தோழமையுடன்

Tuesday, October 5, 2010

பாங்கர் நிமித்தம்

ரமீஸ் பிலாலி எனும் அற்புத எழுத்தாளரின் கட்டுரை. அவரது பிரபஞ்சக் குடில் என்ற வலைப்பக்கத்திலிருந்து நன்றியுடன் சுடப்பட்டுள்ளது.




வீட்டில் அமர்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து மாலைத் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. புத்தகத்தை மூடாமல் அப்படியே கவிழ்த்துத் தொடை மீது வைத்தேன். பாங்கிற்குப் பதில் சொல்லவேண்டும். என் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். புத்தகத்தில் வாசித்துக்கொண்டிருந்த செய்திக்கும் பாங்கின் பதிலுக்குமாக மனம் பிளவுபட்டுக் கிடந்தது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எந்த லயிப்பும் இல்லாமல் என் மனம் ஒரு சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. 
பாங்கு சொல்லப்படும்போது பதில் கூற வேண்டும்.பேசக்கூடாது. அப்படிப் பேசினால், பாங்கை அவமதித்தால், அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் வீசித் தண்டிப்பான் என்று ஒரு அருள்வாக்கு கூறுகிறது. கேள்விப்பட்ட விஷயம்.

எனவே, பாங்கு ஒலிக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள் பேசவே மாட்டார்கள். பவ்யமாகத் தலையில் முக்காடிட்டு மறைத்துக்கொள்வார்கள். பாங்கிற்கு பதில் கூறுவார்களா என்று தெரியாது. கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது என்றில்லையே? எப்படியோ, பேசாமல் ஓர்மையுடன் மெகாசீரியல் பார்க்கும் உத்தியை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இறைவன் அவர்களுக்குச் சொர்கத்தை வழங்குவானாக!


ஆக, பாங்கிற்குப் பதில் கூறுவது என் மனதில் உப்பு சப்பில்லாத ஒரு சடங்காக நடந்துகொண்டிருந்தது. எத்தனை ஆழமான வரிகள்! அதற்கு எத்தனை நெகிழ்வான பதில்கள்! 'தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்! வெற்றி பெற வாருங்கள்! வெற்றிபெற வாருங்கள்!' என்று மோதினார் - பாங்கர் - அழைத்துக்கொண்டிருந்தார். சலாத், பலாஹ் ஆகிய சொற்களின் அர்த்த ஆழங்களில் சற்றே மூழ்கிப்போனேன். 'அல்லாஹ்வினது அன்றி எனக்குச் சுயமாக ஆற்றலோ சக்தியோ இல்லை' என்று பதில் கூறுகிறேன். அவன் அசைத்தால்தான் அசைவேன். இது எவ்வளவு உன்னதமான மனநிலை. ஆனால் அப்படிப்பட்ட மனநிலையில் இருந்துகொண்டுதான் நான் பாங்கிற்குப் பதில் கூறுகிறேனா? பாங்கிற்கு அழைப்பவரும் இதையெல்லாம் விளங்கி அப்படியொரு மனநிலையில் இருந்துதான் அழைக்கிறாரா? 


இதை எண்ணிப்பார்க்கும்போதுதான் பங்கிற்குப் பதில் கூறுவதன் பின்னணியில் உள்ள ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம் புரிகிறது. அதாவது, ஒரு நாளில் ஐந்து வேளைகள் பாங்கிற்குப் பதில் கூறவேண்டிய நிலை உள்ளது. அப்போது நீங்கள் சுயமுனைப்பு அற்ற நிலையில், அகங்காரம் அற்ற நிலையில் இருக்க வேண்டும், ஒரு வெற்றுக் கோப்பையைப் போல. ஆனால் இந்த நிலை பாங்கு சத்தம் கேட்டவுடன் சட்டென்று உண்டாகிவிட முடியாது. நீங்கள் ஏற்கனவே அந்த நிலையில் இருந்தாகவேண்டும்.ஐவேளை பாங்கு என்பது அந்த அர்ப்பணிப்பு நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்கின்ற ஒரு சோதனைக் கணம் மட்டுமே. பாங்கிற்கு முன் நீங்கள் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அது இந்த அகநிலையைப் பாதிக்கக்கூடாது. அப்படியொரு நிலையில் உங்கள் வாழ்க்கை செல்லவேண்டும். 


ஆனால், அல்லாமா இக்பால் கூறுவதுபோல் 'பாங்கில் பிலாலின் உயிர் இல்லை.' அதேபோல்  பாங்கிற்கான பதிலில் அகநிலை இல்லை. காதலன் - காதலி உரையாடல்போல் இருக்கவேண்டிய பாங்கும் பதிலும் நம்மிடம் எப்படி இருக்கிறது? காதலன் - காதலி வேடமிட்ட இருவர் நாடக ஒத்திகையில் பேசுவதுபோல் உள்ளது. இல்லை அதைவிட மோசமாக, காதலனும் காதலியுமாக வேடமிட்ட இரண்டு அரவாணிகள் பேசிக்கொள்வதுபோல் இருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பானாக!
  

1 comments:

Nagore Rumi said...
அன்பு ரமீஸ், உங்கள் ப்ளாக்-கை இப்போதுதான் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பல காரணங்கள். 1. உங்களுக்கு எழுத்து கை கூடியிருக்கிறது. 2. இசையில், அதுவும் சூஃபி இசையில், ஆர்வம் உள்ளது. 3. அங்கதம் கைகூடுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து எழுதுங்கள். என் வாழ்த்துக்கள். எனது ஃபேஸ் புக் சென்று பார்த்தால் என் சன் டிவி நேர்காணலும், ஜெயா டிவி நேர்காணலும் கிடைக்கும். எனது வலைத்தளமும் தெரியும்தானே? www.nagorerumi.com வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று பாருங்கள். அன்புடன் ரூமி

1 comment:

ஸாதிகா said...

சகோதரர்.அருமையான கருத்துக்களைக்கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//எனவே, பாங்கு ஒலிக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள் பேசவே மாட்டார்கள். பவ்யமாகத் தலையில் முக்காடிட்டு மறைத்துக்கொள்வார்கள். பாங்கிற்கு பதில் கூறுவார்களா என்று தெரியாது. கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது // இப்பொழுது எத்தனை பேர் இல்லங்களில் இது நடக்கின்றது?அல்லது தொலைக்காட்சியின் வால்யூமை சிறிது படுத்தி விட்டு அதிலேயே மூழ்கிப்போய் விடுகிறனர்