தோழமையுடன்

Showing posts with label சூஃபி. Show all posts
Showing posts with label சூஃபி. Show all posts

Thursday, March 17, 2022

காதலின் நாற்பது விதிகள் நாவல் ஒரு பார்வை

ஆசிரியர் : எலிஃப் ஷஃபாக் 

 தமிழில் : ரமீஸ் பிலாலி

அழகிய தமிழில் புகழ்பெற்ற இந்த நாவலைப் படிக்கும் போது என்ன ஒரு வசீகரமான கட்டமைப்பு  இப்படி  ஒரு ஆன்மிக நாவலை நாம் முயசித்தால் என்ன என்ற ஆசை எழுந்தது. அதே நேரத்தில் வெறும் சரித்திர நாயகர்களாக மட்டுமின்றிஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் பின்பற்றும் ஆன்மிக வழிகாட்டிகளாக இருப்போரின் வாழ்க்கையைஉபதேசங்களை எழுத்தாளர் புனைவின் வழியே தன் சொந்த கருத்தைப் புகுத்தி வடிவமைக்கும் நிலையின்   விபரீதத்தை எண்ணும் போது கூடவே அச்சமும் எழுந்தது. இனி நாவலைப் பார்ப்போம்:    

21ஆம் நூற்றாண்டு,13ஆம் நூற்றாண்டு என இரு வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது  எலிஃப்  ஷஃபாக்கின்  “காதலின் நாற்பது விதிகள்”.  

21 ஆம் நூற்றாண்டு  - எல்லாவின் கதை 

குளத்தில் எரிந்த கல்லைப் போலச் சலனமற்ற    எல்லாவின் வாழ்வில்  வந்து விழுந்தது ‘காதல்’. காதலில் விழுந்த எல்லா இளம் பெண்ணுமல்ல!. இது வழமையான   காதல் கதையுமல்ல!.

நாற்பது வயதான எல்லா ரூபன்ஸ்டீன் தன் மூன்று   குழந்தைகளைச்   சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்த அரவணைப்பையே      தன் வாழ்வின் இன்பமாகக் கருதி வாழ்ந்து வந்த அன்பான இல்லத்தரசி. அவளையே சுற்றி வந்த சிறுபிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவளது அரவணைப்பும்,   வழிகாட்டுதலும்   அவர்களுக்குத்    தேவைப்படவில்லை      என்ற உண்மை  எல்லாவுக்கு அதிர்ச்சியூட்டியது. அதே நேரத்தில் பிற பெண்களுடன் இன்பம் காணும்   கணவனின் துரோகமும் சேர்ந்து கொள்ள அவள் அழகிய இல்லத்திலும்உள்ளத்திலும் தனிமையும்,   வெறுமையும் இருளாய் சூழ்ந்து கொண்டது.இது ஒரு சராசரிகதைதானே எனப் பொறுமையிழந்து விடாதீர்கள்.    இதன் Narration    முற்றிலும் வேறு ரகம்.

வாழ்வின் வெறுமையைப் போக்க ஓர் இலக்கிய நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினாள் எல்லாஅங்கு 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி கவிஞர் மௌலானா  ரூமி   மற்றும்   ஷம்ஸ் தப்ரேஸின் வாழ்க்கையை அடிப்படையாகக்     கொண்ட ஒரு புனைவின்   கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் வேலை   எல்லாவுக்கு   தரப்படுகின்றது.   காதலின் நாற்பது விதிகளைக்   கொண்டதாகக்    கதைக் களனை அமைத்திருந்தார் கதாசிரியர்   அஜீஸ் z.ஜஹாரா.   கொஞ்சம் கொஞ்சமாக, அவரையே தன் மனதின் வெற்றிடத்தை அன்பால் நிரப்ப வந்த ஷம்ஸ் தப்ரேஸாக வரித்துக் கொள்வதில் தொடர்கிறது     எல்லாவின் கதை..

13 ஆம் நூற்றாண்டு  - ரூமியின் வாழ்வில் இறைகாதல் தீபமேற்றிய   ஷம்ஸ் தப்ரேஸின் கதை

ரூமியவர்கள் ஷம்ஸ் தப்ரேஸை சந்திக்கும் முன்பே மார்க்க விற்பன்னராகவும், இறைஞான தத்துவங்களை அறிந்த தத்துவவாதியாகவும் புகழ் பெற்றவர் தான். மௌலானா ரூமியின் மனதில் இறைகாதல் தீயைப் பற்ற வைத்து ஞான கவிகளின் பேரரசராக அவரை மாற்றியது ஷம்ஸ் தப்ரேஸின் சகவாசம்.    

ஷம்ஸ் தப்ரேஸ்(ரஹ்) அவர்கள் மௌலானா ரூமி(ரஹ்) வாழ்வில் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தை மௌலானா ரூமியவர்கள் கூற்றாக இப்படிச் சொல்லப்படுகின்றது.   

The fruit of my life is no more than three words -

I was raw, I was cooked, I was burned.

மனதைச் சுத்தம் செய்யும் சூஃபி வழி

வாழ்வின் போக்கில் பல்வேறு கற்பிதங்களால் களங்கமுற்ற மனம் என்பதை விஷத் தன்மை கொண்ட மரங்கள் அடர்ந்த காட்டுக்கு    உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

அந்த விஷ விருக்ஷங்களை அழித்து காட்டை  சுத்தம் செய்ய இரண்டு வழிகள் உண்டு (இது உருவகம் என்பதால் மரங்களை அழிப்பது சுற்றுச் சூழல் பிரச்சனையல்ல என்பதை மறந்து விட வேண்டாம்).  காட்டை  சுத்தம் செய்வதில் முதல் வழி ஒவ்வொரு மரமாய் வெட்டி வீழ்த்துவது.  இந்த வழியில் காட்டை சுத்தம் செய்யப் பல வருடங்களாகும். இரண்டாவது வழி மரத்தில் தீயைப் பற்ற வைப்பது. அந்த தீ மரங்களை சில மணி நேரங்களில் அழித்து  காட்டை சுத்தம் செய்து விடும். இங்கே தீ என்பது இறைகாதலின் குறியீடு. ஞான விளக்கங்களின் வழியே ஆன்மிக சாதகனின்  மனதைச் சன்னம் சன்னமாகச் சுத்தம் செய்யும் போதே இறைகாதல் தீயை மூட்டி மனத் தூய்மையைத் துரிதப்படுத்துவது    சூஃபியாக்களின் வழி.

ரூமி என்ற தத்துவஞானியை இறைகாதல் வழியே அனுபவ ஞானத்தின் அடுத்த    கட்டத்துக்கு (மக்காமுக்கு) அழைத்து சென்றவுடன் பிரியாமல் பிரிந்து சென்று விடுகின்றார் ஷம்ஸ் தப்ரேஸ். மௌலானா ரூமீயின் புகழ் பெற்ற மஸ்னவி 25,000 ஈரடி செய்யுள்களைக் கொண்டது. அதை விட பெரியது 40,000 ஈரடி  செய்யுள்களைக் கொண்ட தீவானே ஷம்ஸ் -இ- தப்ரேஸ் எனும் இறைகாதல் காவியம்.

குருவிடம் நான் கொண்ட காதல் –அது

முஹம்மதர் மீதுள்ள காதல்! - அண்ணல்

முஹம்மதை நான் கொண்ட காதல் – அது

அல்லாஹ்வின் மீதுள்ள காதல்!

எனப் பாடுவார் மறைந்த என் ஆன்மிக நண்பர் கவிஞர் இக்பால் ஃபைஜி.

மஜ்னூனின் கண்களால் தான் லைலாவின் அழகைக் காண முடியும் எனச் சொல்லப்படுவதைப் போல ஷம்ஸ் தப்ரேஸின் அக அழகைத்    தரிசிக்க மௌலானா ரூமியின் கண்கள் வேண்டும். அதன் அந்தரங்கம் (ஹகீகத்) இந்த கட்டுரையின் விவரணத்திற்க்கப்பாற்பட்டது.

மௌலானா ரூமியிடம் ஷம்ஸ் தப்ரேஸ் கொண்ட அதீத செல்வாக்கைக் கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாத  பொறாமைகாரர்கள்  அவரைக்   கொன்றுவிட்டார்கள்.  அவரது அடக்க ஸ்தலம்  கொன்யாவில் உள்ளது எனச் சொல்பவர்களும் உண்டு. அந்த அடிப்படையில் அமைந்தது தான் இந்த நாவல். ஆனால் ரூமியின் வாழ்வையும், கவிதைகளையும் ஆய்வு செய்து Rumi:Past and Present, East and West எழுதிய கட்டுரையாளர் Franklin Lewis இதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என மறுப்பதாக William C. Chittic தனது Me and Rumi – The Autobiography of Sham-i. Tabrizi என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஷம்ஸ் தப்ரேஸ், மௌலானா ரூமீயின்  கூற்றுகளிலிருந்து சுயசரித பாணியில் தொகுக்கப் பட்ட “மகாலாத்தே ஷம்ஸ் தபரேஸ்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் Me and Rumi.   ஷம்ஸ் தப்ரேஸின் அடக்க ஸ்தலம் இரானில் குய் (khuy) என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்படுகின்றது. Me and Rumi என்ற நூல் அஜீஸ்z. ஜஹாராவின் அறையில் காணப்பட்டதாக இந்த நாவலில் வருவதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

புனைவு என்ற வகையில் ஏதோ ஒரு அடிப்படையில் கதாசிரியர் எழுதுவது தவறல்ல என்றாலும் ஷம்ஸ் தப்ரேஸ் அவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞராவார்.அவர் ரூமியை சந்திக்க கொன்யாவிற்கு வந்த போது மார்க்க அடிப்படையில் பிற   அறிஞர்களையும் சந்தித்து அடிக்கடி உரையாடி இருக்கின்றார் என்றும் மார்க்க விசயத்தில் அவர்களின்      குறைகளைச் சாடியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. அத்தகையவரை புனைவு என்ற பெயரில் மார்க்கத்தை மீறுபவராகக் காட்டுவது புனைவின் வழியே நிகழ்ந்த வரலாற்றுத் திரிபு வேலையும்    வன்மையாகக் கண்டிக்கதக்கதுமாகும்.

சூஃபியிசம் “சமய கட்டுபாடுகளைலிருந்து விடுதலை பெற்றது” எனச் சிலர் வலியுறுத்தக் காரணம் அதன் உலக பொதுமைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அவர்களின் கற்பனையினால்தான் என்கின்றார் மார்டின் லிங்ஸ். ஒருவேளை எலிஃப் ஷஃபாக்கின் புனைவில் இந்த மேற்கத்திய மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

உண்மையில் சூஃபி ஞானிகள் குர்ஆன் சொல்லும் ‘எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம்’ என்பதைத் தரிசன உண்மையாய் கண்டவர்கள். அவர்கள் எப்போதும் இறை முன்னிலையில் இருப்பதால் மார்க்க வரம்புகளைப் பேணுவதில் சாமானியர்களை விட மிகவும் சிறப்பாக முன்னிற்பவர்கள்.

 அதே நேரத்தில் அவர்கள் மார்க்க கோட்பாடுகளைக் கடுமையாக்குபவர்களுமல்ல.

சூஃபிகளுக்கெல்லாம் தலைவரான முஹம்மது நபி (ஸல்) ஒரு விசயத்தைச் செய்வதில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வழிமுறைகள் இருக்கும் போது அதில் எளிதானதையே மக்களுக்குப் பரிந்துரைக்கச்    செய்வார்கள்.அது தான்   சாமானியர்களுக்கு     நபிகள் காட்டிய வழி. அந்த நபிவழி தான் சூஃபி வழி.

‘எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான்’ இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் எனது ஞான குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்). சூஃபியிசத்தின் அந்த மனிதநேய பகுதியை அழகாகச் சொல்லி இருக்கிறது இந்த நாவல். புனைவு என்ற வகையில் எலிஃப் ஷஃஆக்கின் இந்த நாவலின் விஷேச கட்டமைப்பு ஒரு தனித்த பாணியில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.  உலகப் புகழ் பெற்ற இந்த நாவலைத் தமிழுக்குத் தந்ததற்காகச் சீர்மை பதிப்பகத்திற்கு நன்றி! ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பு இந்த நாவலில் சிறப்பான   உச்சத்தைத் தொட்டு வாசிப்பை இனிமையான அனுபவமாக மலர செய்திருக்கிறது   ரமீஸுக்கு வாழ்த்துகள்!. இன்னும் சிறப்பான பல மொழிபெயர்ப்புகளை அவர் வழங்க ஆசிக்கின்றேன்!   


 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Sunday, May 24, 2020

கனவுக்குள் கனவு நாவல் முதல் அத்தியாயம்


அத்தியாயம் 1

 

I said, “Who are You?”

He said, “ The Desire of all.”

I said “Who am I?”

He said, “The desire of the Desire.”

Moulana Rumi (r.a.)

ஜூன், 2013. வீட்டின் ஏர்கண்டிசனால் குளிரூட்டப்பட்ட தன் அறையிலிருந்து வெளியேறி பால்கனியில் வந்து நின்ற இம்தியாஸ் அழகிய சாலையின் இருபுறமும் தகுந்த இடைவெளியில் வரிசை வரிசையாக நடப்பட்ட  ஈச்சை மரங்களின் கம்பீரமான அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.


 மக்கள் தொகையில் கால்பங்குக்கும் மேல் இந்தியர்களைக் கொண்டது மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் விலையுயர்ந்த நகரமான துபாய். பரபரப்பான வணிக நகரமான துபாய்க்கும் பழமையான கலாச்சார நகரமான சார்ஜாவுக்கும் நடுவில் கிழித்த கோடு போல இருந்த சாலையின் துவக்கத்தில் இருக்கிறது துபாயின் மிகப் பழமையான மாலான   அல் முல்லா பிளாசா. இம்தியாஸ் தங்கி இருந்த பிளாட் அல் முல்லா பிளாசாவின் அருகில் இருக்கும்  ஐந்து மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருக்கிறது. 


 இந்திராகாந்தியைப் போல முன் நெற்றியில் சற்றே இளநரை ஓடிய கம்பீரமான தோற்றம் கொண்ட இம்தியாஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஃபைனான்ஸ் மேனேஜர்.  மனைவி சமீராவும், பிள்ளைகள் சஃபீனா, ஹசீனாவும் விடுமுறைக்கு இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் ஊருக்குச் சென்ற இம்தியாஸ் அலுவலகத்தில் அவசரமாக அவன் முடிக்க வேண்டிய பணிகளால் இரண்டே நாட்களில் துபாய்க்குத் திரும்பிவிட்டான்.


 பால்கனியில் நின்று கொண்டிருந்த இம்தியாஸுக்கு ‘To Let ‘ எனப் போட்டிருந்த மரக் கூடையைப் பார்த்ததும் பிள்ளைகள் சஃபீனா, ஹசீனாவின் நினைவு வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் சின்ன மகள் ஹசீனா ஒரு சக்லேட் பிரியை. அவளுக்கு அழகிய மரக் கூடையில் சாக்லேட் வைத்து  வகுப்பு தோழர்கள் பிறந்த நாள் பரிசளித்தார்கள். அவளை விட இரண்டு வயது பெரியவளான சஃபீனா கொஞ்சம் கண்டிப்பானவள், அவள் தான் சாக்லேட் தீர்ந்ததும் காலியாகக் குப்பை போலக் கீழே கிடந்த கூடையை எடுத்து  பால்கனியில் மாட்டி வைத்தாள்.  மணிப்புறா ஒன்று சிறுகச் சிறுக மர குச்சிகளை அலகால் கொண்டு வந்து அடுக்கி கூடையை தன் கூடாக்கிக் கொண்டது. அதைப் பார்த்த சின்ன மகள் ஹசீனா அதில் ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீரும், பக்கத்தில் கொஞ்சம் தானியங்களும் வைத்தாள். சிறிது நாட்கள் கழித்து அவள் பார்க்கும் போது இரண்டு முட்டைகள் இருந்தது. ஹசீனா,   “வாப்பா..வாப்பா… புறா முட்டை உட்டுருக்கு” என இம்தியாஸிடம் காண்பித்தாள். சஃபீனா அதைப் படமெடுத்து வாப்பா இம்தியாஸின் முகநூல் பக்கத்தில் போட்டு,  பிளாட் நம்பர் 102வில் ‘மணிப்புறாவின் குடியேற்றம்’ என எழுதி வைத்தாள். அவள் தான் இம்தியாஸின் முகநூல் பக்கத்திற்கு அட்மின்.  சில நாட்களில் அதில் இரண்டு குஞ்சுகள் காணப்பட்டன. அடுத்த முறை பார்க்கும் போது குஞ்சுகள் வளர்ந்து கண்ணாடி ஜன்னலில் அமர்ந்திருந்தன. மணிப்புறா பாதுகாப்பிற்காகப் பக்கத்திலேயே நின்றது. ஒரு வாரம் கழித்துப் பார்த்த போது புறாவும் குஞ்சுகளும் பறந்துவிடக் கூடு காலியாகக் கிடந்தது. ஹசீனா சிறியதாக ஒரு அட்டையில் ‘To Let’ என எழுதி அந்த கூட்டில் சொருகி இருந்தாள்.  புன்னகையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த இம்தியாஸ்  சாலையில் சென்ற ஒரு வேன் சிக்னலுக்காக தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்ததைக் கவனித்தான்.


 “The aim and ultimate goal of Sufism is to become like a tuning fork vibrating with the same frequency as prophet Muhammad “ என்று அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் தான் அந்த வேனின் பக்கம் அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த வாசகங்களைப் பார்த்தவுடன் தொழுகைக்குப் பின் வாசித்த  முஸ்லிம் ஷரீஃப் என்னும் நபி மொழித் தொகுப்பில் உள்ள ஒரு  வித்தியாசமான நபிமொழி இம்தியாஸின் சிந்தனையில் ஓடியது. அந்த நபிமொழியை உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


 ‘நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின்[1] தூதர் (ஸல்) அவர்களின் அருகிலிருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை யார் எனத் தெரியவில்லை’ எனத் தொடங்கிய அந்த நபி மொழி ஒரு மர்ம நாவலின் துவக்கத்தையும் மிஞ்சும் சுவாரசியமாக இருந்தது இம்தியாஸுக்கு. இன்று ஒருவர் அரபு நாட்டில் ஏர்கண்டிசன் காரில் ஆடை அழுக்கடையாமல், பயணக் களைப்பு தெரியாமல் திடீரென வந்து காட்சியளிக்க முடியும். ஆனால் 1400 வருடங்களுக்கு  முந்திய அன்றைய அரபகச் சூழலை நினைத்துப் பார்த்தான். பாலைவனத்தில் பயணக்களைப்பு தெரியாமல் தூய வெண்ணிற ஆடையில் திடீரென காட்சியளிப்பது, சான்ஸே இல்லை. யார் இவர்? எப்படி திடீரென வந்தார் என்ற கேள்வியை எழுப்பிய நபிமொழி, நபித்தோழர்களைப் போலவே இம்தியாஸின் கவனத்தையும் அவரை நோக்கி ஈர்த்தது.


 வந்தவர் நான்கு கேள்விகளை நபியிடம் கேட்கின்றார். இந்த நான்கு கேள்விகளில் இஹ்சான் என்றால் என்ன? என்ற  மூன்றாவது கேள்வி தான் மிகவும் சிந்திக்கத் தூண்டிய புதிரான செய்தியாக இருந்தது இம்தியாஸுக்கு. இஹ்சான் என்பதற்கு அழகுபடுத்துவது, உதவி செய்வது என்பது அகராதி பொருள். இங்கே அழகுபடுத்துவது என்றால் வணக்கத்தை அழகுபடுத்துவதைக் குறிக்கின்றது. அதற்கு நபியவர்கள், இஹ்சான் என்பது:


 “நீ இறைவனை வணங்குவதாய் இருக்கும்

நீ அவனைப் பார்ப்பதைப் போல

நீ அவனைப் பார்க்கக் கூடியவனாக ஆகியிருக்காவிட்டால்

நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.


 நபியவர்கள் காட்டித் தந்த முறையில் வாழும் வாழ்வின் எல்லா நிலைகளுமே வணக்கம்  என்பதால்,  இறைவனைப் பார்ப்பதைப் போல இருக்கும்  இஹ்சானின்  மூலம் வாழ்வே அழகிய வணக்கமாக மலரும் அற்புத நிலையை இந்த நபி மொழி கோருகிறது  என்பதை விளங்கிய இம்தியாஸின்  கவனம் நபிமொழியின் இறுதிப் பகுதியில் குவிந்தது.


 நான்கு கேள்விகளுக்குப் பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். உமர் (ரலி)[2] சொல்கின்றார்கள்: நீண்ட நேரம் நான் அங்கேயே இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்தாம் வானவர் ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக அவர் வந்தார்'' என்று சொன்னார்கள்.  


 இது வரை மனிதராகப் பார்த்தவர்களுக்கு அந்த வினோத மனிதர், மனிதரேயல்ல ஒளியால் படைக்கப் பட்ட வானவர் என்ற உண்மை வெளியானது.   


 ஒரு வானவர் பகிரங்கமாக நபித்தோழர்களின் பார்வைக்குக் காட்சியளித்து இந்த சம்பவங்கள் வெளியாகக் காரணம் எதுவாக இருக்கக் கூடும்? இறைவன் விரும்பி இருந்தால் நபியவர்களே கூட தோழர்களிடம் கேள்வியை எழுப்பி இதை விளக்கி இருக்க முடியும். ஆனால் இறைவன் ஏன் அதை ஒரு வித்தியாசமான முறையில் வெளியாக்கினான். தோழர்கள் வந்தவரை மனிதராகப் பார்த்தனர். நபியவர்கள் மட்டும் அவரை வானவராகப் பார்த்தது  எப்படி?


 நபியவர்களின் அகநிலையை - frequency of phrophet Muhammad ஐ தோழர்களுக்கும் ஓரளவாவது வழங்கத் தான் இந்த ஏற்பாடா? எனச் சிந்தித்துக் கொண்டிருந்த இம்தியாஸ் வெயிலின் தகிப்பை மேனியில் உணர்ந்தான். தகதகவென கொழுந்துவிட்டெரியும் செந்நிற பிழம்பாய் சூரியன் சுட்டெரிக்கும்  ஜூன் மாத வெயில் தன் முதல் இன்னிங்ஸிலேயே சிக்சர் அடிக்கவே, துபாய்க்கு இரண்டே பருவகாலம் தான்  hot and hotter என யாரோ வேடிக்கையாகச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நத்தை தன் கூட்டுக்குள் உடலை இழுத்துக் கொள்வது போல் பால்கனியை விட்டு வெளியேறி வீட்டின் உள்ளே நுழைந்தான்.


 அலைப்பேசி சினுங்கியது. ஒரு டெண்டரின் தொடர்பாக அதிகாலையில் அபுதாபிக்குக்  கிளம்ப வேண்டி இருந்ததால்  யாரென்று தெரியாத அழைப்பை  இம்தியாஸ் பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் நுழைந்தான். வெயில் காலத்தில் ஹீட்டர் போடாமலே ஷவரில் தண்ணீர் சூடாக வரும் என்பதால் ஏற்கனவே ஒரு பெரிய வாளியில் முன் தினம் பிடித்து வைத்திருந்த குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வெளியில் வரும் போது, அலுவலக டிரைவரிடமிருந்து வந்த மிஸ்ட் கால், அழைத்துச் செல்வதற்காக டிரைவர் வந்து விட்டதைத் தெரியப்படுத்தும் சிக்னல் வரவே,  அவசரமாக   ஆடையணிந்து கோட்டை கையில் எடுத்துக் கொண்டான். அபுதாபி டிராண்ஸ்போர்ட் அத்தாரிடியின் டெண்டருக்கு முந்திய விளக்கக் கூட்டம்.  போகும் போது படித்துக் குறிப்பெடுத்துக் கொள்வதற்காக டெண்டர் டாக்குமெண்ட் பிரதியை எடுத்துக் கொண்டு கிளம்பி லிப்டில்  நுழைந்த போது, “அஸ்ஸலாமு அலைக்கும்”  என மலர்ந்த முகத்துடன் முகமன் கூறியவராக எதிர் வீட்டில் தங்கி இருக்கும் அரபியும் லிப்டில் நுழைந்தார். வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்லும் போது தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கோட் சூட்டுடன், வாயில் புகையும் சிக்ரெட்டுடன்  காட்சியளிக்கும் அவர் பூசியிருந்த விலையுயர்ந்த அத்தரின் மணம் லிப்டை சூழ்ந்தது.


 சலாத்துக்குப் பதிலளித்தவனாக  இம்தியாஸும் புன்னகைத்தான். மூன்று வருடங்களாக ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்தாலும் இம்தியாஸுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு இந்த சலாமும், சிறிய புன்னகையும் தான்.


 அரபிக்கு அல் பர்ஷாவில் சொந்தமாக ஒரு வில்லாவே இருக்கிறது  என்றார்கள். ஆனாலும் அவர் இங்கே ஃப்ளாட்டில் ஏன் தங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வீட்டில் அவருடன் யாரோ இருக்கின்றார்கள் என்பது உள்ளே ஆள் நடமாடும் சத்தத்தினால் தெரிந்தாலும் அவர்கள் யாரையும் ஒரு முறை கூட வெளியில் பார்த்ததே இல்லை. இது  சற்று விநோதமாக இருந்தது. அரபியைச்  சிலர் சிஐடி எனவும் சொன்னார்கள்.  ஆனால், அவரது விஷயங்கள் எல்லாமே ஊர்ஜிதமற்ற தகவல்கள் தான்.


 எல்லா வினாக்களின் முடிச்சும் அவிழ்ந்து இறுதியில் விடை தெரிய வாழ்க்கை என்ன மர்ம நாவலா?   ஒரு எதிர் வீட்டுக்காரர் என்ற வகையில் அவரால் அவனுக்கு எந்த இடையூறும் இல்லை. மேலும் அவர் உள்ளூர் அரபி  என்பதால் அதுவே போதும் என நினைத்த  இம்தியாஸுக்கு அவரைப் பற்றிய ஊகங்களை மேலும்  ஆராய விருப்பமில்லை.

 

 காரில் ஏறி அமர்ந்ததும் மீட்டிங்க்கில் கேட்பதற்கு வேண்டிய கேள்வி குறிப்புகளைத் தயார் செய்து முடித்தவன் அபுதாபி சென்றடைய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகுமென்பதால்  சற்றே ஓய்வாயிருக்க எண்ணிச் சாய்வாக இருக்கையை தளர்த்தி  உடலைச்  சாய்த்து கண்களை மூடினான்.


 சிறிது நேரம் கழித்து மெல்லக் கண்களைத் திறந்து பார்த்த போது கார் ஷேக் ஜாயித் ரோட்டில் உலகிலேயே இரண்டாவது பெரிய ஷாப்பிங் மாலான துபாய் மாலை கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. இம்தியாஸுக்கு துபாய் மாலில் மிகவும் பிடித்த இடம் பிரமாண்டமான கினோகுன்யா புத்தகக் கடை தான். சம்பளத்தில் மாதம் 500லிருந்து 1000 திர்ஹம் வரை புத்தகங்களுக்காக ஒதுக்கி விடுவான். 


நேற்று இரவு சரியாகத் தூங்காததால் இம்தியாஸ் இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் எனக் கண்களை மூடிய போது அலைப்பேசி ஒலித்தது.  காலையில் வந்த அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வரவே எடுத்துப் பேசினான்.


 எதிர் முனையில் பேசியவன் குரலிலிருந்து இளைஞன் என்பது விளங்கியது. “அஸ்ஸலாமு அலைக்கும்…உங்கள் நண்பர் ஆஷிக்கை ஆன்மிகம் சம்பந்தமாக  ஒரு சந்தேகத்திற்காக அணுகினேன்…. அவர் உங்கள் எண்ணைத் தந்தார் …பேசலாமா?” தந்தியடிப்பது போல் விட்டு விட்டு பேசினான்.  ஆஷிக் தான் இம்தியாஸுக்கு ஆன்மிக தொடர்பை ஏற்படுத்தியவன். ஆன்மிக பாதையில் தன்னை விட சீனியரான ஆஷிக் ஏன் இவனுக்கு தன் பெயரைப் பரிந்துரை செய்தான் என்ற எண்ணம் இம்தியாஸின் மனதில் ஓடவே ஒரு நிமிடம் அமைதியானான்.


 எதிர் முனையில் பேசியவன் மௌனம் சம்மதம் என விளங்கியவனாய் பேச்சைத் தொடர்ந்தான், “தவறாக நினைக்கலேன்னா ஒரு கோரிக்கை” என்றவன்,


 “எனக்கு ஃபனாவாக வேண்டும்” என்றான் தடாலடியாய், ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஒரு மசால் தோசை பார்சல் என்பது போல.



[1]     அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு இறைவன், கடவுள் என்பது பொருள்.  அல்லாஹ் என்பது முஹம்மது நபியவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டப் பெயர் அல்ல. முஹம்மது நபியின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ், அதன் பொருள் ‘அல்லாஹ்வின் அடிமை‘ என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக ‘அல்லாஹ்’ என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும். ஆகவே ‘அல்லாஹ்’ என்ற பெயர் வரும் இடத்திலெல்லாம் ‘இறைவன்’ எனப் பொருள் கொண்டு பார்க்கவும்.

 [2] அவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Thursday, February 21, 2019

கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற திரு ஜெயமோகன் கட்டுரையை முன்வைத்து

அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன்.
கீதையை எப்படி படிப்பதுஏன்என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
/நான் பலவருடங்கள் தேடலுடனும்கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணைஉலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோகுர்ஆனையோதம்ம பதத்தையோகிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.
ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும்அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல் கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோகுர் ஆனோபைபிளோ அல்லது மூலதனமோ/.


நீங்கள் குர்ஆனை மதிப்பவர்தேடல் கொண்ட உங்கள் மனதில் மதவெறிக்கிடமில்லைஎதையும் ஆராய்ந்தறிய முயல்கின்றீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டுஆகவேஉங்கள் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் வேதங்கள் இறைவனின் வார்த்தைகள் அல்ல என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய உரிமை. ஆனால் ஞான தேடல் கொண்ட மனிதனர்கள் அனைவருமேஇறைவனின் வார்த்தைகள்’ என நம்புவதை மூட நம்பிக்கையென  அறிந்திருப்பான் என நீங்கள் தீர்ப்பு கூறுவது  உங்கள் தேடலின் வாசலை மூடி விட்டீர்கள் என்பதையும் இன்னும் உங்கள் தேடலின் முடிவே இறுதியானது என நம்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கின்றது. மேலும் இந்து ஞான மரபும்பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும்தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது என்ற வார்த்தைகளின் மூலம் குர்ஆனிய ஞானங்களில் உங்களுக்கு பரிச்சயமில்லை என்பதும் விளங்குகிறது.
குர்ஆன் 'ஞானங்கள்' என தனியே ஒரு பகுதியை கொண்டதல்ல. அதன் ஒவ்வோரு வாசகங்களும் பல்வேறு பொருள் கொண்டவை என்பது எங்கள் நம்பிக்கை இன்னும் அனுபவம்.
ஒவ்வொரு ஞான விளக்கங்களை பற்றியும் எளிதில் விளங்கும் வண்ணம் குர்ஆனில் ஏன் Defintion இல்லை  என நண்பன் ஒருவன் ஒரு முறை   கேட்டது இங்கே இணைத்து பார்க்கத் தோன்றுகிறது.
குர்ஆன் பல்வேறு அறிவு தளத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான இறைச் செய்திஅதில் ஞான விசயங்கள் இஷாரா’ எனும் குறிப்பால் உணர்த்தும்   பாணியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஒரு முறை முஹம்மது நபியவர்களிடம் கிராமிய அரபியர் குழு ஒன்று வந்து நாங்கள் 'மூமீன்' என சொல்லும் போது நீங்கள் 'மூமீன்' என சொல்லாதீர்கள். முஸ்லிம் (இஸ்லாத்தை ஒப்பு கொண்டவர்கள்) என சொல்லுங்கள் என கூறினார்கள்.
நம்பிக்கையாளர்களின் முன்று வகை நிலையை சுருக்கமாக இப்படி சொல்லலாம்.
இஸ்லாம் – ஒப்பு கொள்வது அந்த நிலையில் உள்ளவர் 'முஸ்லிம்'.
ஈமான் – அதில் உறுதி கொள்வது அந்த நிலையில் உள்ளவர் 'மூமீன்'.
இஹ்சான் – அதை உணர்வாய் கொள்ளும் பிரஞ்சை நிலை ( Concious state).அந்த நிலையில் உள்ளவர் 'முஹ்சீன்'.
இந்த மூன்று நிலையையும் அடைவதே மார்க்கத்தின் சம்பூர்ண நிலை என்கின்றது நபி மொழி.
பொதுவாக நம்பிக்கையாளர்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றார்கள்சிலருக்கு சின்ன சின்ன விளக்கங்களே போதுமானதாக இருப்பதால் அதையே போதுமானதக்கிக் கொண்டு வெளிரங்கமான வணக்க வழிபாடுகளைக் கொண்டு அவர்கள் நிறைவடைகின்றார்கள் .
நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ?'  என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது. எல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது”   என்ற உங்கள்  வார்த்தைகளை    இங்கே    அன்புடன்   நினைவு கூர்கின்றேன்.
இனி மேலே சொன்ன இஷாராக்களின் மேலான ஞான விளக்கம் வேண்டின் அந்த ஞானத்தை  பெற்ற குருவின் மூலம் தான் பெற முடியும் என்பது வேத ழி காட்டலாகும்.         
இன்று உள்ளது போல் குர்ஆன் பிரதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஞானம் பெற்றவர்களல்ல நபித் தோழர்கள்.
இறைவன் வஹியின் மூலம் இறைதூதருக்கு இந்த ஞானத்தை வழங்கினான்நபியின் பணிகளின் தலையானது வேதத்தை கற்றுக் கொடுப்பதுஅதன் ஞானத்தை கற்று கொடுப்பது. இன்னும் அதன் மூலம் இதயத்தை பரிசுத்தபடுத்துவதாகும்.
இவ்வாறு நபியிடமிருந்து தோழர்கள்அவர்களிடமிருந்து அவர்களுக்கு  பின் வந்தவர்கள் என சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறதுநபியிடம் தொடங்கி ம் வரை வந்தடையும் குரு பரம்பரையின் இந்த சங்கிலித் தொடர் ‘ஸில்சிலா’ என வழங்கப்படுகின்றது.
காதிரியாசிஷ்தியாநக்ஸபந்தியாசுஹ்ரவர்த்தியா என பல்வேறு ஸில்சிலாக்களின் (சூஃபி மரபின்) வழியே இந்த ஞான வழி போதனை இன்றும் தொடர்கிறது.
Toshihiko Izutsu அவர்களின் Sufism and taoism : a comparative study of key philosophical concepts  என்ற புத்தகம் வலைத்தளத்தில் PDFல் கிடைக்கிறது விரும்பினால்  படித்து பாருங்கள்இப்னு அரபி என்னும் ஞானியின் புகழ் பெற்ற ‘புசூசுல் ஹிகம்’ என்ற நூலின் கருத்துகளை தாவோவின் கருத்துகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல் Toshihiko Izutsu அவர்கள் குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்தவராவார்.

அன்புடன்,
.நூருல் அமீன் 

ஜெயமோகன் தன் வலை பக்கத்தில் இந்த மடலை வெளியிட்டுள்ளார். சுட்டி கீழே: 
பதில் தாராத உங்கள் மௌனத்தை கூட கண்ணியமான ஒரு பதிலாகவே பார்க்கின்றேன். நன்றி!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.