தோழமையுடன்

Wednesday, November 3, 2010

சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம்எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துகளையும், கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளையும் கலக்கி செய்த கவர்ச்சியான எழுத்துக்கு சொந்தக்காரர் நாகூர் ரூமி. ஒரு மர்ம நாவலை போல சுவராசியமாக செல்லும் இந்த நூலை  துபாயிலிருந்து அபுதாபி வரை சென்ற  ஒன்றேகால் மணி நேர பயணத்தில் பெரும்பகுதியை படித்து விட்டேன்.
சம்பிரதாயமான இஸ்லாமிய எழுத்தாளர்களிடமிருந்து மாறுபடும் நாகூர் ரூமியின் எழுத்துகள் முஸ்லிம் அல்லாத மக்களிடையே பரவலான வாசக தளத்தைக் கொண்டவை. ஆனாலும் முதல் வாசிப்பில் எனது பார்வையில் தென்பட்ட சின்ன சின்ன குறைகள் இந்த புத்தகத்தை   ஆன்மீக நண்பர்களுக்கு பரித்துரை செய்வதில்  கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்தியது.  சற்று ஆழ்ந்து வாசித்தபோது தான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என தானறிந்த ஆன்மீகத்தை பரவலாக அறிமுகம் செய்வதில் அவருக்குள்ள  காதலையும், இந்த நூலுருவாக்கத்தின் பிண்ணனியில் இருந்த கடும் உழைப்பையும் உணர முடிந்தது.  அவர் எழுத்திலுள்ள சத்தியத்தின்  கவர்ச்சி  என்னை வசீகரித்தது. மேலும், எழுதுவதிலும், வாசிப்பதிலும் அவரவர் மன அமைப்பின் நிறங்கள் முற்றிலுமாக தவிர்க்க முடியாதவை என்பதையும் மனதில் கொள்ள தயக்கம் முற்றிலுமாக விலகியது. இதோ என் சுருக்கமான அறிமுகம் உங்கள் பார்வைக்கு.


நாகூர் ரூமி ஓர் அடிப்படைவாதி. ஜிஹாதி. மேலும் தீவிரவாதி
இஸ்லாம் என்றால் அடிப்படைவாதம்:
அடிப்படைவாதம் என்பதன் ஆரம்பப்பாடம் ஜிஹாத்:
 ஜிஹாத் என்பது இஸ்லாமிய தீவிரவாதம்;
இப்படி ஒரு பிம்பம் மேற்கத்திய ஊடகங்களின் வாயிலாக தவறான விளக்கங்களுடன் உருவாக்கப்பட்டு, சில உள்நாட்டு அரசியல்வாதிகளால் ஊதி பெரிதாக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளின் அடிப்படையான தஸவ்வுஃப் என்னும் மெய்ஞானத்தை அறிமுகம் செய்கிறது நாகூர் ரூமியின் இந்த நூல். 

அந்த வகையில் நாகூர் ரூமி ஓர் அடிப்படைவாதி. ஜிஹாதி. மேலும் மனித நேய வெறியை பரப்பும் ஒரு தீவிரவாதியும் கூட. இந்த நூலும் அடிப்படைவாதமான ஜிஹாதைப் பற்றி தான் பேசுகின்றது. மேற்கத்திய ஊடகங்களின் விளக்கத்தில் அமைந்த ஜிஹாதை பற்றியல்ல. முஹம்மது நபி வலியுருத்திய பெரிய ஜிஹாதைப் பற்றி. 

என்ன அந்த பெரிய ஜிஹாத்?. ஒரு முறை தற்காப்புக்காக நடந்து முடிந்த ஒரு போர்களத்திலிருந்து திரும்பி கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் தன் தோழர்களை பார்த்து “நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதை நோக்கி செல்கின்றீர்கள்” என்றார்கள். மனதுடன் போராடி மனதை பரிசுத்தபடுத்தும் மகத்தான அறப்போர் தான் நபிகள் நாயகம் கூறிய அந்த பெரிய ஜிஹாத்.

விரிவான எளிய அறிமுகம்


சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் என்ற தலைப்பு தஸவ்வுஃபின் அரிச்சுவடி என்ற விதத்தில் மட்டுமே பொருந்தும். மற்றபடி  412 பக்கங்களில் கொஞ்சம் விரிவான அறிமுகமாக அமைந்துள்ளது இந்த நூல்.

 “பாதுகாப்பு வேண்டுமென்றால் கரையில் நில். பொக்கிசம் வேண்டுமென்றால் கடலுள் செல்” என்ற அறிஞர் சாஅதியின் கவிதை சவாலுடன் ஆரம்பிக்கிறது இந்த நூல். திருக்குர்ஆனின் உள்ளார்ந்த ஆன்மீக கருத்துக்களே கவிதையில் ஆழ்கடலாக உருவகிக்கப்பட்டுள்ளது. அறிஞர் சாஅதியின் கவிதை வாயிலாக ஆழ்கடலில் முத்தெடுக்க அழைத்தவர். உடனே கரை ஏறி  காதல், முத்தம் என உரையை தொடர்கிறார்.  தன்னிலை விளக்கமாக "இரண்டு முஸ்லிம்களிடையே ரத்த சம்பந்தம் இருக்கலாம். ஆனால் முத்த சம்பந்தம் எதற்கு என்று பெரும்பாலோர் நினைக்கலாம், முகம் சுளிக்கலாம். விமர்சிக்கலாம். இஸ்லாத்தில் இப்படிப்பட்ட ஆன்மீகமெல்லாம் இல்லை என்று சொல்வதில் உண்மையிருப்பதாகவும் நம்பலாம். அப்படி விரும்புபவர்கள் இஸ்லாத்தையும் புரிந்து கொள்ளவில்லை. அதன் உள்ளார்ந்த அர்த்தமாக இருக்கும் ஆன்மீகமான சூஃபித்துவத்தையும் புரிந்து கொள்ளவில்லை. ஏன், முத்தத்தை கூட புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம்" போன்ற வரிகளில் ஒரு கனமான சப்ஜெக்டை எளிமையாக  தரும் யுக்தி பளிச்சிடுகின்றது. இருந்தாலும் முத்தம் பற்றிய சற்று அதிகப்படி யான விவரிப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

“சூஃபி வழியில் இரண்டு என்பதே கிடையாது ஒன்று மட்டும் தான்” போன்ற வரிகள் இறைவனும் சிருஷ்டியும் ஒன்று என்னும் அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல . நாகூர் ரூமி மட்டுமல்ல எந்த சூஃபியும் ஏகத்துவ ஒருமை கொள்கையை ‘இறைவனும் சிருஷ்டியும் ஒன்று’ என்ற அர்த்தத்தில் கூறவில்லை. Existence – இருப்பு என்பதை கவனித்து எந்த காலத்திலும் சுயமாக இருப்பவன் இறைவனைத் தவிர யாருமில்லை . இறைவனைத் தவிர உள்ள அனைத்தும் ஒவ்வொரு வினாடியும் அவன் தயவால் இருப்பவை என்பதை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை.

 சூஃபித்துவத்தின் வரலாறு, அடிப்படைகள், பல்வேறு பாதைகள், மகத்தான சூஃபி ஞானிகள் , அவர்களில் உணர்வுகள், எழுத்துகள் என பல்வேறு தளத்தினை பற்றி விவரமாக எழுதியுள்ளார்.

நீங்கள் ஆன்மீகத்தில் ஊறித் திளைத்தவரா? இந்த புத்தகம் உங்களுக்கு தேவை இல்லை.
நீங்கள் ஆன்மீகம் என்றாலே வெறுப்பவரா? உங்களுக்கும் இந்த புத்தகம் தேவை இல்லை.
தேடுதல் வேட்கை கொண்ட சத்தியத்தின் காதலரா? உங்களுக்குத் தான் இந்த புத்தகம். ஒரு மகத்தான ஞான வேட்டைக்கான புதையல் தீவின் பயணத்திற்கு ஒரு சுற்றுலா கப்பலின் வசீகரத்துடன் உங்களை வரவேற்கிறது நாகூர் ரூமியின் புத்தகம்.

நிறைவான புத்தகமாக வெளியிட்டுள்ள கிழக்கு பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.  ஒரு நல்ல முயற்சியை வரவேற்கும் விதத்தில் இந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி தாங்களும் படித்து, தகுதியுடைய நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க நட்புடன் உங்களை  வேண்டுகின்றேன்.

அன்புடன்,
ஒ.நூருல் அமீன் 

நூல் வெளியீடு:
33/15 எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார் பேட்டை,
சென்னை – 600 018
விலை : ரூபாய் 225

1 comment:

அரபுத்தமிழன் said...

அறிமுகத்திற்கு நன்றி நூ.அ. நாநா.