தோழமையுடன்

Thursday, March 28, 2019

அய்யனார் விஸ்வனாத்தின் 'பழி'யை முன்வைத்து





அன்புள்ள அய்யனார் விஸ்வனாத்,

உங்கள் 'பழி' நாவலை ஒரு சில அத்தியாயங்கள் படித்தவுடன, தொடர முடியாமல் மூடி வைத்து விட்டேன். நிச்சயமாக நீங்கள் ஒரு நவீன புஷ்பா தங்கதுரையோ, உங்கள் கதை ராணி முத்தில் வரக் கூடிய நாலாந்தர கதையோ இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நீங்கள் முயன்றால் மேல்நாட்டு கிளாசிக்கல் எழுத்தின் தரத்தில் தமிழில் எழுத முடியும் அத்தகைய ஒரு ஆகர்சம், மேஜிக் உங்கள் எழுத்தில் இருக்கிறது. எங்களுக்காக அப்படி நீங்கள் எழுத வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இப்படித்தான் ஆபிதீன் நானாவிடம் நீங்கள் வைக்கம் பஷீரைப் போல எழுத வேண்டும் எனச் சொன்னதற்கு. அப்படி எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஆனால் அவருக்கும் என் பூண்டு கதை தான் பிடிக்கிறது என்ன செய்ய என்றார். அந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளர் புதுமைப் பித்தன் போர்னோவை விரும்பி வாசிப்பார் என எங்கோ படித்தது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதபு கருதி ஆபிதீன் நானாவிடம் பதில் பேசவில்லை.

உனக்குப் பிடிக்காவிட்டால் படிக்காதே. ஒரு எழுத்தாளனுக்கு அவன் எப்படி எழுத வேண்டும் எனச் சொல்லுவது அசட்டுத் தனமா? அடாவடித்தனமா? எனக் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். இன்று காலையில் படித்த Hussain Amma வின் வரிகளில் இருந்த வேதனை தான் எனக்கு உங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது ..

ஹூசைனம்மா

"பொள்ளாச்சி கொடூரம் ……. நெஞ்சில் கடப்பாரையைப் பாய்ச்சியது. "எத்தனை பேருடா வருவீஙக?" என்ற ஒரு வசனம் தந்த அதிர்வின் காரணமாகவே, மகாநதி படத்தின் நகைச்சுவை காட்சிகளைக் கூட பார்ப்பதில்லை. அதன் நிஜ வெர்ஷன் இந்த பொள்ளாச்சி கொடூரம்!!

சற்றே அதைக் கடந்தால், இதோ தமிழகத்தின் ஆஸிஃபா.... அக்குழந்தையின் பெயரைத் தெரிந்துகொள்ளக் கூட அச்செய்தியை வாசிக்கப் பயமாக இருக்கிறது.

எங்கே போகிறது தமிழகம்? என்ன நடக்கிறது? ஏன் இப்படி?

நோய்க்கு மருந்து கொடுப்பதோடு, நோய்முதல் நாடுவதுதான் இப்போதைய அவசரத் தேவை. குடியும், ஊடகங்களில் ஆபாசம் ஆகியவையே முதற்காரணிகள்.

பொள்ளாச்சி நிகழ்வுகள், ஆபாச படங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை நமக்கு உணர்த்துகின்றன. போர்னோகிராஃபி என்பது பொழுதுபோக்காக இருந்தது போய், ஒரு சீரியஸான தொழிலாக மாறிவிட்டது. ஹாசினி, சென்னை அபார்ட்மென்ட் மாற்றுத்திறனாளி சிறுமி, இப்போது கோவை சிறுமி உட்பட அதன் விளைவுகள்தான்.

சமீபத்தில் போர்ன் வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட போது மக்கள்(???) எதிர்ப்பின் காரணத்தால் தடை நீக்கப்பட்டது.

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? "ஆண்கள் திருந்த வேண்டும்" என்ற கோஷம் மட்டுமே பயன் தராது. தவறு செய்யத் தூண்டும் காரணிகளும் -தவறு செய்தால் கொடுந்தண்டனை கிடைக்கும் என்ற பயமின்மை உட்பட - ஆராயப்பட்டுக் களையப்பட வேண்டும்".

அதிகாலையில் ஹூசனம்மாவின் இந்த வரிகளைப் படித்ததும் ....நம் தாயகத்தை நினைக்கையில்.....போலீஸ் ஸ்டேசன் இல்லாத ஒரு பொறுக்கி சாம்ராஜ்யத்தில் மக்கள் வாழ்வது போன்ற ஒரு பிரமையும்.

எடுஙகடா அந்த திருப்பாச்சி அருவாளை அந்த கயவாளி தோப்புக்குள்ளே பூந்து எல்லா வாழைப்பழத்தையும் சீவி எறிந்திடலாம் என்ற வேகமும்....

பெருந்திரளாக மக்களின் கைகளில் ஏந்தி நிற்கும் தீபந்தங்கள், மெழுகுவர்த்திகள் இருள் நீக்கும் என சிறிது ஆசுவாசமும்….

எங்கே...ஒரு சுவிட்ச போட்டு எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விடுவார்கள் அந்த மோடி மஸ்தான்கள் என்ற பயமும்….

ஒரு மயிரும் புடுஙக முடியாத இயலாமையின் நிதர்சனம் தந்த ஆயாசமும் தான் அய்யனாரின் வீட்டு கதவுகளைத் தட்ட வைத்தது.

இந்த மிருககாட்சி சாலையில் உள்ள கூண்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது சாமி!. இங்கே மிருகங்களுக்கு பசியை விற்க வேண்டாம்.

எதிர்கால தஸ்தாவஸ்கியான நீங்கள் குடும்பத்துடன் ஒரு தேநீர் அருந்த வீட்டுக்கு வாருங்கள். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.

பேரன்புடன்,
அமீன்

அய்யனாருக்கே அறுவாளா என ஆசிப் பாய் சொல்வது காதில் கேட்கிறது. நம்ப வேண்டாம். நட்பு நாடியே இந்த மடல்.


No comments: