தோழமையுடன்

Thursday, February 9, 2012

முராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழிப்பு நிலையும்


 முராக்கபா மற்றும் முஷாஹதா என்பது ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அடிப்படை பயிற்சிகள். இதைப் பற்றி விளக்குமுன் ஆன்மீகம் பற்றி நமது சமகால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் கூறுவதை கேளுங்கள்:


மெய்ஞ்ஞானம் ஒர் ஆழமான ஆன்மீக அனுபவம். அந்த அனுபவம் ஏற்படுத்தும் ஆன்மீக உறுதி [Al-yakeen] நம்பிக்கைதான் உன்னதமான இறைஞானம். இந்த மெஞ்ஞானத்தையும் அதன் ஆழத்திற்கு ஏற்ப வகைப்படுத்தபடுவதுண்டு. இதற்கு திருக்குர்ஆன் கையாண்டுள்ள சொற்களையே பயன்படுத்தப்பட்டுள்ளது.  

அவை:
1)  عـلـم الـيـقـيـن (இல்முல் எக்கீன்)
2)  عـيـن الـيـقـيـن  ( ஐனுல் எக்கீன்)
3)  حـق الـيـقـيـن  (ஹக்குல் எக்கீன்)

உதாரணமாக மூடப்பட்ட அறையில் அமர்ந்திருப்பவர் பெறுகின்ற அனுபவத்தை மூன்றாக வரிசைப்படுத்தலாம்.

1.மூடப்பட்ட அறையில் இருந்து கொண்டு வெளியில் மழை பெய்கிறது என்ற செய்தியை அறிந்து கொள்வது. (عـلـم الـيـقـيـن -இல்முல் எக்கீன்)

2.ஜன்னலைத்திறந்து மழையைக் கண்ணால் கண்டு அனுபவிப்பது.( عـيـن الـيـقـيـن  -ஐனுல் எக்கீன்)

3.கதவைத்திறந்து வெளியே வந்து மழையில் நனைந்து அதன்மூலம் பெறும் அனுபவம். ( حـق الـيـقـيـن    - ஹக்குல் எக்கீன்(

இதுபோன்ற அனுபவம் ஏற்படுத்துகின்ற நம்பிக்கையையும் அந்த நம்பிக்கையுடன்  ஒருவர் பெறுகின்ற அனுபவங்களையும் வார்த்தையால் அளவிட முடியாது”.

0  0  0  0

இனி முராக்கபா, முஷாஹதா பற்றி பார்ப்போம்

சுருக்கமாக சொன்னால் இவை இரண்டும் இஹ்ஸான் என்பதன் இரண்டு பகுதிகளாகும்.

இஹ்சான் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:

“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.”
(நூல்: முஸ்லிம் ஷரீஃப்)

இந்த நபிமொழியில் வணங்ககூடிய அடியானின் இரண்டு படித்தரங்கள் கூறப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு நிலையில் இல்லாத வணக்கம் முழுமையான வணக்கமாகாது..
முதலாவது நிலை : “அல்லாஹ்வை பார்ப்பதை போல் வணங்குவது”.இது மிகவும் உயர்ந்த நிலை.  அது சாத்தியப்படாத நிலையில் அடைய வேண்டிய இரண்டாவது நிலைஅல்லாஹ் நம்மை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் வணங்குவது”.

இதில் அல்லாஹ்வை பார்ப்பதை போல் வணங்கும் முதலாவது நிலைமுஷாஹதா” (எனும் அகப்பார்வை நிலை) என்றும் அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் வணங்கும் இரண்டாவது நிலை முராக்கபா என்றும் சொல்லப்படும். ஆக முராக்கபா என்பதும், முஷாஹதா என்பதும் நமது வணக்கத்தின் உயர்தரத்தை குறிக்கும் இரண்டு படித்தரங்கள்.

இங்கே வணக்கம் என்பது ஐவேளை தொழுகையை மட்டுமல்ல வாழ்வின் எல்லா நிலைகளையும் குறிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நம்பிக்கையாளன் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யும் நடவடிக்கைக் கூட வணக்கத்தை சேர்ந்த ஒன்று தான்.

ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அல்லாஹ் நம்மை பார்த்துகொண்டிருக்கின்றான் என்ற உணர்வு வாழ்வின் எல்லா நிலையிலும் இருக்க வேண்டிய,  குறைந்தபட்ச அடிப்படை பண்பாகும் எனபது தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும்

o o o o o

இஸ்லாத்தில் நல்ல நாள், கெட்ட நாள் என பாகுபாடில்லை என்றாலும்அதிகாலைத் (சுப்ஹ்) தொழுகை தொழாத நாள் இறைநம்பிக்கையாளனுக்கு கெட்ட நாள்என நபி(ஸல்) சொல்லியிருக்கின்றார்கள். அதே போல அதிகாலை தொழுகைக்கு பின்முராக்கபாபயிற்சி செய்யாத நாள் ஆன்மீக சீடனுக்கு கெட்ட நாள் என சொல்வார்கள் சங்கைக்குரிய சுப்ரிஷாஹ் ஃபைஜி எனும் ஞானமகான்.

முராக்கபா என்ற வார்த்தை புதிதாக இருக்கின்றதே! எங்கேயிருந்து வந்தது? என கேள்வி எழுகின்றதா?

இந்த இறைவசனத்தை பாருங்கள்:

கானல்லாஹு அலா குல்லி ஷையின் ரகீபா(raqeeba) : அல்லாஹ் யாவற்றையும் கண்காணித்தவனாக இருக்கின்றான்.(33:52)

இது போன்ற வேதவசனங்களில்  வரும்ரகபஎன்ற வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது தான் முராக்கபா எனும் ஆன்மீக வழக்குச் சொல்

முராக்கபா என்றால் என்ன?

முராக்கபா என்பதன் கருத்து ஆழ்ந்து சிந்தித்தல். எந்த ஒரு விசயத்தையும் குறிப்பாக்கி அதில் ஆழ்ந்து சிந்திப்பது. இது ஆன்மீகபாதையிலுல்லோருக்கு இறப்பு வரை அவசியமான ஒன்றாகும் என்பார்கள் என் குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி(ரஹ்).

நமது ரட்சகன் நம்மை கவனித்து கொண்டிருக்கின்றான் என்றால் எங்கிருந்து நம்மை கவனித்து கொண்டிருக்கின்றான்?

நமது தமிழில் எட்டுதிசை என்பது போல் அரபியில் முன், பின், வலம், இடம், மேல், கீழ் என ஆறு திசைகளாக கூறுவார்கள். எந்த ஒரு திசையிலும் மட்டுப்படுத்துவதை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன் என்பது என் ஆன்மிக குருநாதர் சொல்லித் தந்த ஆரம்பப்பாடம்

அப்படியானால் அல்லாஹ் எங்கிருந்து பார்த்து கொண்டிருக்கின்றான்?.

அர்ஷில் இருப்பவனாக சொல்கிறது ஒரு இறைவசனம்.

பிடறி நரம்பைவிட சமீபமானவன் என்கிறது இன்னொரு இறைவசனம்.

எங்கு திரும்பினாலும் அவன் திருமுகம் என்கின்றது மற்றுமொரு இறைவசனம்.

அல்லாஹ்வைஅவனது சுயத்தை (தாத்தை) பற்றி சிந்திக்கக் கூடாது. சிந்திக்கவும் முடியாது. ஆனால் அவனது பண்புகள், வல்லமை, அருள் பேருபகாரங்களை சிந்திக்க உத்தரவிடுகிறது இறைவேதம்.  அனைத்து சிருஷ்டிகளையும் அடைய வளைய சூழ்திருக்கும் அவன் பண்புகளை(ரஹ்மத்தை) அறிய உத்தரவிடுகின்றது “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்ற திருமறை வசனம். 

கவனிக்கவும் அல்லாஹ்வைப் பற்றி என்று சொல்லாமல் அவனது பண்புப் பெயரான ரஹ்மானைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.


70 தாயை விட கருணையாளனான ரஹ்மான்…..

நம்மை சன்னம் சன்னமாக வளர்த்து போஷிக்க்க் கூடிய ரட்ஷகன் (ரப்பு)…..

 எப்படி கண்காணிப்பவனாக (ராகிபாக) இருக்கின்றான். சிருஷ்டிகளை சூழ்ந்தவனாக(முஹீத்) ஆரம்பமானவனாக(அவ்வல்), முடிவானவனாக(ஆஹிர்), வெளியானவனாக(லாஹிர்), மறைவானவனாக(பாத்தின்), நெருக்கமானவனாக(கரீப்), மிக நெருக்கமானவனாக(அக்ரப்) இருக்கின்றான் என்ற விளக்கத்தைபாஹபர்என்ற அறிந்தவர்களிடம் மூலம்  அடையாமல் இஹ்சானிய நிலையை அடைவது என்பது சாத்தியமில்லை.

முராக்கபா என்ற ஆன்மிக பயிற்சியின் வாயிலாய் தான் அல்லாஹ் நம்முடனிருந்து நம்மை கண்காணித்து கொண்டிருக்கும், நம்மை வளர்த்து வாழ வைத்து கொண்டிருக்கும் இறைநெருக்க உணர்வு ஏற்படும் என்பதற்கான சைக்கினை இந்த இறைவசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்: நிச்சயமாக அல்லாஹ் இஹ்சான்செய்வோருடனேயே (முஹ்ஸினுடனேயே) இருக்கின்றான். (29:69) என்பது இறை வாக்கு.

முராக்கபாவில் முன்னேறிய நிலையில் முஷாஹதா என்ற அகவிழிப்பு நிலை ஏறபடும.
அந்நிலையில் சிலருக்கு ஜன்னலைத்திறந்து மழையைக் கண்ணால் கண்டு அனுபவிப்பது போன்ற அகத்தெளிவு ஏற்படும் அதை ( عـيـن الـيـقـيـن ) -ஐனுல் எக்கீன் எனப்படும். வெகு சிலருக்கு கதவைத்திறந்து வெளியே வந்து மழையில் நனைந்து அதன்மூலம் பெறும் அனுபவம் போல பேருண்மையின் தெளிவு ஏற்படும் அந்நிலையை ஹக்குல் யக்கீன் என்ற குர்ஆனிய வார்த்தைகளில் குறிப்பிடப்படுகின்றது.
அது முராக்காபாவின் விளைவால் தாமாக அடைவதல்ல. இறைவன் அருட்கொடையாய் வழங்கும் பேருண்மையின் சாட்சி நிலை. பின் வரும்  வசனத்தை நன்கு கவனித்து பாருங்கள். ‘அவர்களுக்கு நாம் காட்டுவோம் என இறைவன் சொல்கின்றான்.

விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும், உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம். அவை ஹக்கு தான் என்று தெளிவாகின்ற வரை(காண்பிப்போம்). (41:53)

அந்த ஆனந்த பரவசமான அந்த அற்புத நிலைப் பற்றியே
"சுத்த பரிபாரண சுகவாரி தன்னிலோர்
சொட்டாகிலும் தொட்ட பேர் நல்லவர்கள் நல்லவர்கள்
நானென்றைக்கு அந்த நல்லவன் ஆவேனோ?"

என ஞானிகள் கவிதை பாடி வைத்தார்கள்.  

இதில் Ecstasy என்ற பரவசம் நமது   நோக்கமல்ல. ஹக்குல் எக்கீன் என்ற உண்மையாளர்களின் தெளிவான நம்பிக்கையே நமது நோக்கம்.

அந்த மகத்தான நிலையை அடைந்து வாழ உங்களுக்கும், எனக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்!.
3 comments:

Anonymous said...

மாஷா அல்லாஹ் அருமையான மெய்ஞ்ஞான விளக்கங்கள். மெய்ஞ்ஞான தாகத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் புகட்டும் நல்ல இணையத்தளம். நன்றி..
Sharmilaqadiri

R.Puratchimani said...

ஆஹா என்ன ஒரு அருமையான பதிவுகள். இதுவரை ஆன்மீகத்தை பற்றி ஒரு இசுலாமியர்
பேசியதாக நான் அறியவில்லை. உங்களின் பெரும்பாலான் பதிவுகள்ஆன்மீகத்தை பற்றியே பேசுகிறது. இதன் மூலம் நீங்கள் இறைவனை காண எவ்வளவு ஆவலுடன் உள்ளீர்கள் என் என்னால் அறிய முடிகிறது.
உங்களக்கு இறை தரிசனம் கிடைக்க என் வாழ்த்துக்கள். (ஒருவேளை ஏற்க்கனவே கிடைத்து விட்டதோ :)

இசுலாமை விட்டு சுபியை தேடி கொண்டிருந்தேன். கேளுங்கள் தரப்படும் என்ற ஏசுவின் வார்த்தைக்கேற்ப இறைவன் இத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறான் என எண்ணுகிறேன். :)

தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை/தேடல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆத்மீக ஞானத்தை பருகுவதற்கு ஒரு சிறந்த தளம். அல்லாஹ் உங்கள் பணியை பொருந்திக்கொள்வானாக!
www.mailofislam.com