தோழமையுடன்

Thursday, February 2, 2012

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது


புதுக்கோட்டை முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்களுக்கு  2012 –ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. 

1997-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற மதக்கலவரத்தின்போது மத நல்லிணக்கப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர். கோட்டை அமீர்”.  படுபாதகர்கள் இவரது உயிரைப்பறித்தனர் - இவரது நினைவாக இவரது பெயரில் தமிழ்நாடு அரசு 2001 –ம் ஆண்டு மத நல்லிணக்க விருது ஒன்றினை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த பணியாற்றி வரும் ஒருவருக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 

      இந்தாண்டு இந்த விருதினைப்பெறும் புதுக்கோட்டை முனைவர் ஜெ.ராஜாமுகமது தமிழ்நாடு அரசு அருங்காட்சியத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வரலாற்று ஆய்வாளர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக சமூக மத நல்லிணக்கப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது மத நல்லிணக்கப்பணிகள் சகோதர சமுதாயத்தினரால் பெரிதும் பாரட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் இந்து முஸ்லிம், இந்து - கிருஸ்துவர் என மக்களிடையே மதப்பிணக்குகளும் பூசல்களும் ஏற்பட்ட போது அந்த மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமரசம் காண பாடுபட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் பெரிதும் பாராட்டியுள்ளது. புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் மத இனக் கலவரங்களைத்தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைதிக்குழுவின் உறுப்பினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆய்வுரைகள், கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்து வருபவர். குன்றக்குடி அடிகளார் நிறுவியுள்ள அனைத்து சமய கூட்டமைப்பான திருவருள் பேரவையின் மாநில செயற்குழு உறுப்பினர். திருவருள் பேரவை நடத்திவரும் மத நல்லிணக்க மாத இதழான திருவருள் இதழின் ஆசிரியராக இருந்தவர். இன்றளவும் சாதி மத இன பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மனிதநேய பணியாற்றி வருபவர்.

     இத்தகைய சிறப்புகளுடன் மத நல்லிணக்கத்திற்கு பாடுபட்டுவரும் முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்களுக்கு 26.1.2012 அன்று  சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதினை வழங்கி சிறப்பித்தார்கள். இந்த பரிசு ஒரு தங்கபதக்கம், 25,000-00 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழுடன் கூடியதாகும்.