தோழமையுடன்

Wednesday, October 27, 2010

பார்வை கொண்ட நெஞ்சம்


‘ஹாபிள்’ என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று. அதற்கு பாதுகாப்பவன் என பொருள்.   நம் ஞாபகங்களை பாதுகாத்து அவ்வப்போது நமக்கு வழங்குபவன் நம் இறைவன்.
ஞாபகம் இல்லையேல் நமக்கு அறிவு என்பதே இல்லை .
ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் அதை செய்ய நாட்டம் வராது.
நாட்டம் இல்லாமல் செயல் இல்லை,
ஞாபகம்,அறிவு, நாட்டம், செயல் என்பது ஒரு sequence. ஒரு விதமான தொடரமைப்பு. இவற்றில் முந்தியதும் மூல ஊற்றும் ஞாபகம் தான். 

  உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பத்து நிமிடம் தற்காலிக மெமரி லாஸ் என்னும் ஞாபக இழப்பு நிலை ஏற்படுவதாக  கற்பனை செய்து பாருங்கள். அந்த பத்து நிமிடமும் உலகோர் இயக்கமெல்லாம் ஸ்தம்பித்து செயலற்ற குழப்பத்தில் மூழ்கிவிடும். 
ஞாபக சக்தி என்னும் நினைவாற்றல் இறைவன் மனிதனுக்கு வழங்கிய விலை மதிக்க முடியா அருட்கொடை. 

அல்வா என்றதும் நாக்கில் எச்சில் ஊறுவதும்;
நேசத்துக்குரியவர்களை நினைத்தால் நெஞ்சில் ஆயிரம் பூக்கள் பூப்பதும்;
என்றோ நடந்த துக்கத்தின் காயம் இன்றும் வலிப்பதும்;
நாவினால் சுட்ட வடு உள்ளாறாமல் தவிப்பதும்;
எல்லாம் ஞாபகத்தின் வெளிபாட்டினால் தான்.

கடந்த காலத்தில் நாம் பார்த்த, பழகிய, ரசித்த, ருசித்த, சிரித்த, அழுத பல்வேறு உணர்வுகளில் நாம் பொறுக்கி எடுத்து புதைத்து வைத்திருக்கும் நம் அந்தரங்க பொக்கிசம் நம் ஞாபக சக்தி.
வெறும் உணர்வுகளின் சேகரம் மட்டுமல்ல. சின்ன வயதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட சின்ன சின்ன விசயங்கள் முதல் பொறி இயல், மருத்துவ கல்லூரிகளில் படித்த பாடங்கள் வரை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கற்றுக் கொண்ட அறிவின் பிரமாண்டமான சேமிப்பு கிடங்கது.

காலை எழுந்தவுடன் கழிப்பறைக்கு சென்று மல, ஜலம் கழிப்பதும்
ஆடையணிவதும், அழகுபடுத்திக் கொள்வதும்
சாம்பாரும், ரசமும் போட்டு சாதத்தை குழைத்து அள்ளி உண்பதும்.
கார் ஓட்டுவதும், கணக்கு போடுவதும், கவிதை எழுதுவதும்,
அலுவலகத்தில் உழைப்பதும், அரசியல் பேசுவதும்,
மருத்துவம் பார்ப்பதும், வணக்க வழிபாடு என  நம் வாழ்வின் அனைத்து வகை இயங்களின் மையமும் ஞாபக சக்தி தான்.

மீண்டும் நினைவூட்டுகின்றேன் ஒரு கற்பனைக்காக உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் ஒரு பத்து நிமிடம் தற்காலிக மெமரி லாஸ் என்னும் ஞாபகம் இழப்பு நிலை ஏற்பட்டால். அந்த பத்து நிமிடமும் உலகோர் இயக்கமெல்லாம் ஸ்தம்பித்து செயலற்ற குழப்பத்தில் உறைந்துவிடும்.

இவ்வளவு இன்றியமையாத ஞாபக சக்தி என்பது ஜப்பானிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ நாம் வாங்கி வந்த ஒன்றல்ல. இறைவனின் மகத்தான அருட்கொடை.
நமக்கும் நம் உள்ளத்திற்கும் நடுவே இருக்கும் ஹாபிளான இறைவன் நம் ஞாபகங்களை, அறிவின் சேகரங்களை அவ்வப்போது நமக்கு வழங்கி கண்ணியமாக வாழ வைக்கின்றான்.
ஞாபகத்தை தந்த இறைவன் தன்னை அடிக்கடி ஞாபகம் செய்ய சொல்கின்றான். அந்த ஞாபகத்தில் உள்ளங்களுக்கு அமைதி இருப்பதாக சொல்கின்றான்.”மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசிசயம் உள்ளத்திற்கு இறைவனின் ஞாபகம்” என பெரியோர்களும் கூறியிருக்கின்றார்கள்.

எல்லா நிலையிலும் இறைவனை ஞாபகம் செய்ய வேண்டும் என்பதை வலியுத்தும் போது என் ஞானகுரு (ஷெய்கு)  அவர்கள் கூறுவார்கள் “ விமானத்தில் பறக்க வேண்டாம் என இறைவன் கூறவில்லை. பறக்கும் போதும் தன்னை மறக்க வேண்டாம் என தான் கூறுகின்றான்”என்பார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் யாரை ஞாபகம் செய்ய சொல்கிறானோ அவனுக்கு உருவம் கிடையாது. வடிவம் கிடையாது. நிறம், எல்லை, திசை, காலம் இவை எதுவும் கிடையாது. அவன் மனிதனோ, வானவரோ, ஜின்னோ(பூதமோ) இன்னும் நாம் அறிந்த எந்த உயிரினத்தையும் போன்ற தோற்றத்தைக் கொண்டவனும் அல்ல. பின் அவனை எப்படி ஞாபகம் செய்வது? அதுவும் எல்லா நிலையிலும் ஞாபகம் செய்வது என்றால் எப்படி சாத்தியம் என்றால்…

‘எங்கு திரும்பினாலும் தன் திருமுகம்(இருப்பு-being)இருப்பதாக’ சொல்கின்றான். ‘நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருப்பதாக’ சொல்கின்றான். இத்தனை அருகில் (அக்ரபாக) இருந்தாலும் நம் ‘பார்வைகள் அவனை எத்திக் கொள்ளாது’ என சொல்கின்றான். புறக்கண்களால் என்னை பார்க்க முடியாவிட்டாலும் அகக்கண் என்னும் அறிவுக் கண் கோண்டு ‘தன்னை பார்ப்பதை போல  இருப்பது வணக்கம்’ என்கின்றான். ‘ரஹ்மானுடைய திக்ரை புறக்கணித்து கண்களை மூடி கொள்கின்றானே ….’என்பது போன்ற வாசகங்கள்  கண்வழி காட்சியை மனக்கண்ணால் எண்ணி பார்க்கும் ஷுஹுது என்னும் ஞாபகத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நம்மை அழைக்கிறது.

ஷுஹுது என்னும் இறைஞாபகத்தின் ஆழமான பகுதிகள் இந்த கட்டுரையின் விவரிப்புக்கு அப்பாற்ப்பட்டது. ஆயினும் அதன் அடிப்படையில் பிரதானமான சாட்யளித்தல் (witnessing) என்பது பற்றி மட்டும் சிறிது பார்ப்போம்.

வானம் பூமியெங்கும் அவனது பண்புகள், செயல்கள் வெளிப்பட்டுள்ளது. இந்த அவனது இறைத்தன்மை (உலூஹிய்யத்)க்கு இறைவன் தானே சாட்சியாக இருப்பதாகவும், வானவர்களும், அவனை அறிந்தவர்களும் சாட்சியாக இருப்பதாக கூறுகின்றான் (3:18)
 இந்த வகையில் இறைவனது அத்தாட்சிகள் மூலம் அவன் மகத்தான இருப்பை நெருக்கமாக நாம் ஞாபகம் செய்ய முடியும். அதன் மூலம் அவனை முன்னோக்க முடியும்.
யாராவது எது இறைவனின் அத்தாட்சி என்றால், எது இறைவனின் அத்தாட்சியில்லை என்பது தான் அதன் பதில்.

நீங்களும், நானும் இன்னும் ஒவ்வொரு சிருஷ்டியும் இறைவனின் அத்தாட்சிகள் தான்.
உங்களிலும்  (பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? (51:21) என கேட்கின்றான்.

“வானங்களிலும், பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக, எனினும் நம்பிக்கைக் (ஈமான்) கொள்ளாத கூட்டத்திற்கு நம்முடைய அத்தாட்சிகளும் எச்சரிக்கையும் யாதொரு பலனையும் அளிக்காது.(10:101) என அறிவுறுத்துகின்றான்.
வானம், பூமியை தனியாக மேலோட்டமாக பார்த்து ரசிக்கச் சொல்லவில்லை இறைவன். அவற்றை உற்று நோக்கி அவற்றில் உள்ள இறை அத்தாட்சிகளை சிந்திக்கச் சொல்கின்றான்.
மேகம் அசைவதும், மழையை பொழிவதும், நதிகள் ஓடுவதும். கோள்களின் இயக்கமும் ஏன் நம் இதயம் இயங்குவதும், கண்கள் இமைப்பதும் ‘இறைவனைக் கொண்டே தவிர சக்தி என்பதே இல்லை’ என்பதன் சாட்சிகள் தான்.

உருவங்கள் அற்றவன் அவன். வடிவங்களில் அடங்கா மகத்துவம் அவன்.
அத்தனை உருவங்களும்,வடிவங்களும் அவன் இருப்பின் அத்தாட்சிகளே!
நிறங்கள் அற்றவன் அவன்.அத்தனை நிறங்களும் அவன் வெளிப்பாட்டின் வர்ணஜாலங்களே!
அனைத்தும் அவன் தன் அழகை வெளிப்படுத்திக் கொண்ட வெளிகளே!
நீங்களும், நானும் இயற்கையும், செயற்கையும் அவன் திறமையை பிரதிபலித்த கண்ணாடிகளே!
ஒவ்வொரு வினாடியும் மாறும் தன்னையும்,அனைத்தையும் கண்ணடியாக்கி மாறா அவன் மதிமுகத்தை காணும் காதலன் யார்?
குருடர்கள் கண்ட யானையல்ல அவன்.
யானையை கண்ட குருடர்கள் நாம்.
மனிதனை குறிக்கும் 'இன்ஸான்' என்ற வார்த்தைக்கு கண்மனி என்று ஒருபொருள்.
நம் சுயம்/அகம் என்பதே அவன் காட்சிக்கு சாட்சியான – கண்மனியான இருப்புத் தான்.
அவன் தூரமற்ற நெருக்கத்தை உணரும் நம் பிறவிப்பார்வையை….அகப்பார்வையை வழங்க வந்தவர்களே நபிமார்கள்.
கண்களின் வெளிச்சத்துக்கு ஒரு சூரியன் போல் அகப்பார்வையின் வெளிச்சத்துக்கு வந்ததே வேதம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அரபகத்தில் வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்களைப்  பற்றி சொல்லும் போது, “வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் உள்ளன.(எனினும்) அவர்கள் அதை புறக்கணித்தவர்களாகவே, அவற்றின் அருகே நடந்து செல்கின்றனர்”.(12:105)

“மேலும், அவர்கள் இணை வைக்கின்றவர்களாக இருக்கும் நிலையிலேயே அன்றி அவர்களில் பெரும்பாலோர் இறைவனின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதில்லை”(12:106) என்று கூறிவிட்டு, நபியைப் பற்றி இப்படி கூறுகின்றான். 

(நபியே!) நீர் கூறும்: இதுவே எனது (நேரான வழியாகும்)நான் உங்களை இறைவனின் பக்கம் அழைக்கின்றேன். அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும். இறைவன் மிகத் தூயவன். மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல. (12:108) 

மேற்கண்ட இறைவசனத்திலிருந்து இணை வைப்பதை விட்டு தப்புவதில் ‘அகப்பார்வை’ என்ற அறிவுப் பார்வையின் அவசியம் தெளிவாகின்றது.

அத்தகைய பார்வை கொண்ட நெஞ்சங்களை உடைய நல்லோர் கூட்டத்தில் இறைவன் நம்மையும் சேர்ப்பானாக! ஆமீன்!.


4 comments:

thameem ansari bilali said...

ungal idukan.....oru suvayaana paanam......aruntha aruntha thegitta inbam.....innum paruga aasayai ullathu...........

அஹ‌ம‌து இர்ஷாத் said...

சிற‌ப்பான‌ பார்வை நூரூல் அமீன் சார்..

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.

புல்லாங்குழல் said...

தமீம்,அஹமது இர்ஷாத், சகோதரி சித்ரா உங்கள் அனைவருக்கும் நன்றி!