தோழமையுடன்

Monday, February 8, 2021

தட்டப்பாறை – நாவல் : முஹம்மது யூசுஃப்

“ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் பிரதிகளின் தன்மை வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் முடங்கும் போது, அந்த போதாமையைச் சுட்டிக்காட்டும் பொருட்டே இஸங்கள் தோன்றுகின்றன” என இஸங்கள் ஆயிரம் நூலில் எம்.ஜி.சுரேஷ் சொல்லுவார்.

 ‘டாக்குபிக்சன்’ என தன் எழுத்தை வகைப்படுத்தும் முஹம்மது யூசுஃபின் தட்டப்பாறை நாவல் நியோலாகிஸம், புரோட்டோலாகிஸம் ( பரோட்டா அல்ல), பருப்பு ரசம் என எந்த வகை இஸத்தை சேர்ந்தது என்பதை எதிர்காலத்தில் புதிய ஆய்வாளர்கள் எடுத்து சொல்லும் போது அவர்களுக்கு அமீரக மந்தி வழங்கி கவுரவிக்கப்படலாம் ( யூசுஃப் கவனிக்க) 

 யாவரும் பதிப்பகம் அழகிய வடிவமைப்பில் வெளியிட்டுள்ள ‘தட்டப்பாரை’ தூத்துக்குடி சிலோன் காலனியில் ஆரம்பித்து ஒரு நீண்ட இந்திய பயணத்திற்கு பிறகு இலங்கையில் சென்று முடியும் கதை.

 இலங்கை அகதி, இந்திய ராணுவ வீரர் இன்னும் பல பரிமாணம் கொண்ட ஜெயசீலன் என்கின்ற தேவசகாயம், 

அறிவொளி வீசும் இருளன் என்ற தேவசகாயத்தின் கம்யூனிஸ்ட் தோழர், 

அநாதை குழந்தையாய் இலங்கையிலிருந்து இந்தியா வந்து, கிருஸ்தவ மிசனரியால் வளர்க்கப்பட்டு பிரான்ஸில் பணியாற்றி வரும் டேனியல் – மனித இனத்தின் ஆதியைத் தேடி பயணிக்கும் வெப் சீரிஸ் இயக்குனர்,

 அஜித் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் மெக்கானிக் கடக்கரை- டேனியலின் இனிய பயணத் துணைவன், 

அபு என்கின்ற அட்டகாசமான ஹேக்கர், 

சௌம்யா என்கின்ற அழகிய ஜார்னலிஸ்ட், இவர்கள் தான் நாவலின் கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரங்கள். 

 சம்பவங்கள், வர்ணனைகள், தர்க்கம், உணர்வுப் பூர்வமான உரையாடல்கள் வழியே நகரும் நாவலைத் தான் அதிகம் வாசித்திருப்போம். மாறாக, ‘தட்டப்பாறை’ தகவல்களின் வழியே நகரும் நாவல். மனித இனத்தின் பேதமற்ற ஆணிவேரைத் தேடும் நெடும் பயணத்தைக் கூறும் நாவல் இது. 

 பக்கத்துக்கு பக்கம் சுவையான தகவல்கள் என்ற விளம்பரத்தில் வருவதையும் மிஞ்சி பத்திக்குப் பத்தி சுவையான தகவல்கள் கொண்ட அரிய ஆய்வு நூலாகவும் அமைந்திருப்பது இந்த நாவலின் கூடுதல் சிறப்பு. நாவலாசிரியரின் கடும் உழைப்பை இது வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் விசயங்களை உள்வாங்க வழமையான வாசிப்பிலிருந்து மாறுபட்டு மிகுந்த கவனத்தையும், மீள்வாசிப்பையும் கோறும் நிலை என் போன்ற எளிய வாசகனைச் சற்று திணறடிக்கக் கூடும். அத்தகைய வாசகர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் இவை என விளங்கினால், எல்லாவற்றையும் உள்வாங்க முடியாவிட்டாலும் ‘அப்பாடா! இவ்வளவு விசயம் இருக்கா?’ என்ற வியப்புடன் விசயத்தின் சாரத்தை மட்டும் உள்வாங்கி அடுத்தடுத்த பத்திக்கு நகர்வது உத்தமம். நாவலை முழுவதும் வாசித்த பிறகு, கதை பகுதியை விட்டு விட்டு தகவல்களை மட்டுமாவது மீள்வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்துவது நலம்.

அதே நேரத்தில், வினோதமான கனவுகளின் வழியே சற்றே மாய எதார்த்த சூழலில், 1001 இரவு அரேபியக் கதைகளைப் போலக் கதைக்குள் கதை என சுவாரஸ்மாகவே செல்கிறது தட்டப்பாறை. யூசுஃபின் எழுத்துகளில் எப்பவுமே சுவாரஸ்யம் என்பது குறைந்தபட்ச உத்தரவாதம். 

 இந்த நாவலை படிக்கும் நாம் தனித்த நிலையிலோ, ஒரு சமூக அமைப்பாகவோ நம் சகமனிதன் மீது இழைக்கும் அநீதிக்காக மனிதன் என்ற வகையில் வெட்கப்படாமல் இருக்க முடியாது என்பதை இந்த நாவலின் வெற்றியாகவே கருதுகின்றேன். 

 ஒரு சில இலக்கிய பரிசுகளை வெல்லக் கூடிய வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள்.
உங்கள் அடுத்த நாவலை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றேன்.