தோழமையுடன்

Saturday, September 11, 2010

என்றென்றும் காதலுடன்


நம் மனைவி, மக்களை விட ஏன் நம் உயிரையும் விட இறைத்தூதரை நேசிக்காதவரை நம் இறை நம்பிக்கை முழுமையடையாது என்பது ஒரு பிரபலமான நபிமொழியின் சாரம். ஏன் அந்த அளவு நபியை நேசிக்க வேண்டும்?
000
ஒரு ஞானாசியரிடம் எனக்கு இறைஞான பாடங்களை சொல்லித் தாருங்கள் என ஒரு மனிதன் வந்தான். அவனிடம் “என்னிடம் மாணவனாக ஆகுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றார்” அந்த குரு.
“என்ன தகுதி… சொல்லுங்கள்” என அவன் ஆவலாய் கேட்க,
உன் வாழ்க்கையில் யாரையாவது அல்லது எதையாவது நீ காதலிசிருக்கியா? என்றார்.


இந்த சம்பவத்தை தொடர்வதற்கு முன்பு ஒரு சிறிய இடைவேளை….அதில் இரண்டு காதல் இல்லாத கதைகள்.
காதல் இல்லா வணக்கம்
பாலைவனத்தில் ஒரு பெரியவர் தொழுது கொண்டிருந்தார், அந்த வழியாக வந்த மஜ்னூன் (நம்ப ஃபேமஸ் லைலாவின் காதலன் மஜ்னூன் தான்) அவருக்கு முன்னால் அவர் தொழுகை விரிப்பையொட்டி குறுக்கே நடந்து சென்றான்.
தொழுகையை அவசர அவசரமாக முடித்த அந்த பெரியவர் கைதட்டி மஜ்னூனை அழைத்தார். அவன் அருகே வந்ததும் “மஜ்னூன்னு உனக்கு பேரு வச்சது சரியாத்தான் இருக்கு (மஜ்னூன் என்றால் பைத்தியக்காரன் என்று பொருள்). தொழுதுகிட்டு இருக்கும் போது குறுக்கே போக கூடாதுங்குற அறிவு கூட உனக்கு இல்லையே” என்று அவனை வசைபாடினார்.
பொறுமையாக கேட்டுக் கொண்டுந்த மஜ்னூன் “ பெரியவரே என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியவன் சற்று தயங்கியவனாக,  “ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்…” என இழுத்தான்.
“என்ன சந்தேகம்டா உனக்கு பைத்தியகார சந்தேகம்?” என்றார் பெரியவர்.
“இல்லை லைலாட நினைவில் இருந்த எனக்கு நீங்க தொழுதுகிட்டு இருக்கிறது தெரியலையே! மவுலாட(இறைவனோட) சிந்தனையிலே தொழுது கொண்டிருந்த உங்களுக்கு நான் குறுக்கே போனது எப்படி தெரிஞ்சது” என்றார்.
பெரியவர் வெட்கித் தலை குனிந்தார்.
காதல் இல்லா ஞானம்
மனித குலத்தின் விரோதியான செய்தான் (சாத்தான்) ஆரம்பத்தில் இறைவனிடத்தில் உயரிய அந்தஸ்த்தில் இருந்தான். இறைஞான பாதையில் மிகப்பெரிய அறிஞனாகவும், வணக்கசாலியாகவும் இருந்தவன் அவன். இறைவன் தன் கரங்களால் படைத்த முதல் மனிதர் ஆதம் நபிக்கு மரியாதை நிமித்தம் சிரம்பணிய சொன்னபோது அவன் இறை உத்தரவுக்கு கட்டுபடாமல் மறுத்து விட்டான். அதனால் அவன் இறைவனிடம் பெற்றிருந்த அந்தஸ்தை இழந்து சபிக்கப்பட்டவனான். இந்த சரித்திரம் நாம் அறிந்ததே!. ஆனால் இங்கே அறிஞர்கள் கொடுக்கும் ஒரு முக்கியமான விளக்கம் என்னவென்றால். செய்தான் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும் இறைவன் மீது நேசம் கொண்டவனல்ல. இறைக்காதலற்ற அவன் இதயம் இறைவன் இருக்கும் இறையாசனமாகும் தகுதியற்றிருந்தது. காதலற்ற அவன் அறிவு தான் அவனை கீழ்படிதலற்ற விதண்டாவதத்திற்குத்  வழி வகுத்தது என்பது தான்.
இடைவேளை முடிந்தது சம்பவத்தை தொடருங்கள்…..
உன் வாழ்க்கையில் யாரையாவது அல்லது எதையாவது நீ காதலிசிருக்கியா? என்றார்.
“காதலா?” என அவன் யோசிக்க. “மனிதன்னா எதுலயாவது ஒரு பிரியம்- விருப்பம் இருக்கத் தானே செய்யும். நல்லா யோசிச்சு சொல்லு”என்றார் குரு
“பிரியமா?” என அவன் யோசித்து விட்டு கொஞ்சம் தயங்கியவனாக “என் வீட்டில் ஒரு எருமை மாடு இருக்கிறது. அது மேலே தான் எனக்கு உசிறு” என்றான் .
“நல்லது” என கூறிய குரு ஒரு அறையில் அவனை அமரச் செய்து “ உன் எருமையை பற்றி சிந்தித்து கொண்டிரு  மாலை வந்து உன்னை பார்க்கின்றேன்” என சொல்லி விட்டு சென்றார். அவன் சதா எருமையின் சிந்தனையிலேயே இருந்தான்.
அந்தி சாய்ந்ததும் அவன் இருந்த அறைக்கு வந்த குரு “தம்பி வெளியே வா!” என அழைத்தார். அறையின் வாசல் கதவுவறை வந்தவன் அங்கேயே தயங்கி நின்றான்.
“வெளியே வா தம்பி” என மீண்டும் குரு அழைக்க அவன் “குருவே வாசல் சின்னதாக இருப்பதால் என்னால் வெளியே வர முடியவில்லை கொம்பு கதவில் இடிக்கிறது” என்றான். எருமை மாட்டின் சிந்தனையிலேயே இருந்தவன் அந்த எருமையின் குணத்தில் ஆகிவிட்டான். அவனை வாறி அணைத்த குரு “உன் இதயத்திற்கு இறைஞானத்தை வாங்கும் தகுதி இருக்கிறது வா!” என அவனை பாடசாலைக்கு அழைத்து சென்றார்.
சாக்கடையை சென்றடையும் மழை நீரை வாய்க்கால் வெட்டி வரப்புகளுக்கு சென்றடைய செய்வது போல் அற்ப விசயங்களின் மீது விரயமாகும் நம் காதல் என்னும் உன்னத உணர்வை நபி நேசமாக இறைக்காதலாக மடைமாற்றம் செய்வதுதான் குருவின் (வலியே முர்ஷித்கள்) தலையாய கடமை. யாரை (அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட) வழிகேட்டில் விட்டு விட இறைவன் நாடிவிட்டானோ அவர் ஞான உபதேசியை(வலியே முர்ஷிதை) பெற்றுக் கொள்ள மாட்டார் என்கிறது இறைவேதம்.
நபி நேசம்
மனிதன் யாரை நேசிக்கின்றானோ அவரது குணங்களை தன்னில் கொள்வதை நாம் பார்க்கின்றோம். முஹம்மது நபி(ஸல்) ஒரு போரின் போது ஒரு பல்லை இழந்தார்கள் என்று கேள்விபட்டவுடன் அது எந்த பல் என தெரியாததால் இந்த பல்லாக இருக்குமோ …இந்த பல்லாக இருக்குமோ என தன் ஒவ்வொரு பல்லாக பிடுங்கிவிட்ட உவைஸுல் கர்னி என்ற நபியின் காதலரின் சரித்திரம் நமக்கு சாட்சியாக இருக்கிறது.
நபி நேசம் எதற்கு என்பதை அறியும் முன் மனித வழ்வின் நோக்கத்தை பற்றி மௌலானா அபுல் கலாம் ஆசாத் கூறுவதை கேளுங்கள். “இறைவனின் பண்புகளின் சாயலை தனக்குள் உண்டாக்கி கொள்ளலே மனிதனுடைய வாழ்க்கையின் நோக்கமாக இருத்தல் வேண்டுமென இறைவேதம் கூறுகின்றது. மேலும் அது மனித வாழ்க்கையை ஒரு எல்லை என குறிப்பிட்டு, அதில் மிருகதன்மை முடிவடைகின்றதெனவும், பிறகு மற்றதோர் உயர்ந்த வாழ்க்கை பிறக்கிறதெனவும் கூறுகின்றது. விலங்கு தன்மையிலிருந்து மனிதனை பிரித்து, அவனுடைய உயர்ந்த பதவியில் சேர்ப்பது அவனது மனித தன்மையே ஆகும். இந்த மனித தன்மை என்பது இறைவனுடைய பண்புகளின் பிரதிபிம்பமேயன்றி வேறொன்றுமில்லை. எனவே மனிதனிடம் பெரும்பாலான இறைபண்புகள் குடிகொண்டிருந்தான்றி அவனிடம் மனித தன்மை முழுமை பெற முடியாது.” என தன் திருமறை விரிவுரையில் கூறுகின்றார் மௌலானா அபுல் கலாம் ஆசாத்,
முஹம்மது நபி என்ற மாமனிதர் இறைவனின் அழகிய குணங்களில் மனிதர்களுக்கு சாத்தியமான அளவின் உச்சத்தை தன்னிடம் பிரதிபலித்தவர்கள். மனிதகுலத்தின் மகத்தான முன் மாதிரியாக வந்தவர்கள்.
நபியை நேசித்தால் நபியை நம்மில் பெற்றுக் கொள்வோம்.
நபியின் சொல், செயல், அங்கீகாரம் நம் வாழ்வின் போக்கில் மிளிரும். அதனால் அன்பும், பண்பும் கொண்ட அருமையான சமுதாயம் உருவாகும். நபித் தோழர்களின் வாழ்வே இந்த சரித்திர உண்மைக்கு சான்றாக உள்ளது.
நபியே நீங்கள் சொல்லி விடுங்கள் நீங்கள் “நீங்கள் இறைவனை நேசிப்பவராக இருந்தால், என்னை பின்பற்றுங்கள்.இறைவன் உங்களை நேசிப்பான்.”(3:31) என்கிறது இறைவேதம். ஆக,
நபியிடம் நாம் கொண்ட காதல் – அது
இறைவனின் மீதுள்ள காதல்.
ஆதலினால் நபியை என்றென்றும் காதல் செய்வோம்.

10 comments:

சீமான்கனி said...

நோம்பு நேரத்தில் அடிக்கடி படிக்கக்கூடிய பதிவுகளாய் உங்களுடையது அமைக்கப் பெற்றது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கு... அமீன் சார்... ஈத் பெருநாள் வாழ்த்துகள்...பதிவை பற்றி சொல்ல வேண்டுமானால் காதலின் இன்னிரு கோணமும் அதன் உன்னதமும் குட்டி குட்டி கதைகளோடு விளங்க விட்டீர்கள்...நன்றி...

புல்லாங்குழல் said...

நன்றி சீமான் கனி! எங்கும் இறைநம்பிக்கையும், அமைதியும்,ஒற்றுமையும்,மகிழ்வும் தழைத்தோங்க இறைவனை இறைஞ்சுகின்றேன்.உங்களுக்கும் இன்னும் அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

HM Rashid said...

சிந்தனையை தட்டிஎழுப்புகிற அருமையான பதிவு!!
இந்த புல்லாங்குழல் வாயிழாக மௌலானா ரூமியின் இசையையும் கேட்க இயலுகிறது!!தன்னை காட்டத்துடிக்கும் இந்த பதிவுலக காலக்கட்டத்தில் ,அல்லாஹ்வைபற்றிய அறிவை என்போன்ற மூடர்களுக்கும் விளக்கும் விதம் அருமை!!இன்னும் நிறைய பதிவுகள் இட அவன் உங்களுக்கு உதவி செய்வானாக!!
"நேசனின் ரகசியத்தை மறைத்து வைப்பதே மேலானது,ஆனால் அதை நீ கதையின் வடிவில் கேட்டுக்கொள்"- மௌலானா ரூமி(ரஹ்)

புல்லாங்குழல் said...

சகோதரி அன்னு உங்கள் வாழ்த்துக்கு நன்றி! இயன்றவரை படித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சகோதரர் ரஷீத் உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! ஆமீன்

Ahamed irshad said...

ரொம்ப நல்லாயிருந்தது அமீன் சார்..அதிலும் அந்த மஜ்னு பெரியவரின் உரையாடல் நல்ல ஒரு எடுத்துக்காட்டு.. அதே போல் நிறைய தடவை நான் யோசித்தது உண்டு.. உதாரணமாக என்னிடம் வந்து ஒருவர் சொன்னார்.' நான் தொழுதுக் கொண்டிருக்கும்போது பக்கத்தில ஒருவன் ஆள்காட்டி விரலை ஆட்டிக்கிட்டே இருக்கான் ஒருவேளை 'அவன் நஜாத்தா இருக்குமோ' அப்படின்னாரு.. அதுக்கு நான் அவன் விரல் ஆட்றதை கவனித்த உங்களின் தொழுகை கூடுமா என்றேன். சத்தத்தையே காணோம். தொழுகும்போது கவனம் சிதறல்கூடாது என்பதற்கு இதைவிட உதாரணம் வேற என்னத்த சொல்றது...

உங்களுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம்கணிந்த நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.(லேட்டா சொல்லிட்டேனோ?)

புல்லாங்குழல் said...

அன்பு தம்பி இர்ஷாத்! தாங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் கேட்டிருக்கின்றேன்.வாழ்த்துகளுக்கு நன்றி!.உங்கள் விமர்சன பதிவுகளை தொடருங்கள்.

Chitra said...

“இல்லை லைலாட நினைவில் இருந்த எனக்கு நீங்க தொழுதுகிட்டு இருக்கிறது தெரியலையே! மவுலாட(இறைவனோட) சிந்தனையிலே தொழுது கொண்டிருந்த உங்களுக்கு நான் குறுக்கே போனது எப்படி தெரிஞ்சது” என்றார்.

.............அதானே, நியாயமான கேள்வி தான்!
நேரம் இருக்கும் போது, வாசித்து பாருங்கள்!
http://konjamvettipechu.blogspot.com/2009/12/blog-post.html

புல்லாங்குழல் said...

நன்றி சகோதரி சித்ரா தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிந்து வாருங்கள்.

நாகூர் ரூமி said...

அன்புச் சகோதரர் நூருல் அமீன், அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல பதிவுகள். இவற்றில் உங்கள் ஆன்மிகப் பாதையின் நிறம் தெரிகிறது. தொடருங்கள். சரி, சாத்தான் ஏன் ’செய்தான்’ ஆனான்? ரொம்ப புதுமையாக இருக்கிறதே? சாத்தான் சாத்தானாகவே இருப்பதில் என்ன பிரச்சனை?

புல்லாங்குழல் said...

உங்கள் வருகைக்கு நன்றி!