தோழமையுடன்

Friday, August 27, 2010

இறைவன் இருக்கின்றானா?


பொருள்முதல்வாதம் :

பொருள் முதல் வாதம் என்பது ஆதிமுதல் இருப்பது பொருள்கள் மட்டுமே என்பதில் துவங்குகிறது. மனிதன், விலங்கினம், தாவரங்கள், வானம், மலை, கடல், பூமி அனைத்தும் ‘பொருள்கள்’ என்ற வார்த்தையில் அடங்கும். இந்த பொருள்கள் அனைத்தும் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற நிலைகளுக்குட்பட்டவை. ஆதியிலிருந்து இருக்கும் இந்த  பொருள்களின் அடிப்படை அலகு ‘அணு’ எனப்படும். 


 நாம் காணும் அனைத்து பொருள்களும் அந்த அணுக்களின் இயக்கத்தால், கூட்டுறவால் உருவான பல்வேறு நிலை மாற்றங்களின் பரிணாம வளர்ச்சியால் உருவானவை. வானம், பூமி, மலை, கடல் என எங்கும் பொருள்கள் மட்டும் தான் உள்ளது. Existence எனப்படும் ‘இருப்பு’ என்பது பொருள்களுக்கு மட்டும் தான் உள்ளது. எளிமையாக சொன்னால் இருப்பது பொருள்கள் மட்டுமே. Physical world என்னும் பௌதீக உலகத்தை தாண்டி வேறு ஒரு உலகம் இல்லை. நம் புலன் உணர்வுகளாலும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவாலும் உறுதி செய்யப்படாத கடவுளின் இருப்பு (Existence) என்பது வெறும் கற்பனை  தான் என்பது பொருள் முதல்வாதிகள் (Materialist) என்னும் இறைமறுப்பாளர்களின் வாதம்.

பொருள்முதல்வாதிகளின் இறைமறுப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களின் அறிவியல் பூர்வமான நோக்கு பாராட்டுதலுக்குரியது. ஆனால் இந்த பொருள்களை நாம் எதைக் கொண்டு அறிகின்றோம் என்ற கேள்வி அவர்களின் அறிவியலால் விடை காண முடியாத கேள்வியாகவே இருக்கிறது. ஆன்மா என்பதை இன்ன வகையான பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையில் அதை ஏற்பதிலும், மறுப்பதிலும் பொருள்முதல்வாத நிலையில் ஏற்பட்ட  தடுமாற்றம் ஆன்மீகம்  சார்ந்த அறிவியல்  அறிவின் தேவையை வலுவாக வலியுறுத்துகிறது.

ஆன்மீக அறிவியல் பார்வை:

ஆன்மீக அறிஞர்கள் புலனுணர்வின் எல்லையை ஒரு அடிப்படையாகக் கொண்டு உலகை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்தறிகின்றார்கள். ஒன்று புலனுணர்வுகளை கொண்டு பகுத்தறிவால் உணரப்படும் Physical world என்னும் பௌதீக உலகம். இரண்டாவது புலனுணர்வுகளுக்கு எட்டாத ஆன்மீக அறிவைக் கொண்டு உள்ளத்தால் அறியப்படும் மறைவுலகம். இந்த மறைவுலகைப் பற்றிய நம்பிக்கை ஓர் இறைநம்பிக்கையாளனின் அடிப்படை அம்சமாகும்.

பௌதீக உலகத்தின் இருப்பை ஆன்மீக அறிவொளியில் ஆராய்வதன் மூலம் மறைவான உலகத்தை பற்றிய அறிவின் வாயில்கள் திறக்கும். ஆகவே முதலில் இந்த புலன்களின் எல்லையில் இருக்கும் பௌதீக உலகைப் பற்றி சிறிது பார்ப்போம்.

இந்த பொருள்களை திட நிலை, திரவ நிலை, வாயு நிலை இன்னும் plasma stage(உ-ம் சூரியன்) என்ற நிலைகளின் மூலமும், கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம் என நிறங்களின் மூலமும், கட்டம், வட்டம், உயரம், குட்டை என வடிவங்களின் மூலமும். இனிப்பு, புளிப்பு, கரிப்பு, துவர்ப்பு என சுவைகளின் மூலமும், எடை, பளபளப்பு, மினுமினுப்பு, சொர சொரப்பு இது போன்ற பண்புகளின் மாறலாகத்தான் அறிகின்றோம்.

எந்த ஒரு பெயரில் அழைக்கப்படும் ஒரு பொருளையும் அதன் தன்மைகள், திறமைகள் எனப்படும் பண்புகளின் வாயிலாகவேயன்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது. முயன்று பாருங்கள். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக் கொள்வோம். அந்தப் பூவின் நிறம், மணம், வடிவம், மென்மை, வளவளப்பு இப்படி அதன் தன்மைகள் வாயிலாகத்தான் இது ரோஜாப்பூ, இது மல்லிகைப்பூ என அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு விளக்கத்திற்காக மேற்கூறிய பூவின் தன்மைகளை பூவை விட்டுப் பிரித்து விட்டோம் என வைத்து கொள்ளுங்கள். அப்போது அது என்ன பூவென்று மட்டுமல்ல என்ன பொருள் என்றும் கூட நம்மால் கூறமுடியாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும்  கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (76:1) என்ற வேதவரிகள் இங்கே நினைவு கூறத்தக்கது. இன்ன பொருள் என சொல்ல முடியாத ஒரு நிலையே மனிதனின் ஆரம்ப நிலை. இறைவன் வழங்கிய தன்மைகளின் தொகுப்பான ஒரு இருப்பைக் கொண்டுதான் மனிதன் என்பவனே காட்சியளிக்கின்றான். இப்படி பல்வேறு பண்புகளின் தொகுப்பாக புலனுணர்வுகளின் வாயிலாகத் பெற்ற தகவல்களை பகுத்தறிந்து தான் மனிதன் முதல் உள்ள அனைத்து பொருள்களின் இருப்பை (existence) நம்மால் உணர  முடிகின்றது.

இப்படி புலனுணர்வு மூலம் பெற்ற அறிவும் இன்னும் அறிவியல் சார்ந்த பகுத்தறிவும் பொருள்களின் மூலத்தை (Materia Prima) “இன்னதுதான்” என இது வரை தெளிவாக மெய்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் மனிதனும், மிருகங்களும், பறவைகளும், கல், கரடு, தங்கம் வெள்ளி, பித்தளை இன்னும் அனைத்து பொருள்களின் மூலப் பொருளும் ஒன்றாக இருக்கும் சாத்தியத்தை (hypothesis)  மட்டும் அறிவியல் ஆய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டு விட்டது என சொல்லலாம். ஆனாலும் அனைத்தின் ஆதரமான ஏகாந்த இருப்பின் உள்ளமையை - உண்மையை (The Truth of Absolute Existence Per se) பரமமானது, புனிதமானது என்றெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது. அதுவும் தோன்றுதல், வளர்தல், மறைதல் என எல்லைக்குட்பட்ட ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும் என்றார்கள். இதன்படி பொருள் என்ற வரையறைகுள் வராத ஒன்று இல்லவே இல்லை என்பது அவர்களின் வாதம்.

பொருள் முதல்வாதிகள் பொருள்களைப் பிளக்க முடியாத அணுக்களின் இயக்கத்தால், கூட்டுறவால் உருவான பல்வேறு நிலை மாற்றங்களின் பரிணாம வளர்ச்சியாக மட்டுமே கண்டார்கள் என பார்த்தோம். அந்த அவர்களின் நம்பிக்கை அணுவைப் பிளந்து அணு குண்டு தயாரித்த போதே பாதி தகர்க்கப்பட்டு விட்டது.

அணுவின் மூலத்தை ஆராய்ந்த நுண்ணியற்பியல் அது பொருளாகவும், சக்தியாகவும் இருக்கும் இரட்டை நிலையை கண்டு வியந்தது. ஒரு வகையில் ஒளியாலான அலைகளைப் போன்றுள்ளது எனக் கருத்து தெரிவித்தது. அந்த அலைகளை போன்றவற்றின் (wave like propertiesன்) உள்ளமையை பற்றிய ஆராய்சி தொடர்கிறது.

இந்த நிலையில் பொருள் என்று தனியாக எதுவும் இல்லை. பொருள் சிதைந்தால் சக்தி. சக்தி திரண்டால் பொருள் என்ற அறிவியல் அதை E = mcஎன்ற சின்ன சமன்பாட்டில் அடைத்தது, அதனால், மூலத்தை நோக்கிய பார்வையில் பொருள் என்று வரையறுக்கப்பட்டது எங்கே? என்ற கேள்வி எழுந்தது.

பொருள் இல்லை என ஒத்துக் கொள்ள முடியாது. பொருள்களைப் பற்றிய புதிய வரையறை (definition) காணப்பட வேண்டும் என்றார் பொருள்முதல்வாதிகளின் முன்னோடி சகோதரர் லெனின்.
இன்ன பொருள் என சொல்ல முடியாத ஆன்மாவின் இருப்பே அந்த ஆன்மாவை வழங்கிய ஒப்புவமை இல்லாத இறைவனின் இருப்புக்கு மகத்தான சாட்சியாக இருக்கின்றது. ஆன்மா என்னும் அகக்கண்ணைக் கொண்டு தான் நாம் அனைத்தையும் அறிகின்றோம் என முந்திய இடுகையில் பார்த்தோம். இமாம் கஸ்ஸாலி போன்ற ஆன்மீக அறிஞர்கள் நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த ஆன்மீக பார்வையை வழங்கும் ஆன்மா என்னும் அகக்கண்ணுக்கு வெளிச்சம் வழங்கும் சூரியன் என இறைவேதத்தை கூறுகின்றார்கள்.

அனைத்தும் இறைவன் புறத்திலிருந்தே இருக்கிறது என்று (நபியே!) நீர் கூறி விடுவீராக.(4:78) என்கிறது இறைவேதம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய நுட்பமான அம்சங்கள் நான்கு:

1.    பொருள்கள் என்பது பண்புகளின் தொகுப்பாலான ஒரு இருப்பைக் கொண்டு உணரப்படுகின்றது .  

2.     பொருள் சார்ந்த உலகம் (Physical world) என்பது புலன் உணர்வுகளின் வாயிலாக வடிவமைக்க பட்ட காலம், இடம், நிறம், வடிவம் என்னும் வரையறைகளால் ஆன அற்புதமான உணர்வுலக உண்மையாகும் (perceptual reality).

3.    அனைத்துப் பொருள்களும் நாமறிந்த எந்தப் பொருளையும் போல் இல்லாத மறைவான ஒரே மூலத்திலிருந்து தான் நாம் உணர்ந்தறியும் விதத்தில் நம் புலனுணர்வு எல்லைக்குள் வருகின்றது, இன்னும் மீள்கின்றது.

4.    இந்த பொருள்கள் அனைத்துக்கும் இருப்பை வழங்கும் மூலமான பொருளை(Materia Prima) நாம் பொருள் என்ற பௌதீக எல்லைக்குள் வரையறுக்க முடியவில்லை. அதுவே என்றும் இருக்கும் மாறாத மெய்யிருப்பு என்பதும் தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

17 comments:

செங்கொடி மருது said...

வணக்கம் தோழர் நமீன் ,

ஆன்மீக அறிவியல் என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது.

எனக்கு தெரிந்த அளவுக்கு உங்களுடன் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் வாதத்தில் நான் கண்ட முதல் முரண்பாடு ..
இதோ கீழே குறிப்பிட்டுள்ளேன் ..
//
ஆனால் இந்த பொருள்களை நாம் எதைக் கொண்டு அறிகின்றோம் என்ற கேள்வி அவர்களின் அறிவியலால் விடை காண முடியாத கேள்வியாகவே இருக்கிறது. //

அறிவியல் அனைத்திற்கும் மிகத் தெளிவாக பதில் கூறியிருக்கிறது. பொருளை உணர்வதற்கு உணர்வு நாம்புகள் , தோலின் தொடும் உணர்வு ஆகியவற்றிற்கான காரணத்தை மிகத் தெளிவாக அறிவியல் அறுதியிட்டு கூறியிருக்கிறது.

நீங்கள் கூற வருவதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதாவது ”பொருள் என்பதே மூலம் என்று பொருள்முதல்வாதம் கூறியுள்ளது. ஆனால் அதை பொருள் என்று நாம் உணர்ந்து கொள்வதற்கு ஏதோ ஒரு சக்தி தேவைப்படுகிறது” என்று கூற வருகிறீர்கள்.
நமது விவாதத்தின் மையப்பொருளுக்கு வருவோம் .
உதாரணத்திற்கு ஒரு தனி அறையில் ஒரு பெரிய மேஜை இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு கண் தெரியாத நபர் ஒருவர் அந்த அறைக்கு வெளியில் நிற்கிறார் . இப்பொழுது அங்கு மேஜை என்ற பொருள் அங்கு இல்லை என்று உங்களால் எவ்வாறு கூற முடியும் ?.. அந்த மேஜை என்பது இருக்கும் பொருள். அதை அந்த கண் தெரியாத நபர் உணரவில்லை என்பதற்காக அந்த பருப் பொருள் இல்லை என்று கூறமுடியுமா ?. உங்கள் வாதம் இதைப் போலத்தான் இருக்கிறது தோழரே.. மார்க்சியத்தையும் ஏங்கெல்ஸின் தத்துவத்தையும் விவாதித்து படிக்க வேண்டும். அல்லது அது தவறான புரிதலில் தான் கொண்டு போய் விடும்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .

புல்லாங்குழல் said...

தோழர் செங்கொடி மருதுவுக்கு தாங்களின் அறிவான தோழமையை அன்புடன் வரவேற்கின்றேன்.
அந்த மேஜை என்பது இருக்கும் பொருள். அதை அந்த கண் தெரியாத நபர் உணரவில்லை என்பதற்காக அந்த பருப் பொருள் இல்லை என்று கூறமுடியுமா ? என்ற தங்களின் கேள்விக்கு என் அன்பான பதில். நான் கூற வருவது உணர்வு (என்னும் பார்வை) இல்லை என்றால் உணரப்படும் பொருள்கள் இல்லை என்னும் வாதமல்ல. பொருள்கள் என்பது புற நிலை எதார்த்தம் என்னும் ஜார்ஜ் பொலிட்னர் போன்றோரின் வாதத்தில் எனக்கு உடன்பாடே. புலனுணர்வுகள் பொருள்களின் புற நிலை இருப்பை தான் அறிய உதவுகிறது. ஆனால் பொருள்கள் என்பது சுயம்பு இல்லை. பொருள்களுக்கு சுய உள்ளமை இல்லை. அது எதை கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தின் பதில் மாறி, மாறி வந்து கொண்டிருகிறது என்ற ரீதியில் தான் நான் எழுதியுள்ளேன். இன்னும் பொருள்களை எதைக் கொண்டு அறிகின்றோமோ அந்த சக்தி எப்படி நமக்கு வந்தது என்பதற்கு தங்களின் அன்பான பதிலை வேண்டுகின்றேன்.
தோழர் ஜெயகாந்தன் சொல்வது போல என் பார்வை மட்டுமே சரியானது என்ற பிடிவாதம் எனக்கில்லை. இது என் பார்வை. தொடருங்கள் நம் தேடலின் பயணத்தை.

தூயவனின் அடிமை said...

நல்ல அருமையான பகிர்வு நூருல் அமீன் சார்.

மருது said...

நல்லது தோழர் நமீன்,

அதாவது நீங்கள் முக்கியமாக கூற வருவது என்னவெனில்

1.பொருள்கள் என்பது சுயம்பு இல்லை.

2. பொருள்களுக்கு சுய உள்ளமை இல்லை. அது எதை கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தின் பதில் மாறி, மாறி வந்து கொண்டிருகிறது

3. இன்னும் பொருள்களை எதைக் கொண்டு அறிகின்றோமோ அந்த சக்தி எப்படி நமக்கு வந்தது

இதற்கு அறிவியலின் விளக்கம் இவ்வாறாக உள்ளது.

1. பொருள்கள் என்பது சுயம்பு இல்லை. சுயம்பு என்றால் தானாக தோன்றியது என்ற அர்த்தம் என்று கொண்டோமானால் கண்டிப்பாக பொருள்கள் சுயம்பு இல்லை தான். ஆனால் அவை ஒவ்வொரு பொருளும் ஒரு மூலப் பொருளில் இருந்து தான் உருமாறி , பண்பு மாறி வேறொரு பொருளாக பரிணமிக்கிறது. இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.விஞ்ஞானத்தைப் பொருத்தவரையில் ஒரு பருப் பொருளை உருவாக்க மற்றொரு பருபொருளால் தான் முடியும். இதுவே விஞ்ஞானப் பூர்வமான உண்மையாகும்.

2. பொருள்களுக்கு சுய உள்ளமை குறித்து விஞ்ஞானம் மாறி மாறி பதிலளிக்கிறது என்று கூறுகிறீர்கள். விஞ்ஞானிகளின் அறிவியல் ஆராய்ச்சியில் வரக்கூடிய பதில்கள் அறிக்கைகள் ஆகியவை நாளொரு வீதம் மாறும் . ஒரு காலத்தில் அணு தான் மிகச்சிறிய உள்ளடக்கம் என்று கூறினர்.
சிறிது காலட்தில் அதனையும் பிளந்து உள்ளே உள்ளதை அது தான் உள்ளடக்கம் என்று கூறினார்கள். இன்று அதனையும் தாண்டி உட்சென்று பார்த்து மூலப் பொருள்களை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆக அவர்களின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உபகரணங்களின் வளர்ச்சிக்கேற்ப வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போது கண்டிப்பாக நீங்கள் கூறுவது போலத்தான் நடக்கும். ஆனால் விஞ்ஞானிகளின் தகவல்கள் என்றும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததில்லை.
உதாரணத்திற்கு ஒரு காலத்தில் கண்டுபிடித்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை இன்று அந்த மருந்துக்கள் எந்த பூச்சிக்காக கண்டுபிட்க்கப் பட்டனவோ அந்த பூச்சிகளை அழிப்பது இல்லை.அதனால் அந்த பூச்சி மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானம் தவறானதா ?. இதில் நோக்கப்பட வேண்டிய அறிவியல் உண்மை என்னவெனில் அந்த பூச்சிக்களின் உடல்னிலை இந்த நச்சுக்களை தாங்கிக் கொள்ளும் விதமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது தான் காரணம். இதை சென்ற வாரம் ஹிந்து நாளிளில் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பகுதியில் படித்தேன். விஞ்ஞானம் என்பது என்றும் வளர்ச்சியை நோக்கியே .. ஆகையால் அதன் முடிவுகளில் மாற்றங்கள் வருவது தவிர்க்க இயலாததே .

3. இந்த கேள்விக்கு பதில் மிகத் தெளிவாக அறிவியலால் வரையறுக்கப் பட்டுள்ளது. நிரூபிக்கப் பட்டும் உள்ளது.ஒவ்வொரு உணர்ச்சியும் உடலில் சுரக்கும் ஒவ்வொரு இரசாயனத்தால் தான் உணரப்படும். சுருக்கமாகச் சொல்வதானால் . இந்த உடல் என்பது ஒரு மிகச்சிறந்த ஒரு நுட்பமான இரசாயனக் கூடம். இதைப் பற்றி விரிவாக எழுத நேரமில்லை. மைக்ரோ பயாலஜி , பையோ கெமிஸ்ட்ரி படித்தவர்களிடம் இது குறித்து நீங்கள் தெளிவு பெறலாம்.

இறுதியில்,

அறிவியல் வளர்ச்சியை நோக்கி செல்லும் போது தான் அடுத்த அடுத்த கட்டங்களில் இந்த பொருளின் மூலப் பொருள் எதுவாக இருந்தது என்று தெரிய வரும் .
ஒரு காலத்தில் சூரியனையும் சந்திரனையும் தேவனாக ஒரு சக்தியாகத் தான் இந்த மக்கள் பார்த்தார்கள். ஆனால் அது ஒரு பொருள் என்று விஞ்ஞானம் இன்று நிரூபிக்க வில்லையா ?. சமீபத்தில் கூட 6 கோள்களைக் கொண்ட இன்னொரு சூரிய குடும்பத்தை அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது.
மதம் என்பது விஞ்ஞான வளர்ச்சிக்கு அன்று தடையாக நின்றது. ஆனால் இன்று மதம் விஞ்ஞான வளர்ச்சிகளை தனக்குச் சாதகமாக தனது ஆத்ம சக்த்தியின் வெளிப்பாடு தான் விஞ்ஞானம் என்பது போல ஒரு மாயையைக் காட்டி மக்களை அடிமைப் படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் .

தோழமையுடன் மருது .

புல்லாங்குழல் said...

தோழர் மருதுவுக்கு,
1. ஒரு பருப் பொருளை உருவாக்க மற்றொரு பருபொருளால் தான் முடியும். இதுவே விஞ்ஞானப் பூர்வமான உண்மையாகும். – இந்த விஷயம் சின்னா பின்னமாகி, கேள்விகுள்ளாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன. பொருள் என்பதற்கு புதிய வரையறை காணப்பட வெண்டும் என்ற தோழர் லெனினின் பதிலை உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
2. விஞ்ஞானம் என்பது என்றும் வளர்ச்சியை நோக்கியே .. ஆகையால் அதன் முடிவுகளில் மாற்றங்கள் வருவது தவிர்க்க இயலாததே . – கட்டாயம் ஒப்பு கொண்டே ஆக வேண்டும். உங்கள் பூச்சி கொல்லி மருந்து உதாரணம் அற்புதமாக இருந்தது. என் எளிய முயற்சி விஞ்ஞானத்தின் மாற்றத்தின் அடிப்படையில் நமது கொள்கைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதே.
3. ஒவ்வொரு உணர்ச்சியும் உடலில் சுரக்கும் ஒவ்வொரு இரசாயனத்தால் தான் உணரப்படும். – உணர்வது யார்? என்ற என் கேள்விக்கு இது பதில் இல்லை என்றே நம்புகின்றேன். குறைந்த பட்சம் நெட்டில் ஏதும் கட்டிரைகள் இருந்தால் குறிப்பிடுங்களேன்.

4. மதம் என்பது விஞ்ஞான வளர்ச்சிக்கு அன்று தடையாக நின்றது. ஆனால் இன்று மதம் விஞ்ஞான வளர்ச்சிகளை தனக்குச் சாதகமாக தனது ஆத்ம சக்த்தியின் வெளிப்பாடு தான் விஞ்ஞானம் என்பது போல ஒரு மாயையைக் காட்டி மக்களை அடிமைப் படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது. – விஞ்ஞான அறிவும், மெஞ்ஞான அறிவும் இரண்டும் நமக்கு அவசியம். மதங்களின் பேரால் நடந்த தவறுகளுக்கு சற்றும் சளைத்ததல்ல மார்க்சியத்தின் பேரால் நடந்த தவறுகள்.தனிமனிதர்களின் சுயநல தவறுகளுக்கு கொள்கை பொறுப்பாகாது.
என் கட்டுரையை மீண்டும் வாசியுங்கள் . நான் உங்களுக்கு புரியும் படி தெளிவாக எழுதவில்லையோ என நினைக்கின்றேன்.
அன்புடன் அமீன்

aysha abul said...

அஸ்ஸலாமு அழைக்கும் அமீன்,
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

HM Rashid said...

K. Marx, F. Engels, V .I. Lenin, G. Politzer, C. Sagan, and J. Monodhey accept the basic materialist myth that the universe has existed for ever, matter is the one absolute existent entity, human beings are composed of matter and are without spirit, matter evolved in and out of itself, and life appeared as a result of chance. It is right to use the term myth because, contrary to Isindag's claim that "these processes are the result of positivist science and reason," all these views have been invalidated by scientific discoveries in the second half of the twentieth century. For example, the Big Bang theory, accepted in scientific circles as proven, shows scientifically that the universe was created from nothing millions of years ago. The Laws of Thermodynamics show that matter does not have the ability to organize itself and that the balance and order in the universe is the result therefore of a conscious creation. By demonstrating the extraordinary structure of living things, biology proves the existence of a Creator, in other words God, Who made them all

புல்லாங்குழல் said...

உங்கள் அருமையான விளக்கங்களுக்கு நன்றி ரஷீத்!

Aathira mullai said...

கட்டுரை ஒரு புறம் சிந்தனையைத் தூண்டுகிறது. அதனினும் இந்த வாதங்கள் (மருது X நூருல்) இன்னும் சிந்திக்கத் தூண்டுகிறது என்பதுடன் மேலும் மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸ் போன்றோரின் மார்க்சிய கொள்கைகளைப் படிக்க (கொஞ்சம் தொட்டுப்பார்த்த என் போன்றோரை) தூண்டுகிறது. மிக்க நன்றி நூருல் அருமையான பதிவுக்கு...மெலும் அறியும் ஆவலுடன்..

புல்லாங்குழல் said...

தாங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி ஆதிரா! இந்த கட்டுரையை தீவிர வாசிப்புக்கு உட்படுத்திய தோழர் மருதுவுக்கும் என் மனமார்ந்த நன்றி!

Ahamed irshad said...

அருமையான பதிவு அமீன் சார்..நல்லது தொடருங்கள்..

புல்லாங்குழல் said...

நன்றி இர்ஷாத்! சிறந்த வலைப்பதிவாளரான உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

அன்பின் சகோதரர் நூருல் அமீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களின் வலைதளத்திற்கு இன்றுதான் முதல்முறையாக விஜயம் செய்தேன் வாய்ப்பை நல்கிய வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.

தங்களின் அகப்பார்வை நூல் கிடைத்து வாசித்தேன் வலைதளத்தையும் வாசித்தேன் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.
ஆன்மீகம் என்பது இச் சமுதாயத்திற்கு காணமல்போன ஒட்டகமாக இருக்கிறது அது எங்கு கிடைத்தாலும் கட்டிப்போட்டுக் கொள்ளவேண்டும்.

மேன்மேலும் உங்கள் எழுத்துப்பணியை சிறப்பாக செய்துவாருங்கள் எல்லாவல்ல ஏக இறைவன் உங்களுடன் துணை இருக்கிறான் நீங்கள் நிறைவு பெறுவதற்கு ஆமீன்.

வஸ்ஸலாம்

கிளியனூர் இஸ்மத்

புல்லாங்குழல் said...

அருமை சகோதர் இஸ்மத்,

தங்களைப் போன்ற ஆன்மீகவாதியின் வாசிப்பும், வாழ்த்தும் இறைகருணை. அல்ஹம்துலில்லாஹ். இஹ்லாசுடன் தொடர்வதற்கு துவா செய்யுங்கள்.

அரபுத்தமிழன் said...

அருமையான, விளக்கமான கட்டுரை, பதிவுக்கு நன்றி சகோதரரே.

nagoreismail said...

மிக தெளிவான கட்டுரை - தொடர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

M.N.Mohamed Abubucker said...

An healthy conversation between O. Noorul Ameen and Sengodi Maruthu makes this topic quite interesting. I would like to appreciate all the readers of this spot. My wishes to O. Noorul Ameen. May God shower his blessings upon the creator of this spot and all the readers.