தோழமையுடன்

Sunday, October 11, 2015

பொக்கிசக் கடல்!


என் குருநாதரின் அருமை புதல்வர் ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி அவர்கள் முன்னிலையில் இந்த வார திக்ரு மஜ்லீசில் பேசிய எனது சிற்றுரையின்  கட்டுரை வடிவம்:

பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்.
பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல் என்றார்கள் இமாம் சஆதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

அது என்ன கடல்?
ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி


 இனங்கும் மெய்ஞான பேரின்ப கடலில் இன்னமுதெடுத்து எமக்களிப்போன்’ என குணங்குடி அப்பா கவுது நாயகத்தை குறித்து பாடினார்களே அந்த பேரின்ப பெருங்கடல்தானது.

இந்த கடல் என்னும் உருவகம் இறைஞானத்தில் பல்வேறு இடங்களில் சொல்லப்படுகின்றது.

(நபியே!) நீர் கூறுவீராக:
என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக
கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்,
என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)

இன்று நம் கைகளில் இருப்பது

மனித மொழியில் வெளிப்பட்ட இறைவனின் பேச்சு.

வார்த்தைகளால் ஆன கடல்

பொக்கிசம் வேண்டும் என்றால் இறைஞான பொக்கிசம் தரும் மறைஞானக் கடலில் இறங்கியே ஆக வேண்டும்.




ஒரு முறை எனது குருநாதர் ஃபைஜிஷாஹ் (ரலிஅவர்களின் சபையில் குர்ஆன் கூறும் இறைஞானங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் என் குருநாதரின் சீடரான மிகப்பெரிய மார்க்க அறிஞர் ஒருவர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் அரபி கல்லூரியின் முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள். பொதுவாக இது போன்ற அவைகளில் முன்னால் அமர்திருப்போரின் வாங்கும் திறனுக்கேற்ப உயர்வான விளக்கங்கள்  இறையருளால் வெளியாகும். அன்றும் குருநாதரின் உரையில் குர்ஆனிய விளக்கங்கள் அருவியாய் கொட்டியது. அப்போது அந்த அறிஞர் உணர்ச்சி மேலிட்டு அழ துவங்கி விட்டார்கள். என் குருநாதரை நோக்கி, “ நான் இத்தனை வருடங்களாக குர்ஆனை ஆராய்ந்து வருகின்றேன். பல நூறு மாணவர்களுக்கு பாடமும் நடத்தி இருக்கின்றேன். இன்று நீங்கள் சொன்ன அருமையான விளக்கங்களை கேட்க்கும் போது இவை எல்லாம் எனக்கு தெரியவில்லையே என்ற கவலை என்னை வாட்டுகிறதே!” என சொல்லி வருந்தினார்கள்.

உடனே என் குருநாதர் அவர்களை அரவணைத்தவர்களாக, “ ஆலிம்ஷா நீங்க கவலைப்படாதீங்க. நீங்கள்  கலாமின் விளக்கத்தை ( கலாம் : பேச்சு இங்கே இறைவசனமான குர் ஆனை குறிக்கும்) பல்வேறு தப்ஸீர்களை (குரான் விரிவுறைகளை) ஆய்ந்து சிறப்பாக விளக்கக் கூடியவர்கள் தான். நாங்கள் கலாமின் விளக்கத்தை கலீமிடம் (கலீம் : பேசக்கூடியவன், இங்கு இறைவனைக் குறிக்கும்) பெறுகின்றோம். குர்ஆன், தப்ஸீர் எதை படித்தாலும் அதன் விளக்கத்திற்காக அவன் பக்கம் முதவஜ்ஜு (முன்னோக்குதல்) ஆகி விடுவோம். உங்கள் தொடர்பும் கலாமுடன் மட்டும் இல்லாமல் கலீமுடனும் ஆக வேண்டும்” என்றார்கள்.

 அல்குர்ஆனை அணுகுவது எப்படி?

அல்குர்ஆனின் ஆரம்ப வாசகமே பதில் சொல்கின்றது இது முத்தக்கீன்களுக்கு நேர் வழி காட்டும் வேதம் என்று.

என் குருநாதர் சொன்னார்கள், “முத்தக்கீனா ஆக முயலுபவர்களுக்கும் குர்ஆன் நேர் வழி காட்டும்” என்று

அதற்கு முதலில் தக்வா என்றால் என்ன? என்று விளங்க வேண்டும்.

மேலும் அந்த தக்வாவில் நிலைத்திருக்க வேண்டும்.

இதற்கு வழி என்ன?

ஈமான் கொண்டவர்களே! தக்வா செய்யுங்கள்.அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைக்கும் வஸீலாவைத் தேடுங்கள். மேலும் அவனுடைய பாதையில் (குறிப்பாக நப்ஸுடன்) போர் செய்யுங்கள்.(அப்போது) நீங்கள் வெற்றி பெறலாம்.(5:35)

வஸீலா என்பது ஏகத்துவ மெய்ஞானத்தை கற்றுக் கொடுத்து இறைவன் மீது அன்பையூட்டி நம்மை அவன்பால் நெருக்கி வைக்கும் வலியே முர்ஷித்களையே குறிக்கிறது. எனவே அத்தகைய உண்மையான காமிலான ஷெய்குமார்களை தேடியடையும் பொறுப்பு நமக்குள்ளது என்னும் அறிஞர்களின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும், நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்  தோழமையின் பங்கு மகத்தானது என்பதால் நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்றவரை தக்வா செய்யவும் நமக்குத் தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின்  தொடர்ச்சியான தோழமை வாழ்நாளெல்லாம் நமக்குத் தேவை என்பதை

ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு) இருங்கள்.(9:119) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

சாதிக்கீன்களான முர்ஷித்மார்கள் தான் நம்மை தக்வா என்றால் என்ன? என்பதை விளக்கி அதில் பயிற்றுவிப்பார்கள் என்பது அனுபவ உண்மை.

தக்வா தான் கலாமை தந்த கலீமுடன் நம் நெருக்கமாக்கும்

தக்வாவின் மூலம்

றை நெருக்கத்தின் வாயில் திறக்கும்,
குர்பு நஸீபாகும்.
வாஸில் ப ஹக்கில் சேர்க்கும்.


எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகத்தை விளங்க கூட நிறைய அடிப்படைகள் தெரிய வேண்டும். அல்லாஹ்வின் வேத விளக்கம் பெற எந்த அடிப்படை அறிவும் வேண்டாமா?

இலாஹ் – உலூஹிய்யத் என்றால் என்ன?
ரப்பு – ருபூபிய்யத் என்றால் என்ன?
அல்லாஹ்வின் தாத், சிபாத், அஃபால், ஆஸார் பற்றி விளங்கவேண்டும்.
ஷையின் ஹகீகத்
அல்லாஹ்வின் மஈயத்
முதலிய நுட்பமான இறைஞான பாடங்களை பயில வேண்டும்.

சற்று கடினமான விஷயம் தான் அதற்காக முல்லா நஸீருத்தீன் போல நடந்து கொள்ள முடியுமா?

முல்லா நஸீருத்தீன் தன் வீட்டு வாசலின் முன் இருந்த மணலில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். முல்லாவை பார்க்க வந்த நண்பர், “முல்லா எதை தேடுகிறீர்கள்?” என கேட்டார். “என் விலையுயர்ந்த மோதிரம் கீழே விழுந்து விட்டது. அதைத் தான் தேடுகின்றேன்.” என்றார். அதைக் கேட்டதும் முல்லாவின் மேல் இரக்கப்பட்ட நண்பரும் முல்லாவுடன் சேர்ந்து மோதிரத்தை தேடினார். சற்றேறக் குறைய ஒரு மணி நேரம் தேடியபின் முல்லாவை நோக்கி

 “எந்த இடத்தில் வரும் போது மோதிரம் கீழே விழுந்தது முல்லா?” என்றார்.
 “அதுவா? என் வீட்டின் உள்ளே உள்ள கூடத்தில் தான் என் மோதிரம் கை நழுவி விழுந்தது” என்றார் முல்லா அமைதியாக! நண்பருக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். ஆத்திரத்துடன் முல்லாவை பார்த்து “ உள்ளே தொலைத்து விட்டு வெளியே தேடுகிறீரே உமக்கு அறிவில்லையா?” என்றார்.

“புரியாமல் பேசாதே நண்பா! உள்ளே விளக்கு அணைந்து விட்டதால் இருளாக இருக்கிறது. வேளியே தான் வெளிச்சமாக இருக்கிறது. இருளில் தேட நான் என்ன முட்டாளா? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகின்றேன்”என்றார் கர்வத்துடன்.


பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்.
பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல் என்ற இமாம் சஆதி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் வாசகத்தை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

அந்த பொக்கிசம் உங்களுக்கும் எனக்கும் கிடைக்க இறைவனை இறைஞ்சுகின்றேன்!.









உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: