தோழமையுடன்

Saturday, June 26, 2010

மனமே நீ மயங்காதே!



وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

ஏன் தேவையில்லாமல் கவலைப்படுகின்றாய். மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட உனக்கில்லையே என பொட்டில் அறைகின்றது இந்த திருவசனம்.

ரிஜ்க் : ‘ரிஜ்க்’ என்ற வார்த்தை உணவை மட்டும் குறிக்கும் சொல்லல்ல. உணவு, உடை, இருப்பிடம் என அனைத்து வாழ்வாதாரங்களையும் உள்ளடக்கியது. 

இந்த உலகில் உயிர் வாழும் பிராணிகளில் மிகவும் பெரியது யானை. ஒரு யானையின் தேவை என்ன? ஒரு கட்டு கரும்பு, ஒரு சில குடம் தண்ணீர் கிடைத்தால் யனையின் தேவை முடிந்தது. 

மிகவும் சிறிய பிராணிகளில் ஒன்று எறும்பு. சிந்தி சிதறி கிடக்கும் சில நெல்மணிகள் சேகரித்தால் எறும்புக்கு ஒரு வருடத்திற்கு உணவு பிரச்சனையே இல்லை.
இப்படி மற்ற உயிரினங்களின் வாழ்வாதார தேவைகளை பட்டியலிட்டால் அரை பக்கத்தில் அடங்கி விடும். மனிதர்களாகிய நமது தேவையின் பட்டியல் எத்தனை பெரியது என பகுத்தறிவு? பல்லிளித்தது. மெல்ல பட்டியலுமிட்டது. 

உணவை மட்டும் எடுத்துக் கொண்டாலே, அந்த உணவை சமைக்க அரிசி தேவை, அடுப்பு தேவை, நெருப்பு தேவை, பருப்பு தேவை, பாத்திரம் தேவை, இஞ்சி தேவை, எண்ணெய் தேவை, மிளகாய் தேவை, மல்லி தேவை, கடுகு, கசகசா, ஜீரகம், வெந்தயம் எத்தனை எத்தனை பொருள்களின் தேவை. 


அடுத்து இவைகளை வகை வகையாய் சமைத்து கொடுக்க, சோற்றுடன் பாசமும் கலந்து பறிமாற அம்மா, அக்கா, மனைவி என உறவுகளின் தேவை. உறவுகள் குடும்பமாய் கூடி வாழ வீடு தேவை. உடுத்தி மகிழ உடைகள் தேவை.

இந்த உணவு, உடை, இருப்பிட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தின் தேவை. பணம் சம்பாதிக்க வேலைத் தேவை. வேலையை பெற படிப்பு தேவை. அப்பப்பா எத்தனை தேவைகள். 

எந்த யானை எல்கேஜியில் ஆரம்பித்து இருபது வருடங்கள் புத்தகங்களை தூக்கி சுமந்தது. எந்த எறும்பு எம்பிளய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் கால்கடுக்க நின்றது.

சம்பளம் வாங்கிய கையோடு இல்லை கார்டோடு குடுப்பதோடு சூப்பர் மார்க்கட். வாங்கும் சாமான்களின் பட்டியல் ஒண்ணரை மீட்டருக்கு பிரிண்டாகும் போது மூச்சே சில வினாடிகள் நின்று விடும். ‘கூறாமல் சன்யாசம் கொள்’ளலாமா? என்ற எண்ணம் எட்டி பார்க்கும். அடுத்த வினாடியே “இந்த மிட்டாய் சூப்பரா இருக்கு வாப்பா ” என ஒரு ரூபாய் குச்சி மிட்டாயில் உலக சந்தோசத்தையும் முகத்தில் காட்டும் பிள்ளையின் முகம் உலகையே வெல்லும் உத்வேகத்தை அளிக்கும். இப்படி ஒவ்வொரு வினாடியும் மாறும் மனதின் தட்ப வெப்ப நிலைகளின் அவஸ்த்தைகள் மனிதனைத் தவிர உலகில் எந்த பிராணிக்கு இருக்கிறது.

இன்பமும் அவஸ்தைகளும் தரும் எண்ணற்ற தேவைகளால், சூழலால் சூழப்பட்ட நம்மை குறைந்த தேவைகளே கொண்ட மற்ற உயிரினங்களோடு இறைவன் ஒப்பிடுவது ஏன்? எண்ணற்ற தேவைகள் கொண்டவர்களாக நம்மை படைத்ததன் ரகசியம் என்ன?.

தேவைகள் ஏராளமாய் இருப்பதை போலவே அதை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகளும் எண்ணற்றதாய் இருக்கிறது. வீடு, அலுவலகம், கடை, பள்ளிக்கூடம், மருத்துவமனை, இன்னும் அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு படைப்பினங்களின் மூலமாய் நம் தேவை நிறைவேறுகின்றது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளை, ஆசிரியர், மாணவர், அதிகாரி, மருத்துவர், வியாபாரி, வாடிக்கையாளர் என எண்ணற்ற மனிதர்களுடன் நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நகருகின்றது. அவர்களின் திருப்தியும், சந்தோசமும் நம் சூழலை அமைதியாக்குகிறது. அவர்களின் வெறுப்பும், அதிருப்தியும் நம்மை சுற்றி நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கி நம் அமைதியை குழைக்கின்றது. தவிர்க்க முடியாத நிலையில் நாம் யாருடன் கூடி வாழ்கின்றோமோ அந்த குடும்பம், உறவுகள் என்ற குறுகிய சமுக வட்டத்தின் திருப்தியே, நல்லுறவே நம் வாழ்வின் பிரதான நோக்கமாகின்றது. சரியோ, தவறோ, பாவமோ, புண்ணியமோ எதை வேண்டுமானாலும் செய்கின்றோம். பிறருக்கு தெரியாமல், தெரிந்தாலும் மாட்டிக் கொள்ளாத தந்திரங்களும், சாமர்த்தியங்களுமாய் எச்சரிக்கையுடன் வாழ்க்கை நகருகின்றது. 

‘நாலுபேருக்கு நல்லது என்றால் எதுவும் தவறு இல்லை’ போன்ற வசதியான வசனங்கள் நம் கேடு கெட்ட நிலையை நியாயப்படுத்தியதால் நமக்கு வேதவாக்காய் இனித்தன. நம் உறவுகள் நாலுபேர் வாழ நாலாயிரம் பேரின் வாழ்வை கெடுப்பதை பற்றிய எந்தவித சமூக அக்கறைகள் இல்லாமல் நாம் செய்த சின்ன சின்ன மோசடிகள் இன்று சிறு துளி பெருவெள்ளமாய் ‘பொருளாதார நெருக்கடி’ என்ற சுனாமியாய் சுழன்று வந்து நம் இல்லங்களின் உள்ளேயும் வெள்ளமாய் நுழைந்து விட்டது. 

"யாருமே எந்த சரியான தீர்வும் சொல்லத் தெரியாத திக்குத்தெரியாத மன நிலையில் இன்று_
(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்".(29:60) என்ற இறைவசனம் வசீகரமானதாய், மகத்தான ஆறுதலை வழங்குவதாய் இருக்கின்றது.
وَلاَ تَهِنُوا وَلاَ تَحْزَنُوا وَأَنتُمُ الأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக (முஃமின்களாக) இருந்தால் நீங்கள் தான் மேலானவர்கள்.(3:139) என்பது இறை வாக்கு.
So Lose not heart,
Not fall into depair:
For you must gain mastery
If you are true in Faith. (3:139)

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான வீடு, வியாபாரம், உறவு, நட்பு என எல்லாவற்றையும் மக்காவில் விட்டு விட்டு வெற்று கைகளுடனும் நெஞ்சம் நிறைந்த ஈமானுடனும் மதினாவிற்க்கு புலம்பெயர்ந்த நபித்தோழர்களின் ‘ஹிஜ்ரத்தின்’ காலம் நம் முன்னே பாடமாய் இருக்கின்றது.

எந்த நம்பிக்கை அவர்களுக்கு அந்த மனோபலத்தை தந்தது. இறைவன் எண்ணற்ற தேவைகள் கொண்டவர்களாக நம்மை படைத்ததன் ரகசியம் என்ன?. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ‘உலூஹிய்யத்’ என்ற ஒற்றைச் சொல்லின் விளக்கத்தில் இருக்கிறது.


உலூஹிய்யத்


உலூஹிய்யத் என்றால் இறைத்தன்மை, வணக்கத்திற்கு தகுதியான தன்மை என்று பொருள். அந்த தன்மையை உடையவனுக்கு பெயர் ‘இலாஹ்’. அல்லாஹ்வைத் தவிர யாருக்குமே உலூஹிய்யத் என்ற அந்த தெய்வத்தன்மை இல்லை என்பது தான் திருக்கலிமாவின் சாரம். நம் நம்பிக்கையின்(ஈமானின்) அடிப்படையும் அது தான். யாரிடமும் எதற்காகவும் தான் தேவையற்ற நிலையில் இருந்து, தன் சர்வ கோடி படைப்புகளின் அனைத்துத் தேவையையும் பிறர் தயவின்றி தானே நிறைவேற்றும் தன்மைக்குப் பெயர் “இறைத்தன்மை”.
ஆதம் நபி முதல் அனைத்து நபிமார்களின் வருகையும் உலூஹிய்யத் என்னும் அனைத்து சிருஷ்டிகளின் அனைத்து தேவையையும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கும் இறைத்தன்மையை (உலூஹிய்யதை) விளக்கி அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை ஆக்கிக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான். 

இந்த உண்மையை தங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையாக்கிக் கொண்ட சஹாபாக்கள் தங்களின் ஒவ்வொரு வினாடியையும் இறைவனிடம் ஒப்படைத்து, அவனை துணையாக்கி கொண்டு வாழ்ந்தார்கள். எந்த சோதனையும் அவர்களை அசைக்கவில்லை. கொதிக்கும் சுடுமணலில் பாலையின் வெப்பத்தில் எதிரிகள் சித்ரவதை செய்தபோதும் அஹத்... அஹத்... என்ற பிலால்(ரலி)வின் முழக்கம். இறைவனைத் தவிர யாரும் நமக்கு லாபமோ, நஷ்டமோ தரமுடியாது என எல்லா நிலையிலும், எல்லா தேவைகளுக்கும் இறைவனையே முன்னொக்கி வாழ்ந்த சஹாபாக்களின் வாழ்க்கைக்கு சாட்சியாய் இருக்கின்றது. 

அவர்கள் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான்” என திருமறையில் அந்த மகத்தான மனிதர்களில் வாழ்க்கைக்கு இறைவனும் சான்றிதழ் வழங்கியுள்ளான். 

இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற உலூஹிய்யத் பற்றிய அறிவும், நம்பிக்கையும் தேவை என்பதாலதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஏகத்துவம் பகுதியில் உள்ள இடுகைகளை பார்வையிட அன்புடன் வேண்டுகின்றேன்.



4 comments:

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையான இடுகை. அல்ஹம்துலில்லாஹ்.

Anonymous said...

தங்களின் இந்த சேவை இடை விடாது தொடர நம் துஆ எப்போதும் உண்டு.

புல்லாங்குழல் said...

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி! முடிந்தால் மற்ற இடுகைகளயும் பார்வையிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

புல்லாங்குழல் said...

Anonymous said...

தங்களின் இந்த சேவை இடை விடாது தொடர நம் துஆ எப்போதும் உண்டு.
June 27, 2010 11:55 PM

நன்றி தோழரே!