தோழமையுடன்

Saturday, November 19, 2011

இறந்தவர் பேசிய வார்த்தைகள்


நான் எவ்வளவு உரக்க கத்தி பேசினாலும் மனிதர்கள் யாருக்கும் கேட்கப் போவதில்லை. நான் இறந்து போய் எத்தனை காலம் கடந்தது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இப்போது தான் நான் இறந்து போனேனோ…..


இறந்து போனபின் இருப்பதே ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. எந்த கவலையுடன் இறந்தேனோ அந்த கவலையின் வேதனை மட்டுமே நானாக எஞ்சி நிற்கின்றேன். அசைவற்று உறைந்து நிற்கும் விவரிக்க முடியாத தனிமை. நானும், நானுமான தனிமையில்   நான் இறப்பதற்கு முன் நடந்ததெல்லாம் மனத்திரையில் ஓடியது….

சவுதியில் வேலை . அன்பே உருவான அழகு மனைவி. புத்திசாலித்தனமும், கீழ்படிதலுமுள்ள பாசமுள்ள பிள்ளைகள் (ஆஷிக், ஜீனத் ), கொள்ளை மகிழ்ச்சியாக என் வாழ்வு கழிந்தது.
when maidens sue, Men give like gods என்பார்கள். நான் என் maidenனுடன் பிள்ளைகளையும் சேர்த்து கொண்டேன். சம்பாத்தியம் முழுவதையும் மனைவி, மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே செலவு செய்தேன். கடைசி பைசா வரை மிச்சம் வைக்கவில்லை.
என்ன சேமிப்பு இல்லாததால்  ஆஷிக் ஆசைப்பட்ட மெடிகல் சீட் வாங்குவதற்கு கேபிடேசன் ஃபீ கட்ட முடியவில்லை. அவனும் அதை பொறுட்படுத்தாமல் துறை மாறி பி.காம். எடுத்து படித்தான். கொஞ்ச நாளைக்கு வருத்தமாய் இருந்தது. பின் அதுவும் மாறிவிட்டது.
பி.காம் தான் முடிக்கப் போகின்றான் அதற்குள்ஆஷிக்குக்கு பெண் தர உறவில் பேசி வந்தார்கள். “பேசி வச்சுக்கலாம், இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் முடிச்சுக்கலாம்னு” கேட்டார்கள்.

‘வேணவே வேணாம்’ என மறுத்து விட்டான் ஆஷிக். 

உம்மாவும் மவனும் ரொம்ப ஃபிரண்ட்லி. என் மனைவி ஆஷிக்கிடம்“சரி இப்ப வேணாம் ஆனா நீ கல்யாணம் செஞ்சுக்கும் போது பொண்ணு எப்படி இருக்கனும்”னு விளயாட்டாக கேட்டாள்.

“அத கல்யாணம் முடிக்கும் போது பார்த்துக்கலாம்” ஆஷிக் நழுவினான்.

“அட ரொம்ப அலட்டாம சும்மா சொல்லுடா” என அவள் சொன்ன போது ஆஷிக்,“..ம்மா, வாழ்ந்தா நீயும் வாப்பாவும் வாழ்ந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழனும். வாப்பா மாதிரி நல்ல கணவனா நான் இருக்க முடியும்னு நம்புறேன் ஒன்னை மாதிரி நல்ல மனைவியா ஒரு பொண்ணு பாரும்மா” என்றான்.

“நானா! புள்ளயாரு தான் அம்மா மாதிரி பொண்ணு வேணுண்டு கேட்டு இன்னும் கல்யாணம் முடிக்காம இருக்கார்னு என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க. நீ எவ்வளவு நாள் காத்திருக்க போறே”ன்னு சிரித்தாள் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்ல மகள் ஜீனத்.

சிறிது தூரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டே அவர்கள் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் கசிய இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.

நன்றி! 
நன்றி! 
நன்றி என மகிழ்வும், நிறைவுமான வாழ்வை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டிருந்த நெஞ்சம் தான் கடைசி இரண்டு வருடங்கள் எப்படி மாறிப்போனது!.

திடீரென வந்த ஹார்ட் அட்டாக். எதிர் பாராத செலவு, கடன் என திடீரென நிலமை மாறிய போது பி,காமுக்கு மேல் எம்.பி.ஏ ஃபைனான்ஸ் படிக்க ஆசைப்பட்டவன் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டெண்டு வேளையில் சேர்ந்தான்.

எனக்கு ஒரு வருடம் கட்டாய ஓய்வில் கழிந்தது. 

எவ்வளவு சிக்கனமாக செலவு செய்தாலும் மகனின் சொற்ப வருமானம் வீட்டு செலவுக்கே போதவில்லை. மருத்துவ செலவுக்கு மனைவியின் நகையை விற்க வேண்டிய நிலை. இந்த நிலையில் மகள் வயதுக்கு வந்ததுவிடவே அவள் கல்யாணத்திற்காக நகையோ, பணமோ சேர்க்கவில்லையே என்ற கவலை வேறு வாட்டியது. 

வருமானம் போதாத நிலையில் ஆஷிக் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒன்றும் சரியாக அமையவில்லை.

நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வறுமை தன் கோரமுகத்தைக் விஸ்வரூபமாய் காட்ட சன்னம் சன்னமாக விரக்தி அதிகரித்து மனோ அழுத்தம் கூடியது. 

டாக்டரிடம் சென்ற போது பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள். இன்னொரு அட்டாக் வந்தால் உங்களால் தாங்க முடியாது என பயமுறுத்தினார். எனக்கு என்னைப் பற்றிகூட கவலையில்லை ஹார்ட் அட்டாக் வந்தால் போய் தொலையலாம் என இருந்தது. ஆனால், வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் தீடீர் ஏழ்மைக் கோலம் தான் என்னால் மிகவும் சகிக்க முடியாமல் போனது.

முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை தூக்கி வரும் விக்ரமாதித்தனாய் ஆஷிக்கும் மனம் தளராமல்  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். நானும் வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர்களின் மூலம் கெஞ்சிக் கூத்தாடி முயற்சித்துப் பார்த்தேன்.

எங்கள் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. ஏன் இப்படி வாழ்வின் எல்லா கதவுகளும் திடீரென இறுக சாத்தி கொண்டது என புரியவில்லை. 

தவித்த மனது வரண்டது. பயம் இருளாய் சூழ்ந்தது.

கடவுள்னு ஒன்னு இருப்பது உண்மைதானா? என்ற கேள்வி அடிக்கடி வந்தது.

பெயருக்கு பள்ளி வாசலுக்கு போனேன். ஃபர்லான (கட்டாயமான) தொழுகைகளை மட்டும் மனமின்றி தொழுதேன்.

மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் என்னை தழுவிய போது இறை நம்பிக்கையற்றவனாகவே மரணித்தேன்.

 0 0 0

வாப்பா இறந்து ஆறுமாதத்தில் துபாய்க்கு வந்தான் ஆஷீக். இந்த ஏழு வருசத்துல யாரும் எளிதில் காணாத முன்னேற்றம். தங்கையின் கல்யாணம் சென்ற வருடம் சிறப்பாக முடிந்தது. “இதையெல்லாம் பார்த்திருந்தால் உங்க வாப்பா எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாஹ” என்ற உம்மாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

எல்லா செலவுக்கு பிறகும் பேங்கில் இரண்டு லட்சம் திர்ஹம் சேமிப்பு இருந்தது. சேமிப்பு சுய தொழில் தொடங்கும் ஆசை தந்தது. ஒளிவு மறைவு இல்லாமல் அவன் அரபி முதலாளியிடம் ஆசையை சொல்ல “என் மகனும் நீயும் சேர்ந்து புதுசா ஏதாவது செய்ங்க” என பச்சை கொடி காட்டினார்.

துபாயில் கண்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரி உச்சத்தில் இருப்பதால் அதன் உப தொழிலான டிரக் டிராண்ஸ்போர்ட்டை தேர்தெடுத்தான். அவனுக்கு துபாய் வந்த ஆரம்பத்தில் ஒரு டிரக் டிராண்ஸ் போர்டில் ஒரு வருடம் வேலை செய்த அனுபவம் இருந்தது. பழைய ஆட்களை தொடர்பு கொண்டு சுறுசுறுப்பாக மார்கெட் சர்வேயை முடித்தான். ஐந்து வருடத்தில் 10 மில்லியன் நிகர லாபம் வரும் என ஃபீஸிபிலிட்டி ரிப்போர்ட் காட்டியது.  மெர்சிடிஸ் டிரக் கம்பெனியில் இருந்த அவனது நண்பன் விரைவில் விலை ஏறப்போகிறது வேண்டிய அளவு புக் பண்ணிக் கொள் என ஒரு குளு கொடுத்தான். தனக்கு பார்ட்னராக சம்மதித்த முதலாளியின் மகனுடைய வேறு ஒரு கம்பெனியின் மூலம் பர்சேஸ் ஆர்டரும் 5% அட்வான்ஸும் கொடுத்து அவசர அவசரமாக 100 டிரக் முன்பதிவு செய்தான். நண்பனின் கணிப்பு சரியாகவே இருந்தது. 425,000 திர்ஹத்துக்கு ஆஷிக் புக் பண்ணிய டிரக்கின் விலை ஒரே மாதத்தில் மார்கெட்டில் 525,000 திர்ஹமாக விலை உயர்ந்தது. பிஸினஸ் துவங்கும் முன்பே ஒரு டிரக்குக்கு 100,000 என 100 ட்ரக்குக்கும் 10 மில்லியன் திர்ஹம் Asset Value  கூடி விட்டது என்பதை காட்டி பேங்க் ஃபைனான்ஸுக்கு அனுகிய போது எளிதாக லோன் கிடைத்தது. கண்ஸ்ட்ரக்ஸன் கம்பெனிகள் எனக்கு உனக்கு என போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர் கொடுக்கவே ஆரம்பம் அமோகமாக இருந்தது.

மெமொராண்டம் கையெழுத்திட்டு புதிய ட்ரக் கம்பெனி ஆரம்பிக்க இருந்த நேரத்தில் திடீரென முதலாளியின் மகன் மனம் மாறி பிஸினஸிலிருந்து ஆஷிக்கை களட்டிவிட்டுட்டு அவன் கம்பெனியின் மார்கெட்டிங் மேனேஜருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்கவே. புதிய டிரக் கம்பெனியிலிருந்து ஆஷிக் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டான். முதலாளியிடம் எடுத்து சொன்னதற்கு “நீ வேற புராஜக்ட் கொண்டு வா நான் உதவி செய்கின்றேன்.” என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

ஆஷிக் துடித்து போய்விட்டான். உம்மாவிடம் போய் தாங்க முடியா மனபாரத்தை கொட்டினான்.

“உனக்கு அல்லாஹ் கொடுக்க நெனச்சத யாரும் தடுக்க முடியாது. உனக்கு அல்லாஹ் தடுக்க நெனச்சத யாராலும் கொடுக்க முடியாது. கவலைப்படாதே வாப்பா!” என உம்மா ஆஷிக்கின் தலைமுடியை கோதி ஆறுதல் சொன்ன போது ஆஷிக் சிறு குழந்தை போல கண்ணீர் விட்டான். 

 “ அழுவாதே ஆஷிக், தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லைன்னு பாட்டு கேட்டுருக்கீல எழுபது தாயை விட கருணையாளன் நம்ம படச்ச ரப்பு. அவனுட ரஹ்மத்துட (கருணையின்) மடியில தான் எல்லா உயிரும் இருக்கு. அவன்ட ஒன்னைய ஒப்படைச்சுட்டு ஒன் வேலையை பாரு மகனே” தாயின் அண்மையும் அவள் கூறிய வார்த்தைகளும் மிகுந்த ஆறுதலை தந்தது.

ஆஷிக் இல்லாமல் மார்கெட்டிங் மேனேஜர் டிரக் டெலிவரியிலிருந்து ஹெவி ட்ரைவர்களை பாக்கிஸ்தானிலிருந்து எடுப்பது வரை எல்லா ஏற்பாடுகளையும் இரண்டே மாதத்தில் செய்து முடித்தான். 

மறக்க முடியாத 2008ம் ஆண்டின் செப்டம்பர் முதல் வாரத்தில் முதலாளி மகனும், மார்கெட்டிங் மேனேஜரும் பார்ட்னராக புதிய டிரக் டிராண்ஸ்போர்ட் கம்பெனி இயங்க ஆரம்பித்தது. முதல் நாளே 30 ட்ரக்குகள் மலைப்பாறைகளை சுமந்து கொண்டு வரிசையாக உச்சத்திலிருந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தன.

o o o

  “ஏங்க நேத்து தானே மாமாவுக்காகன்னு நூறு மிஸ்கினுக்கு குண்டா சோறு போட்டோம்.விடிய கார்த்தாலெ மாமா கனவுல வந்துட்டாஹங்க” என்றாள் ஆஷிக்கின் மனைவி வஹிதா.

“என்னா கனவு கண்டே?”

 “மாமா நம்ப ஊட்டுக்கு வர்ராஹ. நம்ம எல்லாத்தையும் பார்த்து சிரிக்கிறாஹ. ஏதோ சொல்ல வற்றாஹ என்னாண்டு புரியல திரும்பி கேட்கிறதுகுள்ளே முழிச்சிட்டேன். மவுத்தா போனஹலுக்கு எதிர்காலம் தெரியுமாம். அவங்க சிரிக்கிறமாதிரி கனவு கண்டாக்கா நம்ப எதிர்காலம் பிரகாசமா இருக்கும்னு எங்க உம்மா சொல்வாஹ” என்றாள்.

“ஆமாம் உங்க உம்மா யூசுப் நபிட பரம்பரை அட ஏம்புள்ளே!,” கேலியாக சிரித்தான் ஆஷிக். அவன் கேலி சிரிப்பிலும் மெலிதாக சோகம் மறைந்திருந்தது.

நன்றி : ஆபிதீன் பக்கங்கள்


1 comment:

Anonymous said...

It was a really sentimental touch.