தோழமையுடன்

Sunday, January 19, 2014

Existence என்ற இருப்பின் அடிப்படையில் பிரபஞ்சமும் கடவுளும்

பிரபஞ்சம், கடவுள் என்பதைப் பற்றி Existence என்ற இருப்பின் அடிப்படையில் பல்வேறு கருத்துகள் உலாவுகின்றன.

வானம், பூமி, மலை, கடல் என எங்கும் பொருள்கள் மட்டும் தான் உள்ளது. கடவுள் என்பது நமது கற்பனை. உண்மையில் இல்லவே இல்லாத ஒன்று என்பது பொருள் முதல்வாதிகள் (Materialist) என்னும் இறைமறுப்பாளர்களின் கருத்து.

சிருஷ்டிகள் தான் உலகில் இருக்கிறது. சிருஷ்டிகளை விட்டும் தனியே தூரமாக சிருஷ்டித்தவன் இருக்கின்றான் என்பது இறைநம்பிக்கையாளர்களில் சிலரின் நம்பிக்கை.

இவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருப்பது எல்லாம் அவனே என்பது வேறு ஒரு சிலரின் நம்பிக்கை.

உண்மையில் இருப்பது யார் ? பொருளா? இறைவனா? இல்லை இரண்டுமா?

இந்த விசயத்தை முன் தீர்மானங்களை கொண்டு அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிவியல் விளக்கத்தின் வெளிச்சத்தில் விளங்க முயற்சிப்போம்.


ஆரம்பமாக ‘இருப்பு’ குறித்த சில கலைச்சொற்களின் விளக்கத்தை சுருக்கமாக பார்ப்போம்.

இருப்பு என்பதைக் குறிக்கும் “உள்ளமை” – Existence என்ற வார்த்தையை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உள்ளமை என்பதன் அரபிச் சொல் மவ்ஜூதிய்யத். இது ஒரு எண்ணம் சார்ந்த பண்புச் சொல்(Adjectival Abstraction) அதாவது மனதால் விளங்கக் கூடிய ஒன்று. அடுத்து உள்ளமைத் தன்மையை பெற்று “உள்ளவற்றை”, “இருப்பவற்றை” (All beings) அரபியில் மவ்ஜூத் என்று அழைக்கப்படும்.

இந்த உள்ளவைகள் -  மௌஜுதாத்துகள் எதைக் கொண்டு உள்ளதோ அந்த  ‘உள்ளதை’ அரபியில் உஜுது என்று அழைக்கப்படும்.

உஜுது என்பதையும் தமிழில் உள்ளமை என்ற வார்த்தையால் குறிப்பிடுவது புழக்கத்தில் உள்ளது. ஒரே வார்த்தையையே இப்படி இரண்டு வேறுபட்ட பொருளின் பயன்படுத்தபடுவதால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அரபி சொற்களையே கட்டுரையில் கையாண்டிருக்கின்றேன். சிரமம் பாராமல் அரபி வாசகத்தின் பொருளை தெளிவாக உள்வாங்கி படிக்க வேண்டுகின்றேன்.

மீண்டும் சொல்கின்றேன். உள்ளவைகள் -  மௌஜுதாத்துகள் எதைக் கொண்டு உள்ளதோ அந்த  உள்ளதை அரபியில் உஜுது என்று அழக்கப்படும். உஜூது என்றால் existent ‘இருக்கக் கூடியது’ Concrete Being   ‘தரிபட்டு இருக்கக் கூடியது’ என்று பொருள். மேற்கண்ட அடிப்படையை மனதில் கொண்டவர்களாய் இருப்பது யார்? பொருளா? இறைவனா? இல்லை இரண்டுமா?  என்ற கேள்வியை பரிசிலிக்கலாம்.

முதலில் பொருள் முதல்வாதிகளின் பார்வையிலிருந்து துவங்குவோம்.

பொருள் முதல் வாதம் என்பது ஆதிமுதல் இருப்பது பொருள்கள் மட்டுமே என்பதில் துவங்குகிறது.

மனிதன், விலங்கினம், தாவரங்கள், வானம், மலை, கடல், பூமி என உலகும் அதில் உள்ள அனைத்தும் ‘பொருள்கள்’ என்ற வார்த்தையில் அடங்கும். அரபியில் இதை “ஷை” என்ற வார்த்தையால் அழைக்கப்படும்.

பொருள் முதல்வாதிகள் பொருள்களைப் பிளக்க முடியாத அணுக்களின் இயக்கத்தால், கூட்டுறவால் உருவான பல்வேறு நிலை மாற்றங்களின் பரிணாம வளர்ச்சியாக மட்டுமே கண்டார்கள். அந்த அவர்களின் நம்பிக்கை அணுவைப் பிளந்து அணு குண்டு தயாரித்த போதே பாதி தகர்க்கப்பட்டு விட்டது.

அணுவின் மூலத்தை ஆராய்ந்த நுண்ணியற்பியல் அது பொருளாகவும், சக்தியாகவும் இருக்கும் இரட்டை நிலையை கண்டு வியந்தது. ஒரு வகையில் ஒளியாலான அலைகளைப் போன்றுள்ளது எனக் கருத்து தெரிவித்தது. அந்த அலைகளை போன்றவற்றின் (wave like propertiesன்) உள்ளமையை பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.

இந்த நிலையில் பொருள் என்று தனியாக எதுவும் இல்லை. பொருள் சிதைந்தால் சக்தி. சக்தி திரண்டால் பொருள் என்ற அறிவியல் அதை E = mcஎன்ற சின்ன சமன்பாட்டில் அடைத்தது, அதனால், மூலத்தை நோக்கிய பார்வையில் பொருள் என்று வரையறுக்கப்பட்டது எங்கே? என்ற கேள்வி எழுந்தது.

பொருள் இல்லை என ஒத்துக் கொள்ள முடியாது. பொருள்களைப் பற்றிய புதிய வரையறை (definition) காணப்பட வேண்டும் என்றார் பொருள்முதல்வாதிகளின் முன்னோடித் தோழர் லெனின்.

பொருள் அனைத்துக்கும் மூலமான பொருளை(Materia Prima) நாம் பொருள் என்ற எல்லைக்குள் வரையறுக்க முடியவில்லை என்பதும். அனைத்துப் பொருள்களும் நாமறிந்த எந்தப் பொருளையும் போல் இல்லாத ஒரு மூலத்திலிருந்து தான் தன் இருப்பை - உள்ளமையை பெறுகின்றது என்பதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

அடுத்து ஒரு பொருள் இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு அறிகின்றோம் என்பதைப் பார்ப்போம்.

ஐம்புலன்களின் வாயிலாகத் தான் நாம் பொருள்களின் இருப்பை அறிகின்றோம். வெளிரங்கத்தில் நம் கண்கள் பார்க்கின்றன, காது கேட்கின்றது என்று சொன்னாலும் உண்மையில் நாம் பார்ப்பது, கேட்பது, தொட்டுணர்வது எல்லாம் மூளையினால் தான். நிறம் என்று நாம் அறிந்ததெல்லாம் ஃபோட்டான்ஸ் (photons) என்னும் மின் காந்த துகள்கலின் வேறுபட்ட அலை வரிசைகளுக்கு ஏற்ப அவை வெளிப்பட்ட பொருள்களை(Objects) நம் மூளை வடிவமைத்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளால் தான் என்கின்றார்கள். நாம் அறிந்து கொள்வது உணர்ந்து கொள்வது என்பதெல்லாம் கண், காது முதலிய புலன்கள் மூளைக்கு அனுப்பும் மின்சமிக்கை (electrical signals) வாயிலாகத்தான். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் நகலாக மூளையில் எற்படும் வண்ண பிம்பங்களின் வாயிலாகத்தான் நாம் அந்த பொருளையே அறிகிறோம். எந்த ஓசையை கேட்டாலும் அதன் நகலாக மூளையில் எற்படும் ஒலியலை பிம்பங்களின் வாயிலாகத்தான் நாம் அந்த ஓசையை அறிகிறோம். முன், பின், மேல், கீழ், வலம், இடம் என்பதெல்லாம் நாம் மூளையால் இவ்வாறு உணர்வது தான். திட நிலை, திரவ நிலை, வாயு நிலை என்பதெல்லாம் கூட நாம் மூளையால் தொடர்புபடுத்தி உணர்வது தான். காலை, மாலை என்ற காலநேரத்தை உணர்வது கூட மூளையினால் தான். இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என்பதெல்லாம் கூட நாம் மூளையால் உணர்வது தான். ஏன் நம் சொந்த இருப்பைக் (existenceஐ) கூட மூளையினால் தான் உணர்கின்றோம்.

நமது உடம்பு என்பதைக் கூட செல்களின் (அணுக்களின்) உள்ளேயுள்ள எலக்ட்ரான்களின் இயக்கத்தால் ஆன மின் தூண்டுதல்களினால் நம் மனதில் வடிவமைக்கப்பட்ட பிம்பத்தின் வாயிலாகத்தான் உணர்கின்றோம்.

 இதற்கு அர்த்தம் பொருள்கள், காலம், இடம், நிறம், வடிவம் எல்லாம் இல்லை என்பது அல்ல. பொருள் சார்ந்த உலகம் (Physical world) என்பதன் இருப்பை புலன் உணர்வுகளின் வாயிலாய் மனோ பிம்பங்களாகத் தான் அறிந்து கொளகின்றோம்.

 இவ்வாறு புலன் உணர்வுகளின் வாயிலாக மனதில் வடிவமைக்க பட்ட காலம், இடம், நிறம், வடிவம் என்னும் வரையறைகளால் ஆன சத்தியமான உணர்வுலக உண்மை (perceptual reality) என்பது தான் அறிவியல் கூறும் உண்மை.  இவைகளையெல்லாம் எந்த பொருளின் மூலமாக உணர்கின்றோமோ அந்த மூளையும் ஒரு பொருள், ஒரு சதைத் துண்டு தான் என்ற வகையில் மூளையென்பதையும் கூட ஒரு பிம்பமாகத் (imageஆக) தான் நம்மால் உணர முடிகின்றது.

இப்படி புலன் உணர்வுகளை மனோ பிம்பங்களாக்கி அகத்தே பொருள்களை வடிவமைக்கும் திறனைத் தான் “கியால்” என அழைக்கின்றார்கள்.  கியால், Imagination கற்பனைத் திறம் என்றால் ஏதோ பொய்யான கற்பனைகளை உருவாக்கும் விஷயம் என விளங்க வேண்டாம். இது மனவெளியில் உணர்வு பிம்பங்களைத் தோற்றுவிக்கும் குவ்வத்தே தகய்யுலாத் என்னும் அற்புதத் திறன். இதன் மூலம் தான் உலகம் என்பதை அறியவும், உணரவும் முடிகின்றது.

ஆக உலகம் என்பதை கியாலியான – மனோ பிம்பங்களினால் ஆன ஒரு இருப்பாகத் (கியாலி மௌஜுதாகத் ) தான் நம்மால் அறிய முடிகிறது.

உலகின் இருப்பை குறித்து மகத்தான மெய்ஞானி ஷெய்குல் அக்பர் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் ‘அல் கௌனு கியாலி’ என்றும் “அல் ஹல்கு மஃகூல்” எனவும் கூறுகின்றார்கள். அதாவது சிருஷ்டிகள் அனைத்தும் மனதால் விளங்கக் கூடியது (கியாலி மௌஜுத்) இன்னும் அறிவால் விளங்ககூடியது (மஃகூல்) என்பதாகக் கூறியிருக்கின்றார்கள். இதன் பொருள் உலகம் என்பது பொய்யான கற்பனை என்பதல்ல. இல்லவே இல்லாதவை என்பதல்ல. உலகின் இருப்பு என்பது  மனோ பிம்பங்களைக்  கொண்டு அறியப்படுவது.  இதைத் தான் உலகம் என்பது ‘கியாலி மௌஜுத்’ மனதால் விளங்கக் கூடியது என்கிறார்கள்.

ஐம்புலன்களின் வாயிலாக சேகரமான தகவல்கள் மனம் என்னும் திரையில் பிம்பங்களாகப் பதியப்பட்டு உலகம் என்பது உணரப்படுகின்றது என்பதை பார்த்தோமல்லவா? அவ்வாறு உணரப்படும் பொருள்கள் அதன் பண்புகளின் வாயிலாய் தான் உணரப்படுகின்றது. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

பொருள்களை திட நிலை, திரவ நிலை, வாயு நிலை இன்னும் plasma stage (உ-ம் சூரியன்) என்ற நிலைகளின் மூலமும், கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம் என நிறங்களின் மூலமும், கட்டம், வட்டம், உயரம், குட்டை என வடிவங்களின் மூலமும். இனிப்பு, புளிப்பு, கரிப்பு, துவர்ப்பு என சுவைகளின் மூலமும், எடை, பளபளப்பு, மினுமினுப்பு, சொர சொரப்பு என ஆக இது போன்ற பண்புகளின்  மாறலாகத்தான் அறிகின்றோம்.

எந்த ஒரு பெயரில் அழைக்கப்படும் ஒரு பொருளையும் அதன் தன்மைகள் எனப்படும் பண்புகளின் வாயிலாகவேயன்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக் கொள்வோம். அந்தப் பூவின் நிறம், மணம், வடிவம், மென்மை, வளவளப்பு இப்படி அதன் தன்மைகள் வாயிலாகத்தான் இது ரோஜாப்பூ, இது மல்லிகைப்பூ என அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு விளக்கத்திற்காக மேற்கூறிய பூவின் தன்மைகளை பூவை விட்டுப் பிரித்து விட்டோம் என வைத்து கொள்ளுங்கள். அப்போது அது என்ன பூவென்று மட்டுமல்ல என்ன பொருள் என்றும் கூட நம்மால் கூறமுடியாது.

இப்படி புலனுணர்வு மூலம் பெற்ற அறிவும் இன்னும் அறிவியல் சார்ந்த பகுத்தறிவும் பொருள்களின் மூலாதார பொருண்மையை (Materia Prima) “இன்னதுதான்” என இது வரை தெளிவாக மெய்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் மனிதனும், மிருகங்களும், பறவைகளும், கல், கரடு, தங்கம், வெள்ளி, பித்தளை இன்னும் அனைத்து பொருள்களின் மூலப் பொருளும் ஒன்றாக இருக்கும் சாத்தியத்தை (hypothesis) மட்டும் அவர்களின் அறிவியல் அறிவு ஏற்றுக் கொண்டது. ஆனாலும் அனைத்தின் ஆதரமான ஏகாந்த இருப்பின் உள்ளமையை - உண்மையை (The Truth of Absolute Existence Per se) பரமமானது, புனிதமானது என்றெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது. அதுவும் தோன்றுதல், வளர்தல், மறைதல் என எல்லைக்குட்பட்ட ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும் என்றார்கள். இதன்படி பொருள் என்ற வரையறைகுள் வராத ஒன்று இல்லவே இல்லை என்பது அவர்களின் வாதம்.

இதுவரை பார்த்ததன் சாரம் :

பிரபஞ்சத்தின் உள்ளமை சுய இருப்பல்ல. ஓர் சார்பு இருப்பு.

நிறங்கள், உருவங்கள், வடிவங்கள், சுவை, மணம் இன்னும் பிற பண்புகளின் தொகுப்பால் தான் பிரபஞ்சம் தனித்தனி மௌஜுதாக உணர்ந்து கொள்ளப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொன்றின் தனித்தன்மையைக் கொண்டு மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், சூரியன், சந்திரன், மலை, கடல், வான் என வகைப்படுத்தி அழைக்கின்றோம்.

புலன் உணர்வாலும், பகுத்தறிவாலும் அறிய முடியா புதிர் நிலையில் உள்ளது பொருள்களின் மூல உள்ளமை எனப்படும் உஜுது.

பொருள் அனைத்துக்கும் மூலமான உஜுதை நாம் பொருள் என்ற எல்லைக்குள் வரையறுக்க முடியவில்லை.

இப்போது பொருள்களின் உள்ளமை அதன் மூலமான உஜுது என்பதற்கு இடையே உள்ள தொடர்பின் அடிப்படையை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

உதாரணமாக “தங்க நகை” என்பதை எடுத்துக் கொள்வோம்.

“தங்கம்” என்பதுதான் “நகைக்கு” மூலம். நகை ஒரு பொருளாய் காட்சியளிப்பதே தங்கத்தின் தயவால் தான். தங்கத்தின் இருப்பு சுயமானது. நகையின் இருப்போ தங்கத்தைச் சார்ந்தது. தங்கத்தின் சுயமான இருப்புடன் ஒப்பிடும் போது நகையின் சார்பு இருப்பை நிழல் உண்மை (shadow reality) எனக் குறிப்பிடுகின்றார்கள் இறையியல் அறிஞர்கள். நிழல் என்பது பொய்யல்ல ஆனால் சுய உள்ளமையில்லாதது. அது தானாக காட்சியளிப்பதில்லை. வேறு ஒன்றின் சாயலை தன்னில் பிரதிபலித்துக் காட்டுவது.

உண்மையில் பார்த்தால் தங்கமும் சுயமாக இல்லை. தங்கத்தின் இருப்பும் அதன் மூலப்பொருளைச் சார்ந்து இருக்கிறது. அந்த மூலப் பொருளும் இன்னொரு மூலப் பொருளை சார்ந்திருக்கிறது. இப்படி ஆதி மூலப் பொருளை (Materia Prima) நோக்கிய அறிவுலக பயணத்தில் வெகு விரைவிலேயே புலன் உணர்வுகளின் எல்லை வந்து விடுகின்றது. அதற்கு மேல் மூலப்பொருளை அறிவதில் ஒரளவு அறிவியல் சித்தாந்தங்கள் நமக்கு உதவுகிறது.அந்த அறிவியல் தத்துவங்கள் பொருள்கள் அனைத்தின் மூல உள்ளமை ஒன்றாக இருக்கக் கூடிய சாத்தியத்தை ஓரளவு ஒப்பு கொள்கின்றது. அதாவது பிரபஞ்சத்தின் உள்ள அனைத்து பொருள்களும் தன்னுடைய இருப்புக்கு தான் அல்லாதவற்றின் உள்ளமையைத் தான் சார்ந்துள்ளது. ஆனால் அனைத்துக்கும் உள்ளீடு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு மூல உள்ளமையோ “தன்னைக் கொண்டே தான் உள்ளது.” அந்த மூல உள்ளமையை “பொருள்” என்ற வரையறைக்குள் கட்டுபடுத்திச் சொல்ல முடியவில்லை என ஏற்கனவே பார்த்தோம். அந்த மூல உள்ளமை ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவை ஒன்றை ஒன்று மிகைக்க தலைப்பட்டிருக்கும் பிரபஞ்ச அமைப்பில் - இயக்கத்தில் ஒரு ஒழங்கு இருக்கிறதே அந்த நிலை மாறி பெரும் குழப்பமாய் முடிந்திருக்கும். இப்படி ஒன்றே ஒன்றாய் இருக்கும் அந்த சுயமான உள்ளமையைத்தான் அல்லாஹ் - ஹக்  - உஜுது – பரம்பொருள் - என்று சொல்கின்றார்கள்.


كُلًّ مِّنْ عِندِ اللّهِ

அனைத்தும் இறைவனின் புறத்திலிருந்தே இருக்கிறது என்று (நபியே!) நீர் கூறி விடுவீராக.(4:78)

என்கிறது இறைவேதம். அதாவது பொருள்களின் உஜூதாக இருப்பது அல்லாஹ் எனும் பரம்பொருள்தான் என்பதை சுட்டுகிறது.

خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ بِالْحَقِّ تَعَالَى عَمَّا يُشْرِكُونَ
வானங்களையும், பூமியையும் ஹக்கைக் கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.(16:3) எனும் இறைவசனம் இதை தெளிவாக்குகிறது.

ஒரு சிருஷ்டி எதைக் கொண்டு இருக்கின்றதோ அந்த மூலப் பொருளைத் தான் அதன் உஜுது என பார்த்தோமல்லவா? . மேற் கூறப்பட்டுள்ள இறைவசனத்தில் வரும் ‘ஹக்’ என்பது அந்த உஜுதை குறிக்கும் சொல்.


இதை முறையாக விளங்கிக் கொள்ளாமல் சிருஷ்டிகளுக்கு தனித்த உள்ளமை உள்ளது என்று கருதினால், அல்லது சிருஷ்டிகள் அல்லாஹ் அல்லாத வேறு ஒரு மூல உஜுதைக் கொண்டு உள்ளது என கருதினால் அது அல்லாஹ்வுடைய  தனித்த உஜுதுடைய அந்தஸ்த்தில் இணைவைத்ததாகிவிடும். அத்தகைய இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

வானம், பூமியில் உள்ள அனைத்தும் பில் ஹக்காக -  ஹக்கைக்  கொண்டு தான் இருக்கின்றது. அல்லாஹுடைய உள்ளமையின் தயவால் தான் தரிப்பட்டிருக்கின்றது.
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அவனே துவக்கமானவன், முடிவானவன், வெளியானவன், உள்ரங்கமானவனாகவும் இருக்கின்றான், அவனே அனைத்து வஸ்த்துகளையும் (சிருஷ்டிகளையும்) அறிகின்றான்.(57:3)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஆயத்திற்கு இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்.

"اللهم انت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء" 
(مسلم عن ابي هريرة رضي الله عنه)

இறைவா நீயே ஆரம்பமானவன் உனக்கு முன் எந்தச் சிருஷ்டியும் இல்லை. நீயே இறுதியானவன் உனக்குப் பின் எந்த சிருஷ்டியும் இல்லை. நீயே வெளியானவன் உனக்கு மேல் எந்தச் சிருஷ்டியும் இல்லை. நீயே உள்ரங்கமானவன் உன்னையன்றி எந்தச் சிருஷ்டியும் இல்லை. (முஸ்லிம் ஷரீப்)

பொதுவாக ஒரு பொருள் எதைக் கொண்டு இருக்கிறதோ அந்த உள்ளமைக்குத் தான் அந்தப் பொருளுடைய இருப்பின் சம்பந்தத்தில்   இந்த நான்கு அம்சங்களும் இருக்க முடியும். உதாரணமாக தங்க நகையை எடுத்துக் கொள்வோம். நகையின் உள்ளமை தங்கத்தைக் கொண்டு இருப்பதால் நகையின் ஆரம்பம், இறுதி, உள்ரங்கம், வெளிரங்கமாக தங்கம் இருப்பதை அறியலாம். சிருஷ்டிகளுக்கு ஓர் ஆரம்ப நிலை உண்டு. ஓர் இறுதி நிலை உண்டு. ஒர் உள்ரங்கம் உண்டு. ஒரு வெளிரங்கமும் உண்டு. சிருஷ்டிகளின் இந்த நான்கு வித நிலையும் இறைவனுடைய உஜுதைக் கொண்டு தான் இருக்கின்றது.


பொருள்களுக்கு சுய இருப்பு (existence) இல்லை. இருக்குதல் என்பது உண்மையான பொருளில் சுயமான உள்ளமைக்கு மட்டுமே சொந்தமானது. ரஹ்மான் தன் அளவற்ற கருணையினால் தன் இருக்குதல் (மவ்ஜூதியத்) எனும் தன்மையைப் பிரதிபலித்து உஜூதே ழில்லியின் மாறலாக பொருள்களை (ஹிஸ்ஸியாக) உணர்வுலகில் வெளிப்படுத்துகின்றான்.

உங்கள் ரப்பு (உஜூதெ ழில்லி எனும் தன்) நிழலை எவ்வாறு நீளச்செய்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதை அவன் அசைவற்றதாக ஆக்கியிருப்பான். (25:45) என்னும் திருவசனத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் அனைத்தையும் தன் உள்ளமையினுள்ளேயே மறைத்திருப்பான் எனச் சுட்டிக்காட்டுவதாக ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

முதலாவதாக நாம் விளங்க வேண்டியது அல்லாஹ்வின் உள்ளமை அல்லாஹ்வை விட்டும் நம்மிடம் வந்து விடவில்லை. அவன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவன் எப்படி இருக்கின்றானோ அப்படியே இருப்பதுடன் அவன் உள்ளமையுடன் மகோன்னதமான ஒரு இரவல் இணைப்பு இடைவிடாமல் நமக்கு வழங்கப்படுகின்றது என்பதேயாகும்.

அல்ஹம்துலில்லாஹ்!. எத்தனை விலையுயர்ந்த இணைப்பிது! இந்த விலை மதிக்க முடியா இணைப்பைக் கொண்டு பிரதிநிதியாக வந்த நாம் எப்படி நடந்து கொள்கின்றோம் என்பதற்காகத்தான் மறுமை நாளில் கேள்வி கணக்குகள். சொர்க்கம் என்ற கூலியும், நரகம் என்ற தண்டனை வழங்கப்படுவதும் இதனால்தான் என்று இறைஞானிகள் கூறுகின்றனர். இதைப் பின் வரும் இறைவசனமும் உறுதி செய்கின்றது.

وَخَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ


வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ‘ஹக்கை’ கொண்டுதான் படைத்துள்ளான்: ஒவ்வொரு ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (45:22) என்கிறது இறைவேதம்.

 0 0 0 0

மாறுபட்ட தன்மைகளில் திட திரவ வாயு நிலைக் கோலங்களில் நம்மால் உணரப்படும் வானம், பூமி, மலை, கடல், மண், மரம், செடி கொடி, மனிதன் இன்னும் நம்மிலே கூட நாம் உணரும் நம் முகம், இதயம், கண்,மூளை அனைத்தும் அவன் படைக்குதல் என்னும்  செயலினால் நம் உணர்வுலகில் விளைந்த விளைவுகள். அல்லாஹ்வின் இருப்பு மற்றும் செயல்பாட்டின் அத்தாட்சிகள்.எது ஒன்றும் அல்லாஹ் இல்லை. அல்லாஹ்வின் உஜுதை கொண்டேயல்லாமல் எதுவும் இல்லை. 


كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

ஒவ்வொரு நேரத்திலும் (ஒவ்வொரு) காரியத்தில் (தஜல்லியில்) இருக்கின்றான். 55:29 என திருமறையில் கூறுகின்றான். ஆயினும் நம் கவனம் அல்லாஹ்வின் பக்கம் செல்வதில்லை. உலகக் காட்சிகளின் இன்பத்தில் ஏற்படும் மயக்கமது.

நாம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் லயித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் அதில் காட்சியளிக்கும் உலகம் அந்த நேரத்தில் நம் கண் முன்பு இருப்பதாக உணர்கின்றோம். காட்சியிலிருந்து சிறிது கவனம் திரும்பும் போது நாம் இது வரை முன்னோக்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி ஞாபகத்திற்கு வருகின்றது. “இது ஜப்பான் தயாரிப்பா நல்லா தெளிவா காட்டுதே!” என மகிழ்சியடைகின்றோம்.

அல்லாஹ்வுடைய உஜுது தான் ஒவ்வொரு வினாடியிலும் புதுப் புது காட்சிகளைக் கண்கள், காதுகளுக்கு மட்டுமல்ல ஐம்புலன்களாலும் உணரும் வண்ணம் நிறம், வடிவம், ஓசை, சுவை, மணம் என வித விதமான பரிமாணங்களில் வெளிப்படுத்திக் கொண்டிக்கிறது. உஜுது தான் காட்டுகின்றது. உஜுதைக் கொண்டுதான் பார்க்கின்றோம் ஆயினும் நாமும் அந்த நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதால், ஒவ்வொரு செயலிலும் புலன் உணர்வால் பங்கேற்பதனால், அவ்வளவு எளிதில் நம்மால் கவனத்தை  உஜுதின் பக்கம் திருப்ப முடிவதில்லை. அப்படிக் கவனத்தைத் திருப்பினாலும் அது அதிக நேரம் நிலைப்பதில்லை. அல்லாஹ்வின் இருப்பை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டிய விதத்தில் இறைஞானிகள் மூலம் உணர்ந்து அதை அதிகமதிகம் சிந்திப்பதனால் தான் தொடர்சியாக முன்னோக்கக் கூடிய அகப்பார்வை பாக்கியமாகும். அப்படி முஷாஹதா என்னும் அகப்பார்வையால் முயல்பவர்களுக்கு அல்லாஹ் தன் இருப்பை உணரும் பாக்கியத்தை நல்குவேன் என கூறுகின்றான்.

سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ

விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும், உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம். அவை ஹக்கு தான் என்று தெளிவாகின்ற வரை(காண்பிப்போம்). (41:53) என்கிறது வேத வரிகள்.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: