தோழமையுடன்

Monday, June 21, 2010

ஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம்

அல்லாஹ் ஆதம் நபி முதல் வந்த ஒவ்வொரு நபியின் மூலமும் ஒரு முக்கிய செய்தியை உலத்தினருக்கு அறிவித்து கொண்டே இருக்கின்றான். அந்த தகவலை நாம் அறிய முயற்சிக்காமல் இருக்கலாமா?

அதுவும் ஒரே ஒரு வரி செய்தி தான். ஆனால் கடலையே கூஜாவுக்குள் அடைத்தது போல முழு குர் ஆனின் அடிப்படையும் தன்னகத்தே கொண்டது அந்த ஒரு வரி. அனைத்து நபிமார்களும் வந்த தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் அந்த ஒரு வரி செய்தி தான்.மகத்தான அந்த செய்தி தான் என்ன? இறைவனே சொல்கின்றான் பாருங்கள்

(நபியே!) உமக்கு முன்னர் எந்த தூதரையும், நிச்சயமாக, என்னையன்றி வேறு இலாஹ் (இறைவன்) இல்லை. ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று வஹி அறிவித்தே தவிர, நாம் அனுப்பவில்லை. (21:25)

ஆமாம் “லா இலாஹா இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாதான் அந்த செய்தி.

பள்ளிப் பருவத்திலிருந்தே நாம் அறிந்த தகவல் தானே இது. இதற்கு ஏன் இத்தனை புதிர் என அவசரப்பட வேண்டாம். இன்றைய உலகத்திருக்கும் அனைவருக்கும் யாரின் மூலமாக இந்த கலிமா கிடைத்த்தோ அந்த நபியைப் பார்த்து இறைவன் கூருகின்றான்.

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எந்த இலாஹ்வும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள் .(47:19)

அன்பர்களே! இது நபிக்கான உத்தரவு இல்லை. நபியை முன்னோக்கி நமக்காக இட்ட உத்தரவு. இன்னும் பாருங்கள் தன் பாச நபியின் உம்மத்தினர் இந்த விளக்கத்தை லேசாக விளங்கி அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக கலிமா தய்யிபா என்னும் இந்த பரிசுத்த ஏகத்துவ வாசகத்தின் பிரமாண்டமான பரிமாணத்தை விளக்க “வானளாவிய கிளைகளயும், ஆழப்பாய்ந்த வேர்களையும் உடைய நல்ல மரத்தினை” (14:24) உதாரணமாக எடுத்துகாட்டுகின்றான். உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மையே இங்கே மரமாக உருவகபடுத்தகப்பட்டுள்ளது. ரப்பின் உத்தரவைக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம் என அதன் தன்மையைக் கூறி அதன் அருஞ்சுவைக் கனியுண்ண நம்மை அழைக்கின்றான் நம் இறைவன்.

வானளாவிய கிளைகளக் கொண்டு உவமை சொல்லப்படுவதன் நோக்கம் அனைத்து சிருஷ்டிகளுமே இறைத்தன்மையின் அத்தாட்சிகளாக இருப்பதை குறிக்கிறது. அறிவுக் கண் கொண்டு ஒவ்வொரு சிருஷ்டியிலும் கிளைபரப்பி இருக்கும் என் இறைதன்மைகளின் அழகைப் பார் என இறைவன் தன் உலூஹிய்யத்தை முன்னோக்க நம்மை அழைக்கின்றான்.

வானம், பூமியை வளைத்து கிளைகள் பரப்பிய ஏகத்துவ கலிமா மரத்தின் வேர்கள் ஆழப்பாய்ந்த நிலம் எது தெரியுமா? நம்பிக்கையாளர்களின் இதயம் தான் அந்த பூமி. அந்த வேர்கள் எவ்வளவு ஆழமாக நம் இதயத்தில் பாய்ந்திருக்கிறதோ அவ்வளவு அதிகமாக உலகளவிய தன் கிளைகளிலிருந்து ஒவ்வொரு வினாடியும் கனிகொடுத்துக் கொண்டிருக்கும்.

قُلِ انظُرُواْ مَاذَا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا تُغْنِي الآيَاتُ وَالنُّذُرُ عَن قَوْمٍ لاَّ يُؤْمِنُونَ

“வானங்களிலும், பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக, எனினும் நம்பிக்கைக்(ஈமான்) கொள்ளாத கூட்டத்திற்கு நம்முடைய அத்தாட்சிகளும் எச்சரிக்கையும் யாதொரு பலனையும் அளிக்காது.(10:101)

வானம், பூமியை தனியாக மேலோட்டமாக பார்த்து ரசிக்கச் சொல்லவில்லை இறைவன். அவற்றை உற்று நோக்கி அவற்றில் உள்ள இறை அத்தாட்சிகளை, இறைத்தன்மையின் வெளிப்பாட்டை சிந்திக்கச் சொல்கின்றான்.

شَهِدَ اللّهُ أَنَّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ وَالْمَلاَئِكَةُ وَأُوْلُواْ الْعِلْمِ

தன்னைத் தவிர இலாஹ் யாருமில்லை என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.அவ்வாறே வானவர்களும், இல்மை உடையவர்களும் சாட்சி சொல்கின்றனர்.(3:18)

எத்தனை ஆயிரம் நபிமார்கள் மூலம் சொல்லித் தந்த பாடம் நாமும் கொஞ்சம் கவனம் செலுத்தி அதை அறிய முயல்வோமா?

திருக்கலிமாவின் விளக்கம்

திருக்கலிமாவில் அல்லாஹ்வின் இரண்டு பெயர்கள் இருக்கின்றன. ஒன்று அவனை குறிக்கும் ‘அல்லாஹ்’ என்றப் பெயர். இன்னொன்று அவனிடம் உள்ள வணக்கத்திற்குரிய தன்மையை குறிக்கும் இலாஹ் என்னும் குணப்பெயர்.

உலூஹிய்யத் என்பது இலாஹ் என்பதன் வேர்ச்சொல். இதன் பொருள் சிருஷ்டிகளின் அனைத்து தேவையையும் நிறைவேற்றி தரும் தன்மை. அந்த தன்மையை உடையவனுக்குப் பெயர்தான் இலாஹ். (“இலாஹ்” என்ற வார்த்தைக்கு தேவைகளை நிறைவேற்றக் கூடியவன் என்ற பொருளில் அல்லாஹு தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கையாண்டுள்ளான். உதாரணத்திற்கு பார்க்க 6:46, 27:60-64, 28:71,72).

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் லாபமும் நஷ்டமும் தரக்கூடியத் தன்மைக்கு பெயர் தெய்வத்தன்மை. எந்த வித லாபமும் நஷ்டமும் தராதவைகளையா வணங்குகின்றீர்கள் என்று இறைவன் எழுப்பும் கேள்வி இதைத் தெளிவு படுத்துகிறது. மனிதர்களின் கோடான கோடித் தேவைகளையும் இந்த இரண்டு பிரிவில் அடக்கிவிடலாம். ஒன்று லாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.அடுத்தது நஷ்டத்திலிருந்து காக்கப்பட வேண்டும். இந்த இரண்டு வகைத் தேவைகளை நிறைவேற்றுபவன் தான் இலாஹ்-தெய்வம். அப்படிப் பட்ட இலாஹ் – தெய்வம் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்றதும் தான் முஹம்மது ரசூலுலால்லாவிற்கு எதிராக சொந்த கோத்திரமே வாளை உறுவியது.

“லா இலாஹா இல்லல்லாஹ்” என்னும் கலிமாவில் வரும் லா என்னும் வார்த்தை நஃபி செய்யும் வார்த்தை அதாவது இல்லை என மறுக்கும் வார்த்தையாகும். லா இல்லை என எதை நஃபி செய்கிறது? உலூஹிய்யத் என்னும் லாபம் நஷ்டம் கொடுக்கக் கூடிய தன்மை சிருஷ்டிகளிலே இருப்பதை பார்க்கின்றோம் அல்லவா? அந்த தன்மைகள் சிருஷ்டிகளில் காணப்படவில்லை என லா மறுக்கவில்லை. சிருஷ்டிகளில் காணப்படும் அந்த தன்மைகள் அந்த சிருஷ்டிக்கு சொந்தமானது இல்லை. சிருஷ்டிகளில் யாரும், எதுவும் இலாஹ்வாக இல்லை என மறுக்கின்றது. சுயமாக யாரும் தேவையை பூர்த்தி செய்பவர்களாக இல்லை. லாப, நஷ்டம் கொடுப்பவர்களாக இல்லை என லா மறுக்கிறது

லா எங்கெல்லாம் மறுக்கிறது.? அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்திலும் அதாவது வானம், பூமி, மலை, கடல், மனிதர்கள், ஜின்கள், மலக்குகள், வலிமார்கள், நபிமார்கள், உச்சகட்டமாக நம் பெருமானார் சல்லல்லாஹ் அலைஹிவசல்லம் வரை யாரும் இலாஹ் இல்லை என மறுக்கின்றது.

சிருஷ்டிகளில் காணப்படும் லாப நஷ்டம் தரக் கூடிய தன்மை அந்த சிருஷ்டிகளுக்கு சொந்தமானது இல்லை என மறுப்பதுடன் அந்த இறைத் தன்மையை அனைத்து சிருஷ்டிகளையும் சூழ்ந்தவனாக ( குல்லு ஷையின் முஹீத்தாக) இருந்து அந்த சிருஷ்டிகளின் சிண்டை - இயக்கத்தை தன் வசம் வைத்துள்ள அல்லாஹ்விற்க்கே சொந்தம் என இஸ்பாத் செய்கின்றது – தரிப்படுத்துகிறது. ( சிருஷ்டிகளுடன் இறைவனா? என சந்தேகம் வந்தால் இடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை, இன்னும் அகப்பார்வை என்ற கட்டுரைகளை வாசிக்கவும். )

வானம், பூமியிலெல்லாம் இலாஹ்வாக இருப்பது அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற கலிமா மரத்தின் ஆழப்பாய்ந்த நம்பிக்கை வேர்களை கொண்ட நெஞ்சங்களுக்கு வானங்களையும், பூமியையும் வசப்படுத்தி தந்திருக்கின்றான் நம் இறைவன். எந்தெந்த பொருள்களிலிருந்து நம்பிக்கையாளன் இறைத்தன்மையை அல்லது வணக்கத்திற்குரிய தன்மையை (உலூஹிய்யத்தை ) அந்த சிருஷ்டிக்கு சொந்தமானது இல்லை என மறுக்கின்றானோ அந்த பொருள்களின் மூலம் அவனுக்கு நன்மையருளப்படுகின்றது.

நிராகரிப்பாளர்கள் சிருஷ்டிகளுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற ஞானம் இல்லாததால் சிருஷ்டிகளில் காணப்படும் லாப நஷ்டம் தரக் கூடிய தன்மையை சிருஷ்டிகளுக்கே சொந்தம் என்று விளங்கி இருந்தார்கள். அதனால் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (வானம் பூமியில்) இலாஹ்வாக இருப்பது (அல்லாஹ்வான ) ஒரே இலாஹ் தான் 16:22 (إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ ) என்ற இறைச் செய்தியைக் கூறினார்கள், உருவங்களின் பன்மையில் அவன் உருவமற்ற உள்ளமையின் ஒருமையை கட்டினார்கள். எத்தனை அற்புதமான விளக்கமது விளங்காத உள்ளங்களுக்கு விந்தையானது தானே?

أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ

(என்ன இந்த முஹம்மது (ஸல்லலலாஹு அலைஹிவஸல்லம்)) எல்லா இலாஹ்வையும் ஒரு இலாஹ் என்றா ஆக்கி விட்டார். விந்தையாக இருக்கிறதே? 38:5 என்ற நிரகரிப்பாளர்களின் வியப்பு குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரபியர்கள் உலக அறிவில் சிறந்தவர்களாகத்தான் இருந்தார்கள். அபுல் ஹிகம் - அறிவின் தந்தை என தன் கோத்திரத்தால் புகழப் பெற்ற அந்த அறிவுலக மேதை(intellectual) அபூஜஹ்ல் மடமையின் தந்தையானது எதனால்? வஹியாக அல்லாஹ் வழங்கிய இறைஞானம் என்னும் நூரைக் கொண்டு பார்க்காததால். தன் அறிவை மட்டுமே நம்பியதால் அல்லாஹ்வை எல்லாவற்றிலும் அறிந்துணரும் விசயத்தில் அவர்கள் ஒளியை விட்டு இருளை கொள்முதல் செய்து கொண்டார்கள் என்பது தான் குர் ஆன் கூறும் சரித்திரம்.

1 comment:

Nachiya said...

கனி தரும் மரம். விளக்கமும், கலிமாவை பற்றிய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி .நாச்சியா ரபி .சிங்கப்பூர்