தோழமையுடன்

Wednesday, November 30, 2011

‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது’ - அனார் பேட்டி


கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு சகோதரி அனாரின் பேட்டியில் விசயமிருக்கிறது என்பதால் வார்ப்புகள் இதழிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.
மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது’  - அனார் பேட்டி
- கிண்ணியா. எஸ் பாயிஸா அலி
 
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முகம் (2007)" என்ற இரு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. 2005ஆம் ஆண்டில் ஓவியம் வரையாத தூரிகைக்காக அரச சாஹித்திய விருதும், வட-கிழக்கு மாகாண அமைச்சின் இலக்கிய விருதும் பெற்றவர். கவிதைக்கான அரச சாஹித்திய விருது பெற்ற முதல் முஸ்லீம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. “உடல் பச்சை வானம்” என்பது இவரது புதிய நூல் 

உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?
 
தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையை எனக்குள்ளே வேறொன்றாக மாற்ற முனைந்ததில் இருந்துதான் கவிதை மீதான ஆர்வம் தோன்றி இருக்கலாம். வெளியே இழந்தவற்றை உள்ளே கண்டெடுக்க முயன்றதன் விளைவு என்றும் கூறமுடியும்.
1991இல் தலாக்என்ற எனது முதல் கவிதை வானொலி முஸ்லீம் சேவையின் கவிதைச்சரத்தில் ஒலிபரப்பாகியது. அதை அல்-அஸாமத் அவர்கள் தொகுத்து பின்னர் நூலாகவும்; வெளிக்கொண்டுவந்தார். ஆரம்பத்தில் இஸ்ஸத் ரீஹானாஎன்ற எனது இயற்பெயரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். 
புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா
எவை நவீன கவிதைகள் என்பது தொடர்பான சந்தேகங்கள் இன்னமும் இருப்பதையே இக்கேள்வி புலப்படுத்துகின்றது. 1960களின் பிறகு மரபிலிருந்து முற்றாக விலகி தமிழில் கவிதைகள் எழுதப்பட்டன. அதன்பிறகு 1971 - 1975 காலங்களில் அப்துல் றஃமான், மு. மேத்தா, இன்குலாப், வைரமுத்து போன்றவர்களது புதுக்கவிதைத் தொகுப்புக்களால் ஜனரஞ்சகப்பட்ட ஓர் அலை வீசியகாலம் உண்டு. இன்றும் வாரப்பத்திரிகைகளில் இவ்விதமான வசன குறிப்புகள் கவிதைகளாக புளக்கத்தில் இருக்கின்றமையை அவதானிக்கலாம். மரபுக் கவிதைகளுக்குரிய வரைவிலக்கணங்கள், புதுக் கவிதைகளுக்கு பொருந்தாததுபோன்றே, புதுக்கவிதைகளுக்குரிய தன்மைகள் நவீன கவிதைகளுக்கும் பொருந்தாது. நவீன கருத்தியல் நோக்கங்களுக்கு இட்டுச்செல்லும் முறைமைகளை கையாழ்வதன் தொடர்ச்சியில், மரபுரீதியாக வந்த கருத்துக்கள் வலுவிழந்துவிடுகின்றன. ஓர் கவிதையின் முக்கியத்துவம், அதன் வேறுபடும் அம்சம், வெளிப்பாட்டுமொழி, உள்ளார்ந்த பொருள் நுட்பம் போன்றவைகளே கவிதைகளில் நவீனத்தை தீர்மானிப்பவையாக இருக்கமுடியும் எனக்கருதுகிறேன்.
கவிதை என்கின்ற பொது அம்சத்தின் உருவ வித்தியாசங்கள் தொடர்பாக, நவீன கவிதைபற்றி என்னிடம் தனிப்பட்ட கணிப்பீடுகள் இல்லை. வடிவங்களை மீறிய அதன் கருத்துத்தளம், அதன் நுண்மையான கட்டமைப்பு போன்றவற்றிலேயே எனது ஆர்வம் உள்ளது. இந்தவகையில் நவீனத் தன்மையை உள்ளடக்கரீதிதியாகவே நான் அணுகுகின்றேன். எந்த ஒரு காலத்திலும் சரி கவியிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும். மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது. நீங்கள் கேட்ட வேறுபாடுகளை இந்தப் புரிதல்களிலிருந்துதான் கண்டுணர முடியும் என நான் நினைக்கின்றேன். 
உங்களது கவிதைகள் சர்வதேச பார்வையை ஈர்த்துள்ளமை முக்கியமானது. குறிப்பாக எனக்குக் கவிதை முகம்என்ற உங்கள் தொகுப்புக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றிச்சொல்லுங்கள்
எனக்குக் கவிதை முகம்தொகுப்பிலுள்ள கவிதைகளின் தனித்தன்மையும் மொழியின் வசீகரமுமே அனைவரையும் ஈர்க்கக்கூடிய காரணம். சில முக்கிய கவிதைகள் அதில் உள்ளன. பெண்ணானவள் தோல்வியை பாடுகின்றவள், துயரமும் இழப்பும் பெண்ணியமும் மாத்திரமே பேசு பொருளாக இருக்க முடியும் என்ற கணிப்பீடுகளை என் கவிதைகள் மீறியிருக்கின்றன.
பேராசிரியர். எம். ஏ. நுஃமான், கவிஞர் சேரன், ‘காலச்சுவடுஆசிரியர் கண்ணன் போன்றவர்களுடைய அக்கறைகளும், எனது தொகுப்பிலுள்ள கவிதைகள் விசாலமான ஓர் உலகை எட்ட காரணமாக அமைந்தன. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் சிறந்த வரவேற்ப்பைப் பெறுகின்ற கவிதைகளாக அவை கண்டுணரப்பட்டிருக்கின்றன.
இம்மாதம் (ஜுன் 2009இல்) இருவேறு இலக்கிய அமைப்புகளால் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் இலக்கிய ஆய்வரங்குகளில், தமிழ்நாட்டின் முக்கிய படைப்பாளர்களின் படைப்புகளோடு (கவிதை, சிறுகதை, நாவல்) எனக்குக் கவிதை முகம்தொகுப்பும் ஆய்வுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. 
எனக்குக் கவிதை முகம் தொகுப்பில் இருக்கும் முதல் கவிதை மண்புழுவின் இரவுஅக்கவிதையை எழுதிய அந்த அனுபவம் எப்படியிருந்தது
இந்த தொகுப்பே எனக்கு முக்கியமான அனுபவமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். சந்தோசமான அனுபவங்களை இத்தொகுப்பினூடாக பெற்று வருகின்றேன். இந்தத் தொகுப்பில் முதல் கவிதைக்கான அனுபவம் பற்றி கேட்டீர்கள்ஒரு நெடுந்தூரப் பயணத்தின் போது இது வாய்த்தது. இரவு நேரப் பயணம்; எல்லோரும் நித்திரையாகி கொண்டிருந்தார்கள். நான் ஜன்னலைத் திறந்து இரவையும் வானத்தையும் ரசித்துக்கொண்டே வந்தேன். தூங்கவே இல்லை மிக நீண்ட பிரயாணம் அது. அந்தப் பிரயாணம்தான் அந்தக் கவிதையின் அடித்தளம். இரவின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம்| என்று இறைவனை நோக்கி எழுதின வார்த்தையாகத்தான் அதை எழுதினேன். தவிரவும் அந்தக் கவிதையில் நமது மதம் சார்ந்த கூறுகளும் சில முஸ்லீம் கலாச்சாரத் தன்மைகளும் வெளிப்பட்டிருக்கும். 
எப்படி ஒரு கவிதையை எழுதுகிறீர்கள்
இதற்கு ஒரு முடிந்த முடிவு எனக்கில்லை என்றே கூறுவேன். பல சமயங்களில் முதல் சொல்தான் அந்தக் கவிதையையே தீர்மானிக்கிறது. ஆனால் அந்தச் சொல்லை எழுதுவதற்கு முன்னால் நம்முடைய உள் மனத்தில் அதுக்கான விடயங்களெல்லாம் சேகரமாயிருக்கும். அது கனவாக அல்லது காட்சிகளாக அந்த விசயம் உள் மனத்தில் ஒவ்வொரு அடுக்குகளாக இருக்கும். ஒரு கட்டத்தில் கவிதையாக அதை எழுத வேண்டும் என்கிற கட்டம் வரும்போது, அவைகள் வார்த்தைகளாக வந்து விழும். அந்த வார்த்தைகள் வராத பட்சத்தில் அந்தக் கவிதையை நான் நிறைவு செய்ய மாட்டேன். ஒரு கவிதை நிறைவுபெற சில கணங்களோ, ஓரிரு மாதங்களோ எனக்குத் தேவைப்படுகின்றன. 
கவிதையில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சில வார்த்தை மாற்றங்களை மேற்கொள்பவரா நீங்கள்
நிச்சயமாக. கவிதை எழுதுவதிலும் தொழில்நுட்ப ரீதியாகச் சரிசெய்யவதிலும் நிறைய ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் செய்யக் கூடியவள் நான். ஒரு பிரதியிலேயே அதை முழுதாகச் செய்ய முடியாது. எனக்கு நானே சில சமயங்களில் சவாலாக இருப்பேன். எனக்குத் திருப்தி ஏற்படும்வரை அந்தக் கவிதையை நான் சரிசெய்து கொண்டும் திருத்தி எழுதிக்கொண்டும்தான் இருப்பேன். பல தடவைகள் அவ்வுணர்வை இசைத்து விடுபடலாமா அபிநயங்கள் செய்யலாமா வரைய முடியுமா என்றும் யோசிப்பேன். சில நேரங்களில் மொழி வெறும் சூன்யமாகவும் இருக்கும். 
நீங்கள் சென்ற ஆண்டு மேற்கொண்ட இந்தியப் பயணம் பற்றி கூறுங்கள் ?
 
சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒரிசா சென்றிருந்தேன். அது முழுக்க முழுக்கக் கலையுணர்வு சார்ந்த இடம். திரும்புகிற பக்கமெல்லாம் ஒரு விதமான கலையைத் தேக்கி வைத்திருக்கிறது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மற்றும் பசுமையான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். பெண் ஆளுமையான கவிஞர் மனோரமா பிஸ்வால் வசிக்கின்ற நிலத்தைப் பார்த்ததும் அந்த நிகழ்வில் அவரை நேரில் பார்த்ததும் சிலிர்ப்பான அனுபவமே. ஓரிசாவின் பழம்பெரும் கவிஞராக மதிக்கப்படும் சீதாகாந் மஹாபோத்ராவுடன் உரையாடக்கிடைத்தமை அளப்பெரிய வாய்ப்பாகும். 
தமிழைஉச்சரித்த ஒரே ஒரு நபராக நான் இருந்தேன். 3 நாள்கள் தொடராக அவ்விழா இடம்பெற்றது. பல்வேறு ருசிகளுடைய நவீன மற்றும் பாரம்பரியமான உணவு வகைகள் தரப்பட்டிருந்தன. 8 நாடுகளிலிருந்து வந்த கவிஞர்களுடன் கவிதைகள் வாசித்தேன். நமது படைப்புகளுக்கு வேறொரு நாட்டில் கிடைக்கின்ற வரவேற்பென்பது உற்சாகமூட்டக் கூடியதுதானே. 
இவ்விதமான பெருமிதங்களுக்குள்ளே விசேடமாக நீங்கள் குறிப்பிட விரும்புவது யாரை
எனது வெற்றிகளுக்குப் பின்னால் நிச்சயமாக ஓர் ஆண்தான் இருக்கிறார். எனது கணவர் அஸீமைத்தான் முதலில் கூறமுடியும். அவர்தான் எனது முதல் தொகுப்பை தன்கரங்களாலேயே தொகுத்து டைப்செய்து அச்சிட்டு எனக்கு பரிசளித்தார். எனக்கு அச்சங்களில்லாத ஒரு எழுத்து உலகம் சாத்தியமாகியது. அஸீமின் உன்னதமான மானுடப் பண்புதான் எனது அனைத்துப் பெருமிதங்களுக்கும் காரணமாகின்றது. தவிர அக்கறையம் நட்பும்மிக்க தோழமைகளின் ஊக்கமும் இதனுள் அடங்கும். 
கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன
எனக்கென்று சில ஒழுங்குகளை தீர்மானங்களை கொண்டிருப்பவள் நான். சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது ஆரம்ப எழுத்து தொடங்கப்படவுமில்லை. முதலில் நான் எனக்கென்று தான் எழுதுகின்றேன். அவை சில வெற்றிகளை தந்திருக்கின்றன. இவற்றை சாதித்துவிட்டதாக நான் கருதுவதுமில்லை. 
கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா
ஓரிரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நாவலோ சிறுகதையோ இனிமேல் எழுதுவேனா என்பது பற்றி திட்டமாக எனக்கு கூறமுடியாது. நாவல் வாசிப்பதும் சிறுகதை வாசிப்பதும் எனக்கு விருப்பமானதாகத்தான் இருக்கின்றன. 
முஸ்லீம் பெண் என்ற வகையில் உங்களது கவிதை பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை பெருமை தரக்கூடிய விடயமல்லவா
ஆண்டு 11 தமிழ் இலக்கியப் புத்தகத்தில் வன்மப்படுதல்என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு நவீன கவிதைகளின் பரிச்சயத்தை ஏற்படுத்துவது மிகச் சிறப்பான நோக்கம்தான். 
உங்கள் பிரதேசத்தில் பெண்களது கல்வி வளர்ச்சி பற்றி குறிப்பிடுங்கள்
எனது ஊரான சாய்ந்தமருது, தற்போது பெண்கள் கல்வியில் மிக சிறப்பான உயர்வடைந்து வருகின்றது. எல்லாப்பெண்களும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எனது ஊரைப்பொறுத்தவரை நான் பெருமிதமாக மூன்று பெண்களை குறிப்பிட்டு கூறவிரும்புகிறேன். அதில் இலங்கையின் முதலாவது பயிற்ப்படட பெண் ஆசிரியை பாத்துமுத்து கலால்தீன், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் முதலாவது முஸ்லீம் பெண் பல்கலைக்கழக வேந்தர், ஏ. எல். என். மைமுனா இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி. இவ்விதமாக பெண்களை ஊக்குவிக்கக்கூடிய ஊரினில் பிறக்கும் வாய்ப்புக்கிடைத்தமை எனக்கும் பெருமிதம்தானே. 
உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா
ஒரு பெண் என்பவள் தன்னுடைய வாழ்க்கையில் தடைகளையே அதிகம் சந்திக்கின்றாள். இதில் வியப்படைய எதுவுமில்லை. தடைகளுக்குள்ளேயும் இடர்களுக்குள்ளேயும் அவள் தனது கனவை வாழ்வது அல்லது வென்றுவிடுவது என்பதுதான் முக்கியம். ஓர் ஆளுமையுள்ள பெண் இவ்விதமான சந்தர்ப்பங்களினால் அதிகம் வலுவூட்டப்படுகின்றாள் என்பதே என்னுடைய கருத்தும் அனுபவமுமாகும். 
நன்றி : எங்கள்தேசம் கொழும்பு
எஸ்.பாயிஸா அலி
கிண்ணியா
இலங்கை 
ஏபி.எம்.இத்ரீஸின் 'சமூக மாற்றத்தில் கலையின் பங்கு என்ற கட்டுரையையும் பார்வையிடுங்கள்

7 comments:

துரைடேனியல் said...

Arumai. Azhagana pathivu.
Tamilmanam Vote 1.

புல்லாங்குழல் said...

நன்றி நண்பரே!

மழை said...

நல்ல பகிர்வு :)

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்களின் Email பார்த்தேன். எனது முகவரி: pdhanablandgl@gmail.com நன்றி நண்பரே! 15 பதிவுகள் போட்டுள்ளேன். பாருங்கள். தங்கள் கருத்தை சொல்லுங்கள்.

நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

sabeer.abushahruk said...

well said. i've been out of station for a while. I shall come up with more comments shortly.

anar said...

அன்பின் நூருள் அமீன்,

உங்களது பக்கத்தில் எனது பேட்டியை பார்த்தேன். மகிழ்ச்சி.

Visit My blog : http://www.anarsrilanka.blogspot.com/

அனார்

Unknown said...

அருமையான தகவல்கள்...
ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றி அவரைக்கொண்டே பேசும் போது அது உயிர் உள்ளதாய் இருக்கும்...
உணர்வு பூர்வமானதாய் இருக்கும்..