தோழமையுடன்

Sunday, December 18, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா,ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந்து எனக்கு நானே எழுதி கொண்டவை இவை. உங்களில் சிலருக்கும் பயன்படலாம் என்பதால் சுஜாதாவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றியுடன் இதை பகிர்ந்து கொள்கின்றேன்.


ஆன்மீகத்தின் பயன்களில் ஒன்று அகவளர்ச்சியின் மூலம் பெரும் அகமலர்ச்சி. நல்ல சிறுகதை போன்ற இலக்கிய வாசிப்பும் அதற்கு உதவலாம் என்பது என் எண்ணம்.
ஆயிரக் கணக்கான நாட்களின் அனுபவங்களின் தொகுப்பிலிருந்து நாம் கற்றதும், கற்பித்ததுமாய் உருவானது நம் பார்வை (Vision). இந்த பார்வையை வடிமைப்பதில் நாம் வாழும் சூழல், பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு மனிதர்களின் சரியான, தவறான பங்களிப்பிருக்கிறது. இவற்றிலிருந்து நம்மில் படிந்த வர்ணங்களின் ஊடே வாழ்வின் உண்மைகளை நாம் பார்க்கின்றோம். ஆயிரக் கணக்கான நாட்களின் அனுபவங்கள் ஆயினும் நம் அனுபவம் என்பது மனித சரித்திரத்தில் கோடான கோடியில் ஒரு சின்னஞ்சிறு பகுதி. ஒரு மாகா சமுத்திரத்திலிருந்து விரலில் படிந்த நீரைப்போல. ஒரு சிட்டுக் குருவி தன் அலகில் அள்ளி எடுத்த ஒரு சொட்டு நீரைப்போல.

நல்ல புத்தங்களின் வாசிப்பு, இலக்கிய வாசிப்பு என்பது பல் வேறு மனித அனுபவங்களை நமக்களித்து வாழ்வின் நாம் அறியாத கோணங்களை அறிமுகப்படுத்துகிறதுநமது குறுகிய கண்ணோட்டத்திலிருந்து ஒரு பரந்த சிந்தனை தளத்துக்கு நம்மை கொண்டு செல்கிறது. நம் பார்வையை வடிவமைப்பதில் தொடர்ச்சியான வாசிப்பின் வலுவான பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்றுஅதிலும் எழுதுவதற்கு விரும்புபவர்கள் கட்டாயம் நிறைய வாசிக்க வேண்டும். பொது மக்களிடம் பேசும் நேரத்தை விட அதிக நேரம் தியானம் செய்ய வேண்டும் என்பது ஓர் ஆன்மீகபாடம்.   வாசிப்பு என்பது எழுத்துக்கான தியானம்.

இனி சிறுகதை எழுதுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

"சிறுகதை என்பது ஒருவிதமான தொகுப்பு அல்லது கூட்டிணைப்பு. Synthesis வாழ்வின் பல இடங்களிலும் பார்த்த சம்பங்களையும், மனிதர்களயும், இடங்களையும் இணைத்து செய்யும் புது கலவைத் தான் சிறுகதை" என்கிறார் சுஜாதா.

ஒரு கதை எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு தன் "ஏழையின் சிரிப்புஎன்ற கதையை தான் எழுதிய விதத்தை கொண்டு இப்படி விவரிக்கிறார் சுஜாதா:


நான் மெரினாவில் பார்த்த ஒரு பிச்சைக்காரன், ஒரு நாள் போகும் வழியில் பார்த்த சவ ஊர்வலம், பல்கலை கழகத்தில் செண்டினரி ஹாலில் நடந்த ஒரு சொற்பொழிவு, நான் படித்த இயற்பியல் கருத்துகள், சந்தித்த பெயர் தெரியாத ஒரு பெண் ரசிகைஇவர்களை ஒன்றிணைக்கும் போது ஏற்பட்ட வண்ண பாFலுடா அதுஎன்கிறார்.


மேற்கூறியது போல் பல்வேறு காட்சிகளை மனதில் வரிசைகிரமமாக  சீன் பை சீன் கற்பனை செய்த பின் தொகுத்தெழுதுவதல்ல சிறுகதை. ஏதாவது ஒரு சின்ன பொறி , மன உறுத்தல், அலைகழிப்பு என ஒரு சின்ன கதைக்கரு மனதில் தோன்றினால் அதை எழுதி பார்க்க வேண்டும். எழுத எழுத அதன் தொடர்புள்ள பல விசயங்களை மனது தானே கோர்த்தெடுக்கும் மாலை தான் சிறுகதை.


தொடர்ச்சியாக எழுத முயல வேண்டும். எழுத முயலும் போது சில சமயம் மேலே எழுத முடியாமல் நின்று விடும். சில சமயம் வேறொன்றை எழுதும் போது முதலில் எழுதியது அங்கே வந்து நுழைந்து கொள்ளும். அதேநேரத்தில் நமக்கு பிடித்த பத்தி என்பதற்காக கதைக்கு தேவையில்லாத இடத்தில் சேர்த்தால் சுருதி பேதமாகிவிடும். எப்படி இருந்தாலும் எழுதுவதை நிறுத்தக் கூடாது. தினம் சில பக்கங்களாவது எழுத வேண்டும். இப்படி எழுதி எழுதி பழக எழுத்து கைவசமாகும் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம். 

ஒரு சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் முரண்பாடுகளை (conflicts) சிறுகதையின் முக்கிய அம்சமாக குறிப்பிட்டிருந்தார் சுஜாதா. அவர் எந்த அர்த்தத்தில் எழுயிருந்தார் என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், முரண்பாடுகள் நம்மை எழுதுவதற்கு தூண்டுகிறது என்பது உண்மை.

கற்றறிந்த உன்னத ஞானங்கள், தத்துவங்கள், அடைந்த தெளிவுகள், ஒப்பு கொண்ட ஒழுக்க நெறிகளைக் கொண்டு கட்டியமைக்கப்பட்டநான்என்ற பிம்பம் ஒரு புறம்.

நம் சொல், செயல், நடவடிக்கைகள், மனோ நிலைகள் மூலம் நிஜ வாழ்வில்  வெளிப்படும்  உண்மையானநான்’  மறுபுறம்.

இவ்விரண்டுக்கும் இடையிலான  இடைவெளியை குறைத்து முரண்பாடுகளை இயன்ற வரை செப்பனிடும் வழியென்ன? என்பதை எழுத்தில் அலசும் போது கதை பிறக்கிறது.

இங்கே நான் என்பது எழுதுபவனின் சொந்த அனுபவங்கள் மட்டுமல்ல. பல் வேறு மனித அனுபவ தொகுப்பின் சாரமது. எழுதுவன் வாழ்வில் சந்தித்த, கேட்க, படிக்க நேர்ந்த மனித சமுதாயத்தின் அனுபவத்தை கற்பனையில் தனதாக்கி  பார்க்கும் நான்.

எல்லாவுயிரிலும் தன்னை பார்ப்பதும். தனக்கு வெளியே நின்று தன்னை பார்ப்பதுமான ஆன்மீக நிலை எழுதாளனுக்கு அவசியம். 

அதே நேரத்தில் நேர்மையாக பதிவு செய்வதில் உள்ள சிக்கல் கதாபாத்திரத்தின் அனுபவம் அனைத்தையும் எழுத்தாளனின் அனுபவமாய்  பார்க்க நேரிடலாம் என்பதில் இருக்கிறது

 அப்படி இல்லாமல் வாசகன் கதையுனூடே தன்னை அடையாளம் காணும் போது அல்லது அந்த சூழலில் ஒருவனாய் பங்கேற்கும் போது சிறுகதை வாசிப்பில் சுருதி சேர்கிறது.

இன்ன சந்தர்பத்தில் நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்? அல்லது அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் அதற்கு பதிலாக இப்படி நடந்து கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்பதை கதாபாத்திரங்களின் மன ஓட்டமாக காட்டலாம். காட்டி அதற்கு பிறகும் அவன் மீண்டும் சருகும் காட்சியில் கொண்டு முடிக்கலாம். இது மிகவும் அமெச்சூரான பழைய டெக்னிக். சொல்லியும் சொல்லாமலும் கதை நகர்த்தி சிறுகதை முடியும் இடத்தில் வாசகரின்  எண்ண ஓட்டத்தை தூண்டி  அவரது சுயஅலசலுக்கு வழிவகுப்பது தான் நல்ல சிறுகதை.

மனிதனைக் குணரீதியில் மேம்படுத்துவதில் இலக்கியப் படைப்புகளுக்கு எதுவும் இடமுண்டா? என்ற கேள்விக்கு பிரபஞ்சன் : “பெரும்பாலும் இல்லை. மனிதனைக் குணரீதியில் மேம்படுத்துவது இலக்கியத்தின் வேலையாக என்றுமே இருந்தது இல்லை. இலக்கியத்தின் நோக்கமும் அதுவல்ல. குள்ளஞ்சாவடிச் சந்தைக்கு மாடு பிடிக்கத்தான் போகிறோம். பக்கத்தில்தானே குறிஞ்சிப்பாடி. தம்பிக்குப் பெண்ணும் பார்த்துவிட்டுப் போலாமே என்றாற் போல, மாடு பிடிப்பதுதான் நோக்கம். பெண் பார்ப்பது அடுத்ததுதான். இலக்கியம், சமயங்களில் சில உன்னதமான தருணங்களைப் படம் பிடித்து விடுவதுண்டுதான்என்கிறார்.

ஆயினும், யாரோ ஒருவரின் அனுபவத்தில் தன்னை இனம் கண்டு கொள்ளும் வாசகன் கதையின் தொடர்ச்சியாய் தனது கற்பனையில் காணும் சுயஅலசல்கள் அடுத்த முறை அதே தவறுகளை செய்யும் வாய்ப்பை குறைத்துவிடும் வாய்ப்பு இல்லாமலில்லை. 


இறுதியாக சிறுகதையின் வடிவ அடிப்படைகளை பார்ப்போம்சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்கின்றார் ஜெயமோகன்:


1. சிறுகதையின்உடல்ஒருமை(unity) கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும். எந்த நோக்கத்துடன் ஒரு கதை எழுதப்படுகிறதோ அதன்பொருட்டே அந்தக் கதையின் எல்லா விஷயங்களும் அமைந்திருப்பதே ஒருமை. சிறுகதையின் நோக்கம் ஒரு மையக்கருத்தை சொல்வது அல்ல. ஒரு திருப்பத்தைச் சொல்வதுதான் அப்படிப் பார்த்தால் ஒரு சிறுகதையில் உள்ள எல்லா கூறுகளும் அந்த திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த உதவியிருக்குமென்றால் அது ஒருமை உள்ள சிறுகதை.


2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவேதிருப்பம்(twist) என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.


3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிலேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின்ஒரே ஒருபுள்ளியைமட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதைஒன்றை மட்டுமே சொல்லக்கூடியஇலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ஒருமை இல்லாமலாகும்.


4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.


5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.


 பார்வையிடுங்கள்: 


அழியாச்சுடர்கள் என்ற தளம் நல்ல சிறுகதைகளை தொகுத்து வழங்குகிறது.எஸ்.ராம கிருஷ்ணன் தேர்வு செய்த 100 சிறந்த கதைகளின் சுட்டி  தமிழ்தொகுப்புகள் தளத்தில் உள்ளது.


நேரம் கிடைக்கும் போது பார்வையிடுங்கள்.

4 comments:

http://abebedorespgondufo.blogs.sapo.pt/ said...

Very good.

STEVE SPEAKS1 said...

good

STEVE SPEAKS1 said...

nalla pathivu

sabeer.abushahruk said...

நல்லதொரு பதிவு.

பிரபஞ்சன் சொல்வதுபோல் 

//“பெரும்பாலும் இல்லை. மனிதனைக் குணரீதியில் மேம்படுத்துவது இலக்கியத்தின் வேலையாக என்றுமே இருந்தது இல்லை. இலக்கியத்தின் நோக்கமும் அதுவல்ல.//

இலக்கியத்தின் நோக்கம் எதுவாகவோ இருந்தாலும். நல்ல இலக்கியம், சமூக அவலங்களைப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியம், நிறைவில் அந்த அவலங்களால் தீங்குதான் என சொல்லி முடிக்கும்போது, அந்த அவலத்தில் உழன்றவன் மனதில் மாற்றம் ஏற்படுத்தாதா? குறைந்தபட்சம் ஒரு 'வருத்தம்' தோன்றாதா?