தோழமையுடன்

Wednesday, November 13, 2019

கடற்காகம் – முஹம்மது யூசுஃப்


படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாத சுவாரஸ்யமான நாவல் யூசுஃபின் கடற்காகம். இன்னும் தகவல் கொண்டாடிகளுக்கு இது ஓர் அறுசுவை விருந்து. தமிழில் ஒரு முக்கிய ஆவணமாக பல்வேறு புதிய தகவல்களை முன்வைக்கின்றது.


கருத்தியல் என்ற போர்வையில் ஷியா, சன்னி என முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கி சண்டை போட வைத்தது பிரிட்டிஷ், ரோமானிய அரசுகள் தான். ஷியாங்கிற கொள்கையே முதலாம் எலிசபெத் ஆசியுடன் இரண்டாம் ருடால்ஃப் மன்னரின் தயவில் தான் உருவானது.

முக்கிய நபிமார்களின் அடக்க ஸ்தலத்தை தன்னகத்தே கொண்ட பலஸ்தீனத்தின் ஆக்ரமிப்புக்குப் பின் இருக்கும் நோக்கமே அங்கே உள்ள இஸ்லாமிய வரலாற்று அடையாளங்களை அழிப்பது தான்.

இறைவேதம் வழங்கப்பட்ட மூத்த குடி இந்துக்கள் தான்.

சுனாமி போன்ற பேரழிவு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இது போன்ற பல்வேறு கருத்துகளை சில ஆதாரங்களுடன் முன்வைத்து. இது தொடர்பான மேலாய்வுக்கும், வாத பிரதிவாதங்களுக்கும் களமமைக்கிறது கடற்காகம்.

டெல்மா தீவின் அழகு, கடலை நேசிக்க வைக்கும் வர்ணனைகள், மருத்துவமனை பற்றிய துல்லியமான விவரணங்கள், மாந்திரீகம் என சுவாரஸ்யமான பின்ணனியில் அமைந்த கதை மாந்தர்களின் பாத்திர வார்ப்புகள் எல்லாம் அருமை. குறிப்பாக சமீரா டீச்சர் என்ற பாத்திரத்தின் ஆரம்ப அத்தியாயங்கள். பள்ளி மாணவிகளுக்கு Moby-Dick, French Blue, பரீதுத்தீன் அத்தாரின் “மன்திக் அல் தய்யார்" என அற்புதமான கதை சொல்லியாக  படைத்திருப்பது கவிதை, பாராட்டுகள் யூசுஃப். பிற்பகுதியில் மலினப்படும் சமீராவின் பாத்திரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்.

கவர்ந்திழுக்கும் புத்தக வடிவமைப்பைப் பாராட்டலாம். ஆனாலும் பானுவை ஜானுவாக மாற்றுவது போன்ற அச்சுப்பிழைகள் ஒரு குறையே.

கதையல்ல நிஜம் என்பதால் இறுதி அத்தியாயம் ஏற்படுத்திய மன அதிர்வுகள் மனதை உலுக்கியெடுக்கிறது. அதன் தொடர்ச்சியாய்...

 “எத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத நிழல் போல் எப்போதும் தொடரும், கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள்” என சுனாமியில் மனைவியையும், மகளையும் இழந்த டாக்டர் தாரிக்கின் மனநிலையை நாவலை படித்து முடிக்கும் போது வாசகனிடம் கடத்தி விடுகின்றது கடற்காகம்.

இன்னும் ல பதிப்புகள் வெளியாகி பரவலான வாசகத் தளத்தை பெறும் என நம்புகின்றேன்.