தோழமையுடன்

Thursday, August 11, 2011

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றி யோசிக்க வேண்டி…

 உலகத்தமிழ் இலக்கிய மாநாடு பற்றி நண்பர் தாஜ் எழுதியதைத் தொடர்ந்து நான் ஆபிதீன் பக்கங்களில் பதித்த சில வரிகள் உங்கள் அன்பான பார்வைக்கு:


நானறிந்த வரையில் இஸ்லாமிய உலக தமிழ் மாநாடுகள், தற்கால இஸ்லாமியர்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதிதாக பங்களிப்பதை ஊக்குவிக்கவும், பெரும்பான்மையினரால் அறியப் படாமல் இருக்கும் பழைய இஸ்லாமிய இலக்கிய வடிவங்களை விவாதிப்பது, புதிய பதிப்புகள் வெளியிடுவது போன்ற நோக்கத்துடனே நடத்தப்பட்டன.  இத்தகைய ஒரு மாநாட்டை நான் முன்பு பணியாற்றிய சீதக்காதி அறக்கட்டளை முன்னிலை வகித்து நடத்தியது. அதன் பொறுப்பாளராக  மறைந்த சொல்லரசு ஜாபர் முஹைதீன் (அவர்கள் மலேயா நண்பனில் ஆசிரியராக பணியாற்றியவர்கள்)  அவர்கள் அரும் பணியாற்றினார்கள். அந்த வகையில் இது பற்றி கொஞ்சம் தெரியும் எனபதால் இதை இங்கே குறிப்பிடுகின்றேன்.

அடுத்ததாக என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த  ஓர் பிராமண சகோதரி,  “நீங்கள் (அதாவது முஸ்லீம்கள்) வீட்டில் யாராவது இறந்தால் சிரிப்பீர்களாம். குழந்தை பிறந்தால் அழுவீர்களாமே” என கேட்ட கேள்வி , பிற சமுதாய மக்களிடையே இஸ்லாமியர்களின் சமூக வாழ்வு எந்த அளவு மூடு மந்திரமாக உள்ளது என்ற கேள்வியை என்னுள் எழுப்பியது. அறியப்படாத கோடானு கோடி வாழ்க்கை பக்கங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்த இலக்கியம் ஓர் மகத்தான வடிவம். பெரும்பான்மை வாசகர்களின் மனதில் இருளாய், திரையாய் மறைவில் இருக்கும் இஸ்லாமிய வாழ்வுகள், நிகழ்வுகளின்  நேர்மையான பதிவுகள் அதிகமதிகம்  பதியப்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாய்” அதிகம் எழுதப்படாத ஒரு பெரிய பகுதி  special attention க்காக முன்னிறுத்தப்படுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

‘அறம் செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்பது போல தத்துவங்களை உரத்த குரலில் சொல்வது இலக்கியமாகாது என்பது முற்றிலும் உண்மை. அவைகள் கூட ரீமிசிக்ஸில் சக்கை போடு போடுவது வேறு விசயம்.  மனிதனை நெறிப்படுத்தும் தந்துவங்கள், வாழ்வின் அங்கமாய் போன விசயங்கள். அவற்றை புறந்தள்ளுவது கற்காலத்தை நோக்கிய பயணமாகிவிடும். தத்துவங்கள்   implied ஆக அமைந்து அகதரிசனங்களை ஏற்படுத்துவது பேரிலக்கியங்களின் ஒரு கூறாக கருதப்படுகின்றது.  ஜெயமோகன் கூட தத்துவம் கலந்த இலக்கியப் பரப்பை உன்னதமாக்கலின் (sublimationன்) ஓர் அங்கமாக்க விவாதித்து வருகின்றார். அந்த வகையில் உங்களை சிந்திக்க வேண்டுகின்றேன்.

இஸ்லாமிய இலக்கியம் எழுத நமக்கு சுதந்திரம் இல்லை. மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கும் விபரீத நிலை ஏற்படும் என சொல்லுவதை விட Controversial ஆன விசயங்களை தற்காலிகமாவது முன்வைக்காமல் பிற விசயங்களை எழுத முடியாதா என சிந்திக்க வேண்டுகின்றேன். ஜெயகாந்தன் சொல்லுவார் ஒரு சமூகத்தை பற்றி எழுதினால் அது அந்த சமூகத்தவரால் விரும்புமாறு இருக்க வேண்டும் என்று. அதற்காக இஸ்லாம் ஜிந்தாபாத் என கொடிபிடிக்க சொல்லவில்லை. எப்படி இருக்கலாம் என்பதை இலக்கிய ஆர்வலர்களான உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.
இலக்கியத் தரமற்ற ஒன்றை எந்தப் பெயரிட்டாலும் தேர்ந்த வாசகர்கள் புறந்தள்ளிவிடுவார்கள் என்பது தெளிவு. அதே நேரத்தில் அதிகம் எழுதப்படாத ஒரு சமூகத்தின் வாழ்வு, Controversial ஆன விசயங்களை கூடியவரை தவிர்த்து ஒரு special attention க்காக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற தனிப்பெயரில் / பெயரில்லாமல் முன்னிறுத்தப்படுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

ஓரளவு இலக்கியம் தெரிந்த தாஜ்,  ஆபிதீன் , நாகூர் ரூமிஹமீது ஜெஹபர்….  போன்ற தாஜின் லிஸ்டில் உள்ள கொஞ்சத்துக்கும் கொஞ்சம் இருக்கும் எழுத்தாளர்கள் கூட இது பற்றிய தங்கள் கருத்துகளை மாற்றி யோசிக்க தாயாராக இல்லை என்றால் தாஜே கூறியது போல இதை செய்ய மந்திரத்தால் இன்னொரு இஸ்லாமியன் திடுமென சாதனைக் கொம்புகளோடு தமிழ் இலக்கியத்திற்குள் படைப்பாளியாக வந்தால்தான் உண்டு!

எதிர்பார்ப்புகளுடன்,
நூருல் அமீன் 

No comments: