தோழமையுடன்

Sunday, February 3, 2019

மணல் பூத்த காடு நாவல் - ஓரு வாசகப் பார்வை

மணல் பூத்த காடுவழக்கமான நாவலில் போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு நாவல். இதைப் படிக்கும் போது இது அடிப்படையில் ஒரு ஒரு நாவலா, நாவல் என்ற வடிவத்தில் அடங்குமா? என்ற கேள்விகள் எழலாம். இந்த நேரத்தில்நாவல்என்பது பற்றி ஜெயமோகன் கூறியது ஞாபகத்திற்கு ருகின்றது.

நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்யமுடியாது என்பதற்கு உதாரணமாக. பலவேறு உள்ளடக்கங்கள் உள்ள நாவல்களை நினைவூட்டுவார் ஜெயமோகன்.
உதாரணமாக , தத்துவ தரிசனங்களை அலசும் நாவல் (குர்அதுல் ஐன் ஹைதரின் அக்னிநதி’) சாதாரண வாழ்க்கையை ஆராயும் நாவல் (எஸ்.கெ.பொற்றெக்காட் டின்ஒரு கிராமத்தின் கதை’) இதிகாசப் பின்னணி கொண்ட நாவல் (எஸ்.எல். பைரப்பாவின் பர்வா’) என இவ்வாறுஉள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பதுஎனக் கூறும் ஜெயமோகன், “வடிவம் சார்ந்தும் வரையறை செய்ய இயலாது. காரணம் வடிவங்களும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதுதான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறதுஎனக் கூறி, வாழ்க்கை வரலாற்று வடிவில் அமைந்த வேத நாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம்’ , ஒரு மனிதரின் நனவோடையாகவே நீளும் லா.ச.ராமாமிர்தத்தின் அபிதா டைரிக்குறிப்புகள் வடிவில் அமைந்த நகுலனின் நவீனன் டைரி , இன்னும் கா.நா.சுவின் பொய் தேவு, சுந்தர்ராமசாமியின் ஜெ.ஜெ.சில குறிப்புகள் எனத் தமிழ் நாவலின் வேறுபட்ட வடிவங்களை  நினைவூட்டி, “நாவலை வரையறைசெய்ய இன்று சாத்தியமான ஒரே அளவுகோல் வாசகத்தரப்பில் நின்று செய்யப்படுவதே. இன்றுவரை நாவல் என்ற வடிவம் எதையெல்லாம் அடைந்துள்ளது, அவ்வடிவில் என்னென்ன சாத்தியங்கள் உள்ளது என்ற அளவில் வாசகனின் எதிர்பார்ப்பையே இன்று நாவலின் வடிவமாக முன்வைக்கலாம் என கூறுவார்.
அந்த வகையில் இந்த சிறிய கட்டுரை ஒரு வாசகனின் ரசனையின் அடிப்படையில் அமைந்த வாசகப்பார்வை மட்டுமே.




நான் புதுக்கல்லுரியில் படிக்கும் போது ராயப்பேட்டை உடுப்பி ஹோட்டலில் ரவா தோசையை பிரியமாகச் சாப்பிடுவது உண்டு. யாராவது அதில் முந்திரி இருக்கா, நெய் இருக்கா, முறுவலா இருக்கா என்றால்தோசை சூப்பராயிருக்கு, சந்தேகமாயிருந்தால் சாப்பிட்டு பார்எனச் சொல்லுவேன்வாசக அனுபவம் என்ற வகையில் ராயப்பேட்டை ரவா தோசையைப் போல மணல் பூத்த காடு நாவலையும் அனுவனுவாக ரசித்தேன்வேண்டுமானால் நீங்களும் படித்து பாருங்கள்.

தாஜ் என்ற நெருக்கமான நண்பரை திடீர் மரணத்தில் பறி கொடுத்த மன அதிர்ச்சிக்கு அனீசுடன் அழைந்த பாலைவன மான்சீக பயணங்கள் பெரிதும் இதமளித்தன.

என்னை பொருத்த வரை மணல் பூத்த காடுக்களை வழக்கமான நாவலில் போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு புதிய வடிவாகவேக் காண்கின்றேன். சுந்தர ராமசாமியும், நகுலனும் செய்தால் ரசிக்கும் நாம் ஒரு பதிய எழுத்தாளன் புதிய வடிவில் முயன்றால். அதை இன்னும் கொஞ்சம் கதையம்சம், கத்தரிக்காவெல்லாம் சேர்த்து நேர்த்தியாகச் சொல்லியிருக்கலாம் என எளிதாகக் கடந்து செல்வது ந்த வகை நியாயம். இன்று வல்லிக்கண்ணன் இருந்திருந்தால் யூசூபை பரிவுடன் உச்சி முகர்ந்து ஆசீர்வதித்திருப்பார்.

ஆரோக்கியமான இலக்கியம் எது? என்ற கேள்விக்கு என் பயணம்என்ற தன் நூலில் அசோகமித்திரன் கூறிய பதில், “மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டுபண்ணக்கூடாது. மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது. மனிதனைப் பற்றி மேலும் அறியத் தூண்டுவதாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கையும்,தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். என்பது தான். மணல் பூத்த காடுஅசோகமித்திரனின் வரையறைக்குள் கனகச்சிதமாக பொருந்துகிறது என நினைக்கின்றேன்.

வெளிநாட்டில் வேலை செய்யும் எத்தனையோ நண்பர்களுக்கு மணல் பூத்த காடுவாழ்வில் நம்பிக்கையும் , உற்சாகத்தையும், தருவதுடன் போகிற போக்கில்  அரபு நாட்டை  பற்றிய தவறான கற்பனைகளை ளைந்தெறிகிறது. அதன் கவித்துவமான எழுத்து நடை நான் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணையும் இன்னும் என் தாய்நாட்டையும்  கொஞ்சம் கூடுதல் காதலுடன் உற்று நோக்க தூண்டுகிறது.

அரேபியா, சவுதி அரேபியாவான வரலாற்று பின்னணியையும், ஆங்கிலேயர்களால் அங்கே விதைக்கப் பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி வளர்ந்து அதன் கிளைகள் நமது வீட்டு முற்றத்தில் நச்சுக் கனியை நழுவ விடும் காட்சிகளின் பின்னணியும் நாவலில் வரலாற்றுத் தகவலாய் வருகின்றது. தவ்ஹீது எனும் கொள்கை மனிதர்கள் அனைவரையும் ஒருவர் மேல் ஒருவர் நெசம் கொள்ள செய்யும் கொள்கை என்பது தான் வரலாறு. முஹம்மது நபியின் மதினா விஜயத்திற்க்கு முன் 'யத்ரிப்' என் அழைக்கப்பட்ட மதினாவில் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரண்டு கோத்திரங்கள் குலப்ப்பெறுமை பேசி ஒரு ரியால் பெறுமானமில்லா விசயத்திற்காக நூறாண்டுகளாக பகைமை பாராட்டினார்கள். முஹம்மது நபி வந்தார்கள். இஸ்லாம் வந்தது. 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவம்அவர்கள் உணர்வானது நூறாண்டு பகை மாறி இதயங்கள் இணைந்தன. இன்று தவ்ஹீதின் பெயராலேயே மனிதர்கள் பிரிவினையை விதைப்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு குரூரமான முரன்நகை.

சமீபத்தில் ஓமன் சலாலாவிற்கு சென்ற போது சேரமான் பெருமாள் தாஜுதீன் அடக்கஸ்தலத்தில் அங்கிருந்த பெயர் பலகை விஸ்தரிப்பு என்ற பெயரில் நீக்கப்பட்டு ஆறுமாதமாய் அப்படியே கவனிப்பாரற்றுக் கிடப்பதாய் கூறினார்கள். அது அலட்சியமா? இல்லை வரலாற்று அடையாளங்களை அழிப்பதன் ஒரு பகுதியா என தெரியவில்லை. அந்த நேரத்தில் சேரமான் பெருமாளின் வரலாறே கட்டுக்கதை என யாரோ இஷ்டம் போல் எழுதியிருந்தது  ஞாபகத்தில் வந்தது.

குர் ஆனில் நாம் எங்கிருந்த போதும் இறைவன் நம்முடன் இருப்பதகச் சொல்கின்றான். அவன் எப்போதும் நம்முடன் இருக்கின்றான். நாம் தான் அவனுடன் இருப்பதில்லை. அவனுடன் இருப்பது தான் தொழுகை முதலிய வணக்கத்தின் பிரதான அம்சம்.
 Namazay ashiqan tark i wajud ast. 
The Prayer of lovers is relinquishment of self.

தொழுகையில் “அல்லாஹு அக்பர்” என தக்பீர் கட்டுகின்றோம்இதைதக்பீர்தஹ்ரீமா என்பார்கள்இறைவனை தவிர உள்ள அனைத்தும்தொழுபவருக்கு விலக்கப்பட்டதாகிவிடும்  (ஹராமாகிவிடும்)நேரமது.                                                                                                  

அந்த நிலையில் யாரும் அவரோடு பேசவோவேறு வகையில்தொடர்பு கொள்ளவோ  மாட்டார்கள். ஒரு வகையில் ஒப்பீட்டறிவதற்காக இந்த உவமையை கூறலாம்.
ஒரு மணமகன் மணமகளை சந்திக்க தனியறைக்கு செல்லுகின்றான்.அந்த சந்திப்பின்  போது மரியாதைக்குரிய அவனைப் பெற்ற தாய்தந்தையராக இருந்தாலும் அவர்களும்           அறைக்கு வெளியே தான்இருப்பார்கள்.

 'அல்லாஹ் அக்பர்எனும் தக்பீர் தஹ்ரீமாவும் ஒரு வகையில் கதவடைப்புதான்.

அனைத்து சிருஷ்டிகளின் தொடர்பை விலக்கி தொழுபவனும்,தொழப்படுவனும் 'ஆசீக் - மஃசூக்காகதனிமைப்படும் விஷேச தருணமது.

தொழுகை என்பது குறைந்த நேரம் அவனுடன் இருக்கும் நினைவை நிலை நிறுத்துகிறது என்றால். ஹஜ், உம்ரா எனும் புனித தல யாத்திரையோ நான்’ ‘எனதுஎன்ற எல்லாவற்றையும் விட்டு விட்டு லப்பைக்’ – வந்துவிட்டேன் என அவனிடம் வரும் மகாஉற்சவம்இது அனீசின் உம்ரா பயணத்தில் வெளிப்படுகின்றது. இன்னும் முஹம்மது நபியவர்களின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் அத்தியாயம் என  ஆசிரியரின் ஆன்மீக பிண்ணனி கதையின் போக்கிலேயே உறுத்தலில்லாமல் ஆங்காங்கே இதைப் போல வெளிப்படுவதற்கு அரேபிய கதைக் களம் துணை செய்கிறது.

ஆக, பல்சுவை நிறைந்த மணல்பூத்த காடு ஒரு சுகமான வாசக அனுபவம் என்றால் மிகையாகாது. ஒரு நல்ல நாவலை வாசிக்க ஆசைப்படும் அனைவருக்கும் மணல் பூத்த காடு ஒரு நிறைவான விருந்து.
  
மணல் பூத்த காடு( நாவல்)
நூலின் பக்கங்கள்:448
ஆசிரியர் முஹம்மது யூசுஃப் [ கனவுப்பிரியன் ]
விலை:500ரூ.
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
தொடர்புக்கு: 9042461472 & 9841643380
editor@ yaavarum.comwww.yaavarum.com




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: