தோழமையுடன்

Thursday, March 17, 2022

காதலின் நாற்பது விதிகள் நாவல் ஒரு பார்வை

ஆசிரியர் : எலிஃப் ஷஃபாக் 

 தமிழில் : ரமீஸ் பிலாலி

அழகிய தமிழில் புகழ்பெற்ற இந்த நாவலைப் படிக்கும் போது என்ன ஒரு வசீகரமான கட்டமைப்பு  இப்படி  ஒரு ஆன்மிக நாவலை நாம் முயசித்தால் என்ன என்ற ஆசை எழுந்தது. அதே நேரத்தில் வெறும் சரித்திர நாயகர்களாக மட்டுமின்றிஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் பின்பற்றும் ஆன்மிக வழிகாட்டிகளாக இருப்போரின் வாழ்க்கையைஉபதேசங்களை எழுத்தாளர் புனைவின் வழியே தன் சொந்த கருத்தைப் புகுத்தி வடிவமைக்கும் நிலையின்   விபரீதத்தை எண்ணும் போது கூடவே அச்சமும் எழுந்தது. இனி நாவலைப் பார்ப்போம்:    

21ஆம் நூற்றாண்டு,13ஆம் நூற்றாண்டு என இரு வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது  எலிஃப்  ஷஃபாக்கின்  “காதலின் நாற்பது விதிகள்”.  

21 ஆம் நூற்றாண்டு  - எல்லாவின் கதை 

குளத்தில் எரிந்த கல்லைப் போலச் சலனமற்ற    எல்லாவின் வாழ்வில்  வந்து விழுந்தது ‘காதல்’. காதலில் விழுந்த எல்லா இளம் பெண்ணுமல்ல!. இது வழமையான   காதல் கதையுமல்ல!.

நாற்பது வயதான எல்லா ரூபன்ஸ்டீன் தன் மூன்று   குழந்தைகளைச்   சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்த அரவணைப்பையே      தன் வாழ்வின் இன்பமாகக் கருதி வாழ்ந்து வந்த அன்பான இல்லத்தரசி. அவளையே சுற்றி வந்த சிறுபிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவளது அரவணைப்பும்,   வழிகாட்டுதலும்   அவர்களுக்குத்    தேவைப்படவில்லை      என்ற உண்மை  எல்லாவுக்கு அதிர்ச்சியூட்டியது. அதே நேரத்தில் பிற பெண்களுடன் இன்பம் காணும்   கணவனின் துரோகமும் சேர்ந்து கொள்ள அவள் அழகிய இல்லத்திலும்உள்ளத்திலும் தனிமையும்,   வெறுமையும் இருளாய் சூழ்ந்து கொண்டது.இது ஒரு சராசரிகதைதானே எனப் பொறுமையிழந்து விடாதீர்கள்.    இதன் Narration    முற்றிலும் வேறு ரகம்.

வாழ்வின் வெறுமையைப் போக்க ஓர் இலக்கிய நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினாள் எல்லாஅங்கு 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி கவிஞர் மௌலானா  ரூமி   மற்றும்   ஷம்ஸ் தப்ரேஸின் வாழ்க்கையை அடிப்படையாகக்     கொண்ட ஒரு புனைவின்   கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் வேலை   எல்லாவுக்கு   தரப்படுகின்றது.   காதலின் நாற்பது விதிகளைக்   கொண்டதாகக்    கதைக் களனை அமைத்திருந்தார் கதாசிரியர்   அஜீஸ் z.ஜஹாரா.   கொஞ்சம் கொஞ்சமாக, அவரையே தன் மனதின் வெற்றிடத்தை அன்பால் நிரப்ப வந்த ஷம்ஸ் தப்ரேஸாக வரித்துக் கொள்வதில் தொடர்கிறது     எல்லாவின் கதை..

13 ஆம் நூற்றாண்டு  - ரூமியின் வாழ்வில் இறைகாதல் தீபமேற்றிய   ஷம்ஸ் தப்ரேஸின் கதை

ரூமியவர்கள் ஷம்ஸ் தப்ரேஸை சந்திக்கும் முன்பே மார்க்க விற்பன்னராகவும், இறைஞான தத்துவங்களை அறிந்த தத்துவவாதியாகவும் புகழ் பெற்றவர் தான். மௌலானா ரூமியின் மனதில் இறைகாதல் தீயைப் பற்ற வைத்து ஞான கவிகளின் பேரரசராக அவரை மாற்றியது ஷம்ஸ் தப்ரேஸின் சகவாசம்.    

ஷம்ஸ் தப்ரேஸ்(ரஹ்) அவர்கள் மௌலானா ரூமி(ரஹ்) வாழ்வில் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தை மௌலானா ரூமியவர்கள் கூற்றாக இப்படிச் சொல்லப்படுகின்றது.   

The fruit of my life is no more than three words -

I was raw, I was cooked, I was burned.

மனதைச் சுத்தம் செய்யும் சூஃபி வழி

வாழ்வின் போக்கில் பல்வேறு கற்பிதங்களால் களங்கமுற்ற மனம் என்பதை விஷத் தன்மை கொண்ட மரங்கள் அடர்ந்த காட்டுக்கு    உதாரணமாகச் சொல்லப்படுகின்றது.

அந்த விஷ விருக்ஷங்களை அழித்து காட்டை  சுத்தம் செய்ய இரண்டு வழிகள் உண்டு (இது உருவகம் என்பதால் மரங்களை அழிப்பது சுற்றுச் சூழல் பிரச்சனையல்ல என்பதை மறந்து விட வேண்டாம்).  காட்டை  சுத்தம் செய்வதில் முதல் வழி ஒவ்வொரு மரமாய் வெட்டி வீழ்த்துவது.  இந்த வழியில் காட்டை சுத்தம் செய்யப் பல வருடங்களாகும். இரண்டாவது வழி மரத்தில் தீயைப் பற்ற வைப்பது. அந்த தீ மரங்களை சில மணி நேரங்களில் அழித்து  காட்டை சுத்தம் செய்து விடும். இங்கே தீ என்பது இறைகாதலின் குறியீடு. ஞான விளக்கங்களின் வழியே ஆன்மிக சாதகனின்  மனதைச் சன்னம் சன்னமாகச் சுத்தம் செய்யும் போதே இறைகாதல் தீயை மூட்டி மனத் தூய்மையைத் துரிதப்படுத்துவது    சூஃபியாக்களின் வழி.

ரூமி என்ற தத்துவஞானியை இறைகாதல் வழியே அனுபவ ஞானத்தின் அடுத்த    கட்டத்துக்கு (மக்காமுக்கு) அழைத்து சென்றவுடன் பிரியாமல் பிரிந்து சென்று விடுகின்றார் ஷம்ஸ் தப்ரேஸ். மௌலானா ரூமீயின் புகழ் பெற்ற மஸ்னவி 25,000 ஈரடி செய்யுள்களைக் கொண்டது. அதை விட பெரியது 40,000 ஈரடி  செய்யுள்களைக் கொண்ட தீவானே ஷம்ஸ் -இ- தப்ரேஸ் எனும் இறைகாதல் காவியம்.

குருவிடம் நான் கொண்ட காதல் –அது

முஹம்மதர் மீதுள்ள காதல்! - அண்ணல்

முஹம்மதை நான் கொண்ட காதல் – அது

அல்லாஹ்வின் மீதுள்ள காதல்!

எனப் பாடுவார் மறைந்த என் ஆன்மிக நண்பர் கவிஞர் இக்பால் ஃபைஜி.

மஜ்னூனின் கண்களால் தான் லைலாவின் அழகைக் காண முடியும் எனச் சொல்லப்படுவதைப் போல ஷம்ஸ் தப்ரேஸின் அக அழகைத்    தரிசிக்க மௌலானா ரூமியின் கண்கள் வேண்டும். அதன் அந்தரங்கம் (ஹகீகத்) இந்த கட்டுரையின் விவரணத்திற்க்கப்பாற்பட்டது.

மௌலானா ரூமியிடம் ஷம்ஸ் தப்ரேஸ் கொண்ட அதீத செல்வாக்கைக் கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாத  பொறாமைகாரர்கள்  அவரைக்   கொன்றுவிட்டார்கள்.  அவரது அடக்க ஸ்தலம்  கொன்யாவில் உள்ளது எனச் சொல்பவர்களும் உண்டு. அந்த அடிப்படையில் அமைந்தது தான் இந்த நாவல். ஆனால் ரூமியின் வாழ்வையும், கவிதைகளையும் ஆய்வு செய்து Rumi:Past and Present, East and West எழுதிய கட்டுரையாளர் Franklin Lewis இதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என மறுப்பதாக William C. Chittic தனது Me and Rumi – The Autobiography of Sham-i. Tabrizi என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஷம்ஸ் தப்ரேஸ், மௌலானா ரூமீயின்  கூற்றுகளிலிருந்து சுயசரித பாணியில் தொகுக்கப் பட்ட “மகாலாத்தே ஷம்ஸ் தபரேஸ்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் Me and Rumi.   ஷம்ஸ் தப்ரேஸின் அடக்க ஸ்தலம் இரானில் குய் (khuy) என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்படுகின்றது. Me and Rumi என்ற நூல் அஜீஸ்z. ஜஹாராவின் அறையில் காணப்பட்டதாக இந்த நாவலில் வருவதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

புனைவு என்ற வகையில் ஏதோ ஒரு அடிப்படையில் கதாசிரியர் எழுதுவது தவறல்ல என்றாலும் ஷம்ஸ் தப்ரேஸ் அவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞராவார்.அவர் ரூமியை சந்திக்க கொன்யாவிற்கு வந்த போது மார்க்க அடிப்படையில் பிற   அறிஞர்களையும் சந்தித்து அடிக்கடி உரையாடி இருக்கின்றார் என்றும் மார்க்க விசயத்தில் அவர்களின்      குறைகளைச் சாடியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. அத்தகையவரை புனைவு என்ற பெயரில் மார்க்கத்தை மீறுபவராகக் காட்டுவது புனைவின் வழியே நிகழ்ந்த வரலாற்றுத் திரிபு வேலையும்    வன்மையாகக் கண்டிக்கதக்கதுமாகும்.

சூஃபியிசம் “சமய கட்டுபாடுகளைலிருந்து விடுதலை பெற்றது” எனச் சிலர் வலியுறுத்தக் காரணம் அதன் உலக பொதுமைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அவர்களின் கற்பனையினால்தான் என்கின்றார் மார்டின் லிங்ஸ். ஒருவேளை எலிஃப் ஷஃபாக்கின் புனைவில் இந்த மேற்கத்திய மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

உண்மையில் சூஃபி ஞானிகள் குர்ஆன் சொல்லும் ‘எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம்’ என்பதைத் தரிசன உண்மையாய் கண்டவர்கள். அவர்கள் எப்போதும் இறை முன்னிலையில் இருப்பதால் மார்க்க வரம்புகளைப் பேணுவதில் சாமானியர்களை விட மிகவும் சிறப்பாக முன்னிற்பவர்கள்.

 அதே நேரத்தில் அவர்கள் மார்க்க கோட்பாடுகளைக் கடுமையாக்குபவர்களுமல்ல.

சூஃபிகளுக்கெல்லாம் தலைவரான முஹம்மது நபி (ஸல்) ஒரு விசயத்தைச் செய்வதில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வழிமுறைகள் இருக்கும் போது அதில் எளிதானதையே மக்களுக்குப் பரிந்துரைக்கச்    செய்வார்கள்.அது தான்   சாமானியர்களுக்கு     நபிகள் காட்டிய வழி. அந்த நபிவழி தான் சூஃபி வழி.

‘எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான்’ இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் எனது ஞான குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்). சூஃபியிசத்தின் அந்த மனிதநேய பகுதியை அழகாகச் சொல்லி இருக்கிறது இந்த நாவல். புனைவு என்ற வகையில் எலிஃப் ஷஃஆக்கின் இந்த நாவலின் விஷேச கட்டமைப்பு ஒரு தனித்த பாணியில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.  உலகப் புகழ் பெற்ற இந்த நாவலைத் தமிழுக்குத் தந்ததற்காகச் சீர்மை பதிப்பகத்திற்கு நன்றி! ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பு இந்த நாவலில் சிறப்பான   உச்சத்தைத் தொட்டு வாசிப்பை இனிமையான அனுபவமாக மலர செய்திருக்கிறது   ரமீஸுக்கு வாழ்த்துகள்!. இன்னும் சிறப்பான பல மொழிபெயர்ப்புகளை அவர் வழங்க ஆசிக்கின்றேன்!   


 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: