தோழமையுடன்

Thursday, March 28, 2019

அய்யனார் விஸ்வனாத்தின் 'பழி'யை முன்வைத்து

அன்புள்ள அய்யனார் விஸ்வனாத்,

உங்கள் 'பழி' நாவலை ஒரு சில அத்தியாயங்கள் படித்தவுடன, தொடர முடியாமல் மூடி வைத்து விட்டேன். நிச்சயமாக நீங்கள் ஒரு நவீன புஷ்பா தங்கதுரையோ, உங்கள் கதை ராணி முத்தில் வரக் கூடிய நாலாந்தர கதையோ இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நீங்கள் முயன்றால் மேல்நாட்டு கிளாசிக்கல் எழுத்தின் தரத்தில் தமிழில் எழுத முடியும் அத்தகைய ஒரு ஆகர்சம், மேஜிக் உங்கள் எழுத்தில் இருக்கிறது. எங்களுக்காக அப்படி நீங்கள் எழுத வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இப்படித்தான் ஆபிதீன் நானாவிடம் நீங்கள் வைக்கம் பஷீரைப் போல எழுத வேண்டும் எனச் சொன்னதற்கு. அப்படி எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஆனால் அவருக்கும் என் பூண்டு கதை தான் பிடிக்கிறது என்ன செய்ய என்றார். அந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளர் புதுமைப் பித்தன் போர்னோவை விரும்பி வாசிப்பார் என எங்கோ படித்தது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதபு கருதி ஆபிதீன் நானாவிடம் பதில் பேசவில்லை.

உனக்குப் பிடிக்காவிட்டால் படிக்காதே. ஒரு எழுத்தாளனுக்கு அவன் எப்படி எழுத வேண்டும் எனச் சொல்லுவது அசட்டுத் தனமா? அடாவடித்தனமா? எனக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். இன்று காலையில் படித்த Hussain Amma வின் வரிகளில் இருந்த வேதனை தான் எனக்கு உங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது ..

ஹூசைனம்மா

"பொள்ளாச்சி கொடூரம் ……. நெஞ்சில் கடப்பாரையைப் பாய்ச்சியது. "எத்தனை பேருடா வருவீஙக?" என்ற ஒரு வசனம் தந்த அதிர்வின் காரணமாகவே, மகாநதி படத்தின் நகைச்சுவை காட்சிகளைக் கூட பார்ப்பதில்லை. அதன் நிஜ வெர்ஷன் இந்த பொள்ளாச்சி கொடூரம்!!

சற்றே அதைக் கடந்தால், இதோ தமிழகத்தின் ஆஸிஃபா.... அக்குழந்தையின் பெயரைத் தெரிந்துகொள்ளக் கூட அச்செய்தியை வாசிக்கப் பயமாக இருக்கிறது.

எங்கே போகிறது தமிழகம்? என்ன நடக்கிறது? ஏன் இப்படி?

நோய்க்கு மருந்து கொடுப்பதோடு, நோய்முதல் நாடுவதுதான் இப்போதைய அவசரத் தேவை. குடியும், ஊடகங்களில் ஆபாசம் ஆகியவையே முதற்காரணிகள்.

பொள்ளாச்சி நிகழ்வுகள், ஆபாச படங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை நமக்கு உணர்த்துகின்றன. போர்னோகிராஃபி என்பது பொழுதுபோக்காக இருந்தது போய், ஒரு சீரியஸான தொழிலாக மாறிவிட்டது. ஹாசினி, சென்னை அபார்ட்மென்ட் மாற்றுத்திறனாளி சிறுமி, இப்போது கோவை சிறுமி உட்பட அதன் விளைவுகள்தான்.

சமீபத்தில் போர்ன் வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட போது மக்கள்(???) எதிர்ப்பின் காரணத்தால் தடை நீக்கப்பட்டது.

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? "ஆண்கள் திருந்த வேண்டும்" என்ற கோஷம் மட்டுமே பயன் தராது. தவறு செய்யத் தூண்டும் காரணிகளும் -தவறு செய்தால் கொடுந்தண்டனை கிடைக்கும் என்ற பயமின்மை உட்பட - ஆராயப்பட்டுக் களையப்பட வேண்டும்".

அதிகாலையில் ஹூசனம்மாவின் இந்த வரிகளைப் படித்ததும் ....நம் தாயகத்தை நினைக்கையில்.....போலீஸ் ஸ்டேசன் இல்லாத ஒரு பொறுக்கி சாம்ராஜ்யத்தில் மக்கள் வாழ்வது போன்ற ஒரு பிரமையும்.

எடுஙகடா அந்த திருப்பாச்சி அருவாளை அந்த கயவாளி தோப்புக்குள்ளே பூந்து எல்லா வாழைப்பழத்தையும் சீவி எறிந்திடலாம் என்ற வேகமும்....

பெருந்திரளாக மக்களின் கைகளில் ஏந்தி நிற்கும் தீபந்தங்கள், மெழுகுவர்த்திகள் இருள் நீக்கும் என சிறிது ஆசுவாசமும்….

எங்கே...ஒரு சுவிட்ச போட்டு எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விடுவார்கள் அந்த மோடி மஸ்தான்கள் என்ற பயமும்….

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டு கதவுகளைத் தட்ட வைத்தது.

இந்த மிருககாட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்கு பசியை விற்க வேண்டாம்.

எதிர்கால தஸ்தாவஸ்கியான நீங்கள் குடும்பத்துடன் ஒரு தேநீர் அருந்த வீட்டுக்கு வாருங்கள். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.

பேரன்புடன்,
அமீன்

அய்யனாருக்கே அறுவாளா என ஆசிப் பாய் சொல்வது காதில் கேட்கிறது. நம்ப வேண்டாம். நட்பு நாடியே இந்த மடல்.


Wednesday, March 6, 2019

ஒரு வாசகனின் பார்வையில் - ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’

 உயிர்த்தலம்’ சிறுகதைகளைப் படிக்கும் உங்களுக்கு....

இந்த நூலின் கதைகள் வழமையான சிறுகதை வடிவத்தில் இல்லை. ஒரு நாவலின் சில அத்தியாயங்களைப் போல, ஒரு டயரியின் சில பக்கங்களைப் போல இருக்கிறது என்றெல்லாம் தோன்றினால் அதை சரி எனவும் . சரியில்லை எனவும் சொல்லலாம்.


சரி என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவையில்லை. சரியில்லை என்பதை எப்படி என பார்க்கும் முன்.... 

இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு ரூபாய்’ கதையிலிருந்து சில வரிகள்:

 “மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கிஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கிவியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போதுஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம்சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமாஎலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக் கொண்டு சாகின்றன.

நூறு பேரைச் சுமக்கும் மினிபஸ் என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் கூறாகச் சொல்லத் துவங்கி அதையே எதிர்கால பாரதத்தின் குறியீடாக விரிப்பது, இந்திரா பார்த்தசாரதியின் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் யுக்தி.  

இந்த ஒரு கோணத்தில் இ.பா.வின் version 2.0 என ஆபிதீன் அவர்களை சொல்லலாம்.

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து என்பார் ஜெயமோகன். ஆபிதீன் அவர்களின் எழுத்தும் வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கிக் கடக்க முயலும் தியானம் தான்.

பரந்த விஷயஞானமும், சுய எள்ளலும், எல்லா புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் ஹராமித் தனத்தையும் ஒருங்கே கொண்டவை அவரது கதாபாத்திரங்கள்

நாகூரின் வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந்த version 2.0 வின் சிக்கலும், அழகும் அதன் வட்டார வழக்குத் தான்.

வாழைப்பழம்என்ற ஆபிதீன் நானாவின் கதைக்கு கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ‘ஆபாசம்’ கலந்து நிற்கிறது என நான் முகநூலில் அங்கலாய்த்திருப்பதற்கு,   வாழைப்பழ கதைக்கே இத்தனை ஆதங்கம் எனில் ஆபிதீனின் ‘தினம் ஒரு பூண்டுக் கதையை  டெட்டாலால் கழுவி விட்டுத்தான் படிப்பீர்களா  என கேள்வி எழுப்பி இருந்தார் Sadayan Sabu.  ( ‘வாழைப்பழம்’,  ‘தினம் ஒரு பூண்டுஇரண்டு கதைகளும் இந்த தொகுப்பில் இருக்கிறது.)

இப்படி எல்லாம் ஏன் இவர் எழுத வேண்டும் கேட்டால்,

"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."  என ஜி. நாகராஜன் போல சொல்ல முடியாது.

 ஏனென்றால் ஆபிதீன் அவர்களின் கதைக்களம் வேறு, நாகராஜனின் கதைக்களம் வேறு.        திரு நாகராஜனின் கதைக்களம்  முற்றிலும் மாறுபட்ட உலகம். அந்த சூழலுக்கு அது தேவைப் பட்டிருக்கலாம்.  மேலும், வேறு சிலரைப் போல நரகல் நகைச்சுவையை added attraction ஆகக் கொண்டு தூக்கி நிறுத்த வேண்டிய தேவை ஆபிதீனின் கதைகளுக்கில்லை. அன்றாட வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளை, வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கி  எளிமையாகக் கடக்க உத்வேகமளிக்கும் motivation தான் அவர் எழுத்தின் மிகப் பெரிய பலம்.

எங்களைப் போன்ற எளிய வாசகர்களுக்காக ஆபிதீன் அதிகம் எழுத வேண்டும். அதுவும் நாவல் எழுத வேண்டும். அதன் மூலம் வைக்கம் பஷீருக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓரளவு நிறைவு செய்ய ஆபிதீனால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.