தோழமையுடன்

Wednesday, November 24, 2010

படைக்கும் படைப்பினம்

ஆபிதீனின் பக்கங்களில் இந்த வாரம் வெளிவந்த இடுகையை அவர் முன்னுரையுடன் மீள்பதிவு செய்கின்றேன்.



 சுடச்சுட ஒரு சூப்பர் தோசை!
 நண்பர் தா’ஜின்’ குறிப்புகளுடன் வந்த ‘படைப்பதனால் என் பெயர் இறைவன்?’ என்ற மாலனின் கட்டுரைக்கு, மறுமொழியளித்த சகோதரர் நூருல் அமீன், ‘ ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைப்பதற்குள் சூரியனுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டேன் என கூறினால் எப்படி சகோதரரே!’ என்று கேட்டிருந்தார். வலம்புரி ஜானின் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் , ‘தன்னைச் சொல்லவேண்டும், தகவலும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமானதல்ல;  அது இவருக்கு கைவந்திருக்கிறது; படித்த நாள் முழுவதும் அந்த வரிகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்’! ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற (அமீனின்) பதிவுக்கு மறுமொழியளித்த நண்பர்களுக்கு பதில் கொடுத்த பாங்கும் (நம்ம ‘வாங்கு’ அல்ல!) என்னை மிகவும் கவர்ந்தது.

‘அகப்பார்வை’ நூலின் ஆசிரியரான நூருல் அமீன் ஆன்மீகத்தில் ஊறிக்கொண்டிருப்பவர். ‘பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இவரின் வலைதளம் தெளிவு தருகிறது’ என்று கிளியனூர் சகோதர் அன்பின் இஸ்மத்தே பாராட்டிவிட்ட பிறகு இந்த ‘அடஹா’ என்ன சொல்ல? நிறைய எழுதுங்கள் அமீன்பாய். அப்படியே, தாஜையும் திருத்துங்கள்!

புகைப்படம் கேட்டேன். ‘வேண்டாம் நானா’ என்று மறுத்துவிட்டார் நூருல் அமீன். இதுவும் ஆன்மீகம்தான்!

ஆபிதீன்
***
புல்லாங்குழல் :

ஆபிதீன் நானா போன் செய்து இப்படி இப்படி வேண்டும் என கூறி ஒரு கவிதை எழுத சொன்னதும் ஒரு ஜோக்குதான் ஞாபகத்துக்கு வந்தது.

ஒருவன் ஹோட்டல் சர்வரிடம் சூடா, மென்முறுவலா, லேசா நெய்  ஊத்தி ஒரு சுவையான தோசை கொண்டு வா என கேட்க. சர்வர்சரக்கு மாஸ்டரை நொக்கி “ஒரு சாதா!” என சவுண்டு கொடுத்தானாம். நாங்க என்ன சீர்காழி தாஜா?!. வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம். ஏதோ என்னால முடிஞ்ச சாதா தோசை!

ஆபிதீன் நானா கவிதை எழுதக் கேட்டவுடன் உடனே எனக்கு தமிழாசிரியர் ஜோஸப் சாரின் நினைவு வந்தது. அவரை பற்றி இப்ப நான் சொல்லாவிட்டால் என் ஜென்மம் சாபல்யமடையாது.
பள்ளியில் படிக்கும் போது பெண் உரிமைக்காக பாடுபட்ட ஒரு கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் எங்கள் தமிழ் வாத்தியார் ஜோஸப் சார். கொஞ்சூண்டு மட்டுமே அந்த கவிஞரை பற்றி தெரிந்திருந்த நிலையில். சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியை உருட்டிப் பெரிதாக்குவது போல தெரிந்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்த்தேன். அப்படியும் பக்கம் காலி இருந்தது. மீதி இடத்தை நிரப்புவதற்காக

“மாங்கனி மங்கையர்க்கு மாசிலா கல்வி வேண்டி!
தீங்கனி சொற்களலாலே சிந்தைக்கு உரிமை வேண்டி!
கட்டுகள் கழற வேண்டி கைவிலங்ககல வேண்டி!
பாட்டினால தட்டி எழுப்பிய பாவலா உன் புகழ் வாழி!” என எழுதி கொடுத்தேன்.

“யாரு பாரதிதாசன் கவிதையா?” என ஜோஸப் சார் அப்பாவி தனமாய் கேட்க! அன்றைக்கு எனக்கு முளைத்தது கொம்பு.

பள்ளிக் கூடங்களுக்கு இடையே நடக்கும் கட்டுரை போட்டிகளில் அதை பற்றிய தகவல் அனுப்பும் அரசு அலுவலருக்கு எங்கள் ஜோஸப் சாரை பிடிக்காது என நினைக்கின்றேன். அவர் கடைசி நாளில் தான் ஜோஸப் சாருக்கு தகவல் தருவார். பாக்கியசாமி என்ற கண்டிப்பான எங்கள் பிரின்ஸி ஜோஸப் சாரை துரத்துவார். பிரமாண்டமான எங்கள் பாக்கியசாமி பார்வையாலேயே அவரை மிரட்ட, தூக்கி எறியப்பட்ட வாழைப்பழ தோல் போல் எங்கள் குழுவிடம் வந்து விழுவார் ஜோஸப் சார். அவசர கட்டுரை எழுதுவதற்காக எனக்கு விடுமுறை தந்து லைப்ரரிக்கு அனுப்புவார். எனக்கு உதவுவதற்கு ஆள் வேண்டும் என கூறி வம்படித்து ஸ்டீஃபன், மனோகர் என நணபர்களையும் இழுத்து கொண்டு சென்று விடுவேன். லைப்ரரியில் இஸ்டத்துக்கு படித்து விட்டு கடைசியில் சம்பந்தபட்ட விசயத்தையும் கொஞ்சம் படித்து வழக்கம் போல் சப்பாத்தி வளர்த்து அதிர்ஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ சில பரிசுகளும் (‘நம்ம ஊர்களின் தரம் அவ்வளவு தான்’ – ஆபிதீன் நானா திட்டுவது காதில் விழுகிறது.) வாங்கி தந்துவிடுவேன். இந்த எனது திறமையால்/திமிரால் பல முறை அந்த நல்ல மனிதரை பாடாய் படுத்தி இருக்கின்றேன். ஆனால் அவர் என் மேல் எப்போதும் பிரியமாய் தான் இருந்தார். குருவை படுத்திய பாட்டினாலோ என்னவோ என் கவிதை ஸ்கூல் லெவல் ஸ்டேண்டர்டிலிருந்து வளரவே இல்லை.

ஆகவே , படிக்கும் போது ஒரு பள்ளி மாணவன் நாற்பது வயதுக்கு மேல் எழுதிய கவிதை என்பதை நினைவில் கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சம் கவிதை என்கிற வஸ்து இருந்தால்  அதை ஸ்டீபன், மனோகர்,நேதாஜி,கிருஸ்ணமூர்த்தி, மாணிக்கம் எனும் எங்கள் குழுவினர் சார்பில்  ஜோஸப் சாருக்கு சமர்பிக்கின்றேன். சார் மன்னிச்சு கொஞ்சம் வளர வுடுங்க சார்.

இதோ நீங்க கேட்ட சாதா தோசை, இல்லை, கவிதை.

படைக்கும் படைப்பினம் (Created creator)

காட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.
ஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.
ஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.
ஓவியத் திறமை புதையலாய் இருந்தது.
புதையலின் நாவுகள் ஆசையை பேசிட
உணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.

புதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.
மலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.
புல்லினம் தொடங்கி வானவர் வரையில்
அத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.
ஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.

ஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.
படைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.
‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.
முத்திரை படைப்பாய் மானுடம் என்றது.

சின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.
சித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.
கவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது
கப்பல்கள் செய்து கடலில் மிதக்குது.
வானில் பறக்குது. வையத்தை ஆளுது.
படைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.
படைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.

காட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.
சாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.
காட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.
தன் புகழ் பாடியே தருக்கி திரியுது.

வானமும், பூமியும்
உன் வசமானது.
சக்தனின் சக்தி நீ.
வித்தகன் வித்தை நீ
உயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது
உயிர் விடும் நாள் முன்பே
உறக்கம் களைந்திடு!.

4 comments:

தூயவனின் அடிமை said...

கவிதை அருமையாக உள்ளது.

கிளியனூர் இஸ்மத் said...

பிடரியின் நரம்பிற்கும் சமீபமானவனின் சமீபத்தை நீக்கிய அற்புதமான கவிதை

புல்லாங்குழல் said...

இளம் தூயவன், கிளியனூர் இஸ்மத் உங்கள் கருத்துகளுக்கு நன்றி! எல்லா புகழும் இறைவனுக்கே!
தவறுகள் நம்முடையது.

Nachiya said...

அருமையான கவிதை, என்று நினைப்பதை விட பாடம் என்று தான் நினைகிறேன் .நன்றி
நாச்சியா ரபி.சிங்கப்பூர்