தோழமையுடன்

Tuesday, December 13, 2011

அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை


 “குர்ஆனை வாசித்தால் நன்மை கிடைக்கும். விளங்கினால் (இறை நேச) பதவிகள் கிடைக்கும். ஆராய்சி செய்தால் இறைவனே கிடைப்பான்.”- என்பார்கள் ஷெய்குனா நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள்.

குறிப்பு:  யார் அந்த விநோத மனிதர்? கட்டுரையை வாசித்து விட்டு தொடர்வது நலம்.

வேதத்தை வாசித்தால் இறையருள் கிடைக்கும் என்பது சரி இறைவனே கிடைப்பானா?

ஆம் கிடைப்பான். இறைவன் கிடைத்தவர்களின் நிலை
“நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்) பக்கம் என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்). நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல" (6:79) என்பதன் நிதர்சனமானது.
அந்த மகத்தான நிலையை அடைந்த இறைஞானிகள்,  “ஹல்கினில் ஹக்கை ஹக்காக காணாத வாழ்நாள் துக்கமாமே” என பாடினார்கள் .

 அகப்பார்வை குறித்த அருமையான பாடல் வரிகள் இவை.

அகப்பார்வை என்றால் என்ன?

 
நிச்சயமாக எவருக்கு (அகப்பார்வை கொண்ட) இதயம் இருக்கின்றதோ அவருக்கு அல்லது மன ஓர்மையுடன் செவிசாய்க்கின்றாரோ அவருக்கு இதில் (இறை அத்தாட்சிகளில்) ஞாபகமூட்டல் (reminder) இருக்கிறது. அல் குர்ஆன் (50:37)

குர்ஆனிய அத்தாட்சிகளைக்(ஆயத்களைக்) கொண்டு பிரபஞ்ச அத்தாட்சிகளை நாம் முன்னோக்க கூடிய அகவிழிப்புணர்வு பார்வையே அகப்பார்வை


அகப்பார்வை தொடர்பாக குர்ஆன் கூறும் வாசகங்கள் இவை. மககாவில் வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்களின் அகப்பார்வையற்ற நிலை பற்றி குர்ஆன் இப்படி கூறுகின்றது.

"வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் உள்ளன.(எனினும்) அவர்கள் அதை புறக்கணித்தவர்களாகவே, அவற்றின் அருகே நடந்து செல்கின்றனர்.(12:105)

மேலும், அவர்கள் இணை வைக்கின்றவர்களாக இருக்கும் நிலையிலேயே அன்றி அவர்களில் பெரும்பாலோர் இறைவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதில்லை".(12:106) என்று.

அதே நேரத்தில்  குர்ஆனில் நபியின் அகப்பார்வை நிலை பற்றி இறைவன் கூறுவதாக இப்படி முன் வைக்கப்படுகின்றது.

(நபியே!) நீர் கூறும்: "இதுவே எனது (நேரான வழியாகும்) நான் உங்களை இறைவனின் பக்கம் அழைக்கின்றேன். அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும்இறைவன் மிகத் தூயவன்.  மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல". (12:108) 

இந்த இறைவசனத்திலிருந்து இணை வைப்பதை விட்டு தப்புவதில்அகப்பார்வைஎன்ற அறிவுப் பார்வையின் அவசியம் தெளிவாகின்றது.

அன்றைய அரபகத்தில் வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்கள் இறைவனை வெறுத்தவர்களுமில்லை, இறைவனை மறுத்தவர்களுமில்லை. இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் தான். எப்படி எல்லாம் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்? வானத்தை படைத்தவன், பூமியைப் படைத்தவன், மரணித்த பூமியை உயிர் பெறச்செய்பவன், உலகை நிர்வகிப்பவன், சூரியன் சந்திரனை மனிதனுக்கு வசப்படுத்தி தந்தவன் என்றெல்லாம் இறைவனை ஏற்று கொண்டிருந்தார்கள். ஆனாலும் இறைவனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையில் இணைவைப்பும் கலந்திருந்தது. அப்படியென்றால் எந்த அத்தாட்சியை அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள்? எப்படி அது அவர்களின் இணைவைப்புக்கு காரணமானது?

"நிச்சயமாக இறைவன் வானங்களையும், பூமியையும் ஹக்கைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.(14:19)

வானங்களையும், பூமியையும் ஹக்கைக் கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் இறைவன் உயர்ந்தவன்".(16:3) 

இவை எல்லாம் உலூஹிய்யத் எனும் இறை ஞானத்தை சார்ந்தவை. வஹியின் மூலம் வந்த விளக்கங்கள். மனித ஆராய்சியினால் உணரக் கூடிய விசயங்களல்ல. நாயகம் (ஸல்) அவர்களும் சுய ஆராய்சியால் இந்த விளக்கத்தையும் - அகப்பார்வையையும் அடையவில்லை என்பதை பின் வரும் இறைவசனங்களின் மூலம் அறியலாம்.

 (நபியே!) "நீர் கூறுவீராக! இறைவனின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளது என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும் மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹியின் (வேத வெளிப்பாட்டின்) மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி (வேறு) எதையும் நான் பின்பற்றுவதில்லை. குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? என (நபியே) நீர் கேட்பீராக! எனவே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?"  (அல்குர்ஆன் 6:50)

பழிப்பது போல் புகழ்வது என்பார்களே அத்தகைய சிலேடை நடையில் இறைவனின் பொக்கிஷம் என்னிடம் இல்லை. நான் வானவர் அல்ல என நபியின் அந்தஸ்த்தை குறைத்துக் காட்டுவது போல் ஆரம்பிக்கிறது இந்த இறைவசனம். முடிக்கும் போது வானவர்களை ஆதம் நபிக்கு மரியாதை (சஜ்தா) செய்ய வைப்பதற்குக் காரணமான மெய்யறிவு என்னும் இறைவனின் மகத்தான, மறைவான, ஞான பொக்கிஷத்தை அதன் உரிமையாளனான இறைவன் தன் வேத வெளிப்பாட்டின்  (வஹியின்) மூலம் வழங்கி நபியை அகப்பார்வையுடையவர்களாக ஆக்கியுள்ள உயர்ந்த அந்தஸ்த்தை சுட்டிக் காட்டுகிறது குருடனும், பார்வையுடையவர்களும் சமமாவார்களா? என்ற கேள்வி.

எவர் இவ்வுலகில் (உண்மையை அறியாக்) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையால் மிகவும் தவறியவராவார்.(17:72) என்னும் இறைவசனம் வெளிரங்கமான பார்வையற்றவர்களைக் குறிப்பிடவில்லை. மனிதன் வாழும் காலத்தில் இறைவனை அறியாமல், உணராமல் அகக்கண் பார்வையற்றவனாய் வாழ்வது என்பது எத்தனை மோசமான வழிக்கேடு என்பதையே எச்சரிக்கின்றது. அத்தகைய குருட்டுத் தனத்தை விட்டு நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.

இந்த இறைஞான விளக்கங்களை பெறுவது எப்படி?

குர்ஆனிய விளக்கங்களை பெற தப்ஸீர் எனும் குர்ஆன் விளக்கவுரை, அறிவியல், இஸ்லாமிய வரலாற்று நூல்கள், பிக்ஹ் நூல்கள் என நூல்களின் துணையோடும் தேவைபடும் போது அவைகளை போதிக்கும் ஆசிரியர்களின் துணையோடும் ஆய்வு செய்யலாம். ஆனால் உலூஹிய்யத்தின் இறை ஞானத்தை புத்தகங்களின் வாயிலாய் விளங்கவே முடியாது

 “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்ற திருமறை வசனத்திற்கேற்ப செயல்பட வேண்டியது தான் அதற்கு ஒரே வழி.

அறிந்தவர்கள் யார்?

முன்னதாக பார்த்தோம் ரஹ்மானை பற்றிய செய்தியை பெருமானார்(ஸல்) இறைவனிடமிருந்து அறிந்தார்கள். வஹியாக வந்த அந்த ஞான வெளிச்சத்தை அகில உலகிற்கும் வழங்கும் ஒளி விளக்கான அவர்களை இறைவன் சிராஜும் முனீர்(33:46) என அழைக்கின்றான். நபி (ஸல்) அவர்களின்அகவெளிச்சம்என்பது படைப்பினங்கள் எட்ட முடியாத அகப்பார்வையின் உச்சம். அகப்பார்வை என்றாலே அண்ணலார் தான். இறைவன் தன் முழுமையான ஞானத்தின் பொக்கிசமாகத் தான் அவர்களின் இதயத்தைப் படைத்தான். அவர்களின் இதய தீபத்திலிருந்து அக வெளிச்சம் பெற்றனர் நபித்தோழர்கள். அண்ணலாரிலிருந்து துவங்கிய அந்த ஞான நீர் வீழ்ச்சி வேத ஞானம் பெற்றோர் இதயங்களின் வாயிலாய் அகிலம் முழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது

குடம் குடமாய் அதில் அள்ளிப் பருகியவர்கள் அனைவரும் அதன்பால் ஆசைக் கொள்ள வேண்டும் என்ற பரந்த எண்ணத்தில்
 
"சுத்த பரிபாரண சுகவாரி தன்னிலோர்
சொட்டாகிலும் தொட்ட பேர் நல்லவர்கள் நல்லவர்கள்
நானென்றைக்கு அந்த நல்லவன் ஆவேனோ?"

எனக் கவிதை பாடி வைத்தார்கள்.  

அண்ணல் பெருமானாரின் இதயத்தில் இறைவன் பொங்க வைத்த நீர் வீழ்ச்சி நதியாய் நடந்து போகும் பாதையென்ன?

பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,
இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானஜோதியை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவலியே முர்ஷிதைஅணுகுங்கள்.

 மீண்டும் ஞாபகமூட்டுகின்றேன் நீங்கள் யாரிடத்தில் இந்த கல்வியை அறிய முற்படுகின்றீர்களோ அந்த ஞானாசிரியர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து சங்கிலித் தொடராக இந்த ஞான விளக்கத்தை பெற்றவராக இருக்க வேண்டும். நபிமொழிகளுக்கு எப்படி அறிவிப்பாளர் தொடர் முக்கியமோ அவ்வாறே நபியிடமிருந்து தொடங்கும் சில்சிலா எனும் சங்கிலித் தொடர் இறைஞான கல்விக்கு அவசியம்.
"யாரை இறைவன் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்".(18:17) என்கிறது இறைவேதம்.

இது தான் இறைஞானம் பெற குர்ஆன் கூறும் வழிகாட்டல்.

ஈமான் கொண்டவர்களே! தக்வா செய்யுங்கள்.இறைவன்வின் பக்கம் உங்களை நெருக்கி வைக்கும் வஸீலாவைத் தேடுங்கள். மேலும் அவனுடைய பாதையில் (குறிப்பாக நப்ஸுடன்) போர் செய்யுங்கள்.(அப்போது) நீங்கள் வெற்றி பெறலாம்.(5:35)

வஸீலா என்பது ஏகத்துவ மெய்ஞானத்தை கற்றுக் கொடுத்து இறைவன் மீது அன்பையூட்டி நம்மை அவன்பால் நெருக்கி வைக்கும் வலியே முர்ஷித்களையே குறிக்கிறது. எனவே அத்தகைய உண்மையான காமிலான ஷெய்குமார்களை தேடியடையும் பொறுப்பு நமக்குள்ளது என்னும் அறிஞர்களின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும், நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்  தோழமையின் பங்கு மகத்தானது என்பதால் நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்றவரை தக்வா செய்யவும் நமக்குத் தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின்  தொடர்ச்சியான தோழமை வாழ்நாளெல்லாம் நமக்குத் தேவை என்பதை

ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு) இருங்கள்.(9:119) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

Search Allah      -   இறைவனைத் தேடு!
Reach Allah       -   இறைவனை அடைந்து கொள்!
Love Allah          -    இறைவனை நேசி!
Live with Allah    -   இறைவனுடன் வாழு!
Sacrifice yourself
for Allah              -  இறைவனுக்காகவே வாழு!

என்னும் பொன் வரிகள் ஆயிரக்கணக்கான பேர்களை இறை அருளால் நபிவழி அகப்பார்வை என்னும் நேர்வழியில் ஆக்கிய கிடைப்பதற்கரிய என் ஞானாசிரியர் ஷெய்கு ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) என்னும் மகத்தான இறை நேசரின் மணி வாசகம்

இறைவா! மறைந்தும் மறையாமல் எங்கள் இதயங்களின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் கப்ரை மென்மேலும் ஒளிவாக்குவாயாக!

அகிலத்தின் அருட்கொடை பெருமானார்(ஸல்) அவர்களின் பொருட்டால் எங்கள் அனைவரின் இதயங்களையும் ஒளிவாக்குவாயாக!


1 comment:

Sivamjothi said...

Please see there are 2 books and 3 videos..

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html