தோழமையுடன்

Friday, August 13, 2010

உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்கு


அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை. மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டும். தவிர, ஒன்று நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர் என்ற இந்து மத ஞானி. ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பதும் இதையே குறிக்கின்றது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி என்ற இஸ்லாமிய ஞானியின் சொல்லும் இதையே வலியுறுத்துகின்றது. நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு விடையாக ‘மகத்தான மெய்யறிவு என்னும் இறையருள் ஞானம்’என்கிறது ஆன்மீகம்.

முல்லா நஸீருத்தீன் தன் வீட்டு வாசலின் முன் இருந்த மணலில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். முல்லாவை பார்க்க வந்த நண்பர், “முல்லா எதை தேடுகிறீர்கள்?” என கேட்டார். “என் விலையுயர்ந்த மோதிரம் கீழே விழுந்து விட்டது.அதைத் தான் தேடுகின்றேன்.” என்றார். அதைக் கேட்டதும் முல்லாவின் மேல் இரக்கப்பட்ட நண்பரும் முல்லாவுடன் சேர்ந்து மோதிரத்தை தேடினார். சற்றேறக் குறைய ஒரு மணி நேரம் தேடியபின் முல்லாவை நோக்கி
 “எந்த இடத்தில் வரும் போது மோதிரம் கீழே விழுந்தது முல்லா?” என்றார்.
 “அதுவா? என் வீட்டின் உள்ளெ உள்ள கூடத்தில் தான் என் மோதிரம் கை நழுவி விழுந்தது” என்றார் முல்லா அமைதியாக!
நண்பருக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். ஆத்திரத்துடன் முல்லாவை பார்த்து “ உள்ளே தொலைத்து விட்டு வெளியே தேடுகிறீரே உமக்கு அறிவில்லையா?” என்றார்.
“புரியாமல் பேசாதே நண்பா! உள்ளே விளக்கு அணைந்து விட்டதால் இருளாக இருக்கிறது. வேளியே தான் வெளிச்சமாக இருக்கிறது. இருளில் தேட நான் என்ன முட்டாளா? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகின்றேன்”என்றார் கர்வத்துடன்.
இதெல்லாம் பழைய கதை என நணபர் எம்.அப்துல் காதரோ இல்லை இளம் தூயவனோ சொல்வதற்கு முன் ஒரு விஷயம். இப்படித் தான் நாம் அக இருளில் விலை முதிக்க முடியாத ஒன்றை தொலைத்து விட்டு அறிவின் வெளிச்சத்தில் அதை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
அகவெளிச்சம்
மிக்க மேலானவனான உம் ரட்ஷகனின் பெயரைத் தூய்மை படுத்துவீராக. அவன் தான் அனைத்தையும் படைத்துப் பிறகு செவ்வையாக்கினான். அவனே (அவைகளுக்கு வேண்டிய அனைத்தையும்) நிர்ணயம் செய்து பிறகு (அவற்றை அடைய) நேர்வழி காட்டினான். (87: 1-3) என்கிறது வேத வரிகள்.
நம்முள் அமைக்கப் பட்டுள்ள இந்த நேர்வழிகாட்டல் எது? அனைத்துச் சிருஷ்டிகளிலும் உள் அமைந்த அந்த வழிகாட்டும் ஒளி விளக்கு எது?
 பூமியில் பிறந்த எந்த ஒரு சிருஷ்டியும் தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டுதலை இரண்டு வாயில்களின் வழியாக பெறுகின்றன. ஒன்று ஐம்புலன்கள் என்னும் வெளிவாயிலின் வழியாக  புலனுணர்வுளைக் கொண்டு அறிவை பெறுகின்றன. இரண்டாவது வாயில் அகவயமானது. உள்ளே அமைந்துள்ள அந்த வாயிலின் வழியாக ஏற்படும் உள்ளுணர்வின் வழியாக தன் வாழ்வின் வழிகாட்டலை பெறுகின்றது.  நன்கு சிந்தித்து பார்த்தால் இந்த உள்ளுணர்வு தான் தலை வாயில்.
உதரணத்திற்கு பறவைகளை எடுத்துக் கொள்வோம். எந்தப் பறவையும் எப்படிக் கூடு கட்ட வேண்டும் என்று இன்ஜினியரிங் பாடம் படிக்கவில்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமாக கூடு கட்டுகிறது. அந்த கூட்டை வைத்தே அது எந்த பறவை கட்டியது என பறவைகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் கூறி விடுவார்களாம். இன்னும் அதிசயம் பாருங்கள்  ஆயிரக்கணக்கான மைல்கள் கடல் கடந்து பறந்து இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் செய்திதாள்களில், தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை பார்ப்பதில்லை. வழிகாட்டியோ, வரைபடமோ, மைல்கல்லோ, அம்புக்குறிகளோ அதற்குத் தேவையில்லை.  எப்படி இது பறவைகளுக்குச் சாத்தியமாகிறது?. நாம் அறிவோம் இது instinct என்னும் அனிச்சையான உள்ளுணர்வு, இயல்பூக்கம் அவைகளை வழி நடத்துகிறது.
இந்த instinct பறவைகளுக்கு எங்கே இருந்து வந்தது?
“வான(மண்டலத்)தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்கு) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லை? அவற்றைத் தாங்கி நிற்பவன் இறைவனைத் தவிர வேறு எவருமில்லை. இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (16:79) என்கிறது இறை வேத வரிகள்.
பறவைகள் தனியே பறக்கவில்லை இறைவன் அவைகளுடனே துணையாய் இருந்து அவைகளை வழி நடத்துகின்றான். உணவளித்து வாழ வைக்கின்றான். இன பெருக்கம், தற்காப்பு, உயிர் வாழ்தல் என்று குறைந்த தேவைகளுடன் அமைந்த குறுகிய வட்டத்தில் வாழும் உயிரினங்களுக்கே இறைவன் உடன் இருந்து அனிச்சையான உள்ளுணர்வுகளை வழங்கி வழிகாட்டினால் இறைவனின் பிரதிநிதி (கலிஃபத்துல்லாஹ்) என்ற பெரிய பொறுப்பை சுமந்துள்ள மனிதனுக்கு இறைவன் எப்படியெல்லாம் உதவிகள் அமைத்திருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்.
மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும் போதே மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோக சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல அரும் சக்திகளால் பதிக்கப் பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில் இப்படி ஏற்கனவே நம்மில் மறைந்து கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். “கல்வி” என்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்.  (அர் ரிஸாலத்துல் லதுனிய்யா - இறையருள் ஞானம் என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்))
படிப்பதனாலும், நம் உலக அனுவங்களினாலும் பெறும் அறிவை விட மேலான ஒர் அறிவு உள்ளுணர்வால் பெறும் மெய்யறிவு. அந்த மெய்யறிவு பற்றியும் அதனை பெறும் மார்க்கத்தையும் இமாம் கஸ்ஸாலி அவர்கள் பின் வருமாறு விளக்குகின்றார்கள்:
மெய்யறிவு என்பது இறைவனது உள்ளுணர்வு ஞானத்தால் தான் கிடைக்கிறது. அந்த பதவியை அடையாதவரையில் மனிதன் அறிவாளியாக மாட்டான், ஏனெனில் நல்லறிவு என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
இந்த உள்ளுணர்வு மூலம் பெறும் ஞானத்தை தான் “ எவருக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர் அனேக நண்மைகளை கொடுக்கப்பட்டவராக உள்ளார்”. (2:269) என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
உள்ளுணர்வு ஞானத்தை பெறும் வழி என்ன?
நம்மை படைத்த இறைவன் நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது சரி எது தவறு என்று பிறித்தறியும்  இயல்பான ஞான நிலையிலேயே நம் இதயத்தை அமைத்தான்.
மேலும் அந்த இதயத்தை தன் எல்லை இல்லாத ஏகத்துவ ஒருமையின் தரிசனத்திற்கு சாட்சியாக்கினான். இது தான் நம் பிறவி நிலை. ஆனால் என்ன நிகழ்கிறது?. வாழ்வின் போக்கில் நாம் சேகரித்த அறிவுகளின் விளக்கங்கள். மனோ இச்சைகளினாலும், கற்பனையிகளினாலும் அந்த தகவல்களுக்கு நாம் பூசிய நம் மனதிற்கு பிடித்த வர்ணங்களினால் நம் பார்வையிலிருந்து உண்மை என்பது நழுவி விடுகின்றது. அறிவின் சுமையிலிருந்து விடுதலை பெறுவதே இந்த உள்ளணர்வு ஞானம் எனும் நம் பிறவி பேற்றை பெறுவதற்கான மார்க்கம்.
நம் பிறவி நிலையிலேயே அமைந்த நம் பரிசுத்த ஆன்ம நிலையை நாம் மீண்டும் அடையும் வழியென்ன என்பதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) தன் கீமியா சாதாத் என்னும் நூலில் கூறுவதை படியுங்கள்:

 “நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களும் அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களாக இருக்கின்றன. அந்த குளத்தின் அடியிலிருந்து தெளிவான தண்ணீர் ஊற்றெடுக்க விரும்பினால் சிறிது கால அவகாசத்திற்காவது இந்த கால்வாய்கள் அதில் தண்ணீர் கொண்டு போகாது நிறுத்த வேண்டும். அந்த கால்வாய்கள் கொண்டு வந்து சேர்த்த சேறு சகதிகளையும் நீக்க வேண்டும். பின்னர் குளத்தின் அடிக்கரையை தேண்டினால் சுத்தமான தண்ணீர் சுரக்கும். இது போன்று புறமார்க்கங்களில் நாம் எய்திக் கொண்ட அறிவை – நமது உள்ளத்தில் துவேஷமாய் உறைந்துவிடும் இயல்புள்ள இந்த அறிவை - அப்பால் அகற்றினால் தான் (நம் பிறவியில் அமைந்த ) ஆத்மீக அறிவாகிய ஊற்றுக்கண் திறக்கும்”.

தன் அறிவினால் விளைந்த அகப்பெருமையுடன் உள்ள இதயங்களுக்கு ஞானங்களை ஏற்கும் தகுதியில்லை. காலி கோப்பைகளில் தான் பானங்கள் நிரப்பப்படும். ஞானங்களும் அப்படியே என்பதை உறுதி செய்கிறது அறிஞர்களின் வார்த்தைகள்.

இந்த உள்ளணர்வுக்கும் மேலான ஒரு ஞானமும் உள்ளது அது என்ன என்பதை இறைவன் நாடினால் அடுத்த இடுகையில் பார்ப்போம்.3 comments:

HM Rashid said...

“நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களும் அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களாக இருக்கின்றன. அந்த குளத்தின் அடியிலிருந்து தெளிவான தண்ணீர் ஊற்றெடுக்க விரும்பினால் சிறிது கால அவகாசத்திற்காவது இந்த கால்வாய்கள் அதில் தண்ணீர் கொண்டு போகாது நிறுத்த வேண்டும்"இந்த கால்வாய்கள் மூலம் தினமும் நீர்வரத்து இருந்து கொண்டேதான் உள்ளது. தினசரி வாழ்கையில் எத்தனை distractions .ஸெல்ப் கண்ட்ரோல் என்பதன் மூலம் முடியுமா?அல்லது இந்த பாட்டையில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களின் வழிகாட்டுதல் அவசியமா?ஏனெனில் எல்லோரும் சுயம்புகள் இல்லை.மனதை கண்ட்ரோல் பண்ணுவது சாதாரண விசயமும் அல்ல.

எம் அப்துல் காதர் said...

//காலி கோப்பைகளில் தான் பானங்கள் நிரப்பப்படும். ஞானங்களும் அப்படியே//

நாங்களும் அப்படியே. நிறைய இது போன்ற ஞானங்களை எங்களுக்கும் நிரப்புங்கள்.

புல்லாங்குழல் said...

அன்பரே!ஞான பொக்கிஷமான பெருமானாரே "இறைவா என் ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!" என கேட்பவர்களாகத் தான் இருந்தார்கள். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.