தோழமையுடன்

Monday, February 13, 2012

ஆயிரம் வருட தூக்கம் - வைக்கம் பஷீரின் நேர்காணல்முஸ்லிம்களை ஆயிர வருட அறியாமைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் எழுத்தாளர் வைக்கம் பஷீரின் பேட்டியை படிக்கும் முன் பஷீர் அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.

படம்:  இலங்கை நளீம்
பஷீருடன் புத்தகங்கள் மூலம் அறிமுகமான பிற எழுத்தாளர்கள் எனது ருசியும், கருத்துகளும் மாறியபோது தங்கள் நாற்காலிகளைக் காலி செய்து கொண்டார்கள். ஆனால் பஷீரும் அவரது சிம்மாசனமும் அப்படியே இருக்கின்றன” என்கின்றார் எழுத்தாளர் சுகுமாரன்.(எனதுபஷீர் – சுகுமாரன்

 சுகுமாரன் காலச்சுவட்டில் வந்த பஷீர் பூமியின் உரிமையாளர் என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்:

நவீன மலையாளக் கவிதைகளில் பிரபலமான கவிதை கே.ஜி. சங்கர பிள்ளை எழுதிய பல போஸிலுள்ள போட்டோக்கள்’. அந்தக் கவிதைக்குத் தூண்டுதலாக இருந்தவர் வைக்கம் முகம்மது பஷீர் என்பது இலக்கிய வட்டாரங்களில் பேசப்படும் செய்தி. அந்த அளவுக்கு ஏராளமான புகைப்படங்கள் பஷீரை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயத்த நிலையில் பஷீர் இருந்தவையும் தற்செயலாக எடுக்கப்பட்டவையும் உண்டு. அதில் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் மெல்லிய சிரிப்புப் புரளும்.  வைக்கம் முகம்மது பஷீருக்குக் கோழிக்கோடு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. கேரளத்தின் அன்றைய ஆளுநர் பா. ராமச் சந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்தார். பட்டமளிப்பு விழா அங்கி, தலையில் குஞ்சம் வைத்த தொப்பியுடன் பஷீர். அந்தக் கோலத்தில் பஷீர் மேற்கொண்டிருக்கும் செய்கைதான் என்னுடைய சிரிப்புக்குக் காரணம். பொதுவாகப் பட்டமளிப்பவர் நிமிர்ந்தும் பட்டம் பெறுபவர் தலைவணங்கியும் இருப்பார்கள். இந்தப் புகைப்படத்தில் பட்டம்பெறும் பஷீர் நிமிர்ந்து நின்றிருப்பார். ஆளுநர் தலைகுனிந்து வளைந்திருப்பார். பஷீர் கைகளை உயர்த்தி ஆளுநரை ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். சிரிக்காமல் அந்தப் புகைப்படத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இதுவரை பலித்ததில்லை. வெறும் ஒரு புகைப்படம் என்பதைக் கடந்து பஷீரின் ஆளுமை சார்ந்த ஓர் அம்சத்தை அதில் நான் இனங்கண்டு கொள்வதாகவே தோன்றுகிறது. ஓர் எழுத்தாளனின் பெருமிதம் வெளிப்படுகிற புகைப்படம் அது. அதற்கான அங்கீகாரத்தை மலையாள இலக்கிய உலகம் அவருக்கு வழங்கியிருந்தது. அந்த அங்கீகாரத்துக்கான முற்றான தகுதியையும் பஷீர் கொண்டிருந்தார். பணிவு கலந்த கர்வமே அந்தத் தகுதியின் அடிப்படை. நான் வாழ்வதனால் எழுதுகிறேன்என்ற கர்வம் பஷீரின் எல்லா எழுத்துக்களிலும் மிளிர்கிறது. வாழ்வனுபவம் கலையைத் தீண்டித் திறந்துவிடுகிற ஒரு பரந்த உலகம் பஷீரின் எழுத்துக்களில் இயங்குகிறது. அதுதான் மலையாள இலக்கியத்தில் ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட இடத்தில் அவரை நிறுவியிருக்கிறது.

0 0 0 0 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

பஷீர் இறந்து போன 1994 ஆண்டின் ஜ÷லை 5ம் தேதி மாலையில் மணியண்ணாச்சியை (த.மணி) திருநெல்வேலியில் சந்திக்க சேர்ந்தது. அவர் அதிகம் குடித்திருந்தார். என் கையை பிடித்து கொண்டு ஒரு குழந்தையை போல பஷீர் செத்து போயிட்டான். இனிமே நான் ஒரு ஆளையும் படிக்க மாட்டேன். பஷீர் செத்து போயிட்டான் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்”என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணல்

(டிட் ஃபார் டாட் நடத்திய ஒரு நேர்காணல் - 1984) ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தார்மீகமின்மையும் அக்கிரமமும் அநீதியும் இந்தளவுக்கு வெகுசாதாரணமாகி விட்டதற்கான காரணம், சமூகத்தின் மத உன்னதங்களின் வீழ்ச்சிதானே?

"நிச்சயமாக! மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனிதத்தன்மைக்கு உயர்த்துவது மதங்கள்தான். மதங்களில் மிகவும் இயல்பானதும் எளிமையானதும் இஸ்லாம்தான்.

கலாச்சாரச் சீரழிவில் இன்றைய இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் பங்கிருக்கிறதல்லவா?

இருக்கிறது. இங்கே ஏராளமான வெளிநாட்டுப் படைப்புகள் இறக்குமதியாகின்றன. இணைசேர்வதைக் கற்றுக் கொடுப்பவைதான் இதில் அதிகம். ஆண்-பெண் போகமும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் பல போகிப்பதும் எப்படி என்பதை அவை கற்றுத் தருகின்றன. அதையெல்லாம் வாசித்து விட்டு இங்கிருப்பவர்கள் எழுதத் தொடங்கினால்தான் ஆபத்து. இறக்குமதி செய்யப்படுபவைகளில் நல்லவைகளும் இருக்கக் கூடும். அப்புறம் திரைப்படங்கள். அவை மனிதனுக்கு நல்லவற்றைப் போதிப்பதும் ரசிக்க வைப்பதுமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களின் பிரச்சினை பற்றித் தங்களது கருத்தென்ன?

முகம்மது நபிக்குப் பிறகு 5-6 நூற்றாண்டுகள் வரை, பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முஸ்லிம்கள் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள். 1000 வருடத் துயில். மெதுவாகச் சிலர் விழித்துக் கொண்டு எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சொல்லிப் பவுசு கொண்டாடுகிறார்கள். அறிவியல் சாஸ்திரத் துறைகளில் முதன் முதலாக உலகிற்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான். இதை நானாகச் சொல்லவில்லை. வரலாற்றாய்வாளர்களாகிய பென்சும், டோயன்பியும் சொன்னதுதான். அதெல்லாம் பழங்கதைகள். முஸ்லிம்கள் இப்போது தங்க வாசல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹோனலூலு - நகரும் அரண்மனை சௌதி அரேபியாவில் பஹத் மன்னரின் கப்பல், ஆறு மாடிகள் உட்பட ஒரு ஹெலிபேடும் மருத்துவமனையும் அதிலிருக்கின்றன. ஆக மதிப்பு வெறும் 45 கோடி ரூபாய்தான். இங்கிலாந்தில் வைத்து இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தினார்கள். 21 கோடி ரூபா செலவில். ஆக மொத்தம் 66 கோடி.

மாத்ருபூமி, மனோரமா போன்ற பத்திரிகைகளில் படித்த செய்தியில், பஹத் மன்னரின் சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அறிய முடிந்தது. ரியாத், மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய நகரங்களில் கோடி கோடியாக செலவு செய்து அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்போது கடலில் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான அரண்மனைகள் எழும்பும்.

இறைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். முஹம்மது நபிக்குச் சொந்தமாக ஒரு படுக்கை கூட கிடையாது. காலையில் எழுந்திருக்கும் போது ஈச்சமரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட பாயின் அடையாளங்கள் அவரின் உடலெங்கும் பதிந்திருக்கும். நான் வேணுமென்றேதான் "(ஸல்)" சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். இங்கு அதை எதற்காகக் குறிப்பிட வேண்டும்?

இறைவனின் தூதராக முஹம்மது பிறந்து வளர்ந்து மரணமடைந்த நாடு சௌதி அரேபியா. திருக்குர்ஆன் அருளப்பட்ட நாடு, குர்ஆனின் முதல் வார்த்தையே வாசிப்பீராக என்பதுதான். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, 82 விழுக்காடு மனிதர்கள் எழுத்து வாசனை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் சொல்வதையெல்லாம் டிட்ஃபார் டாட் பிரசுரிக்குமென்றால், இந்தப் பத்திரிகையை சில முஸ்லிம் தேசங்கள் தடை செய்யக்கூடும். இப்போது 50 முஸ்லிம் தேசங்கள் இருக்கின்றன. சுமார் 100 கோடி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். சுன்னி, முஜாஹித், ஜமாஅதே இஸ்லாமிய, காதியானி, அலி அல்லாஹ் முதல் 22 பிரிவு ஷீஆக்கள், மைதஸீன், துருசி, ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக், அஃலேஹதீஸ், அஃலே குர்ஆன் இப்படிப் போகின்றன அவை. இதில் உண்மையான முஸ்லிம்கள் யார்? இஸ்லாத்துக்குள் அரசாட்சி இருக்கிறதா? மன்னர்களும் சுல்தான்களும் சக்கரவர்த்திகளும் முஸ்லிம் தேசங்களில் ஏன் இப்படி இராணுவ ஆட்சி. அப்புறம் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகள். இந்தியப் பிரிவினைக்குப் பின் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவை இரண்டாகப் பிளந்து விடக் கூடாது என்று மௌலானா அபுல்கலாம் ஆசாத்கான், அப்துல்கபூர் கான், ஷேக்முகம்மது அப்துல்லாஹ், மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்ற ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் சொன்னார்கள். யார் கேட்டார்கள்? அப்படியாக இந்தியா பிளவுபட்டது? பிறகு என்ன நடந்தது? முஸ்லிம்களுக்கென்று பிடிவாதமாக நின்று அடைந்த பாக்கிஸ்தானில் இஸ்லாமிய நடைமுறைகள் இருக்கின்றதா? உலகளவில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் முஸ்லிம் தேசம், இந்தப் பாரத தேசம்தான். முஸ்லிம்களின் வீரம் அழிக்கப்பட்டு, இறைவா, என்னென்னஅனர்த்தங்கள். பாக்கிஸ்தானில் ஆறரைக் கோடி முஸ்லிம்கள். பங்களாதேஷில் ஏழரைக்கோடி முஸ்லிம்கள். கொஞ்சம் பழைய கணக்குத்தான். தேசம் பிரிக்கப்பட்டதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது? முன்பு இராணுவம் காவல்துறை இரண்டிலுமே சரிபாதிக்கு மேலாக முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

இப்போது?இராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது யார் இருக்கிறார்கள்? காக்காமார்களே, காக்காத்திமார்களே! இறைவா, அறிவைப் பயன்படுத்தாத இந்த இஸ்லாமிய மக்களைக் காப்பாற்ற யாரிருக்கிறார்கள்?

மத-இறை மறுப்பாளர்களைக் குறித்தும் வெறும் உலகாயத வாதம் குறித்தும் என்ன சொல்கிறீர்கள்?

அது சரி இப்போதைய பெரும் பிரச்சினை கடவுள்தான் இல்லையா? கடவுளோ மதமோ இல்லாத ரஷ்யாவிலும் சீனாவிலும் காவல்துறையும் சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் கிடையாதா? தூக்குமரங்கள் கிடையாதா? சீனாவும் ரஷ்யாவும் இராணுவத்தை எதிரெதிராக அணிவகுத்து நிறுத்தியிருக்கிறதல்லவா? அவர்களுக்குத்தான் மதமோ கடவுளோ கிடையாதே.

விமர்சனம் என்ற பெயரில் குர்ஆனைக் குறை கூறும் போக்கைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

குர்ஆனில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. மொழிபெயர்ப்பை நான் சொல்ல வரவில்லை. அப்புறம் விமர்சிப்பதற்கான இடங்களை குர்ஆனின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் உருவாக்கிக் கொடுக்கிறார்கள். குர்ஆனில் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகவே அவர்களின் வாழ்க்கையையும் போதனைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மற்றொரு விஷயம், குர்ஆனை வெறும் மொழிமாற்றம் மட்டும் செய்தால் போதாது. குர்ஆன் என்பது அருளப்பட்ட வேதம். அது உலகத்தின் இறுதி நாளை வரை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் ஒரு மார்க்க தரிசனம். எல்லா மொழிகளுக்கும் காலமாற்றங்களுக்கேற்ப மொழியிலும் லிபியிலும் அர்த்த வேறுபாடுகள் நிகழும். அப்படி நிகழ்ந்துமிருக்கிறது. எனவே குர்ஆன் அருளப்பட்ட காலத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அக்கால கட்டம் சார்ந்து சொல்லப்பட்ட பொருள் எதுவோ அதைப் படித்து புரிந்து கொண்டுதான் மொழிமாற்றம் செய்ய வேண்டும். இது மிகச் சிரமமான ஒரு விஷயமும் கூட. டாக்டர் மோரீஸ் புக்காய் இந்த விஷயத்தில் பல முயற்சிகளைச் செய்து மிருக்கிறார். இவரது பைபிள், குர்ஆன் சாஸ்திரம் படித்திருக்கிறீர்களா? இதில் நான் பத்துப் பிரதிகளை வாங்கி
விநியோகித்திருக்கிறேன். சரி நான் கேட்கிறேனே, இந்த விமர்சகர்களால் எதைத்தான் விமர்சிக்க முடியாது? குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த அல்லாமா யூசுப் அலி, லண்டன் தெருவொன்றில் குடித்து விட்டு விழுந்து கிடந்ததாகச் சொல்லி பிரச்சாரம் செய்தார்களே சிலர். யூசுப் அலி குடிப்பதற்காகவென்றே லண்டனுக்குப் போயிருக்கிறார். சிறி நகரிலோ, டெல்லியிலோ, பம்பாயிலோ கல்கத்தாவிலோ அவருக்கு அது கிடைக்கவில்லை போலிருக்கிறது. லண்டன் தெருவொன்றில் யூசுப் அலி தளர்ந்து விழுந்ததும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுமான சம்பவம் உண்மைதான். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். தளர்வாதமோ எதுவோ, அவரை எனக்குத் தெரியும். காஷ்மீரின்
அடிவாரக் கிராமமொன்றில் ஒரு கூடாரம் அமைத்து அதில் வைத்து குர்ஆனை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது, நான் அங்கே போயிருந்தேன். அவர் மொழிபெயர்த்த குர்ஆனின் ஒரு ஜுஸ்உவின் காப்பியை எனக்குத் தந்துமிருக்கிறார். அக்காலகட்டத்தில் நான் முகம்மது அசதுடன் பரிச்சயமாகிறேன். "ரோடு டு மெக்கா", "இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு" போன்ற நூல்களின் ஆசிரியர் இந்த முகம்மது அசத். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு யூதர். லியோபோல்ட் வெயிஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அரேபியாவுக்குச் சென்று அரபு மொழியைப் படித்து விட்டு, காஷ்மீருக்கு வந்து சிறி நகரில் தங்கியிருந்தார். ஹதீஸ்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் அப்போது. துணைக்கு கண்பார்வையற்ற ஒரு அரபுப் பண்டிதரும் இருந்தார். இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு என்ற நூலையும் ஹதீஸின் முதற் தொகுப்பையும் எனக்குத் தந்தார். அப்போது நான் ஷெக் அப்துல்லாவின் விருந்தினனாக இருந்தேன். ஷெக் அப்துல்லாவுடையவும் அசத், மௌதிகளுடையவும் ஆன்மாவுக்கு அல்லாஹ் நித்திய சாந்தி அருள்வானாக. இஸ்லாமிய மக்கள் அறிவைப் பிரயோகித்து சிந்தனை செய்வதில் அல்லாஹ் நாட்டம் செலுத்தி அருள் புரிவானாகட்டும்.

தமாம்.

 பஷீரின் ஒரு கதையாவது சுவைக்க ஆசை இருந்தால் இந்த "பூவன்பழம்" சுவைத்துப் பாருங்களேன். 

No comments: