தோழமையுடன்

Tuesday, July 9, 2013

வார்த்தைகளான கடல்!

 (நபியே!) நீர் கூறுவீராக:
என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக
கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்,
என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)

இறைவேதமாம் குர்ஆன் மகத்தான இறைவனின் வார்த்தைகள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சங்கை மிகுந்த இதயத்தில் இறங்கியது.

அவர்களது புனித நாவால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

இன்று நம் கைகளில் இருப்பது
 
மனித மொழியில் வெளிப்பட்ட இறைவனின் பேச்சு.

 வார்த்தைகளான கடல்.


அந்த கடலிலிருந்து பலன் பெறுபவர்களை ஆன்மீக அறிஞர்கள் இப்படி வரிசைபடுத்துகின்றார்கள்:

கடலிலிருந்து கிடைத்த மீனை விலைக்கு வாங்கி உண்பவர்கள்,

கடலில் சென்று மீன்பிடிப்பவர்கள்,

ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்.

இவை முறையே:
 
பிறர் உபதேசங்களின் வாயிலாய் பலன் பெறுவோர்.

வெளிரங்கமான விளக்கங்களை ஆராய்ந்து பிறருக்கு வழங்கும் மார்க்க அறிஞர்கள்.

இறைப்பேரருளில் மூழ்கி ஏகத்துவ இறைஞான முத்துகளை எடுத்து வழங்கும் இறைஞானிகள்.

ஆகியோரைக் குறிக்கும்.

இனங்கும் மெய்ஞான பேரின்ப கடலில் இன்னமுதெடுத்து எமக்களிப்போன்’ என குணங்குடி அப்பா  செய்யதினா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி அவர்களைக் குறித்து பாடுவது இங்கே நினைவு கூறத் தக்கது. 

0 0 0 0

ஒரு முறை எனது குருநாதர் ஃபைஜிஷாஹ் (ரலி) அவர்களின் சபையில் குர்ஆன் கூறும் இறைஞானங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் என் குருநாதரின் சீடரான மிகப்பெரிய மார்க்க அறிஞர் ஒருவர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் அரபு கல்லூரியின் முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள். பொதுவாக இது போன்ற அவைகளில் முன்னால் அமர்திருப்போரின் வாங்கும் திறனுக்கேற்ப உயர்வான விளக்கங்கள்  இறையருளால் வெளியாகும். அன்றும் குருநாதரின் உரையில் குர்ஆனிய விளக்கங்கள் அருவியாய் கொட்டியது. அப்போது அந்த அறிஞர் உணர்ச்சி மேலிட்டு அழ துவங்கி விட்டார்கள். என் குருநாதரை நோக்கி, “ நான் இத்தனை வருடங்களாக குர்ஆனை ஆராய்ந்து வருகின்றேன். பல நூறு மாணவர்களுக்கு பாடமும் நடத்தி இருக்கின்றேன். இன்று நீங்கள் சொன்ன அருமையான விளக்கங்களை கேட்க்கும் போது இவை எல்லாம் எனக்கு தெரியவில்லையே என்ற கவலை என்னை வாட்டுகிறதே!” என சொல்லி வருந்தினார்கள்.

உடனே என் குருநாதர் அவர்களை அரவணைத்தவர்களாக, “ ஆலிம்சா நீங்க கவலைப்படாதீங்க. நீங்கள்  கலாமின் விளக்கத்தை ( கலாம் : பேச்சு இங்கே இறைவசனமான குர் ஆனை குறிக்கும்) பல்வேறு தப்ஸீர்களை (குரான் விரிவுறைகளை) ஆய்ந்து சிறப்பாக விளக்கக் கூடியவர்கள் தான். நாங்கள் கலாமின் விளக்கத்தை கலீமிடம் (கலீம் : பேசக்கூடியவன், இங்கு இறைவனைக் குறிக்கும்) பெறுகின்றோம். குர்ஆன், தப்ஸீர் எதை படித்தாலும் அதன் விளக்கத்திற்காக அவன் பக்கம் முதவஜ்ஜு (முன்னோக்குதல்) ஆகி விடுவோம். உங்கள் தொடர்பும் கலாமுடன் மட்டும் இல்லாமல் கலீமுடனும் ஆக வேண்டும்” என்றார்கள்.

0 0 0 0

ரமலான் நாளை ஆரம்பமாகிறது.

நம்மில் ‘தக்வா’ வை ஏற்படுத்த இறைவன் வழங்கிய அற்புத வேளை.

ரமலானில் செய்யக் கூடிய பிரதான நற்செயல் குர்ஆன் வாசிப்பு. இன்னும் அதன் கருத்துகளை உள்வாங்கினால் நூருன் அலா நூர் ( ஒளியின் மேல் ஒளி).

அந்த குர் ஆனிய ஒளியை உள்வாங்க என்ன செய்யலாம் என்ற  சிந்தனையும், அதை பற்றிய அறிஞர்களின் வழிகாட்டல் சிலவும் என் மனதில் ஓடியது அதை எனக்காவும், உங்களுக்காகவும் பதிவு செய்கின்றேன்: 

குர்ஆன்

இன்று நம் கைகளில் இருப்பது
 
மனித மொழியில் வெளிப்பட்ட இறைவனின் வார்த்தைகள்.

 வார்த்தைகளான கடல் என்பதை நினவில் கொள்ள வேண்டும்.

அடுத்து நோக்கம் (நிய்யத்)

இது முத்தக்கீன்களுக்கு நேர்வழிகாட்டும் இறைவனது வழிகட்டல்.
பயபக்தியுடன் கூடிய அந்த நேர்வழிகாட்டலை பெற்றுக் கொள்வது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்

அவ்வாறின்றி பிறருக்கு உபதேசம் செய்வதற்காகவோ அல்லது பிறரை எதிர்த்து விவாதிப்பதற்காக மட்டும் தகவல் தேடி குர்ஆனை அனுகுவுமேயானால் நமது சொந்த கருத்துகள், சித்தாந்தங்கள் மூலம் நாம் அடைந்த நமது முன்முடிவுகளுக்கு ஆதரவு தேட நேரிடலாம். அப்போது நாம் நேர்வழிக்காக இறைவனை முன்னோக்கவில்லை.  ஆகவே, நமது குரல் தான் நமது மனதில் எதிரொலிக்கும். இறைவாசகங்கள் நம்முடன் பேசாது.

இன்னும் இலக்கிய இன்பத்திற்காக மட்டும் படித்தால் இலக்கிய இன்பம் கிடைக்கலாம் ஹிதாயத் கிடைக்காது.

ஆகவே, பயபக்தியுடன் கூடிய அந்த நேர்வழிகாட்டலை பெற்றுக் கொள்வது தான் நம் குர்ஆன் வாசிப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்

அடுத்து திக்ரு செய்பவரின் இறைநெருக்கத்தை அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபி மொழியை பாருங்கள் :

அல்லாஹ்த் தஆலா கூறியுள்ளான்: எனது அடியான் என்னை நினைவு கூறும் போது நான் அவனுடனே இருக்கின்றேன். அவனது இரு உதடுகளும் என்னைக் கொண்டே அசைகின்றன. (புகாரி ஷரீப்)

குர்ஆன் ஓதுவது உயரிய திக்ரு. குர்ஆன் ஓதும் போது நம்முடன் அல்லாஹ் இருந்து நம் நாவை அவன் தான் அசைக்கின்றான்.குர்ஆன் ஓதுவது ஓர் இபாதத் அல்லவா?.

இபாத்தை எப்படி செய்ய வேண்டும்?
அல்லாஹ்வை பார்ப்பது போல் அல்லது அல்லாஹ் நம்மை பார்க்கின்றான் என்ற உணர்வோடு செய்ய வேண்டும் என விளக்குகிறது நபிமொழி. 

இன்னும்,

எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை. இந்த குர்ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை. செயலில் நீங்கள் எதையும் செய்வதுமில்லை. நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது நாம் சாட்சியாளர்களாக (ஷுஹூதன்) இருந்தே தவிர   (10:61) என்கிறது இறைவேதம்.

குர்ஆனின் வாசகத்தில் கண்கள் முன்னோகும் போது உள்ளம் இறைவனை முன்னோக்க வேண்டும். இறைவனை முன்னோக்கும் இறைஞானத்தை வல்ல இறைவன் நமக்கு வழங்கியருள்வானாக! ஆமீன்!

தொடர்புடைய சுட்டிகள்:


காதல் சொன்ன வேதம்

காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்

உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்கு


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: