சைகளை ‘மிருக இச்சை’ எனவும் அதை அடைய தூண்டும் மனோ நிலையை ‘நப்ஸே அம்மாரா’ எனவும் சொல்லப்படுகின்றது.
நமக்கும், மிருகங்களுக்கும் இப்படி இச்சைகளை அடைவதில் உள்ள வேறுபாடு தான் இந்த சரி, தவறு என்ற கோட்டை போட்டு பிரித்து காட்டுகிறது.
வாழ்வின் சுகங்கள்
உலக வாழ்வின் எண்ணற்ற சுகங்களை இறைவன் மனிதனுக்காகத் தான் படைத்துள்ளான். அவன் அனுமதித்த சுகங்களையும், அவைகளை அடையும் ஆகுமான வழிமுறைகளை நபிமார்கள் என்ற தன் தூதர்களின் மூலம் வேத வெளிச்சமாய் வழங்கி நமக்கு வழிகாட்டினான்.திருமணம், சம்பாத்யம் என்னும் வாழவாதாரங்களை தேடும் வழிமுறைகள் மட்டுமின்றி, மல, ஜலம் கழிப்பது முதல் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தன் இணையற்ற அறிவினால், தன் படைப்பின் மேல் உள்ள கருணையினால் நபிமார்கள் மூலம் வழிகாட்டியுள்ளான். இந்த வேத வெளிச்சத்தை பெற்ற நபிமார்கள் வெற்று உபதேசிகளாய் இல்லை. அவர்கள் எதை போதித்தார்களோ அதன் படி அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மனித சமுதாயத்திற்கு வழிமுறையானது. உலகம் முழுவதும் வந்த ஆயிரக்கணக்கான தூதர்களின் வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் உலகில் இறைவன் தன் பிரதிநிதியை அனுப்பாத பகுதிகளே இல்லை என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தான் மனித வாழ்வின் அனைத்து கலாச்சாரங்களும், பண்பாடுகளும் உருவானது. ஆனால் காலபோக்கில் அவநம்பிக்கைகளும், குருகிய நோக்கமும், இறையறிவை விட தன் சிற்றறிவை பெரிதாக விளங்கிய தன்மைகளும் இன்னும் பிறவும் சேர்ந்து பல்வேறு புதிய கலாச்சாரமும், பண்பாடுகளுமாய் மனித இனம் சீரழிவின் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது.
இன்பம் தரும் பொருட்களை படைத்த இறைவனே அவைகளை விபச்சாரம் போன்ற தவறான வழியில் அடைவதை தடுத்தான். மது அறுந்துதல், பன்றி இறைச்சியை உண்ணல் போன்றவற்றில் மனித இனத்துக்கு நன்மைவிட தீமையே இருப்பதால் அவைகளை அனுபவிப்பதை தடை செய்தான். இதில் அவனுக்கு கட்டுபட்டவர்கள் யார் என தரம் பிரித்து காட்டினான். கட்டுபட்டவர்களின் ஆன்மீக நிலை இறைவனிடத்தில் உயர்ந்தது. அவர்களைத் தன் நேசர்களாக்கிக் கொண்டான். அவர்களின் வாழ்க்கை கண்ணியமும், நிம்மதியும் கொண்ட வாழ்வானது. இந்த இறைநேசர்களான ஆன்மீகப் பெரியார்கள் நபி வழியில் தானும் நடந்து உலகுக்கும் வழிகாட்டினார்கள். யாரை இறைவன் (அவர்கள் மனோ இச்சையின்படி தேர்ந்தெடுத்துக் கொண்ட ) வழிகேட்டில் விட்டு விட நாடி விட்டானோ அவர்களுக்கு இந்த இறை நேசர்களான உபதேசிகளின் (வலியுன் முர்ஷிதா) தோழமை கிடைக்காது என இறைவனே கூறுகின்றான்.
இந்த மெய்யடியார்களின் சகவாசத்தின் நோக்கமே நமது நப்ஸின் தீங்கை விட்டு நம்மை பாதுகாக்கும் , இன்னும் இணைவைத்தலிருந்து நம்மை பாதுகாக்கும் ஏகத்துவஇறைஞான பொதனைகள் மூலம் நமக்கு இறை நெருக்கத்தின் உணர்வையூட்டுவதும் , அதனால் நம் காரியங்களுக்கு நாம் இறைவனையே முற்றிலும் சார்ந்தவர்களாய், அவன் உதவியைக் பெற்று வாழும் நேர்வழியில் செலுத்துவதுமேயாகும்.
நப்ஸே அம்மாரா என்பது தான் நம் ஆன்மீக முன்னோற்றத்தில் தடைக்கல்லாய் இருக்கும் விஷயம். முதலில் நப்ஸ் என்றால் என்ன? என்பதை பார்ப்போம்
தன் உணர்வு (self consciousness) என்பது ‘ரூஹு ஊதுதல்’ என்பதன் மாறலாய் இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடை. இந்த தன்னுணர்வு நமக்கு இறைவனால் இடைவிடாமல் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த தன்னுணர்வின் மூலம் தான் நமக்கு நம் இருப்பு (existence) வழங்கப்படுகின்றது. அதாவது நமது நப்ஸ் நமக்கு வழங்கப்படுகின்றது. அதன் மூலமாய் தான் நாம் நம்மையும், பிறரையும் அறிகின்றோம். அடுத்து இந்த அறிதல் என்னும் செயல்பாட்டின் மூலமாய் சேகரமாகும் பல்வேறு அறிவுகளின் தகவல் சேகரிப்பு மையம் தான் இதயமாகும். இறைவன் அந்த இதயத்துக்கு தன் இறைத் தன்மைக்கு சாட்சியாய் இருக்கும் அறிவை முதலில் வழங்கினான். “நீதான் எங்கள் ரப்பு” என அனைதுயிர்களும் சாட்சியளித்தன. இன்னும் நமது நப்ஸ் எனும் சுயத்திற்கு அதன் (வளர்ச்சியைக் கெடுக்கும்) தீமையையும் (அதனை தன் அளவில் முன்னேறச் செய்யும்) இறையச்சத்தையும் உணர்த்தினான். இவை எல்லாம் நாம் இந்த உலகில் பிறப்பதற்கு முந்திய ஆன்ம உலகம் என்ற நிலையிலேயே நடந்த விஷயங்கள். அவனுடைய இறைத் தன்மையை ஒத்து கொண்ட நம்மை. அந்த தன்மைகளின் பலன்களை அனுபவித்து சுவைத்து சாட்சி சொல்வதற்காக இந்த உலகில் பிறக்கச் செய்தான்.
மனதை உயர வைக்கும் மார்க்கம்
நாமாக நல்லவர்களாய் இருக்க முடியாது. நாமாக மனோ இச்சைகளை ஜெயிக்க முடியாது. எந்த நனமையையும் சுயமாக செய்யவோ, இல்லை எந்த பாவத்தை விட்டும் சுயமாக தப்பிக்கவோ முடியாது இறைவனின் கருணை இருந்தாலே தவிர. இந்த நம் பலகீன நிலையை உளப்பூர்வமாக உணர்ந்து “யாஅல்லாஹ்! நானாகவே நான் இல்லை ஒவ்வொரு வினாடியும் உன் ரஹ்மத்தான கருணையால் இருக்கின்றேன்” என அல்லாஹ்விடம் தன்னை(நப்ஸை) ஒப்படைத்து அல்லாஹ்வைக் கொண்டு வாழும் மனம் இறையாசனமாகின்றது (அர்ஷுல்லாவாகின்றது). இஸ்லாம் என்பது இஸ்திஸ்லாம் தன்னை அல்லாஹ்விடம் சரண் செய்வதாகும். (Islam means submission to Allah). அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்கள் அல்லாஹ்வை கொண்டே ஒவ்வொரு நொடியும் வாழ்கின்றார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் “இறைவா உன் கருணையில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம்(selfன் வசம்) என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அபுதாவுது, அஹ்மது பார்க்க முஸ்லிமின் அரண் பக்கம் 83).
நமது இறைநம்பிக்கையின் அடிப்படையான இந்த இறைஞானக் கல்வி புத்தகத்தில் படித்து மூளையையில் பதிய வைத்துக் கொள்ளும் அறிவல்ல. இதயத்தை கொண்டு உணர்வாக்கிக் கொண்டு இறையச்சமாய் வெளிப்படும் விசயம்.
5 comments:
சிந்திக்கதூண்டும் அருமையான கட்டுரை. தொடரட்டும் உங்கள் பணி தொய்வின்றி.
mr. noorul ameen, nice post, can you post again "how to do Umrah:
thanks
Saddiq
வித்தியாசமான கண்ணோட்டம்.
DEAR NOORUL AMEEN,
ALLAH NAM ANAIVARUKKUM IRFAANUDAYA VILAKKATTHAYUM AANMEEGA THELIVAYUM ARUL PORUL AAROKYATTHAYUM MOOVULAGA VETRI-YAYUM THANDHU ARUL PAALIPPAANAAGA
SIRANDHA PADHIVU,ATRPUTHAMAANA VILAKKAM.
ALHAAJ M.I.MUHAMMAD MANSUR ALI
”ஞானம் என்பது மூளையிலிருந்து வரும் ஆளை வளைத்துப் போடும் அறிவுப் பூர்வமான கருத்துகள் அல்ல. அது இதயத்தை சென்றடைந்து இறையச்சத்தை உண்டாக்கும் அறிவு. இறைவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என குர்ஆனில் கூறும் அறிவைத் தான் ஞானம் என குறிப்பிடப்படுகின்றேன். உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவனும் நான் தான் அதனால் அவனுக்கு அதிகமாக அஞ்சுபவனும் நான் தான் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அந்த அறிவு தான் ஞானம்.”
வாலறிவனின் நற்றாளைத் தொழவைப்பதே,கற்பதின் பயன் என்பதை ஆழமாகச் சொல்லியிருக்கிறீர்கள் இக்கட்டுரையில்... நன்றி
Post a Comment