தோழமையுடன்

Sunday, May 24, 2020

கனவுக்குள் கனவு நாவல் முதல் அத்தியாயம்


அத்தியாயம் 1

 

I said, “Who are You?”

He said, “ The Desire of all.”

I said “Who am I?”

He said, “The desire of the Desire.”

Moulana Rumi (r.a.)

ஜூன், 2013. வீட்டின் ஏர்கண்டிசனால் குளிரூட்டப்பட்ட தன் அறையிலிருந்து வெளியேறி பால்கனியில் வந்து நின்ற இம்தியாஸ் அழகிய சாலையின் இருபுறமும் தகுந்த இடைவெளியில் வரிசை வரிசையாக நடப்பட்ட  ஈச்சை மரங்களின் கம்பீரமான அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.


 மக்கள் தொகையில் கால்பங்குக்கும் மேல் இந்தியர்களைக் கொண்டது மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் விலையுயர்ந்த நகரமான துபாய். பரபரப்பான வணிக நகரமான துபாய்க்கும் பழமையான கலாச்சார நகரமான சார்ஜாவுக்கும் நடுவில் கிழித்த கோடு போல இருந்த சாலையின் துவக்கத்தில் இருக்கிறது துபாயின் மிகப் பழமையான மாலான   அல் முல்லா பிளாசா. இம்தியாஸ் தங்கி இருந்த பிளாட் அல் முல்லா பிளாசாவின் அருகில் இருக்கும்  ஐந்து மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருக்கிறது. 


 இந்திராகாந்தியைப் போல முன் நெற்றியில் சற்றே இளநரை ஓடிய கம்பீரமான தோற்றம் கொண்ட இம்தியாஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஃபைனான்ஸ் மேனேஜர்.  மனைவி சமீராவும், பிள்ளைகள் சஃபீனா, ஹசீனாவும் விடுமுறைக்கு இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் ஊருக்குச் சென்ற இம்தியாஸ் அலுவலகத்தில் அவசரமாக அவன் முடிக்க வேண்டிய பணிகளால் இரண்டே நாட்களில் துபாய்க்குத் திரும்பிவிட்டான்.


 பால்கனியில் நின்று கொண்டிருந்த இம்தியாஸுக்கு ‘To Let ‘ எனப் போட்டிருந்த மரக் கூடையைப் பார்த்ததும் பிள்ளைகள் சஃபீனா, ஹசீனாவின் நினைவு வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் சின்ன மகள் ஹசீனா ஒரு சக்லேட் பிரியை. அவளுக்கு அழகிய மரக் கூடையில் சாக்லேட் வைத்து  வகுப்பு தோழர்கள் பிறந்த நாள் பரிசளித்தார்கள். அவளை விட இரண்டு வயது பெரியவளான சஃபீனா கொஞ்சம் கண்டிப்பானவள், அவள் தான் சாக்லேட் தீர்ந்ததும் காலியாகக் குப்பை போலக் கீழே கிடந்த கூடையை எடுத்து  பால்கனியில் மாட்டி வைத்தாள்.  மணிப்புறா ஒன்று சிறுகச் சிறுக மர குச்சிகளை அலகால் கொண்டு வந்து அடுக்கி கூடையை தன் கூடாக்கிக் கொண்டது. அதைப் பார்த்த சின்ன மகள் ஹசீனா அதில் ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீரும், பக்கத்தில் கொஞ்சம் தானியங்களும் வைத்தாள். சிறிது நாட்கள் கழித்து அவள் பார்க்கும் போது இரண்டு முட்டைகள் இருந்தது. ஹசீனா,   “வாப்பா..வாப்பா… புறா முட்டை உட்டுருக்கு” என இம்தியாஸிடம் காண்பித்தாள். சஃபீனா அதைப் படமெடுத்து வாப்பா இம்தியாஸின் முகநூல் பக்கத்தில் போட்டு,  பிளாட் நம்பர் 102வில் ‘மணிப்புறாவின் குடியேற்றம்’ என எழுதி வைத்தாள். அவள் தான் இம்தியாஸின் முகநூல் பக்கத்திற்கு அட்மின்.  சில நாட்களில் அதில் இரண்டு குஞ்சுகள் காணப்பட்டன. அடுத்த முறை பார்க்கும் போது குஞ்சுகள் வளர்ந்து கண்ணாடி ஜன்னலில் அமர்ந்திருந்தன. மணிப்புறா பாதுகாப்பிற்காகப் பக்கத்திலேயே நின்றது. ஒரு வாரம் கழித்துப் பார்த்த போது புறாவும் குஞ்சுகளும் பறந்துவிடக் கூடு காலியாகக் கிடந்தது. ஹசீனா சிறியதாக ஒரு அட்டையில் ‘To Let’ என எழுதி அந்த கூட்டில் சொருகி இருந்தாள்.  புன்னகையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த இம்தியாஸ்  சாலையில் சென்ற ஒரு வேன் சிக்னலுக்காக தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்ததைக் கவனித்தான்.


 “The aim and ultimate goal of Sufism is to become like a tuning fork vibrating with the same frequency as prophet Muhammad “ என்று அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் தான் அந்த வேனின் பக்கம் அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த வாசகங்களைப் பார்த்தவுடன் தொழுகைக்குப் பின் வாசித்த  முஸ்லிம் ஷரீஃப் என்னும் நபி மொழித் தொகுப்பில் உள்ள ஒரு  வித்தியாசமான நபிமொழி இம்தியாஸின் சிந்தனையில் ஓடியது. அந்த நபிமொழியை உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


 ‘நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின்[1] தூதர் (ஸல்) அவர்களின் அருகிலிருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை யார் எனத் தெரியவில்லை’ எனத் தொடங்கிய அந்த நபி மொழி ஒரு மர்ம நாவலின் துவக்கத்தையும் மிஞ்சும் சுவாரசியமாக இருந்தது இம்தியாஸுக்கு. இன்று ஒருவர் அரபு நாட்டில் ஏர்கண்டிசன் காரில் ஆடை அழுக்கடையாமல், பயணக் களைப்பு தெரியாமல் திடீரென வந்து காட்சியளிக்க முடியும். ஆனால் 1400 வருடங்களுக்கு  முந்திய அன்றைய அரபகச் சூழலை நினைத்துப் பார்த்தான். பாலைவனத்தில் பயணக்களைப்பு தெரியாமல் தூய வெண்ணிற ஆடையில் திடீரென காட்சியளிப்பது, சான்ஸே இல்லை. யார் இவர்? எப்படி திடீரென வந்தார் என்ற கேள்வியை எழுப்பிய நபிமொழி, நபித்தோழர்களைப் போலவே இம்தியாஸின் கவனத்தையும் அவரை நோக்கி ஈர்த்தது.


 வந்தவர் நான்கு கேள்விகளை நபியிடம் கேட்கின்றார். இந்த நான்கு கேள்விகளில் இஹ்சான் என்றால் என்ன? என்ற  மூன்றாவது கேள்வி தான் மிகவும் சிந்திக்கத் தூண்டிய புதிரான செய்தியாக இருந்தது இம்தியாஸுக்கு. இஹ்சான் என்பதற்கு அழகுபடுத்துவது, உதவி செய்வது என்பது அகராதி பொருள். இங்கே அழகுபடுத்துவது என்றால் வணக்கத்தை அழகுபடுத்துவதைக் குறிக்கின்றது. அதற்கு நபியவர்கள், இஹ்சான் என்பது:


 “நீ இறைவனை வணங்குவதாய் இருக்கும்

நீ அவனைப் பார்ப்பதைப் போல

நீ அவனைப் பார்க்கக் கூடியவனாக ஆகியிருக்காவிட்டால்

நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.


 நபியவர்கள் காட்டித் தந்த முறையில் வாழும் வாழ்வின் எல்லா நிலைகளுமே வணக்கம்  என்பதால்,  இறைவனைப் பார்ப்பதைப் போல இருக்கும்  இஹ்சானின்  மூலம் வாழ்வே அழகிய வணக்கமாக மலரும் அற்புத நிலையை இந்த நபி மொழி கோருகிறது  என்பதை விளங்கிய இம்தியாஸின்  கவனம் நபிமொழியின் இறுதிப் பகுதியில் குவிந்தது.


 நான்கு கேள்விகளுக்குப் பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். உமர் (ரலி)[2] சொல்கின்றார்கள்: நீண்ட நேரம் நான் அங்கேயே இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்தாம் வானவர் ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக அவர் வந்தார்'' என்று சொன்னார்கள்.  


 இது வரை மனிதராகப் பார்த்தவர்களுக்கு அந்த வினோத மனிதர், மனிதரேயல்ல ஒளியால் படைக்கப் பட்ட வானவர் என்ற உண்மை வெளியானது.   


 ஒரு வானவர் பகிரங்கமாக நபித்தோழர்களின் பார்வைக்குக் காட்சியளித்து இந்த சம்பவங்கள் வெளியாகக் காரணம் எதுவாக இருக்கக் கூடும்? இறைவன் விரும்பி இருந்தால் நபியவர்களே கூட தோழர்களிடம் கேள்வியை எழுப்பி இதை விளக்கி இருக்க முடியும். ஆனால் இறைவன் ஏன் அதை ஒரு வித்தியாசமான முறையில் வெளியாக்கினான். தோழர்கள் வந்தவரை மனிதராகப் பார்த்தனர். நபியவர்கள் மட்டும் அவரை வானவராகப் பார்த்தது  எப்படி?


 நபியவர்களின் அகநிலையை - frequency of phrophet Muhammad ஐ தோழர்களுக்கும் ஓரளவாவது வழங்கத் தான் இந்த ஏற்பாடா? எனச் சிந்தித்துக் கொண்டிருந்த இம்தியாஸ் வெயிலின் தகிப்பை மேனியில் உணர்ந்தான். தகதகவென கொழுந்துவிட்டெரியும் செந்நிற பிழம்பாய் சூரியன் சுட்டெரிக்கும்  ஜூன் மாத வெயில் தன் முதல் இன்னிங்ஸிலேயே சிக்சர் அடிக்கவே, துபாய்க்கு இரண்டே பருவகாலம் தான்  hot and hotter என யாரோ வேடிக்கையாகச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நத்தை தன் கூட்டுக்குள் உடலை இழுத்துக் கொள்வது போல் பால்கனியை விட்டு வெளியேறி வீட்டின் உள்ளே நுழைந்தான்.


 அலைப்பேசி சினுங்கியது. ஒரு டெண்டரின் தொடர்பாக அதிகாலையில் அபுதாபிக்குக்  கிளம்ப வேண்டி இருந்ததால்  யாரென்று தெரியாத அழைப்பை  இம்தியாஸ் பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் நுழைந்தான். வெயில் காலத்தில் ஹீட்டர் போடாமலே ஷவரில் தண்ணீர் சூடாக வரும் என்பதால் ஏற்கனவே ஒரு பெரிய வாளியில் முன் தினம் பிடித்து வைத்திருந்த குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வெளியில் வரும் போது, அலுவலக டிரைவரிடமிருந்து வந்த மிஸ்ட் கால், அழைத்துச் செல்வதற்காக டிரைவர் வந்து விட்டதைத் தெரியப்படுத்தும் சிக்னல் வரவே,  அவசரமாக   ஆடையணிந்து கோட்டை கையில் எடுத்துக் கொண்டான். அபுதாபி டிராண்ஸ்போர்ட் அத்தாரிடியின் டெண்டருக்கு முந்திய விளக்கக் கூட்டம்.  போகும் போது படித்துக் குறிப்பெடுத்துக் கொள்வதற்காக டெண்டர் டாக்குமெண்ட் பிரதியை எடுத்துக் கொண்டு கிளம்பி லிப்டில்  நுழைந்த போது, “அஸ்ஸலாமு அலைக்கும்”  என மலர்ந்த முகத்துடன் முகமன் கூறியவராக எதிர் வீட்டில் தங்கி இருக்கும் அரபியும் லிப்டில் நுழைந்தார். வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்லும் போது தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கோட் சூட்டுடன், வாயில் புகையும் சிக்ரெட்டுடன்  காட்சியளிக்கும் அவர் பூசியிருந்த விலையுயர்ந்த அத்தரின் மணம் லிப்டை சூழ்ந்தது.


 சலாத்துக்குப் பதிலளித்தவனாக  இம்தியாஸும் புன்னகைத்தான். மூன்று வருடங்களாக ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்தாலும் இம்தியாஸுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு இந்த சலாமும், சிறிய புன்னகையும் தான்.


 அரபிக்கு அல் பர்ஷாவில் சொந்தமாக ஒரு வில்லாவே இருக்கிறது  என்றார்கள். ஆனாலும் அவர் இங்கே ஃப்ளாட்டில் ஏன் தங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வீட்டில் அவருடன் யாரோ இருக்கின்றார்கள் என்பது உள்ளே ஆள் நடமாடும் சத்தத்தினால் தெரிந்தாலும் அவர்கள் யாரையும் ஒரு முறை கூட வெளியில் பார்த்ததே இல்லை. இது  சற்று விநோதமாக இருந்தது. அரபியைச்  சிலர் சிஐடி எனவும் சொன்னார்கள்.  ஆனால், அவரது விஷயங்கள் எல்லாமே ஊர்ஜிதமற்ற தகவல்கள் தான்.


 எல்லா வினாக்களின் முடிச்சும் அவிழ்ந்து இறுதியில் விடை தெரிய வாழ்க்கை என்ன மர்ம நாவலா?   ஒரு எதிர் வீட்டுக்காரர் என்ற வகையில் அவரால் அவனுக்கு எந்த இடையூறும் இல்லை. மேலும் அவர் உள்ளூர் அரபி  என்பதால் அதுவே போதும் என நினைத்த  இம்தியாஸுக்கு அவரைப் பற்றிய ஊகங்களை மேலும்  ஆராய விருப்பமில்லை.

 

 காரில் ஏறி அமர்ந்ததும் மீட்டிங்க்கில் கேட்பதற்கு வேண்டிய கேள்வி குறிப்புகளைத் தயார் செய்து முடித்தவன் அபுதாபி சென்றடைய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகுமென்பதால்  சற்றே ஓய்வாயிருக்க எண்ணிச் சாய்வாக இருக்கையை தளர்த்தி  உடலைச்  சாய்த்து கண்களை மூடினான்.


 சிறிது நேரம் கழித்து மெல்லக் கண்களைத் திறந்து பார்த்த போது கார் ஷேக் ஜாயித் ரோட்டில் உலகிலேயே இரண்டாவது பெரிய ஷாப்பிங் மாலான துபாய் மாலை கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. இம்தியாஸுக்கு துபாய் மாலில் மிகவும் பிடித்த இடம் பிரமாண்டமான கினோகுன்யா புத்தகக் கடை தான். சம்பளத்தில் மாதம் 500லிருந்து 1000 திர்ஹம் வரை புத்தகங்களுக்காக ஒதுக்கி விடுவான். 


நேற்று இரவு சரியாகத் தூங்காததால் இம்தியாஸ் இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் எனக் கண்களை மூடிய போது அலைப்பேசி ஒலித்தது.  காலையில் வந்த அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வரவே எடுத்துப் பேசினான்.


 எதிர் முனையில் பேசியவன் குரலிலிருந்து இளைஞன் என்பது விளங்கியது. “அஸ்ஸலாமு அலைக்கும்…உங்கள் நண்பர் ஆஷிக்கை ஆன்மிகம் சம்பந்தமாக  ஒரு சந்தேகத்திற்காக அணுகினேன்…. அவர் உங்கள் எண்ணைத் தந்தார் …பேசலாமா?” தந்தியடிப்பது போல் விட்டு விட்டு பேசினான்.  ஆஷிக் தான் இம்தியாஸுக்கு ஆன்மிக தொடர்பை ஏற்படுத்தியவன். ஆன்மிக பாதையில் தன்னை விட சீனியரான ஆஷிக் ஏன் இவனுக்கு தன் பெயரைப் பரிந்துரை செய்தான் என்ற எண்ணம் இம்தியாஸின் மனதில் ஓடவே ஒரு நிமிடம் அமைதியானான்.


 எதிர் முனையில் பேசியவன் மௌனம் சம்மதம் என விளங்கியவனாய் பேச்சைத் தொடர்ந்தான், “தவறாக நினைக்கலேன்னா ஒரு கோரிக்கை” என்றவன்,


 “எனக்கு ஃபனாவாக வேண்டும்” என்றான் தடாலடியாய், ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஒரு மசால் தோசை பார்சல் என்பது போல.



[1]     அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு இறைவன், கடவுள் என்பது பொருள்.  அல்லாஹ் என்பது முஹம்மது நபியவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டப் பெயர் அல்ல. முஹம்மது நபியின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ், அதன் பொருள் ‘அல்லாஹ்வின் அடிமை‘ என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக ‘அல்லாஹ்’ என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும். ஆகவே ‘அல்லாஹ்’ என்ற பெயர் வரும் இடத்திலெல்லாம் ‘இறைவன்’ எனப் பொருள் கொண்டு பார்க்கவும்.

 [2] அவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.