தோழமையுடன்

Wednesday, November 13, 2019

கடற்காகம் – முஹம்மது யூசுஃப்


படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாத சுவாரஸ்யமான நாவல் யூசுஃபின் கடற்காகம். இன்னும் தகவல் கொண்டாடிகளுக்கு இது ஓர் அறுசுவை விருந்து. தமிழில் ஒரு முக்கிய ஆவணமாக பல்வேறு புதிய தகவல்களை முன்வைக்கின்றது.


கருத்தியல் என்ற போர்வையில் ஷியா, சன்னி என முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கி சண்டை போட வைத்தது பிரிட்டிஷ், ரோமானிய அரசுகள் தான். ஷியாங்கிற கொள்கையே முதலாம் எலிசபெத் ஆசியுடன் இரண்டாம் ருடால்ஃப் மன்னரின் தயவில் தான் உருவானது.

முக்கிய நபிமார்களின் அடக்க ஸ்தலத்தை தன்னகத்தே கொண்ட பலஸ்தீனத்தின் ஆக்ரமிப்புக்குப் பின் இருக்கும் நோக்கமே அங்கே உள்ள இஸ்லாமிய வரலாற்று அடையாளங்களை அழிப்பது தான்.

இறைவேதம் வழங்கப்பட்ட மூத்த குடி இந்துக்கள் தான்.

சுனாமி போன்ற பேரழிவு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இது போன்ற பல்வேறு கருத்துகளை சில ஆதாரங்களுடன் முன்வைத்து. இது தொடர்பான மேலாய்வுக்கும், வாத பிரதிவாதங்களுக்கும் களமமைக்கிறது கடற்காகம்.

டெல்மா தீவின் அழகு, கடலை நேசிக்க வைக்கும் வர்ணனைகள், மருத்துவமனை பற்றிய துல்லியமான விவரணங்கள், மாந்திரீகம் என சுவாரஸ்யமான பின்ணனியில் அமைந்த கதை மாந்தர்களின் பாத்திர வார்ப்புகள் எல்லாம் அருமை. குறிப்பாக சமீரா டீச்சர் என்ற பாத்திரத்தின் ஆரம்ப அத்தியாயங்கள். பள்ளி மாணவிகளுக்கு Moby-Dick, French Blue, பரீதுத்தீன் அத்தாரின் “மன்திக் அல் தய்யார்" என அற்புதமான கதை சொல்லியாக  படைத்திருப்பது கவிதை, பாராட்டுகள் யூசுஃப். பிற்பகுதியில் மலினப்படும் சமீராவின் பாத்திரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்.

கவர்ந்திழுக்கும் புத்தக வடிவமைப்பைப் பாராட்டலாம். ஆனாலும் பானுவை ஜானுவாக மாற்றுவது போன்ற அச்சுப்பிழைகள் ஒரு குறையே.

கதையல்ல நிஜம் என்பதால் இறுதி அத்தியாயம் ஏற்படுத்திய மன அதிர்வுகள் மனதை உலுக்கியெடுக்கிறது. அதன் தொடர்ச்சியாய்...

 “எத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத நிழல் போல் எப்போதும் தொடரும், கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள்” என சுனாமியில் மனைவியையும், மகளையும் இழந்த டாக்டர் தாரிக்கின் மனநிலையை நாவலை படித்து முடிக்கும் போது வாசகனிடம் கடத்தி விடுகின்றது கடற்காகம்.

இன்னும் ல பதிப்புகள் வெளியாகி பரவலான வாசகத் தளத்தை பெறும் என நம்புகின்றேன்.


Wednesday, April 3, 2019

பழி நாவலை முன் வைத்து - 2

அன்புள்ள அய்யனார் விஸ்வநாதனுக்கு,

பழி நாவலைப் பற்றிய என் முந்தைய பதிவின் தொடர்பாக சில விளக்கங்கள்.

எண் ஒன்று…..

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டுக் கதவுகளைத் தட்ட வைத்தது என்ற வார்த்தைகள்…..


பழைய தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகன் வில்லன் எல்லாம் ஆக்குரோசமாக மோதிக் கொண்டிருக்கும் போது. யாரையும் தாக்க முடியாத காமடியன்  எனக்கு கிடைத்தவன் நீ தான் என ஒரு ஒல்லி குச்சி ஓமக்குச்சியை ஆசாமியைப் பிடித்துக் கொண்டு. ஆய் …ஊய் எனத் தாக்குவது போன்றது.  ( ஓமக்குச்சி எனச் சொல்வாயோ எம் ஆசானை எனச் சீடர்கள் யாரும்        கத்தியை உருவ வேண்டாம். நானும் அய்யனாரின் ரசிக மன்றத்து ஆள் தான்……)  

எண் இரண்டு….

இந்த மிருக காட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்குப் பசியை விற்க வேண்டாம் என்ற வார்த்தைகள்

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் ஏற்படுத்திய மன ரீதியான பாதிப்பின் வேதனை இருந்ததனால் இதற்கு எதிரான எல்லா காரணிகளும் களையப் பட வேண்டும் என்ற வகையில் முன் வைத்த கோரிக்கையே! தவிரத் தாக்குதல் நோக்கம் கொண்ட வார்த்தைகள் அல்ல.

ஒரு புத்தகத்தை படித்ததனால் குற்றங்கள் நடக்கிறது என்பது நிச்சயமாக முட்டாள் தனம் தான். ஆனால் ஒரு புத்தகம் நம் உணர்வைச் சிறிதளவு கூட சீண்டாது என்பதுவும் ஒரு வகை அப்பாவித்தனம் இல்லையா?. (இதை சொல்லுங்கள் கோபால்.. சொல்லுங்கள் என்று சரோஜா தேவி வாய்ஸில் படிக்கவும்)

எளிதில் புறம் தள்ள முடியாத அப்பழுக்கற்ற உங்கள் எழுத்து திறன் நேசிக்கத்தக்கதுஉங்கள் எழுத்தைச் சொற்பமே வாசித்திருந்தாலும்.    உங்கள் எழுத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு உண்மை. நண்பரே வீட்டுக்கு            வாருங்கள் என அழைத்ததும் sincere ஆக உங்கள் நட்பு நாடியே!.  ஆகவே இதை எதிர்ப்பாளனின் வார்த்தையாகப் பார்க்காமல் ஒரு நண்பனின் கோரிக்கையாகப்  பாருங்கள்.

அடுத்து பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது பற்றி திரு ஜெயமோகன் கூறுவதையும் உங்கள் முன் வைக்க ஆசைப்படுகின்றேன்:

பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைப்பேர் அதை நுட்பமாகமெய்யாக எழுதுகிறார்கள்கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் சிக்கத்தக்கவைஉதாரணமாக ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உள அழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாகக் காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவேஎன்கின்றார் ஜெயமோகன்.

முழுவதும் படிக்காமல் விமர்சனம் செய்கின்றாய் என்ற கேள்வியிலிருந்த நியாயத்தைக் கருதி. உங்கள் பழி நாவலை முழுமையாக வாசித்தேன். ஒரு சாதாரண கருவை அழகியலோடு சொல்லும் உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது. ஆனால் அதில் விரவி இருக்கும் மிகை காமம் நாவலின் அழகியல் ஒருமையை வெகுவாக சிதைக்கிறது என்பது என் எண்ணம்.

அமீரகத்தின் சாருவே!, நீங்கள் இன்னும் சிறப்பான உச்சங்களைத் தொட வேண்டும் என்பது என் ஆசை. 

பேரன்புடன்,

நூருல் அமீன்










உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Thursday, March 28, 2019

அய்யனார் விஸ்வனாத்தின் 'பழி'யை முன்வைத்து





அன்புள்ள அய்யனார் விஸ்வனாத்,

உங்கள் 'பழி' நாவலை ஒரு சில அத்தியாயங்கள் படித்தவுடன, தொடர முடியாமல் மூடி வைத்து விட்டேன். நிச்சயமாக நீங்கள் ஒரு நவீன புஷ்பா தங்கதுரையோ, உங்கள் கதை ராணி முத்தில் வரக் கூடிய நாலாந்தர கதையோ இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நீங்கள் முயன்றால் மேல்நாட்டு கிளாசிக்கல் எழுத்தின் தரத்தில் தமிழில் எழுத முடியும் அத்தகைய ஒரு ஆகர்சம், மேஜிக் உங்கள் எழுத்தில் இருக்கிறது. எங்களுக்காக அப்படி நீங்கள் எழுத வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இப்படித்தான் ஆபிதீன் நானாவிடம் நீங்கள் வைக்கம் பஷீரைப் போல எழுத வேண்டும் எனச் சொன்னதற்கு. அப்படி எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஆனால் அவருக்கும் என் பூண்டு கதை தான் பிடிக்கிறது என்ன செய்ய என்றார். அந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளர் புதுமைப் பித்தன் போர்னோவை விரும்பி வாசிப்பார் என எங்கோ படித்தது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதபு கருதி ஆபிதீன் நானாவிடம் பதில் பேசவில்லை.

உனக்குப் பிடிக்காவிட்டால் படிக்காதே. ஒரு எழுத்தாளனுக்கு அவன் எப்படி எழுத வேண்டும் எனச் சொல்லுவது அசட்டுத் தனமா? அடாவடித்தனமா? எனக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். இன்று காலையில் படித்த Hussain Amma வின் வரிகளில் இருந்த வேதனை தான் எனக்கு உங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது ..

ஹூசைனம்மா

"பொள்ளாச்சி கொடூரம் ……. நெஞ்சில் கடப்பாரையைப் பாய்ச்சியது. "எத்தனை பேருடா வருவீஙக?" என்ற ஒரு வசனம் தந்த அதிர்வின் காரணமாகவே, மகாநதி படத்தின் நகைச்சுவை காட்சிகளைக் கூட பார்ப்பதில்லை. அதன் நிஜ வெர்ஷன் இந்த பொள்ளாச்சி கொடூரம்!!

சற்றே அதைக் கடந்தால், இதோ தமிழகத்தின் ஆஸிஃபா.... அக்குழந்தையின் பெயரைத் தெரிந்துகொள்ளக் கூட அச்செய்தியை வாசிக்கப் பயமாக இருக்கிறது.

எங்கே போகிறது தமிழகம்? என்ன நடக்கிறது? ஏன் இப்படி?

நோய்க்கு மருந்து கொடுப்பதோடு, நோய்முதல் நாடுவதுதான் இப்போதைய அவசரத் தேவை. குடியும், ஊடகங்களில் ஆபாசம் ஆகியவையே முதற்காரணிகள்.

பொள்ளாச்சி நிகழ்வுகள், ஆபாச படங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை நமக்கு உணர்த்துகின்றன. போர்னோகிராஃபி என்பது பொழுதுபோக்காக இருந்தது போய், ஒரு சீரியஸான தொழிலாக மாறிவிட்டது. ஹாசினி, சென்னை அபார்ட்மென்ட் மாற்றுத்திறனாளி சிறுமி, இப்போது கோவை சிறுமி உட்பட அதன் விளைவுகள்தான்.

சமீபத்தில் போர்ன் வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட போது மக்கள்(???) எதிர்ப்பின் காரணத்தால் தடை நீக்கப்பட்டது.

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? "ஆண்கள் திருந்த வேண்டும்" என்ற கோஷம் மட்டுமே பயன் தராது. தவறு செய்யத் தூண்டும் காரணிகளும் -தவறு செய்தால் கொடுந்தண்டனை கிடைக்கும் என்ற பயமின்மை உட்பட - ஆராயப்பட்டுக் களையப்பட வேண்டும்".

அதிகாலையில் ஹூசனம்மாவின் இந்த வரிகளைப் படித்ததும் ....நம் தாயகத்தை நினைக்கையில்.....போலீஸ் ஸ்டேசன் இல்லாத ஒரு பொறுக்கி சாம்ராஜ்யத்தில் மக்கள் வாழ்வது போன்ற ஒரு பிரமையும்.

எடுஙகடா அந்த திருப்பாச்சி அருவாளை அந்த கயவாளி தோப்புக்குள்ளே பூந்து எல்லா வாழைப்பழத்தையும் சீவி எறிந்திடலாம் என்ற வேகமும்....

பெருந்திரளாக மக்களின் கைகளில் ஏந்தி நிற்கும் தீபந்தங்கள், மெழுகுவர்த்திகள் இருள் நீக்கும் என சிறிது ஆசுவாசமும்….

எங்கே...ஒரு சுவிட்ச போட்டு எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விடுவார்கள் அந்த மோடி மஸ்தான்கள் என்ற பயமும்….

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டு கதவுகளைத் தட்ட வைத்தது.

இந்த மிருககாட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்கு பசியை விற்க வேண்டாம்.

எதிர்கால தஸ்தாவஸ்கியான நீங்கள் குடும்பத்துடன் ஒரு தேநீர் அருந்த வீட்டுக்கு வாருங்கள். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.

பேரன்புடன்,
அமீன்

அய்யனாருக்கே அறுவாளா என ஆசிப் பாய் சொல்வது காதில் கேட்கிறது. நம்ப வேண்டாம். நட்பு நாடியே இந்த மடல்.


Wednesday, March 6, 2019

ஒரு வாசகனின் பார்வையில் - ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’

 உயிர்த்தலம்’ சிறுகதைகளைப் படிக்கும் உங்களுக்கு....

இந்த நூலின் கதைகள் வழமையான சிறுகதை வடிவத்தில் இல்லை. ஒரு நாவலின் சில அத்தியாயங்களைப் போல, ஒரு டயரியின் சில பக்கங்களைப் போல இருக்கிறது என்றெல்லாம் தோன்றினால் அதை சரி எனவும் . சரியில்லை எனவும் சொல்லலாம்.


சரி என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவையில்லை. சரியில்லை என்பதை எப்படி என பார்க்கும் முன்.... 

இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு ரூபாய்’ கதையிலிருந்து சில வரிகள்:

 “மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கிஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கிவியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போதுஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம்சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமாஎலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக் கொண்டு சாகின்றன.

நூறு பேரைச் சுமக்கும் மினிபஸ் என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் கூறாகச் சொல்லத் துவங்கி அதையே எதிர்கால பாரதத்தின் குறியீடாக விரிப்பது, இந்திரா பார்த்தசாரதியின் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் யுக்தி.  

இந்த ஒரு கோணத்தில் இ.பா.வின் version 2.0 என ஆபிதீன் அவர்களை சொல்லலாம்.

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து என்பார் ஜெயமோகன். ஆபிதீன் அவர்களின் எழுத்தும் வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கிக் கடக்க முயலும் தியானம் தான்.

பரந்த விஷயஞானமும், சுய எள்ளலும், எல்லா புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் ஹராமித் தனத்தையும் ஒருங்கே கொண்டவை அவரது கதாபாத்திரங்கள்

நாகூரின் வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந்த version 2.0 வின் சிக்கலும், அழகும் அதன் வட்டார வழக்குத் தான்.

வாழைப்பழம்என்ற ஆபிதீன் நானாவின் கதைக்கு கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ‘ஆபாசம்’ கலந்து நிற்கிறது என நான் முகநூலில் அங்கலாய்த்திருப்பதற்கு,   வாழைப்பழ கதைக்கே இத்தனை ஆதங்கம் எனில் ஆபிதீனின் ‘தினம் ஒரு பூண்டுக் கதையை  டெட்டாலால் கழுவி விட்டுத்தான் படிப்பீர்களா  என கேள்வி எழுப்பி இருந்தார் Sadayan Sabu.  ( ‘வாழைப்பழம்’,  ‘தினம் ஒரு பூண்டுஇரண்டு கதைகளும் இந்த தொகுப்பில் இருக்கிறது.)

இப்படி எல்லாம் ஏன் இவர் எழுத வேண்டும் கேட்டால்,

"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."  என ஜி. நாகராஜன் போல சொல்ல முடியாது.

 ஏனென்றால் ஆபிதீன் அவர்களின் கதைக்களம் வேறு, நாகராஜனின் கதைக்களம் வேறு.        திரு நாகராஜனின் கதைக்களம்  முற்றிலும் மாறுபட்ட உலகம். அந்த சூழலுக்கு அது தேவைப் பட்டிருக்கலாம்.  மேலும், வேறு சிலரைப் போல நரகல் நகைச்சுவையை added attraction ஆகக் கொண்டு தூக்கி நிறுத்த வேண்டிய தேவை ஆபிதீனின் கதைகளுக்கில்லை. அன்றாட வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளை, வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கி  எளிமையாகக் கடக்க உத்வேகமளிக்கும் motivation தான் அவர் எழுத்தின் மிகப் பெரிய பலம்.

எங்களைப் போன்ற எளிய வாசகர்களுக்காக ஆபிதீன் அதிகம் எழுத வேண்டும். அதுவும் நாவல் எழுத வேண்டும். அதன் மூலம் வைக்கம் பஷீருக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓரளவு நிறைவு செய்ய ஆபிதீனால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Sunday, February 24, 2019

அமீரகத்தில் ஒன்பது தமிழ்ப் புத்தகங்களின் அறிமுக கூட்டம்

ஒரு இனிய மாலை பொழுதில் பர்துபாயில் அமீரகத்தில் ஒன்பது தமிழ்ப் புத்தகங்களின் அறிமுக கூட்டம் (22.02.2019) நடந்ததது. நிகழ்வின் சிறு குறிப்பு உங்கள் பார்வைக்கு.



நாஞ்சில் மண்ணின் மனம் பரப்பும் குட்டிகூராவின் அழகிய அறிமுகம், தொடர்ந்து காதலே சுவாசமாய் என்ற நாவலை எழுதிய தேவாவை அவரது நாவலின் கதாநாயகனுடன் ஒப்பிட்டு  நூலை அறிமுகம் செய்ய வந்த சான்யோ கலாய்த்தார்.  ‘காதலே சுவாசமாய் என்ற அவரது நாவலின் பெயரைப் பார்த்து தேவாவை அமீரகத்தின் ரமணிசந்திரன் என நினைத்தால், அவர் மேடையேறி அய்யனார் விஸ்வனாத்தின் புத்தகத்தைச் சாருநிவேதிதா பிரஞ்சு எழுத்தாளருடன் ஒப்பிட்டது, கொஞ்சம் தஸ்தயேவ்ஸ்கி, ஜெயமோகன் நாவல் கலையில் கூறும் வாசக இடைவெளி என பேசியதும்யப்பாவ்இவ்வளவு பெரிய ஆளா நீ என வியக்க தோன்றியது. ஜெஸிலா பானுவின் மூசாவைப் பற்றி ஒருவர் அழகிய முறையில் அறிமுகம் செய்தார் பெயர் நினைவில் இல்லை. அதை தொடர்ந்து ஹேமாவின் காணொளி. அதில் மூஸாவை வாழ்த்தி வரவேற்றதுடன் கலை வெளிப்பாடுகள் எல்லாம் காமத்தின் மடைமாற்றம் (sublimation) என்று சுகிசிவத்தை முன்வைத்து கூறியது எனக்கு எப்போதோ படித்த ஓஷோவின் வார்த்தைகளை நினைவூட்டியது.  அடுத்து பிரபு கங்காதரனின் காளியைப் பித்து மனோ நிலையின் கவித்துவமாக கூறியது புத்தகத்தை படிக்கத் தூண்டியது. இப்படி மூன்று நேரம் நடந்த நிகழ்வில் பேசிய தெரிசை சிவா, FM புகழ் RJ நாகா,பிலால் அலியார், ஷோபியா துரைராஜ் என ஒவ்வொருவரது பேச்சும் மிகவும் சுவராஸ்மாக இருந்தது. உச்சக்கட்டமாக பாலாஜியின் கலாய்பில் அரங்கமே அதிர்ந்தது. ஒட்டு மொத்தமாய் சொன்னால் இந்த குழுவின்  ஓரத்தில் உட்கார்ந்து நாமும் தேநீர், சம்சாவுடன் கொஞ்சம் இலக்கியமும் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. (ஆசிஃப் பாய் your attention please.)

இதைத்தவிர, முஹைதீன் பாட்சா, மஜீத் பாயுடன் நீண்ட இடைவேளிக்குப் பிறகு அமீரகத்தின் இலக்கிய ஆளுமை விருது பெற்ற ஆபிதீன் நானாவைச் சந்தித்ததில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த நிகச்ழ்சிக்கு வாருங்கள் சந்திப்போம் என என்னை அழைத்து விட்டு வேலை நிமித்தம் தாயகம் சென்றிருக்கும் மணல் பூத்த காடு யூசூஃப், எஸ். ரா. வுக்கு 100 சிறுகதைகள் ஈந்த ஷென்ஸி இவர்களை சந்திக்க முடியாதது தான் எனக்கு குறை.

அரங்கை விட்டு வெளியில் வரும் போது சந்தித்த சிவகுமார் கையில் வைத்திருந்த நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்என்ற புத்தகத்தை ஆவலுடன் நான் பார்ப்பதை பார்த்ததும் , புத்தகத்தை என்னிடம் நீட்டிய வண்ணம் நீங்கள் எந்த குழுமம் (எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா?) என கேட்டபோது எனக்கு எங்க ஊரில் சிறுவயதில் கேட்ட ஆன்மீக சொற்பொழிவின் நினைவு வந்தது. நான் ஆன்மீக எழுத்தாளர் என ஆசிப்மீரான் அண்ணாச்சி சொல்லி விட்டதால் ஆன்மீகம் பற்றிச் சொல்லாமல்  இந்த பத்தியை முடிக்கக் கூடாது என்பதால் அதையும் இங்கே பதிவு செய்து விடுகின்றேன்.

எங்கள் ஊரில் நாகூர் கந்தூரிக்கு முதல் நாள் வானவேடிக்கை நடைபெறும். அதில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் பள்ளிவாசல் திண்ணையில் படுத்து தூங்கி விட்டார். அதிகாலையில்பஜ்ர்தொழுகைக்கு அவரை எழுப்பியதால் தொழுகையில் சேர்ந்து கொண்டார். அத்தஹியாத் என்ற தொழுகையின் அமர்வு இருப்பில் அவரது வலது புறம் ஷாஃபி மதஹபை சேர்ந்தவர் அமர்வில் ஆள்காட்டி விரலை நீட்டி  தொழுது கொண்டிருந்தார். அவரை சைடு பார்வையில் பார்த்த வானவேடிக்கை நண்பரும் விரலை நீட்டினார். அவரது இடது பக்கத்தில் இருந்தவர் ஹனஃபி மதஹபை சேர்ந்தவர் அதனால் அவர் விரலை சிறிது நேரம் நீட்டி விட்டு மடக்கி விட்டார். இடது புறம் சைடு பார்வையால் பார்த்த வானவேடிக்கை நண்பருக்கு நீட்டனுமா? மடக்கனுமான்னு குழப்பமாய் போய்விட்டது, ஆகவே தொழுகை முடியும் வரை கொஞ்ச நேரம் நீட்டுவதும், கொஞ்ச நேரம் மடக்குவதுமாக சமாளித்தார். தொழுது முடித்ததும் பக்கத்தில் தொழுதவர் நீங்கள் ஷாஃபியா, ஹனஃபியா என்றார். வானவேடிக்கை நண்பருக்கு அவர் கேட்பது ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த விழித்தார். எந்த மதஹப் என அவர் மீண்டும் அழுத்தி கேட்கவே, அவர் ஏதாவது ஒரு பதிலை சொன்னால் தான் தன்னை விடுவார் என்பதால்நான் வாணவேடிக்கை மதஹபுஎன்றார்எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா? ன்னு என்னை கேட்ட சிவக்குமார் சார், நானும் வாணவேடிக்கை மதஹப் தான் சார்.

இந்த நிகழ்வை அருமையாக நடத்திய ஆசிஃப் மீரான் பெருமுயற்சி எடுத்து அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகளைஒட்டக மனிதர்கள்என்ற பெயரில் வெளியிட்டிருக்கின்றார். எனது சிறுகதை! ஒன்றும் அதில் உண்டு என்பதால் வாங்கி வந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். எடுத்தவுடன் ஆபிதீன் நானாவின்     “ வாழைப்பழம்நாப்பத்தாறு பக்க சிறுகதை. நாசமத்து போற ஆபிதீன் நானா ஏன் தான் இப்டி கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ஆபாசம்கலந்து எல்லா ஹைசியத்தையும் எழுதுராஹலோ. ஹமீது ஜெஹபர் நானாவை கேட்டால் அது தான் அபிதீனின் signature என்பார். என்ன பலாவோ என்று ஏசிய வண்ணம் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு அவசர அவசரமாக கனியாப்பிள்ளைங்ககண்ணுல படக் கூடாதுன்னு அலமாரியில் புத்தகத்தை ஒளித்து வைத்தேன் மீதி கதைகளை வாசிப்பதற்காக.  

ஆபாசம் மட்டும் இல்லை என்றால் ஆபிதீன் நானாவின் எழுத்துகள் முழவதையும் தொகுத்து என் சொந்த செலவுலேயே செம்பதிப்பாக வெளியிட்டிருபேன் என்றார் எனக்குள் உள்ள ஆன்மீகவாதிசும்மா இறி காலச்சுவடு வெளியிட்ட அஹடஉயிர்தலத்தைகண்ணுலயே காட்டாத மனுசன் அஹ என அடக்கினேன்.

நன்றி!

வஸ்ஸலாம்.

பி.கு. ஷாபி, ஹனபி மதஹப் என்பது இரண்டு இஸ்லாமிய சிந்தனை பள்ளி ( School of thoughts)






உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.