தோழமையுடன்

Wednesday, February 16, 2022

நூலாய்வு : விடுதல்களும் தேடல்களும் (கட்டுரைகள்)

நூல் : விடுதல்களும் தேடல்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர் : கவிஞர் நிஷா மன்சூர்
சுத்த பரிபூரணச் சுகவாரி தன்னிலோர்
சொட்டாகினுந் தொட்டபேர்
நல்லவர்கள் நல்லவர்கள் நல்லவர்க ளென்றைக்கு
நானு(ம்) நல்லவனாவனோ!
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் கவிதை வரிகள் இவை. பேரின்ப கடலில் குடம் குடமாய் அள்ளி பருகிய தன் ஆன்மிக உச்சத்திலிருந்து இறங்கி வந்து அதில் ‘சொட்டாகிலும் தொட்டு விட‘ நம்மை அழைக்கும் தாய்மையின் கருணை வரிகள் இவை.
இத்தகைய ஞான கவிதைகள் வழியே தமிழ் வளர்த்த இறைஞானிகளின் ராஜபாட்டையில் நம்மை அழைத்துச் செல்கிறது விடுதல்களும் தேடல்களும் என்ற நிஷா மன்சூரின் கட்டுரை தொகுப்பு. குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பாவில் ஆரம்பித்து தமிழகத்தை சார்ந்த இறைஞானிகளின் கவிதைகளில் தொடர்ந்து மௌலானா ரூமி வரை ஞானத்தேனள்ளி நம்மைப் பருக செய்திருக்கிறார் ஆசிரியர்.
இதே வகையில் ...
சத்திய மூர்த்தியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ எனும் மௌலானா ரூமியின் கவிதைகள்.
'ரூமீ கவிதைகள்’என்ற தலைப்பில் எழுதிய தமிழன்பனின் கவிதைகள்.
கணேஷ் வெங்கட்ராமின் தமிழாக்கத்தில் உமர் கையாமின் ‘ரூபையாத்,
ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ஷெய்கு பஹாவுதீன் வலது அவர்களின் ‘நீருக்குள் மூழ்கிய புத்தகம்’
இன்னும் எனது ‘கனவுக்குள் கனவு’ சூஃபி நாவலுக்கு எழுதிய மதிப்புரைகள்
அனைத்தும் நேர்த்தியான ஆன்ம விருந்தாகப் படைத்திருக்கிறார்.
நிஷா மன்சூரின் அழகிய விளக்கத்தால் ஆகர்சிக்கப்பட்டு அந்த ஞான கவிதை நூல்களைக் கையிலெடுத்தால் ஞானிகள் சென்ற அந்த ராஜபாட்டையின் திக்குத் தெரியாமல் அலைய நேரிடலாம் அஃபிஃபீயைப் போல.
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுத்தாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய அஃபிஃபீயிடம் ஷெய்குல் அக்பர் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளைப் படிக்கச் சொன்னார். அஃபிஃபீ ‘ஃபுஸுசுல் ஹிகம்’ நூலைப் பல முறை படித்தும், கஷானியின் விரிவுரை விளக்கத்தைப் படித்தும் கூட தன்னால் அதில் இருக்கும் எந்த விஷயத்தையுமே பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தனக்கு இதுவரை அரபு மொழியில் எழுதப்பட்ட எந்த நூலும் இது போன்று கடினமாக இருந்ததில்லை என்றும் இதுவே முதன் முறை என்றும் பேராசிரியர் நிக்கல்ஸன் அவர்களிடம் கூறியதாக The Diffusion of Ibn 'Arabi's Doctrine என்ற கட்டுரையில் Michel Chodkiewicz குறிப்பிடுகின்றார்.
வருணனைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின் ஏகாந்த இருப்பின் விளக்கம் என்பது மொழிகளுக்கெட்டா மர்மமாகும். தேன் என்பதை தன் வாழ்நாளில் ஒரு முறை கூட சுவைக்காத ஒருவனுக்குத் தேனின் சுவையை விளக்க முடியாது. சுவைத்தவனுக்கோ அதன் விளக்கம் தேவையிராது.
தேனின் சுனையைக் கூட எழுத்தில் வடிக்க முடியாத போது. ‘தவ்க்’ எனும் பேரின்ப அனுபவ வாயிலாய் இறைஞானிகள் தாம் சுவைத்த பேரின்ப தேனின் சுவையைத் 'தாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்' எனும் பேராவலால் நமக்களிக்க முனைந்தார்கள்.
சாதாரண பேச்சு நடையில் விவரிக்க முடியாத விஷயங்கள் அவை. உவமைகளால் விளக்க முடியா ஒன்றை ஒரு வகையில் விளங்கிக் கொள்ள பல்வேறு உவமைகளாலும், உருவகங்களாலும் விளக்க அவர்கள் முயலுகின்ற மகா கருணையின் வடிவங்கள் தான் கவிதையாய் கட்டுரையாய் நம்மை வந்தடைந்திருக்கிறது.
ஆகவே, இஸ்லாமிய ஞான கவிதைகளின் வாசிப்பு என்பது ஆழ்மன கவிதை வாசிப்புடன் கூடிய தமிழறிவு, அடிப்படை ஆன்மிக ஞானம், கொஞ்சம் அரபு வார்த்தைகளின் விளக்கம் என பல்வேறு களங்களையும் உள்ளடக்கிய ஒரு நுணுக்கமான முயற்சியாகும் என்பதை மனதில் கொண்டு நாம் வாசிப்பைத் தொடர வேண்டும்.
நிஷாமன்சூரின் கட்டுரைகள் அவரது புலமையைக் காட்டுவதற்காக எழுதப்பட்டவையல்ல. இறை ஞான பொக்கிச அறைகளின் ஒரு ஜன்னலைத் திறந்து அதன் உள்ளே இருக்கும் பொக்கிசத்தை நமக்குக் காட்டித் தருவதுடன் அதைச் சென்றடையவும் நம்மை அன்புடன் அழைக்கிறது.
மீண்டும் அஃபிஃபிக்கு வருவோம்…
மேலே சொன்ன பேராசிரியர் நிக்கல்சனின் மாணவர் அஃபிஃபீ இப்னு அரபியவர்களின் ஞான விளக்கத்தை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட ஆரம்ப தடைகளால் சோர்ந்து விடவில்லை. அவர் எந்த அளவு தன் முயற்சியில் வெற்றி பெற்றார் என்றால் இப்னு அரபியவர்களின் ஞான விளக்கங்களை ஆராய்ந்து அதை “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலாக எழுதினார். இன்று இப்னு அரபியவர்களை கற்க்கும் மேற்கத்திய தத்துவ மாணவர்களுக்குத் தவிர்க்க முடியாத reference book ஆகத் திகழ்கிறது A.A.அஃபிஃபீயின் இந்த நூல்.
பேராசிரியர் நிக்கல்சன் போன்றவர்கள் “சுய முயற்சியின் மூலம் தத்துவ படுத்திய (philosophize) அறிவை அடைந்து கொண்டோம் ஆனால் practicing sufi இல்லையாதலால் ‘தவ்க்’ எனும் அனுபவ ஞானத்தை அடைய முடியவில்லை” என சொல்லுகின்றார்கள்.
அந்த சுத்த பரிபூரணச் சுகவாரி தன்னிலோர் சொட்டாகினும் தொட்டு விட - அந்த பேரின்ப அமுதூட்ட ஒரு ஆசான் தேவை
“இணங்கும் மெய்ஞான பேரின்பக் கடலின்
இன்னமு தெடுத்தெமக்களிப்போன்” என அப்பா தன் ஆன்மிக ஆசானை குறித்து பாடுவது போல
ஒரு முறையான ஆன்மிக குருவின் வழிகாட்டலுடன் ஆன்மிக அகப்பயணம் (சுலூக்) வழியாகத் தான் அந்த நிலையை எட்ட முடியும்.
000000
'வறட்டு சர்ச்சைகளில் வரலாற்றைத் தொலைத்த சமூகமும் புனைவுகளின் வழி வரலாற்றை ஆளும் கற்பிதங்களும்' என்ற கட்டுரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட இஸ்லாமிய சமூகத்தை தம் புனைவுகளில் தவறாகச் சித்தரிக்கும் அறியாமையையும். சரியாக முன் வைக்க வேண்டிய இஸ்லாமியர்கள் சமயம் சார்ந்த சர்ச்சைகளிலேயே மூழ்கிக் கலை இலக்கியத்தில் பின் தங்கி இருக்கும் நிலையையும் பேசுகிறது.
பன்மை சமூக அமைப்புள்ள நம் நாட்டின் இலக்கிய வரலாற்றில் இசுலாமிய புலவர்களும், கவிஞர்களும் எப்போதும் விடுபட்ட படைப்பாளிகளாக இருப்பதையும் அவர்களைக் கொண்டாட வேண்டிய காலத்தின் தேவையையும் முன் வைக்கிறது 'தமிழ் இலக்கிய வரலாறு - விடுதல்களும், தேடல்களும் கண்டடைய வேண்டிய புள்ளிகளும்' என்ற ஆய்வுக் கட்டுரை.
பக்கீர் இசை பாடல்களும், இளைஞர்களின் நற்பணி மன்றங்களும் சார்ந்த nostalgia ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
இந்த தொகுப்பின் ஆன்மிக சுவையுடன் ஒத்திசைவு பெறாத அகப்பாடல் விளக்கம் பற்றிய கட்டுரையை நிஷா மன்சூர் வேறொரு தொகுப்பில் சேர்த்திருக்கலாம். திருஷ்டி பொட்டு!.
இறுதியாக, கவிஞர் அபியவர்களின் மணிவிழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரையும் ஒரு போனஸாக இணைந்து வாசிப்பின்பத்தை நல்குகிறது.
ஒட்டு மொத்தத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இலக்கிய உலகில் நிஷா மன்சூர் இன்னும் விரிவாக தன் பங்களிப்பை தொடர வேண்டும் என்பது என் அன்பான கோரிக்கை.
வெளியீடு:
தேநீர் பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர்
ஜோலார்பேட்டை – 635851
தொடர்புக்கு: +91 9080909600
Like
Comment
Share




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.