தோழமையுடன்

Saturday, August 27, 2011

யார் அந்த வினோத மனிதர்?


மனித வரலாற்றில் மிகவும் குறைவானவர்களே அவரை பார்த்திருக்கின்றார்கள். இப்படி ஒரு மனிதரா? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 

யார் அந்த வினோத மனிதர்? 


முஸ்லிம் ஷரீஃப் என்னும் நபி மொழித் தொகுப்பில் உள்ள ஒரு  நபிமொழியிலிருந்து
நாம் பார்க்க போகும் இந்த சம்பவம் ஒரு மகத்தான ரகசியத்தை செயல்முறையில் விளக்கிக் காட்டி நம்மில் ‘அகவிழிப்பை’ ஏற்படுத்துவதற்காக இறைவன் நடத்திய ஒரு Grand Demonstration. தயவு செய்து ஒவ்வொரு வரியையும் word by word ஆழ்ந்து படிக்கவும்.  போல்ட் செய்யப்பட்டது மட்டும் தான் நபிமொழி. அதன் கீழே தரப் படுவது அந்த நபிமொழியின் தாக்கத்தால் விளைந்த எண்ணங்கள்.

0 0 0 0

உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை.

ஒரு மர்ம நாவலின் துவக்கத்தையும் மிஞ்சும் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது இந்த சம்பவம். இன்று ஒருவர் அரபு நாட்டில் ஏர்கண்டிசன் காரில் ஆடை அழுக்கடையாமல், பயணக் களைப்பு தெரியாமல் திடீரென வந்து காட்சியளிக்க முடியும். ஆனால் 1400 வருடங்களுக்கு  முந்திய அன்றைய அரபக சூழலை நினைத்து பாருங்கள். பாலைவனத்தில், பயணக்களைப்பு தெரியாமல் தூய வெண்ணிற ஆடையில் திடீரென காட்சியளிப்பதே யார் இவர்? எப்படி திடீரென வந்தார் என்ற கேள்வியை எழுப்பி நம் கவனத்தை அவரை நோக்கி ஈர்க்கிறது. இந்த விஷேச கவன ஈர்ப்பு ஒரு மகத்தான செய்தியை அறிவிக்க இறைவன் செய்த அற்புதமான ஏற்ப்பாடு. அடுத்ததாக

அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். 

நபித்தோழர் யாருக்குமே அவரை தெரிவில்லை என்றாலும் நபியவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதை இந்த அவரின் செய்கை நமக்கு உணர்த்துகிறது. 

பிறகு "முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் "ஹஜ்' செய்வதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் "உண்மைதான்''என்றார். அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மைதான்'' என்றார்.

முதல் கேள்வி நம்மை ஒரு இறை நம்பிக்கையாளனின் செயல்களின்(அமல்களின்) பக்கம் அழைக்கிறது. இரண்டாம் கேள்வியோ நம்பிக்கையின் பக்கம் அழைக்கிறது. அது எந்த வகை நம்பிக்கை? ஈமான் - நம்பிக்கை என்பது ‘ஈமான் பில் கைப்’ - மறைவானவற்றின் மீதான நம்பிக்கை. 

மறைவானது என்றால் எதை விட்டு மறைந்தது? 

புலன் உணர்வுகளுக்கு மறைவானது பற்றிய நம்பிக்கை. அந்த மறைவான நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த இரண்டாம் கேள்வியின் பதில்.

அடுத்து அம்மனிதர், "இஹ்சான் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” என்று பதிலளித்தார்கள்.

மூன்றவது கேள்வியோ வணக்கம் (இபாதத்) என்பதன் உயிரான உணர்வு நிலையை, ‘அகவிழிப்பு’ நிலையை நம்மில் வேண்டுகிறது. உச்சகட்டமாக யாரை ‘பார்வைகள் எத்திக் கொள்ளாது’ என நம்பிக்கை கொண்டுள்ளோமோ அந்த இறைவனை ‘பார்ப்பதை போல்’ இருப்பதன் பக்கம் நம்மை அழைக்கிறது மூன்றாவது கேள்வியின் பதில்.  

அல்லாஹ்வை பார்ப்பதைப் போல இருப்பதின் சூட்சுமம் இந்த ஹதீஸின் இறுதியில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. சற்று பொறுமையுடன் ஹதீசின் மீதி பகுதியையும் வாசியுங்கள்:

அம்மனிதர், "மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)'' என்று கூறினார்கள்.

அம்மனிதர், "மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்'' என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்'' என்று சொன்னார்கள்.

 இது வரை மனிதராக பார்த்தவர்களுக்கு அந்த உண்மை வெளியானது. அந்த வினோத மனிதர், மனிதரே அல்ல. ஒளியால் படைக்கப் பட்ட வானவர்(மலக்கு) அவர்.  

இறைவன் விரும்பி இருந்தால் மேற்கூறிய கேள்வி பதில்களை நபி(ஸல்) அவர்களே கூட கேள்வியை எழுப்பி விளக்கி இருக்க முடியம். ஆனால் இறைவன் ஏன் அதை ஒரு வித்தியாசமான முறையில் வெளியாக்கினான். ஆலமே மலக்கூத் என்னும் மறைவான உலகத்தைச் சேர்ந்த ஒரு வானவர் பகிரங்கமாக நபித்தோழர்களின் பார்வைக்கு ( புலன் உணர்வுக்கு) காட்சியளித்து இந்த ஹதீஸின் சம்பவங்கள் வெளியாக காரணம் எதுவாக இருக்கக் கூடும்? சிந்தித்து பாருங்கள்.

மேலும் கவனத்தில் கொள்ளுங்கள் இந்த சம்பவம் உதாரணத்துக்காக சொல்லப்பட்ட கதையல்ல. ஆதாரப் பூர்வமாக பதியபட்டுள்ள ஓரு வரலாற்று நிகழ்வு.

இந்த சம்பவத்தின் இறுதியில் ஜிப்ரீல் (அலை) நம் மார்க்கத்தைப் பற்றி நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் என்ற பெருமானாரின் முத்தாய்பான விளக்கம் இந்த இஹ்ஸான் என்ற நிலை இல்லாமல் நம் மார்க்கம் (தீன்) முழுமையடையாது என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. ஆக  இது ஆழ்ந்து அறியப்பட வேண்டிய ஒரு நபி மொழி. முறையான இறைஞானிகளின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த விளக்கத்தின் மூலம் தான் இஹ்சான் நிலையை விளங்க முடியும். ஆயினும் சில ஆரம்ப விளக்கங்களை உங்கள் மேலான பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.

0 0 0 0

 மனிதர்களையும், ஜின்னையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன்.(51:56)) என்பது படைப்பின் நோக்கத்தை விளக்கும் இறைவசனம். திருமறை விரிவுரையாளர்களின் அரசர் (சுல்தானே முஃபஸ்ஸிரீன்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த இறை வசனத்தில் வரும் ‘வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை’ என்பதற்கு ‘அறிவதற்காகவேயன்றி படைக்கவில்லை’ எனப் பொருள் கொண்டு விளக்கியுள்ளார்கள்.

“நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். நான் அறியப் பட ஆசைக் கொண்டேன். எனவே படைப்பினங்களைப் படைத்தேன்” என்கின்ற ஹதீஸ் குத்ஸியான நபிமொழி தரும் செய்தியும் அதே தான். 

ஆக படைத்தலின் முக்கிய அம்சம் அறியப்படல்.

எது மறைவாயிருந்தது?

எதை அறியப்பட வேண்டும்?

மறைவாயிருந்தது இறைத்தன்மைகள் (உலுஹிய்யத், ரூபூபிய்ய்த்)

படைப்பு என்பதன் மூலம் மறைவாயிருந்த இறைத்தன்மைகள் (உலுஹிய்யத், ரூபூபிய்யத்) காட்சிக்கு வந்தது.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம். இறைவனை பார்வைகள் எத்திக் கொள்ளாது என இறைவேதம் கூறவில்லையா?

ஆம். வானவர்கள் நம் பார்வைக்கு மறைவானவர்கள் என்றால் இறைவனோ மறைவிலும் மறைவானவன். அப்படி மறைவிலும் மறைவானவன் எங்கு திரும்பினாலும் என் திருமுகம் (வஜ்ஹு –Being)  என ஏன் கூறுகின்றான்?.

தொழுகையில் ‘இறைவனின் முகத்தை நோக்கி என் முகத்தை திருப்பி விட்டேன்’ (வஜ்ஹத்து வஜ்ஹியலில்ல்தி) என நாம் ஓதுவதன் உள்ளர்த்தம் என்ன?

இவை கண் வழி பார்வைக்கான அழைப்பல்ல. இதயத்தின் பார்வைக்கான அழைப்பு. ஒரு சிறிய உதாரணத்தை பாருங்கள்.

பிறவியிலேயே கண் தெரியாத மனிதர் இருக்கிறார். உப்பு, சீனி, பாக்கு என எதையுமே எப்படி இருக்கும் என வாழ்நாளில் பார்த்ததில்லை. ஆனால் வாயில் வைத்து சுவைத்து கரிக்கிறது இது உப்பு, இனிக்கிறது இது சீனி, துவர்க்கிறது இது பாக்கு என தன்மையின் மூலம் அந்த தன்மையை உடைய பொருளை இனங்கண்டு கொள்கின்றார்.

அல்லாஹ்வின் மறைவான சுயநிலையை பொருத்தவரை ‘பார்வைகள் அவனை எத்திக் கொள்ளாது’ என்ற வகையில் நாம் அனைவரும் பார்வையற்றவர்கள் தான். ஆனால் அவனது தன்மைகளை பொறுத்தவரை நாம் அககண்ணால் (சிந்தித்து) பார்க்கக் கூடியவர்கள். மீண்டும் நினைவூட்டுகின்றேன் ‘அவனது தன்மைகளை பொறுத்தவரை நாம் பார்க்கக் கூடியவர்கள்’.

 எவர் இவ்வுலகில் (ஹக்கை-உண்மையை அறியாக்) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையால் மிகவும் தவறியவராவார்.(17:72) என்னும் இறைவசனம் வெளிரங்கமான பார்வையற்றவர்களைக் குறிப்பிடவில்லை. மனிதன் வாழும் காலத்தில் இறைவனை அறியாமல், உணராமல் அகக்கண் பார்வையற்றவனாய் வாழ்வது என்பது எத்தனை மோசமான வழிக்கேடு என்பதையே எச்சரிக்கின்றது. அத்தகைய குருட்டுத் தனத்தை விட்டு நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.

இனி ஜிப்ரீல் (அலை) அவர்களின் சம்பவத்தை நினைவு கூறுங்கள்.

எப்படி சாதாரணமாக பார்க்க முடியாத வானவர் வேறு ஒரு தோற்றத்தில்  தன்னை காண்பித்தாரோ அதே போல் புலன் உணர்வுகளுக்கு எட்டாத இறைவனின் இருப்பு (வஜ்ஹு –Being)  அவன் அருளாளன், உணவளிப்போன், உருவமைப்போன் போன்ற  உலூஹிய்யத்தான தன்மைகளின் மாறாலாக வானம், பூமியிலும் உள்ள அனைத்து சிருஷ்டியிலும்  வெளிப்பட்டு நிற்கிறது. குர்ஆனில் இறைவனின் 99 தன்மைப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இந்த 99 தன்மைகளும் ஒட்டு மொத்தமாக ‘உலூஹிய்யத்’ என குறிப்பிடப்படுகின்றது. உலூஹிய்யத்தின் வெளிப்பாட்டால் விளைந்த விளவுகள் தான் உலகமும் அதில் உள்ளவைகளும். ‘ஹுவல் லாஹிர்’ அவனே வெளிப்பட்டவன் என்பதும் இதையே சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் இதை விளங்க ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். இறைவனின் தன்மைகளின் ஒன்று ராஜிக் – உணவளிப்போன் என்பது ( ரிஜ்க் என்பது வாழ்வின் ஆதாரமான அனைத்து தேவைகளையும் குறிக்கும் என்றாலும்  இங்கு உணவளிப்பதை பார்ப்போம்)

இறைவன் தான் உணவளிப்பவன் என்பது நம் நம்பிக்கை. ஆனால் நம் வெளிரங்க பார்வையில் சிருஷ்டிகள் தான் உணவளிக்கின்றன.

மொத்த உணவிலும் வெறும் சோற்றை மட்டும் எண்ணிப்பார்த்தால் கூட ,

விதையை விதைத்து, நாற்று நட்டு, களை எடுத்து, நெல்லாக வந்து ஆலையில் இட்டு அரிசியாக்கி, அதன் பின் உலையில் இட்டு அதை சோறாக்கி நாம் உண்பது வரை நடக்கும் ஒவ்வொரு செயலிலும் சிருஷ்டிகளைத் தான் பார்க்கின்றோம். அப்படியானால் இறைவனை உணவளிப்பவனாக விளங்குவது எப்படி?

வானம், பூமியிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் அவன் இருப்பின் அத்தாட்சிகள்.

ஒரு திரை மறைக்கும்.
ஒரு திரை காட்டும்.
நாமும் அனைத்து சிருஷ்டிகளும்
அல்லாஹ்வை மறைக்க வந்த திரையல்ல.
காட்ட வந்த திரை.

அழியாத அவன் உள்ளமையால்
நாம் காட்சியானோம்!
அழிகின்ற உருவங் கொண்டு
அவன் சாட்சியானோம்!
                                        -(எனது ‘அகப்பார்வை’ நூலிலிருந்து)

வானம், பூமியிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் அவன் உலூஹிய்யத்தின் அத்தாட்சிகள்.
 சிருஷ்டிகளைப் பார்க்கும் போது ஒரு வகையில் அல்லாஹ்வுடைய உலூஹிய்யத்தைத் தான் பார்க்கின்றோம். உலூஹிய்யத் தான் சிருஷ்டிகளின் உருவத்தில் காட்சியளிக்கின்றது. அவனுடைய ருபூபிய்யத் தான் சிருஷ்டிகளின் இயக்கத்தில் உணரப்படுகின்றது.  

(வானம், பூமியில்) தன்னைத் தவிர இலாஹ் யாருமில்லை என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.அவ்வாறே வானவர்களும், ஞானம் (இல்மை) உடையவர்களும் சாட்சி சொல்கின்றனர்.(3:18) என்கிறது  இறைவேதம்.

எவ்வளவு விளக்கமாக எழுதினாலும் இந்த அகப்பார்வை ஞானத்தை எழுத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. பின் இவ்வளவு எழுதியதும் எதற்காக என்றால் மார்க்கத்தின் உயிர் போன்ற ஒரு கல்வியை பெற்றுக் கொள்ளாமலே நம் காலம் செல்கின்றது என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காகத் தான். இந்த விசயத்தில் 'இறைவனைப் பற்றி அறிந்தவர்களின் (இறைஞானிகளின்) மூலம் தெரிந்து கொள்ளுங்கள்' (25:59) என்பது தான் இறைவேதத்தின் வழிகாட்டல்.  

வஸ்ஸலாம்Post a Comment