தோழமையுடன்

Thursday, October 28, 2010

ஏகத்துவம் என்னும் ஒருமையின் தரிசனம்Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India. 
- தமிழ் ஹிந்து என்ற தளத்திலிருந்து. 
‘ஹிந்துத்வா’ என்கின்ற இடத்தில் எந்த மதத்தின் பெயரை சொன்னாலும் பொருந்தும் ஒரு பொதுவான உண்மை இது. மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே இறைவன் தன் தூதர்களின் வாயிலாக மனிதர்களுக்கு அவர்களின் இயற்கை நிலைக்கு தோதுவான வாழ்வியல் நெறிகளை வழங்கினான். அந்த வாழ்வியல் நெறிகளைத் தான் மதங்கள் என அழைக்கின்றோம். இந்த வாழ்வியல் நெறிகளை மதங்கள் என அழைப்பதை விட மார்க்கம் என அழைப்பதே சரியானது. ஆதி நாள் முதலே ஆயிரக்கணக்கான இறைதூதர்களின் மூலம் இந்த மார்க்கங்கள் உலகெங்கும் அந்த ஏகப் பரம் பொருளால் அருளப்பட்டாலும். இந்தியாவில் தோன்றிய தூதர்கள் யார் யார் என தெளிவான வரலாறு இல்லை. முதல் தூதரே இந்தியாவில் தோன்றியதாகவும் ஒரு கருத்து உண்டு.

இப்படி பல்வேறு தூதர்களின் வாயிலாக வழங்கப்பட்ட மார்க்கங்களைத் தான் இஸ்லாம் என அழைக்கப்படுகின்றது. உதாரணமாக ஏசுநாதர் அவர்களின் வழியாக வந்த கிருஸ்துவம் அந்த காலத்து இஸ்லாம் ஆகும். இவ்வாறு மனிதனின் அடிப்படை ஆன்மீக மனோ நிலையான மார்க்கத்தை தான் ( தூய ஹிந்துத்வாவைத் தான், அந்த கிருத்துவத்தைத் தான், அந்த யூத மதத்தைத் தான் ) அரபியில் இஸ்லாம் என சொல்லப்படுகின்றது. 
நம் மதங்கள் அனைத்தின் அடிப்படையான ஆன்மீகத்தின் மூல வேரை தேடினால் ஒரே அடிப்படையில் தான் சென்று முடிவடையும். அதன் பெயர் தான் ஏகத்துவம். சிவனுக்கு கூட ஏகன் என்றொரு பெயர் உண்டு. அல்லாஹ் என்றழைக்கப்படும் ஏகனான இறைவன் என்பவன் ஒரு மதத்தின் தெய்வமல்ல. அவன் அனைத்து மனிதர்களின் ரட்ஷகன். இறைவன் என்பதற்கு அரபியில் வழங்கப்படும் பெயர் தான் அல்லாஹ்.

ஏகத்துவம் - இறை ஒருமையின் தரிசனம்
’பிரம்மமே இருக்கிறது [சத்] பிறவெல்லாமே இல்லாதவை [அசத்]’ என்ற அடிப்படையான ஒருமைத் தரிசனமே அத்வைதமாகும்’ என்கிறார் ஜெயமோகன். அத்வைதம் இந்தியாவில் ஒரு பெரிய அலையை உருவாக்கியது. அத்வைதமே பிறகு வந்த எல்லா இந்தியச் சிந்தனைகளுக்கும் அடிப்படைக்கட்டுமானமாக அமைந்தது. இந்து சிந்தனைகளுக்கு மட்டுமல்ல சூஃபிசம் போன்ற இஸ்லாமியச் சிந்தனைகளுக்கும், சீக்கிய சிந்தனைககளுக்கும் கூட. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு போன்றவர்கள் அத்வைதிகளே. வள்ளலாரின் ஜோதி தரிசனத்தில் அத்வைதம் உண்டு. அய்யா வைகுண்டர் பேசியது அத்வைதமே. ரமணர் முதல் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் வரை நாம் அத்வைதத்தின் வலுவான பங்களிப்பை காணமுடியும் என கூறுகின்றார் ஜெயமோகன்.

மேலே அவர் கூறிய விளக்கம் தான் அத்வைதம் என்றால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கருக்கு முன்பே உள்ள குர்ஆனில் அவர் கூறும் அத்வைத கூறுகளை பாருங்கள்.
அவனல்லாதவற்றில் எதையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவை பொய்யானவை (பாதில்)(22:62, 31:30)
நிச்சயமாக இறைவன் அவனே தெளிவான உண்மை(ஹக்).(6:62, 10:30, 10:32, 18:44, 20:114) 
எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) என்ற வசனமும், (பூமியாகிய) இதன் மேலுள்ள ஒவ்வொன்றும் அழியக்கூடியதே மிக்க கண்ணியமும், வல்லமையும் கொண்டவனான உம்முடைய ரட்ஷகனின்(ரப்பின்) முகமே நிலைத்திருக்கும்.(55: 26,27) என்ற வசனமும் கால, நேர, இடம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன், இன்னும் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்போதும் இருக்க கூடியவன் இறைவன் என்கிறது வேத வரிகள்.
குர்ஆனுக்கு  முன்பும் கூட இந்த ஞானம் இருந்தது என்பதை முஹம்மது நபிகளாரின் பின் வரும் கூற்றிலிருந்து அறியலாம்.
(முந்திய காலத்து) கவிஞர்கள் கூறிய வார்த்தைகளிலேயே மிகவும் உண்மையான வார்த்தை ‘லபீத்’ என்ற கவிஞர் கூறிய “அறிந்து கொள்ளுங்கள் இறைவன் அல்லாத அனைத்தும் பொய்யானவையாகும் (பாதில்).” (என்ற வாசகமாகும்.). 

இந்த கொள்கை தெளிவாக விளங்கப்பட வேண்டிய ஒரு ஆழமான பாடம். எல்லாம் அவனல்ல. எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு  வினாடியும் இருப்பை இடவிடாமல் வழங்குபவன் இறைவன்.

குறைந்த பட்சம்  இறைவனைத் தவிர யாரும் சுயமாக இருப்பவர்கள் இல்லை என்பதை விளங்க வேண்டும்.   இந்த விசயத்தில் குழப்பம் வராமல் இருக்க இந்த சுட்டியை படிக்கவும்.      இறைவன் இருக்கின்றானா?


குர் ஆன் கூறும் ஏகத்துவத்திற்கும் , இந்து மத ஞானத்திற்கும் இன்னும் ஆதி முதலே காலம் காலமாய் இருந்து வரும ஞானத்திற்கும் இடையே ஏகத்துவ ஒருமையில் உள்ள பொதுத் தன்மையை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டுகின்றேன். 

இந்து மதத்தில்  உருவ வழிபாடு வந்த வழியினை ஜெயமோகனின் பின் வரும் வார்த்தைகளின் மூலம் விளங்கலாம்.
“பொதுமக்கள் எப்போதுமே வழிபாடுகளையே அதிகமும் சார்ந்திருக்கிறார்கள். தத்துவம் கூட சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் உருமாறித்தான் அவர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அடிப்படையில் சடங்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட பௌத்தம் சமணம் போன்ற தத்துவ மதங்கள்கூட வளர்ச்சிப்போக்கில் சடங்குகளையும் தெய்வ உருவங்களையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். 
பூர்வமீமாம்சம் என்னும் பிராமண மதம் முழுக்க முழுக்க சடங்குகளைச் சார்ந்தது. மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அது பல்வேறு இனக்குழுக்களின் சடங்குகளையும் தெய்வங்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டு விரிவாக்கம் பெற்றுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்து மரபின் வெகுஜனத் தளமே அதுதான் என்றாயிற்று. ஆகவே இந்து ஞானமரபின் எந்த ஒரு தத்துவத்தளமும் அந்த வெகுஜனத்தளத்துடன் சமரசம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது”.

டாக்டர் ராதா கிருஸ்ணன் தனது இந்தியன் பிலாஸபியில் கூறும் கருத்தும் கூட இதுவே. ஆரியன் என்பவன் பிறருக்கு தீங்கு தராதவன் என்னும் பொருளில் ஒரு பிராமண நண்பர் கூறுவதை கேட்டேன். இறைநம்பிக்கையாளன் என்பதற்கும் இதே பொருளைத் தானே இஸ்லாமிய மார்க்கமும் கூறுகின்றது என்பது நினைவு வந்தது.
ஆன்மீக போதனையில் ஒரு பொதுத் தன்மை இருப்பது உண்மை. ஆனால் புத்தர், சங்கரர், கிரேக்க தத்துவவாதிகள், கிருஸ்தவ ஞானிகள், இஸ்லாமிய ஞானிகள் என ஆன்மீகம் பேசும் பல்வேறு குழுவினர் ஒருவரையொருவர் தங்கள் கொள்கையை பிறர் காப்பி அடித்ததாக கூறுகின்றார்களே! இதில் யார் சொல்வது உண்மை? 

உண்மையில் ஞானம் உடையவர் ஒருவர் இன்னொருவரை இகழமாட்டார். ஏனென்று விளங்க ஒரு சின்ன கதை.

குறும்படம் ஒன்றை திரையரங்கம் ஒன்றில் படத்தை வெளியிடுவதற்கு முந்திய பிரிஃவியூ சிறப்பு காட்சியாக காட்டினார்கள். நூறு பேர் அந்த படத்தினை பார்த்தார்கள். சிறப்பு காட்சியாக காட்டப் பட்ட அந்த குறும்படம் தியையரங்குகளில் வெளியிடப்படவில்லை. பார்த்தவர்களில் மூன்று பேரை தவிர மற்றவர்கள் அந்த படத்தையே மறந்து விட்டனர். மனதின் அடியில் அந்த படத்தின் கருவை அசை போட்டு கொண்டிருந்தவர்கள் அந்த மூவர் மட்டுமே. அதில் இரண்டு பேர் திரைப்பட இயக்குனர்கள். அவர்கள் இருவரும் அந்த கதையை தத்தம் பாணியில் இரண்டு படங்களை எடுத்து வெளியிட்டனர். மூன்றாமவர் ஓர் எழுத்தாளர் அவர் அந்த கதையை வைத்து ஒரு பெரிய புத்தகம் எழுதி வெளியிட்டார். மூன்றுமே வெளியாகி பிரபலமாகியது. ஆனால் அந்த மூவருடைய ரசிகர்களும் மற்ற இருவரை  நோக்கி ‘எங்காளு கதையை நீ காப்பியடித்தி விட்டாய்!’ என குற்றம் சாட்டினார்கள். ஆனால் அந்த மூவருக்குமே அது தங்கள் சொந்த சரக்கு அல்ல என்பது தெரியுமாதலால் ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு என்னை விட நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள் என பாராட்டிக் கொண்டார்கள்.

 குர்ஆனில் நாம் அனைவருமே பார்த்த ஒரு பிரிஃவியூ சிறப்பு காட்சி பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த காட்சி மனித சரித்திரம் தொடங்குவதற்கு முன்பே நடந்த காட்சி. கருவாய் தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பே நாம் அனைவருமே ஒரு வகையில் இருந்தோம். அதை போலவே இறப்புக்கு பின்னும் நாம் இருப்போம். இரண்டுமே இப்போது நாம் கொண்டிருக்கும்  சடத்துவ உடல் இல்லாத நிலை. இந்த வகை உடலோ அதன் வழியாக பெறும் புலனுணர்வுகளோ இல்லாத அந்த நிலையை ஆன்ம உலகம் என சொல்லுகிறார்கள். அந்த நிலையில் “நான் உங்கள் ரட்ஷகன் அல்லவா?” என இறைவன் கேட்டதாகவும், அதற்கு நாம் அனைவரும் “ஆம். நீ தான் எங்கள் ரட்ஷகன்” என உறுதி கூறியிருப்பதாக ஒரு காட்சி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இன்று ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து, ஒருவர் கிருஸ்தவர் இன்னுமொருவர் நாத்திகர் என குழுக் குழுவாய் பிரிந்து நிற்கின்றோம்.. கொள்கை பேதமற்ற ஆன்ம நிலையில் நாம் எல்லோருமே ஏகப் பரம்பொருளின் ரட்ஷகத்தன்மைக்கு ஓரணியாய் நின்று சாட்சி சொன்னவர்கள் தான். 

 வேதங்கள் அனைத்தின் கருவான எல்லையற்ற ஏகத்துவ இருப்பின் ஞானம் நம் பிறவிக்கு முன்பே நமக்கு வழங்கப்பட்டு விட்டது. இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் இரண்டு முதலாவது நம் பிறவி நிலையிலேயே அந்த மெய்பொருளை பற்றிய செய்தியை இதயத்தின் அடியில் தாங்கியவாறு தான் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. இரண்டாவது நம் புலனுணர்வுக்கும் முந்தியது உள்ளுணர்வு. புலனுணர்வின் மூலமாக பெறக் கூடிய அறிவிற்கும் கல்வி கேள்விகளின் மூலம் பெறக் கூடிய பகுத்தறிவுக்கு முன்பாகவே நமக்கு ஓர் அறிவு இருந்தது. அந்த துய அறிவு அந்த நம் இறைவன் நமக்கு வழங்கிய  உள்ளுணர்வுடன் தொடர்புடையது. 

தன் மனதை ஏகத்துவ ஒருமை ஞானத்தால் தூய்மை படுத்திய ஞானிகள் இந்த உள்ளுணர்வின் வெளிச்சத்தில் தங்கள் அகதரிசன அனுபவங்களை பதிவு செய்தார்கள். அவைகளை தங்கள் காலத்திய வேத வெளிச்சத்தில் தெளிவு படுத்தினார்கள். 
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விசயம் எந்த ஞானியாக இருந்தாலும் அவர்கள் என்ன உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் இறையியல் தத்துவம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஒரு உரைகல் உண்டு. அது இறைவன் வழங்கிய வேதமும். அந்த வேதவரிகளுக்கு விரிவுரையாய் அமைந்த இறைத்தூதர்களின் சொல், செயல், அங்கீகரமும் தான்   இதை தான் ஹதிஸ் - நபிமொழி என்கிறார்கள்.இறைத் தூதர்களின் வாழ்க்கை இறைவேதத்தின் விரிவுரையாகத் தான் இருந்தது என்பது இங்கே நினைவு கூற தக்கது.

ஞானிகளின் அகதரிசனத்தில், ஆத்மீக விளக்கத்தில் ஞானியின் அறிவின் பங்கும் இருக்கலாம். ஆனால் வேதங்கள் என்பவற்றில் தூதரின்  அறிவுக்கு வேலையே இல்லை. அவை முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள். இறைவனால் வழங்கப்பட்டவை. நம் சிற்றறிவைக்  கொண்டு மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடாதவை.
முழுவதும் இறைவனால் வழங்கப்பட்ட நிலையிலேயே 1400 வருடங்களுக்கு மேலாக எந்த மாற்றமும், மனித கருத்துகளின் பங்களிப்புமின்றி இன்று நம்மிடையே இருக்கும் குர் ஆன் என்னும் வேதம் முஸ்லிம்களின் குல சொத்தல்ல. மானிடர்கள் அனைவருக்கும் பொதுவானது. சத்தியத்தை தேடும் காதலர்கள் ஜெ. கிருஷ்ண மூர்த்தி சொல்வது போல நீங்கள் அறிந்தவற்றிலிருந்து உருவான முன் தீர்மானங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, காய்தல் உவத்தலின்றி, உங்கள் ஞான, தத்துவ மதிப்பீடுகளை குர் ஆனின் ஒளியில் மறுவாசிப்பு செய்து பாருங்கள். 

அதன் அழமான பொக்கிசங்களையும் அதன் முழுமையான பலனையும் பெற தகுந்த வழிக்காட்டியின் மூலம் விளக்கம் பெறுவது சிறந்தது.

4 comments:

Chitra said...

உண்மையில் ஞானம் உடையவர் ஒருவர் இன்னொருவரை இகழமாட்டார்.

.... சிந்திக்க - செயல் பட - வைக்கும் வார்த்தைகள்.

ஸாதிகா said...

அருமையான அலசல்.

புல்லாங்குழல் said...

சகோதரி சித்ரா & ஸாதிகா இருவருக்கும் நன்றி!

Anonymous said...

islathil sila poli(fraud) shaikh margal vandhu adhuvaidharthirkku padhilaga dhuvaidham puguthugirargalae adharkku nalla soodu kodukkavum adhuvum Abdul Qadir jeelani(rali), Khaja Muienuddheen(rali) avargal fathuvavai tharuvadhu megavum payan kodukkum