தோழமையுடன்

Sunday, January 29, 2012

வாழ்வில் இனி பயமில்லை!


எனது ஆன்மீக குருநாதர் ஷைகு ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் "பைத்துன் நூர்"  இல்லத்துக்கு மனநல குறைவுடன் வருபவர்களை ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலியுல் அளீம்’ என தினமும் பல முறை ஓதச் செய்வார்கள். குறிப்பாக சந்தேக வியாதி (வஸ்வாஸ்) பயபதட்டம் (anxiety) வியாதியுடைவர்கள் அங்கே தொடர்ச்சியாக இதை ஓதி மனநல  தெளிவு பெறுவதை பார்த்திருக்கின்றேன். 


 இன்னும்  இது வாழ்வின் வறுமையை போக்கக் கூடியதாகவும், மனகட்டுபாடு மிகுந்த இறைநேசர்களால் அதிகமதிகம் ஓதக் கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இதை ஓதுவதில்  90 நன்மைகள் இருக்கின்றது அதில் கிடைக்கும் குறைந்தபட்ச நன்மை 'மனக்கவலை நீங்குவது' எனவும் சங்கைக்குரிய பெரியோர்களால் கூறப்படுகின்றது.

ஒரு முறை சங்கைகுரிய என் குருநாதரின் முன் அமர்திருக்கும் போது தினமும் 700 தடவை லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலியுல் அளீம்’ என ஓதி வந்தால் நப்ஸ், ஷைத்தானுடைய தீங்கை விட்டு இறைவன் பாதுகாப்பளிப்பான் இன்ஷா அல்லாஹ் என கூறினார்கள். அதே மாதத்தில் இந்த வார்த்தைகளை மூன்று முறை வலியுறுத்தி கூறினார்கள்.

மனக்கட்டுப்பாடு, குழப்பமற்ற தெளிவான மனதுடன் வளவாழ்வு வாழவிரும்பும் யாரும் இதை ஓதிப் பயன் பெறலாம். இன்ஷா அல்லாஹ்.

‘முராக்கபா’ என்ற இறைதியான முறையை அறிந்தவர்கள் கீழ்கண்டவாறு தியானிப்பது இன்னும் சிறப்பு.

சர்வசக்தியும் படைத்த இறைவன் நம்முடன் இருக்கின்றான். நம் ஒவ்வொரு இயக்கமும் அவனைக் கொண்டு தான் என்பதால் இறைவனை நம்முடன் இருப்பவனாக (மஈய்யத்தை) நினைவு கூர்ந்து நம் செயல்கள் அவனைக் கொண்டு வெளியாவதை கவனிப்பது.

தியான முறை தெரியாவிட்டாலும் பரவாயில்லை. முடிந்த வரை இதில் கவனத்தை செலுத்தி ஞாபகத்துடன் ஓதுவது பலனை அதிகரிக்கும். இன்ஷா அல்லாஹ்.

'லாஹவ்ல' பற்றிய சிறு விளக்கம்:

அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) என்ற நபி தோழர் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் (கைபரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும் போதும், ஒரு கணவாயில் இறங்கும் போதும் உரத்தக் குரலில் ‘அல்லாஹூ அக்பர் (இறைவன் மிகவும் பெரியவன்)’ என்று கூறிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் வந்த நபி (ஸல்) அவர்கள், மக்களே! உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மென்மையாக கூறுங்கள்) ஏனெனில் நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும், (எல்லோரையும்) பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தனது வாகன ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளாரோ அதை விட நெருக்கமாக நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

“பின்னர் (அண்ணலார் என்னை நோக்கி) அப்துல்லாஹ் பின் கைஸே! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? (அது) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (எனது யுக்தியும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை) என்பது தான்”.

“தப்ஸீர் இப்னுகஸீர்” என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில்  இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற தலைப்பின் கீழ் புகாரி ஷரீஃபில் உள்ள இந்த நபிமொழியை இப்னு கஸிர் (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 465-466) இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் பின் வருமாறு எழுதப் பட்டுள்ளது:

‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்பதற்குப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ‘லா ஹவ்ல’ பாவத்திலிருந்து திரும்புவதோ ‘வலா குவ்வத்த’ வழிபாட்டின் மீது ஆற்றல் பெருவதோ ‘இல்லா பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டே தவிர முடியாது என்பது ஒரு பொருள். ‘ஹவ்ல’ என்பதற்கு இயக்கம் என்றும் ‘குவ்வத்’ என்பதற்கு ‘ சக்தி ’ என்றும் ஒரு பொருள். இதன்படி மனிதனின் இயக்கமும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டு தான் என பொருள் விரியும். ‘ஹவ்ல’ எனபதற்கு யுக்தி என்ற பொருளும் உண்டு அதன்படி எனது யுக்தியும், சக்தியும் அல்லாஹ்வைக் கொண்டுதான் எனப் பொருள் அமையும். மனிதனின் அறிவாற்றலும் செயலாற்றலும் அல்லாஹ்வால் தான் என்ற கருத்து இதில் கிடைக்கின்றது (துஹ்பதுல் அஹ்வதி).

 o o o o

தொழகைக்கு அழைக்கும் பாங்கின் போது “ தொழ வாருங்கள். ஜெயம் பெற வாருங்கள்” என அழைக்கப்படும் போது நியாயமாக பார்த்தால் "நான் இதோ வந்து விட்டேன் (லப்பைக்)" எனத் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் ‘லாஹவ்ல’வைத்தான் பதிலாக சொல்கின்றோம். இது என்னால் எதுவும் முடியாது என்ற சோம்பேறித்தனத்துடன் சொல்லும் வாசகமல்ல. உன்னைக் கொண்டே உன்னை வணங்க கிருபை செய் இறைவா! என்று அவன் நெருக்கத்தையும், வணக்கத்தையும் காதலுடன் வேண்டும் காதல் வாசகங்கள்.

இறைவன் தன் வேதத்தில் சொல்லுகிறான் :

எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை. இந்த குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயலில் நீங்கள் எதையும் செய்வதுமில்லை. நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது நாம் பிரசன்னமானவர்களாக (ஷுஹூதன்) இருந்தே தவிர   (10:61)

அவனே  வாழ்வில் நம் துணையானால் வாழ்வில் நமக்கு இனி பயமேது.


5 comments:

HM Rashid said...

Alhamdhullilah!!!Jazakhallah for reminding the fabulous remedy!!!And pls pray for us to keep it up throughout our whole life!!
Rashid..

அரபுத்தமிழன் said...

//'யுக்தியும், சக்தியும்'//
ஜசாக்கல்லாஹ், அருமையான மொழி பெயர்ப்பு

கூடவே ஒரு டவுட்,

சிலர் தம் வண்டியில் 'மாஷா அல்லாஹ், லா குவ்வத்த இல்லா பில்லாஹ்'
என்று ஏன் எழுதுகிறார்கள். அதை வைத்து 'ஹவ்ல' என்றால்
'தீமை'(யிலிருந்து தப்பிப்பதும்) குவ்வத்த (நன்மை செய்ய) சக்தியும்
என்ற தொனியில் பொருள் கொண்டிருந்தேன்.

புல்லாங்குழல் said...

அன்பு அரபு தமிழன்,

சக்தியும், யுக்தியும் என்பது தப்ஸீர் இப்னு கஸீரில் உள்ள மொழிபெயர்ப்பு.கவிக்கோ அப்துல் ரகுமானின் பங்களிப்பு.

‘லா ஹவ்ல’ பாவத்திலிருந்து திரும்புவதோ ‘வலா குவ்வத்த’ வழிபாட்டின் மீது ஆற்றல் பெருவதோ ‘இல்லா பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டே தவிர முடியாது என்பது ஒரு பொருள் என்பதில் நீங்கள் கூறிய அர்த்தமும் அதில் இருப்பதை கவனிக்கவும். அது ஹதீஸின் மூலம் விளக்கப்பட்ட கருத்து.

அரபுத்தமிழன் said...

அன்பின் அமீர்,

எனது சந்தேகம், மக்கள் 'ஹவ்ல' என்ற வார்த்தையை வண்டியில்
எழுதுவதைத் தவிர்ப்பது ஏன் என்பதுதான். சூரா கஹ்ஃபில் கூட‌
அதைத்தவிர்த்துத்தான் வருகிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தம்
நான் பார்த்த தர்ஜமாக்களில் கிடைக்காததால்தான் தங்களிடன்
வினவுகிறேன்.

புல்லாங்குழல் said...

அன்பு அரபு தமிழன்,
லா ஹவ்ல என்பது ஹதீஸின் வாசகம். குர்ஆனில் வருவதல்ல. வாகனங்களில் அதை ஏன் எழுதுவதில்லை என்பது எனக்கு தெரியவில்லை.தங்களிடம் விளக்கமிருந்தால் பதியுங்கள். எனக்கும் பயன்படலாம்.