தோழமையுடன்

Thursday, June 17, 2010

அகப்பார்வை. அத்தியாயம் 2.

படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன 
மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும் போதே மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோக சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல அரும் சக்திகளால் பதிக்கப் பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில் இப்படி ஏற்கனவே நம்மில் மறைந்து கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். “கல்விஎன்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்

(அர் ரிஸாலத்துல் லதுனிய்யா - இறையருள் ஞானம் என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்))


நிம்மதி, சந்தோஷம் என்பதைத் தேடாத இதயமே இல்லை. அதை விட்டுத் தேவையற்ற மனிதர் எவரும் இல்லை. இறைவன் நம்மை எதற்காகப் படைத்தானோ அந்த நோக்கத்தை அறிந்து, அதை நிறைவேற்ற முயலுவதில் தான், நம் வாழ்வின் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் அடங்கி இருக்கின்றது.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
மனிதர்களையும், ஜின்னையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை. (அல்குர்ஆன்.(51:56)) என்பது படைப்பின் நோக்கத்தை விளக்கும் இறைவசனம்.
திருமறை விரிவுரையாளர்களின் அரசர் (சுல்தாÛø முஃபஸ்ஸிரீன்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த இறை வசனத்தில் வரும்வணங்குவதற்காகவேயன்றிஎன்பதற்கு அறிவதற்காகவேயன்றி படைக்கவில்லை எனப் பொருள் கொண்டு விளக்கியுள்ளார்கள்.
நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். நான் அறியப் பட ஆசைக் கொண்டேன். எனவே படைப்பினங்களைப் படைத்தேன் என்று பல்லாண்டுகளாகப் பல நூறு ஆன்மீகச் செல்வர்களால் மேற்கோளாகக் காண்பிக்கப்படும் நபிமொழியும் (ஹதீஸே குத்ஸிய்யும்) இதனையே குறிக்கின்றது. மார்க்கத்தின் முந்திய பகுதி இறைவனைப் பற்றிய அறிவு. (அவ்வலு தீனி மஃரிஃபத்துல்லாஹ்) ஒரு இறைநம்பிக்கையாளனின் முதன்மையான தன்மை இறைவனின் மீதான நம்பிக்கை (ஆமன்துபில்லாஹ்) என்பதும் கூட இதையே வலியுறுத்துகிறது. சுருக்கமாகச் சொன்னால் அல்லாஹ்வை அறிந்து வணங்குவதற்காகவேயன்றி நம்மை படைக்கவில்லையென்பது தான் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த விளக்கம். நம் வாழ்வின் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் இதில் தான் அடங்கி இருக்கின்றது.
அல்லாஹ்வைப் பற்றி அறிவது என்றால் என்ன?
அப்துல் காதர், வெள்ளை நிறம், ஆறடி உயரம், அறுபது கிலோ எடை என்பதைப் போல அல்லாஹுடைய தாத் (பெயரும், வர்ணனைகளும் எதைச் சென்றடையுமோ அதைத் தான் தாத் என்பார்கள்) எப்படி உள்ளது என்பதைப் பற்றி வேதம் பெற்ற நபிமார்களும் அறிய முடியாது. அது நம் மீது கடமையுமல்ல, அந்த வகையில் தன் மயமான தனித்த இறைவனை நாம் அறிய முடியாது, அறிய முயல்வதும் கூடாது என்பதை அறிவதே தாத்தைபற்றிய அறிதலின் உச்சம்.
நாம் அறிய வேண்டியதும், நம்பிக்கைக் கொள்ள வேண்டியதும் எந்தத் தன்மையின் மூலம் சிருஷ்டிகளுடன் இறைவன் தொடர்பு கொண்டானோ, இன்னும் எந்த வணக்கத்துக்குரிய தன்மைதனக்கு மட்டுமே இருக்கின்றது என சொல்லுகின்றானோ, அந்த இறைத்தன்மை (உலூஹிய்யத்), இன்னும் படைத்தல், வளர்த்தல், போஷித்தல் என்னும் ரட்ஷகத் தன்மையின் (ருபூபிய்யத்தின்) சொந்தக்காரனாக இருப்பவன் ஏக இறைவனைத் தவிர யாருமில்லை என்ற ஏகத்துவம் பற்றிய ஞான அறிவும், அதனால் அடையும் இறைநம்பிக்கையும், அதன் வெளிப்பாடாக வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும், அவனையே முன்னோக்கும் அகப்பார்வையும் தான்.
ஏகத்துவம் மட்டுமல்ல எந்த ஒன்றையும் நாம் அறிந்த விதத்தில் தான் நம்புகின்றோம். நமது நம்பிக்கையின்படி தான் பார்க்கின்றோம். பார்ப்பது என்றால் நம்புவது (Seeing is beliving) என்பார்கள். ஆடு என்பதை மாடு என்று விளங்கி இருக்கும் சிறுவன், ஆடு வந்தால்அப்பா! மாடு வருது!” என்பான். புதிதாக தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்ளும் சிறுவன் ஈனாவை” “ஊனாஎன்பான், “சானாவை” “மானாஎன்பான். இத்தகைய அவனின் அறியாமையும், மறதியும் மாறி அவன் தெளிவு பெறும் போது அது நம்பிக்கையாக உருவெடுக்கும். அதற்குப் பின்னால் ஒருகால் சொல்லிக் கொடுத்த ஆசிரியரே தவறாகச் சொன்னாலும், “இல்லை நீங்கள் சொல்வது தவறுஎன மறுத்து விடுவான்.
எதுவரை அவனுக்குச் சரியான அறிவும், தெளிவும் இன்னும் அதை மனதில் நிறுத்தும் ஞாபகமும் இல்லையோ அது வரை அவன் குழப்பத்தில் தான் இருப்பான். “சானாவைஅவன் சானாஎன்று சரியாகச் சொன்னாலும் சோதிப்பதற்காக டேய்! சரியா சொல்லு இது சானாவா! இல்லை மானாவா!” என்று மிரட்டினால் அடி விழுமோ என பயந்து மானா!” என்று மாற்றிச் சொல்வான். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவனையொத்த அறியாச் சிறுவன் இல்லைடா இது டானாடா!” என தவறாக எடுத்துக் கொடுத்தால் டக்கென்று உடனே அவனும் டானா!” என உரத்த குரலில் தன் கருத்தை மாற்றிக் கொள்வான். எந்தக் கலையாக இருந்தாலும் அதைத் தெளிவாக அறியாதவரை, அந்த அறிவு நம்பிக்கையாகாதவரை, அந்த நம்பிக்கை மனதில் ஞாபகமாக நிலைபெற்றுத் தொடராத வரை அந்த கலையைப் பொருத்த வரை இத்தகைய குழப்பம் நம்மை விட்டு அகலாது.
மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்தான கலை ஏகத்துவ இறைஞானம். இந்த இறைஞானக் கல்வி தான் மனித ஆத்மாவை சரியான அதன் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும். ஒளியற்ற கண்களைப் போல இறைஞானமற்ற இதயமும் பார்வையற்ற, பயனற்ற புலனாகவே கருதப்படும். இறைத்தூதர்களின் சேவையின் அடித்தளமே இந்த அகப்பார்வையை உலகத்தோர்க்கு வழங்குவது தான் என்பதை கீழ் வரும் இறைவசனம் குறிப்பிடுவதை காணலாம்:
قُل لاَّ أَقُولُ لَكُمْ عِندِي خَزَآئِنُ اللّهِ وَلا أَعْلَمُ الْغَيْبَ وَلا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الأَعْمَى وَالْبَصِيرُ أَفَلاَ تَتَفَكَّرُونَ
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளது என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும் மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹியின் மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி (வேறு) எதையும் நான் பின்பற்றுவதில்லை. குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? என (நபியே) நீர் கேட்பீராக! எனவே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 6:50)
பழிப்பது போல் புகழ்வது என்பார்களே அத்தகைய சிலேடை நடையில் அல்லாஹ்வின் பொக்கிஷம் என்னிடம் இல்லை. நான் வானவர் அல்ல என நபியின் அந்தஸ்த்தை குறைத்துக் காட்டுவது போல் ஆரம்பிக்கிறது இந்த இறைவசனம். முடிக்கும் போது வானவர்களை ஆதம் நபிக்கு மரியாதை (சஜ்தா) செய்ய வைப்பதற்குக் காரணமான மெய்யறிவு என்னும் அல்லாஹ்வின் மகத்தான, மறைவான, ஞான பொக்கிஷத்தை அதன் உரிமையாளனான இறைவன் தன் வேத வெளிப்பாட்டின் (வஹியின்) மூலம் வழங்கி நபியை அகப்பார்வையுடையவர்களாக ஆக்கியுள்ள உயர்ந்த அந்தஸ்த்தை சுட்டிக் காட்டுகிறது குருடனும், பார்வையுடையவர்களும் சமமாவார்களா? என்ற கேள்வி.
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் மெய்ஞான அகப்பார்வையை வழங்கும் ஒளி விளக்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். அல்லாஹ் கருணையாளன் (ரஹ்மான்). அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்கள் அந்தக் கருணையாளனிலிருந்து (ரஹ்மானிலிருந்து) வெளிப்பட்ட கருணை (ரஹ்மத்). நபி பெருமானாரை அகிலத்திற்கோர் ரஹ்மத்தாகவேயன்றி படைக்கவில்லை என இறைவன் கூறுகின்றான். இறைஞானம் என்னும் ரஹ்மத்தை வழங்கும் மூல ஊற்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். சரியாகச் சொன்னால் இறைவன் கொடுப்பவன். இறையடியாரான பெருமானார் (ஸல்) பங்கு வைப்பவர்கள்.
من يرد الله به خيرا يفقهه في الدين ، والله المعطي وأنا القاسم
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவருக்கு அல்லாஹ் நன்மையைப் புரிய நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகின்றான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான். நான் பங்கிடுபவன் ஆவேன்...”.
(அறிவிப்பாளர் : முஆவியா இப்னு அபீ ஸுஃப்யான் (ரழி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் : 3116)
மனிதன் உலக விஷயத்தில் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சரி இறைஞானம்என்னும் ஏகத்துவ (தவ்ஹீத்) மெய்ஞான அறிவும், அதன் அடிப்படையில் அமைந்த இறை நம்பிக்கையும்(ஈமானும்) பெறாவிட்டால் அகப்பார்வையற்ற பரிதாப நிலைக்கு ஆளாகி விடுகின்றான். அதனால் இறைவனது அந்தஸ்த்தைப் பிறருக்கு கொடுக்கும் இணைவைப்பு (ஷிர்க்), இறைவனையே மறுத்து விடும் இறை நிராகரிப்பு(குஃப்ர்), போலியாக அவனை நாவால் ஒப்புக் கொண்டு மனதால் மறுக்கும் நயவஞ்சகம் (நிஃபாக்). ஒப்புக் கொண்டதை, ஒப்புக் கொண்ட பின் மறுத்து விடும் கொள்கை மறுப்பு (இர்திதாத்), என்னும் அகஇருளில் அகப்பட்டு மானிடப் பிறவியின் மேலான நோக்கத்திலிருந்து பாதை மாறி விடுகின்றான். ஏகத்துவ மெய்ஞானம் என்னும் ஜோதியை நெஞ்சில் கொண்ட நம்பிக்கையாளனோ அந்த அக ஜோதியின் வெளிச்சத்தில் இறைவனை முன்னோக்கி வாழும் (இஹ்ஸான் என்னும்) அகப்பார்வை கொண்ட நிலையால் அகிலத்திற்கொரு முன் மாதிரியாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவ கொள்கை வழியில் தன் வாழ்க்கைப் பயணத்தை சரியான பாதையில் தொடருகின்றான்.
وَمَن كَانَ فِي هَـذِهِ أَعْمَى فَهُوَ فِي الآخِرَةِ أَعْمَى وَأَضَلُّ سَبِيلاً
எவர் இவ்வுலகில் (உண்மையை அறியாக்) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையால் மிகவும் தவறியவராவார்.(17:72) என்னும் இறைவசனம் வெளிரங்கமான பார்வையற்றவர்களைக் குறிப்பிடவில்லை. மனிதன் வாழும் காலத்தில் இறைவனை அறியாமல், உணராமல் அகக்கண் பார்வையற்றவனாய் வாழ்வது என்பது எத்தனை மோசமான வழிக்கேடு என்பதையே எச்சரிக்கின்றது. அத்தகைய குருட்டுத் தனத்தை விட்டு நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.
அகப்பார்வையை வழங்கும் ஏகத்துவ ஞானம் என்பது என்ன? அதை அடையும் வழியென்ன? என்பதை அறிவதில் நம் சுய கருத்துக்களை அகற்றி விட்டு இறைவனும் அவன் தூதரும் கூறிய (குர்ஆன், ஹதீஸ்) அடிப்படையிலும் அதற்கு நேர்ப்பாடான இறைஞானியர்களின் இறையருள் பெற்ற விளக்கத்தைக் கொண்டும் அணுக முயலுவோம். “இறைவா! இந்த விஷயத்தில் எங்கள் மனோ இச்சை, தவறான கருத்துகளால் ஆன முன் தீர்மானங்கள், இன்னும் வழிகெடுக்கும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றோம். உன்னை அறியும் மானிட குலத்தின் உன்னதமான பிறவிப் பேற்றை பெற, உன்னைக் கொண்டே ஆரம்பம் செய்கின்றோம். எங்களை, எங்கள் கொள்கைப் பாதையின் முன்னோர்களான உன்தூதர்கள் (நபிமார்கள்), மெய்யடியார்கள் (சாதிக்கீன்கள்), உன்வழியில் இன்னுயிர் நீத்து உன்னை அகமிய நிலையில் கண்டுவிட்ட தியாகிகள் (ஷூஹதாக்கள்) மற்றும் நல்லடியார்க(சாலிஹீன்க)ளுடைய வழியில் செலுத்துவாயாக!” ஆமீன்.
0 0 0 0
குறிப்பு:
ஆனா, ஆவன்னா என கண் முன் எழுத்துகளை நிறுத்திக் கற்பிப்பது போல இது தான் இறைவன் என காட்டித் கற்றுத் தரப்பட்ட விஷயமல்லவே நீங்கள் கூறுவது? மறைவான ஒருவனை மனதில் நிறுத்துவது எப்படி? சாத்தியப்படாத ஒன்றை மனிதன் மேல் சுமத்தி பின்னர் அவனை நிராகரிபவன் (காஃபிர்) என்றும் இணைவைப்பவன் (முஷ்ரிக்) என்றும் முத்திரை குத்துவது எப்படி நியாயமாகும்? என்று சிலருக்குக் கேள்வி எழுந்தால், ஒரு வகையில் உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கின்றது. சற்றுப் பொறுமையுடன் தொடருங்கள். உங்கள் அறிவுப் பயணத்தில் ஒரு புதிய கதவு திறக்கலாம். அது அலிபாபா திறந்த கள்வர்களின் பொக்கிஷக் கதவல்ல. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திறந்து காட்டிய இறைஞான பொக்கிஷக் கதவு. லாஇலாஹா இல்லல்லாஹ் அன ரசூலுல்லாஹ்என்ற மந்திர வார்த்தைகளால் திறந்த மனக்கதவு. அந்த அதிசயக் கதவு உங்களுக்கும் திறக்க வேண்டும் என்பதே என் ஆசையும், வேண்டுகோளுமாகும்.

No comments: