தோழமையுடன்

Monday, December 5, 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி


"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பயங்கரவாத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வெளிப்படுத்திய இந்த நியாய உணர்வினை “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள்”  என்ற தலைப்பில் எழுத்தாளர் வாஸந்தி  எழுதியிருந்தார். உயிர்மை நடத்தும் உயிரோசை டிசம்பர் 2008 வார இணைய இதழில் வெளி வந்த அந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி
எல்லாப் பேரிழப்புகளிலும் , துயரங்களிலும் ஒரு வாய்ப்பு இருப்பதாகச் சொல்வார்கள். அத்தகைய தருணத்தை நாடு இப்போது சந்திப்பதாகத் தோன்றுகிறது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பேரிழப்பு ஓலம் இன்னும் அடங்காத நிலையிலும் அத்தகைய வாய்ப்பு இன்று புலப்படுவது தெரிகிறது. கட்சி, இன, மொழி பேதம் மறந்து எல்லோரையும் ஒன்றிணைக்கச் செய்யும் வாய்ப்பு. ஏனென்றால் அந்தச் சம்பவம் எல்லாத் தரப்பு மக்களையும் அதிர்ச்சிகொள்ளமட்டும் செய்யவில்லை. மிதமிஞ்சிய கோபம் கொள்ளவும் வைத்தது. அந்தக் கோபம் நிஜமானது. பயங்கரவாதத் தாக்குதலின் நிதர்சனம் போல அதுவும் நிதர்சனமானது. திடீரென்று எல்லை தாண்டி நுழைந்த மதியிழந்தவரின் கொடூரமான, கயமைத்தனம் மிக்க விவஸ்தையற்ற துப்பாக்கிச் சூட்டில் நிறபேதம், மதபேதமில்லாமல் மும்பையின் நிராயுதபாணி அப்பாவிமக்கள் மண்ணில் விழுந்தபோது தூக்கத்தில் உலுக்கப்பட்டதுபோல அதைக்கண்ட அதிர்ச்சியில் கோப உணர்வுதான் எல்லாருக்கும் ஏற்பட்டது. மிக இயல்பாக நிர்வாகத்தின் மீதும் அரசுமீதும் ஏற்பட்டது. அதற்குக் காரணம் இருந்தது. தேசம் நிறைய பார்த்துவிட்டது இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை. அப்படியும் எந்தப் பாடமும் கற்காத மெத்தனத்தில் இருக்கும் அமைப்பைக்கண்டு, மக்களைப் பாதுகாக்கத் தவறிய நிர்வாகத்தைக் கண்டு அதற்குத் தலைமை தாங்கும் அரசியல் தலைவர்களைக்கண்டு மக்களுக்கு - மத்யதர, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அசாத்திய கோபம் வந்தது.
அந்தச் சீற்றம் பல ஸ்தாபனங்களையும் நிர்வாகத்தையும் உலுக்கிவிட்டதோடு பலரைக் கவலை கொள்ளச் செய்தது . மக்களின் கோபம் ஜனநாயக வேர்களை பலவீனப்படுத்திவிடுமோ, மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை போய்விடுமோ என்று சிலர் அச்சப்பட்டார்கள். உடனடியாக வந்த ஐந்து மாநில அவைத் தேர்தலின்போது மக்கள் அது தேவையற்ற பயம் என்பதையும் பாரதத்தில் வேறூன்றிவிட்ட ஜனநாயக மரபு அத்தனை சுலபமாக ஆட்டம் கண்டு விடாது என்பதையும் நிரூபித்தார்கள். ஆனால் மிகக் கேவலமாக,
தேர்தல் பிரச்சாரத்துக்கு பாரதீய ஜனதா கட்சி மும்பைத் தாக்குதலில் அரசியல் ஆதாயம் தேடப்பார்த்தது. காங்கிரெஸ்ஸின் பலவீன ஆட்சியே பயங்கரவாதிகளின் அத்து மீறலுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தே ஜெயித்துவிடலாம் என்று நினைத்தது. இந்த எதிர்மறை பிரச்சாரத்தை நல்ல வேளையாக மக்கள் நிராகரித்தார்கள். மூன்று மாநிலங்களில் பாஜக அடிவாங்கியது. நல்ல நிர்வாகத்திற்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளித்தார்கள். காஷ்மீரில் தேர்தலைப் புறக்கணிக்க அறைகூவல் விடுத்த பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் நடுக்கும் குளிரில் வந்து வரிசையில் நின்று அதிக விகிதத்தில் வாக்களித்தார்கள். ஜனநாயகத்தில் தமக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். நல்ல வாழ்வு வாழ தமக்கு அடிப்படைத் தேவைகள் முக்கியம் என்பதையும் , அது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பினாலேயே சாத்தியம் என்பதையும் புரிந்து கொண்டார்கள். கண்மூடித்தனமான , வெறுப்பைக்கக்கும் மதப் பிரச்சாரத்துக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பதையும் பயங்கரவாதத்தால் இழப்பு என்பது பொதுவானது என்பதையும் உணர்த்தினார்கள். தாக்குதலுக்குப் பின் கூடிய முதல் பாராளுமன்ற விவாதத்தில் இன்னொரு அதிசயம் நடந்தது. எப்போதும் சிண்டைப் பிடித்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆச்சரியமான ஒற்றுமையைக் காண்பித்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எல்லோரும் ஒரே தளத்தில் கைகோத்து நிற்பதாகத் தெளிவு படுத்தினார்கள்.
வேறு தளத்தில் ஒரு மௌனப் புரட்சி நடந்து வருகிறது. இந்த முறை நாடு முழுவதும் ஈத் பெருநாள் மிக அடக்கமாக நடந்து முடிந்தது. பல முஸ்லிம்கள் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்று கறுப்புப் பட்டைத் துண்டுகளை அணிந்தார்கள். பல முக்கியமான மசூதிகளில் இமாம்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி பயங்கரவாதிகளை எதிர்க்க, சேர்ந்து போராட உறுதிபூண்டார்கள். இந்தியாவின் மிகப் பெரிய மசூதியான தில்லி ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம், 'ஜிஹாத்' என்ற பெயரில் மும்பையில் கிட்டத்தட்ட 200 உயிர்களை பலிகொண்ட செயல் எல்லா மக்களுக்கும் எதிராக நிகழ்ந்த மாபெரும் குற்றம் என்றார். இந்திய மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவித்துவரும் பாகிஸ்தானையும் கடுமையாகக் கண்டித்தார்

நாடு முழுவதும் ஈத் திருநாள் அன்று முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது எதேச்சையான செயல் அல்ல. மும்பை தாக்கப்பட்ட நாட்களில் நகரத்தின் முஸ்லிம்கள் இறந்துபோன பயங்கரவாதிகளை முஸ்லிம் இடுகாடுகளில் புதைக்கக்கூடாது என்று அனுமதி மறுத்தார்கள்.
சமீபத்தில் மும்பையின் முஸ்லிம் அமைப்புகள் ஒரு பேரணி நடத்தின, அப்பாவி மக்களைக் கொலை செய்பவர்கள் இஸ்லாத்தின் பகைவர்கள் என்ற செய்தியைச் சொல்ல. கடந்த சில நாட்களில் பல முஸ்லிம் பிரபலங்கள், ஷாருக் கான் போன்ற பாலிவுட் பிரபலங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிவருகிறார்கள் . இவர்களுடைய குரல்கள் எல்லாம் இஸ்லாத்தின் பெயரில் பயங்கரவாதத்தைப் பரப்பிவரும் நச்சுக்குழுக்களான லஷ்கெரே தொய்பா போன்ற அமைப்புகளுக்குக் கன்னத்தில் அறையப்படும் அடி. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தண்டனை இத்தாக்குதல்கள் என்கிற அவர்களது வாதத்துக்கும் கிடைக்கும் அடி. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று இந்திய முஸ்லிம்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் ஒரு செய்தியை அவர்கள் துல்லியமாக உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். அவர்களை முன்னிட்டு பயங்கரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பயங்கரவாதிகளுக்கு இதைத்தான் சொல்கிறார்கள். - நாங்கள் இந்தியர்கள். எங்களுக்கு அநீதி வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நாங்களே ஜனநாயக ரீதியில் நியாயம் கேட்டுக்கொள்வோம். மதத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடமாட்டோம். நீங்கள் எங்களது வாழ்வில் நுழைய அனுமதி மறுக்கிறோம். உங்கள் துப்பாக்கிச் சூட்டில் முதலில் மடிவது நாங்கள் தான். இன்று சொந்த நாட்டில் முகமிழந்து போனது உங்களால். எங்களையே நாங்கள் மீட்டுக்கொண்டாக வேண்டும்.
பயங்கரவாதக் குழுக்களின் எண்ணம் இந்தியாவைப் பிளப்பது. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் இந்து முஸ்லிம் இனக்கலவரம் வெடித்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்தியாவில் அத்தகைய தாக்குதல்கள் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்திருக்கிறது. 1993 இல் நடந்த மும்பைத் தாக்குதலிலிருந்து நடந்து வரும் அதிசயம் இது

இந்திய முஸ்லிம்களுக்கு இன்று மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. உலகிலேயே அதிகபட்ச மைனாரிட்டி இனமாக இந்தியாவில் இருப்பதோடு, அவர்கள் மிதவாதிகள். இஸ்லாம் ,அன்பையும் பண்பையும் வலியுறுத்தும் மதம் என்று போற்றி வருபவர்கள். உலகின் பல்வேறு பாகங்களில் இஸ்லாம் மத அடிப்படைவாதம் இளைஞர்களை வளைத்துப் போடும் ஆக்ரோசத்தில் இருக்கையில் இந்திய முஸ்லிம்களின் , நமது இமாம்களின் மிதவாத , பயங்கரவாதத்திற்கு எதிரான குரல், வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் இதைத் தொடர்ந்து, பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு மகத்தானது.
நவம்பர் 26 அன்று எரிமலையாய் வெடித்த கோபத்தின் பரிணாமம் அர்த்தம் பெற்றது. இந்திய இறையாண்மை அவமதிக்கப் பட்டதால் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட தார்மீகக் கோபம். அந்தக் கோபத்திற்கு நிறமில்லை. மதமும் இல்லை.

1 comment:

Anonymous said...

Really good article!Every one should realize that the patriotism is a part of our Eman(belief).To keep the real and basic message intact among other communities,the sufism will be the only solution,because now a days we are able to see and hear the lot of misinterpretation of Quranic verses being spread among the innocent muslim youngsters.(Rashid)