தோழமையுடன்

Monday, August 15, 2011

நாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்”இமாம் குஷைரியின் ஓர் அற்புதமான ஆன்மிக நூல் “சூஃபி கோட்பாடுகள்” என்ற பெயரில் முனைவர் ரமீஸ் பிலாலி ( தமிழ் விரிவுரையாளர், ஜமால்முஹம்மது கல்லூரி, திருச்சி) அவர்களால் தமிழில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது. ரமீஸ் பிலாலி அவர்கள்  ஆன்மிக பாதையில் நடை பயில்பவர் (நூரியா ஆன்மிக தொடரில் உள்ள சங்கைக்குரிய  ஷெய்க். பிலாலி ஷாஹ் ஜுஹுரி என்னும் ஆன்மீக குருவின் சீடர்) என்பதால்  மொழிபெயர்ப்பு மிகவும் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தகங்களைப் போல் மிகவும் நேர்த்தியான வடிவில் வெளிவந்திருக்கும் இந்த நூலை பற்றி முனைவர் நாகூர் ரூமி அவர்களின் அறிமுகம் உங்கள் பார்வைக்கு…..நாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்” 

பதிமூன்றாம்  நூற்றாண்டை  சூஃபித்துவத்தின்  பொற்காலம்  என்று துணிந்து சொல்லிவிடலாம். மௌலானா  ஜலாலுத்தீன்  ரூமிக்காகவேகூட அப்படிச் சொல்லிவிடலாம். அவருடைய மஸ்னவி  என்ற  ஆன்மீகக்  காவியத்துக்கு  ஈடு இனணயாக  இந்த உலகில் வேறு எதையும் என்னால் சொல்லமுடியவில்லை. அவர் வாழ்ந்த அந்த நூற்றாண்டு சூஃபித்துவத்தின் பொற்காலம்தானே? ஆனால் அவர் மட்டுமல்ல. ஷெய்ஹுல் அக்பர் என்று புகழப்படும்  இப்னு அரபியும்  வாழ்ந்த  காலம்  அதுதான். ரூமிக்கு முன்னோடியான  ‘பறவைகளின்  மாநாடு’ என்ற அற்புதமான சூஃபி நூலை  எழுதிய ஃபரீதுத்தீன்  அத்தாரைக்கூட  இந்த  நூற்றாண்டுக்காரர்  என்று சொல்லலாம். காரணம் அவர்  13ஆம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்தான்  மறைந்தார்.

    ஆனால்  சூஃபித்துவம்  பற்றிய நூல்கள் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளிலேயே  எழுதப்பட்டுவிட்டன. அவற்றில்  ஒரு  முக்கியமான  நூல்தான்  அல்   குஷைரியின்  ‘ரிஸாலத்துல்  குஷைரிய்யா’  என்று  அறியப்படும்  நூல். அதை  ஆங்கிலம்  வழி  தமிழ்ப்படுத்தியிருக்கிறார்  பேராசிரியர்  தௌஃபீக் ரமீஸ்.  கொஞ்சம்  வியப்பாகவும் , பெருமையாகவும்  இருக்கிறது.  அவர்  செய்திருப்பது  மகத்தான  பணி. ஏனெனில்  சூஃபித்துவம்  பற்றி அறிந்து  கொள்ள  ஒவ்வொருவரும்   படிக்க  வேண்டிய  பாலபாடம்  போன்ற  நூல் இது. சூஃபி  மனநிலையை உருவாக்கத் தேவையான  மனப் பண்புகளை   விளக்கியும்,   விளக்கவும்  பல  கதைகளும்,   நபிமொழிகளும்,  வரலாற்று  நிகழ்வுகளும்.  திருமறையிலிருந்து  மேற்கோள்களும்,  அதில்  சொல்லப்பட்டிருக்கின்றன  என்பதைவிட  கொட்டப்பட்டிருக்கின்றன  என்றே சொல்ல  வேண்டும்.  

ஆமாம். கொட்டப்பட்டிருக்கின்றன.  ‘தவ்பா’ வில்  தொடங்கும்  அந்த  மனப்பண்புகள்   ஏக்கத்தில்  (ஷவ்க்) முடிகின்றன.  அப்பண்புகளை ஒருவர்  புரிந்து கொண்டால்,  உருவாக்கிக்  கொண்டால் போதும். அவரும் சூஃபித்தான். சூஃபி  என்றால் யார்  என்பதை  மிகத்  தெளிவாக  பாமரர்களுக்கு  விளக்குவது  கடினம்.  சூஃபி ச்சீஸ்த்?  சூஃபி சூஃபீஸ்த்  என்று பாரசீகத்தில் பழமொழி  இருக்கிறது.  சூஃபி  என்பவர்  யார்?  சூஃபி  என்பவர் சூஃபித்தான். இதுதான்  அந்த முதுமொழியின்  பொருள். 

ஆமாம்.    சூஃபித்துவத்தை   வார்த்தைகளால்  விளக்கமுடியாது.  அதை  அனுபவித்துத்தான்   உணர்ந்து கொள்ளவேண்டும். ஜென் என்று  சொல்லப்படும்  புத்தமதத்தின்  சூஃபித்துவம் மாதிரி. A rose is a rose is a rose  என்று  ஜெர்டர்ரூட்  ஸ்டெய்ன் என்ற  பெண்  கவிஞரின்  ஆங்கிலக் கவிதை  உலகப்  பிரசித்தி பெற்றது. ஒரு  ரோஜாப்பூவை  விளக்க  முடியாது   என்று  அதற்குப்  பொருள்  கொள்ளலாம்.  சூஃபித்துவம்  அதைப்  போன்றதுதான்.  ஆனால்  ஒரு ரோஜாவை இன்னொரு  ரோஜாவால்  விளக்க  முடியும்மல்லவா?  முடியும்.  நிச்சயமாக  முடியும். பல  படிகளைக்  கடந்து  மேலே  சென்று  விட்ட  ஒரு  சூஃபியால்  கீழ்படியில்  நின்று  கொண்டிருக்கும் ஒரு சூஃபிக்கு  நிச்சயம் வழிகாட்ட  முடியும். அவரையும் மேலே  இழுக்க  முடியும்.  நிலவைச் சுட்டும்  விரல்  போல.  

ஒன்பதாம்  நூற்றாண்டு  தொடங்கி  பதினாராம்  நூற்றாண்டு வரை எழுதப்பட்ட  சூஃபித்துவம் பற்றிய  நூல்கள்,  இலக்கியங்கள்   யாவும்   இப்படிப்பட்டவைத்தான்.  ஏனெனில் அவற்றை  எழுதியவர்களும்  சூஃபிகள்!

அப்படிப்பட்ட  ஒருவர்தான்  இந்த நூலின்  ஆசிரியர் குஷைரி. ஆமாம். இத்தகைய  நூல்கள்  எல்லோராலும்  புரிந்து  கொள்ளப்படுமா  என்றால்  படாது  என்றுதான்  சொல்வேன். ஏற்கனவே  வானில்  உச்சியில்,  மிக  உயரத்தில்  பறந்து  கொண்டிருக்கும்  ஒரு  தாய்ப்பறவை.  சிறகுகள்  முளைத்து,  பறக்கத்  தயாராக  இருக்கும்  தன்  குஞ்சிக்கும்  கற்றுக் கொடுப்பது மாதிரியானவைத்தான்  இத்தகைய  நூல்கள். 

அதனால்தான்  சூஃபி  நூல்களுக்கும்,  கருத்துக்களுக்கும்  எதிர்ப்புகள்  வருகின்றன.  சூஃபிகள்  பாமரர்களால்  துன்புறுத்தப்பட்டார்க்ள்.  ஏன்  கொல்லவும்  பட்டார்கள்.  ரூமியின்  குருவான  ஷம்ஸ்  தப்ரோஸையே  ரூமியின்  சீடர்கள்  வெறுத்து  கொல்லப்பார்ததாகவும்,  கொன்றதாகவும்  கூட  வரலாறு  உள்ளது.  மன்சூர்  ஒரு உன்மையைச்  சொன்னதற்காக  வெட்டிக்  கொல்லப்பட்டார். 

எனவே   இந்த   நூல்  எல்லாருக்குமானதல்ல.  மலர்ந்து  கொண்டிருக்கும்   ஞானிகளுக்கானது  For  the sufi  in the making.  சில  உதாரணங்கள்  சொன்னால்  தெளிவாகப்  புரியலாம்.

“தக்வா   என்பது   ஒருவன்  தன்  தக்வாவை  விடுவதே”  என்று  தக்வாவுக்கு  விளக்கம்  கொடுக்கிறார்  சூஃபி   அல்  வகீதி!  தக்வா-வை  இப்படி   விளக்கினால்  பாமரர்களுக்கு  நிச்சயமாகக்  குழப்பமே  ஏற்படும்.  தக்வா எனப்படும்  இறையச்சத்துக்கு  எதிராக  சூஃபிகள் பேசுகிறார்கள்   என்று  பாமர  அறிஞர்கள்  வாதிடலாம்.  ஆனால்  அதன் அர்த்தம்  அப்படியல்ல  என்று  விளக்க  நமக்கு  ஒரு குஷைரி  தேவை.   “அதாவது,  நான் இறையச்சம்  உள்ளவன்  என்ற  நினைப்பை  விட  வேண்டும்”   என்று  அவர்  விளக்கம்  கொடுகிறார் (ப:29)   
‘ஈகோ’  என்று சொல்லப்படும் “நான்” என்ற  உணர்வு  எவ்வளவு  நுட்பமானது.  அதை  எப்படியெல்லாம்  நசுக்க  வேண்டும் என்ற  கலையை  சூஃபிகள்  நன்கு தெரிந்து  வைத்திருந்தார்கள்.  அதனால்தான் பாமரர்களுக்கு  எளிதில்   புரிந்திடாத  ஒரு  மொழியில்  அவர்கள்  பேசினார்கள்.  தன்  காலத்தில்  வாழ்ந்த  மக்களின்  மொழியிலேயே  பேசினாலும்,  எழுதினாலும்   அதற்குள்   ரகசியமாக  அந்த   உண்மைகளை  உள்ளிட்டு   வைத்தார்கள். ரத்தம்  என்று  ஒன்று நம்  உடம்புக்குள்  ஓடுவது  எல்லாருக்கும்  தெரியும்  என்றாலும்,  அதில்  வெள்ளணுக்கள்,  சிவப்பணுக்களெல்லாம்  உள்ளன என்பது  விஞ்ஞானிகளுக்கு  மட்டுமே  தெரிவதுபோல,  வார்தைகளுக்கு  பின்னால்  இருந்த  உண்மையினை  ஞானிகளே  அறிவார்கள்.   

இமாம் அபூ ஹனிஃபா  அவர்கள்  தன்னிடம்  கடன்   பெற்றவரின்  வீட்டு  மர  நிழலில்  அமர்வதைத் தவிர்த்தார்கள். அது பற்றிக்  கேட்கப்பட்டபோது  கடனிலிருந்து  கிடைக்கும்  ஒவ்வொரு  பயனும்  வட்டியாகும்  என்று  நபிமொழியென்று  சொல்வதாக  விளக்கம்  சொன்னார்கள்  என்று  அற்புதமானதொரு   வரலாற்று  குறிப்பொன்று  இந்த  நூலில்  வருகிறது.   

மார்க்கத்தை  இமாம்களைவிட  சிறப்பாகவும்,  ஆழமாகவும்,  நுட்பமாகவும்   புரிந்து  கொண்டவர்கள்  உண்டா  என்ற  கேள்வியை  இந்த  நிகழ்வு  எழுப்புகிறது.    அவர்களெல்லாம்  வகுத்துக்  கொடுத்த    மத்ஹபுகள்   தேவையில்லை    என்று    இன்று   ஒரு  கூட்டம்  வாதிட்டுக் கொண்டிருக்கிறது.   மேதைகளின்   வாழ்வை   பேதைகள்   விமர்சிப்பது   நியாயத்தீர்ப்பு  நாளின்  அடையாளமாக   இருக்கலாம்!  என்ன  செய்வது?  ஆனால்  விழிப்புணர்வு  கொண்டவர்களுக்கு நிச்சயம்   இந்த   நூல்   வழிக்காட்டும்.   

      பேசுவது  மகிழ்ச்சி  அளித்தால்  பேசாதே!
      மௌனம்  மகிழ்ச்சி  அளித்தால்  பேசு!

என்று  பிஷ்ர் ஹாஃபி  என்ற  சூஃபி  கூறுகிறார்.  அது என்  சிந்தனையை  தூண்டியது.  நிறைய  எழுதிக்  கொண்டே  போவது  மகிழ்ச்சியளித்தால்  எழுதாதே  என்று  அவர்  என்  காதில்  இப்போது  சொல்கிறார். எனவே நான் நிறுத்திக் கொள்கிறேன்.

சூஃபித்துவ   உண்மைகளையெல்லாம்    கோர்த்து   ஒரு   மாலையாக்கினால்  எப்படி  இருக்கும்?  அது தான்  இந்த  புத்தகம்.   இந்த  மாலையை   மனதில்  கழுத்தில்  அனிந்து   கொள்பவர்  எவரும்  மறுமையில்  மனம் கமழ  எழுவார்   என்று  நம்புகிறேன்.

மொழிபெயர்ப்பு  என்ற  உணர்வையே  ஏற்படுத்தாத   நீரோட்டம்   போன்ற   நடையை  ரமீஸ்  சாதித்திருக்கிறார்.  நிறைய  இது போன்ற  பணிகளை  பேரா.ரமீஸ்  மேலும்  மேலும் செய்ய வேண்டும்     என்று  எல்லாம்  வல்ல  அல்லாஹ்விடம்  விண்ணப்பித்துக்  கொள்கிறேன்.       
   
மனிதனுடைய  நல்ல செயல்பாடுகள்  நான்கு வகையில்  பயன்தரவல்லவை:  உடலுக்கு,  மனதுக்கு,  அறிவுக்கு, ஆன்மாவுக்கு.   நான்காவது  வகையில் பயன் கொடுக்கக் கூடிய காரியத்தைச் செய்வது எல்லோராலும் முடியாது. அது ஒரு சிலருக்கே கொடுத்து வைக்கும்.
அப்படிக் கொடுத்து வைத்தவர்கள்  இரு  வகையினர். ஆன்மீகப் பாதை  தொடர்பாக  பேசியும், எழுதியும் வருபவார்கள் ,  மற்றும் அப்படிப்பட்ட நூலை பதிப்பிப்பவர்கள்.

அந்த வகையில் முனைவர் சாதிக்  பாட்சா  அவர்கள்  செய்துள்ள பணி மகத்தானது. காலத்தால்  அழியாதது.  அவரை நான் பாராட்டுவது  என்னை நானே பாராட்டிக்கொள்வது  போன்றது. ஏனெனில்  ஆன்மிக  உண்மைகளில்  திளைப்பவர்கள்  அனைவருமே அந்த உலகின் அதிர்வலைகளின்  ஒரே நேர்க்கோட்டில்  பயணிப்பவர்கள்.
இதுபோன்ற  பயனுள்ள  இன்னும்  பல நூல்களை அவர் பதிப்பித்துத்  தர  இறைவன் அவருக்கு  நீடித்த  ஆயுளையும்  ஆரோக்கியத்தையும்  தரவேண்டும்  என்று  பிரார்த்திக்கின்றேன்.

பக்கங்கள் : 420
விலை : ரூ. 300/-
வெளியீடு :
இராஜா பப்ளிகேஷன்ஸ்

4/1 S.S.H. Shelter
அசரத் அப்துல் சலாம் தெரு,
காஜா நகர்,
திருச்சி
செல்: 9600535241

3 comments:

Anonymous said...

ரூமி அவர்களடைய கருத்துக்களின் தாக்கங்களாள் புத்தகத்தை படிக்கும்ஆவல் உண்டகிறது!ரமீஷ் அவர்கள் இன்னும் சரியாக வெலியுலகிற்க்கு தெரியவராத சிறந்த எழுத்தாளர்.

qadiri said...

நாகூர் ரூமியின் சூபி வழி என்ற நூலையும் புல்லாங்குழல் நூருல் அமீனின் அகப்பார்வை என்ற நூலையும் பெற்றுக்கொள்ள உதவி செய்வீர்களா imtqadiri@gmail.com

புல்லாங்குழல் said...

அன்புள்ள காதிரி,

சூஃபி வழி ஒர் எளிய அறிமுகம் – டாக்டர் நாகூர் ரூமி புத்தகம் வேண்டின் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

கிழக்கு பதிப்பகம்
33/15 எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார் பேட்டை,
சென்னை – 600 018
விலை : ரூபாய் 225

‘அகப்பார்வை’ புத்தகம் வேண்டின் தொடர்பு கொள்ள:

அலை பேசி எண்

இந்தியாவில்:

M.குத்புதீன் எண் : 0091-9597555449
M.ஃபாரிஸ் எண் : 0091-9829275961

துபாயில்:

A.ரிள்வானுல் ஹஸன் : 00971-508535537

மின்னஞ்சல் : onoorulameen@gmail.com