தோழமையுடன்

Wednesday, September 24, 2014

ஒரு வேளை நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல!.


 படைக்கப் படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி
 

இதன் விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா…

தி கிரேட் முல்லா நாஸீருத்தின்…

ஒரு முறை முல்லா நஸீருத்தீன் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவில் கூட்டம் நிரம்பி வழிந்தது, அன்று இரவு சத்திரத்தில் எல்லோரும் படுத்துறங்கினர். அந்த கூட்டத்தில் நாம் காணாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை முல்லாவிற்கு வந்தது. அதனால், தூங்கும் முன் தன் காலில் ஒரு கருப்பு கயிறை கட்டிக் கொண்டார். கயிறை கட்டிக் கொண்டிருப்பது தான் “நான்” என தன் அடையாளத்தை தனக்குத்  தானே சொல்லிக் கொண்டு, இனி நான் காணாமல் போனாலும் கயிறை வைத்து கண்டு பிடித்துவிடுவேன் என்று மன நிறைவுடன் படுத்துறங்கத்  துவங்கினார்.

 பக்கத்திலிருந்து இதை கேட்டு கொண்டிருந்த ஒருவர், முல்லா நன்கு உறங்கியவுடன் முல்லாவின் காலில் இருந்த கயிற்றை கழற்றி தனது காலில் கட்டிக் கொண்டு  உறங்கிவிட்டார்.


 காலையில் கண் விழித்த முல்லா தன் காலில் தனது அடையாள கயிற்றை தேடினார். கயிறை காணவில்லை என்றதும் அதர்ச்சியடைந்தார். ‘நான் தொலைந்து போய்விட்டேனே’ என்று கூறி கவலையுடன் தன்னைத் தேடத் துவங்கினார்.  அப்போது பக்கத்தில் படுத்திருந்த மனிதரின் காலில் தனது அடையாள கயிற்றை கண்டார். ‘அது தான் தொலைந்து போன நான் என்றால் தேடுகின்ற நான் யார்?’ என்று யோசிக்களானார்.

0 0 0 0 0 0

'ஒரு 100 வருத்துக்கு முன் நாம்' என நம்மை அடையாளப்படுத்திப் பாருங்கள்.
அப்போது தான் நாம் இல்லவே இல்லையே எப்படி நம்மை மனதில் கொண்டு வருவது என்ற கேள்வி மனதில் எழும்.

உண்மையில் நாம் அப்போதும் இருந்தோம்.  நாம் அனைவரும் ஆலமே அர்வாஹ் எனும் நிலையில் இருந்தோம் என்பதை கூறுகிறது இறைவேதம். ஆன்மா என்ற நிலையில் எப்படி என தெரியாவிட்டாலும், ஒரு வகையில் இருந்தோம்.

 பின்பு உடல் வந்தது.

 இன்று உடல், ஆன்மா, மனம் என நம்மை உணர்கின்றோம். 

ஆன்மா என்ற அடையாளமும் பெறும் முன்...

 எப்படி இருந்தோம்?

 எங்கே இருந்தோம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும்  கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். 76:1 என்கிறது இறைவேதம்.


படைக்கப் படும் முன் இன்ன பொருள் என்று சொல்ல முடியாத சிருஷ்டிகளின் அந்த நிலையை 'நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing)'  என குறிப்பிடுவார்கள் ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி எனும் ஞான மகான். 

No thing உள்ளமை இல்லா நிலை. இதை இல்லாமை - அதம் என அழைக்கப்படுகின்றது.

ஆக, இல்லாமை என்பது தான் நமது அடையாளம்.

உள்ளமை என்பது இறைவனின் அடையாளம்.

இல்லாமை என்றால் என்ன?

இங்கே, இல்லாமை என்றால் இல்லவே இல்லை என்று பொருளா?

முற்றிலும் இல்லாதது ( அதமே மஹஸ்) என்பதிலிருந்து எதுவுமே உண்டாக முடியாது. பின் அது எப்படி நம் அடையாளமாகும்?.

படைப்புகள் படைக்கப்படுவதற்க்கு முன் இந்த வகை இல்லாமையில் (அதமே மஹஸ் ஆக) இல்லை.

அதற்கு "பொருள்" என்று சொல்ல முடியாத ஒரு வகை இருப்பு இருந்தது என்பதை மேலே பார்த்தோம்.


அடுத்த கேள்வி அவை எங்கே இருந்தது ?

இறைவனின் ஞானத்தில் இருந்தது. இருக்கிறது.

படைப்புகள் படைக்கபடுவதற்கு முன் இறைவனின் ஞானத்தில் (இல்மில்) இருந்த அந்த நிலையை ஒரு வகையில் விளக்க வரையப்படும் முன் ஓவியனின் மனதில் உள்ள ஓவியத்தை உவமையாக கூறலாம்.

சுயமான உள்ளமையில்லாத இந்த மனோ பிம்பமான (கியாலியான ) இருப்பை இணைக்கப்பட்ட இல்லாமை (அதமே இழாஃபி) எனப்படும்.

இந்த அதமே இழாஃபி தான் பின்னர் இறை வெளிப்பாட்டின் “மழ்ஹர்” என்ற நிலையில் வெளிப்படுகின்றது.

ஆக படைப்பினங்களுக்கு உள்ளமையில்லை. படைக்க படுவதற்கு முன்னும், பின்னும்.

இறைவனின் உலூஹிய்யத், ரூபூபிய்யத் இவற்றின் மழ்ஹர்கள் தான் சிருஷ்டிகள் என்ற வஸ்து (ஷை)கள் ஆகியது.

உள்ளமையைக் கொண்டு படைப்புகள் காட்சியளிப்பது எங்ஙனம்?

சாதரணமாக ஓவியன் தானல்லதா ஒன்றில் தன் ஓவியத் திறமையை வெளிப்படுத்துவான்.
இறைவனோ அழகிய படைப்பாளன். அவனைத் தவிர யாருக்குமே உள்ளமை இல்லை என்பதால் அவன் தன்னிலேயே தன் ஓவியங்களை காட்டுகின்றான்.

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஹக்கைக் கொண்டுதான் படைத்துள்ளான்: ஒவ்வொரு ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (45:22) என்கிறது இறைவேதம்.

வானம், பூமியில் உள்ள அனைத்தும் ஹக்கைக் (இறை உள்ளமையைக்)  கொண்டு தான் இருக்கிறது என்கிறது இறைவேதம். 

இறை உள்ளமையைக் கொண்டு கியாலியான உருவங்கள் இன்று காட்சியில் வந்து விட்டது. ஓவியத்தைப் போல.

 இந்த உருவங்களை அவற்றிற்கே உரிய தன்மைகளுடன் இறைவன் தன் உள்ளமையால் காட்சியளிக்க செய்யும் போது உலகம் காட்சியளிக்கின்றது.

ஞாபகமிருக்கட்டும்! ஷரீஅத்படி இந்த “உருவங்களும் அவற்றின் தன்மைகளுமான”  அதமே இழாபியைத்தான் சிருஷ்டி என்று சொல்கிறோம்.

ஹகீகத்தில் சுயமான உள்ளமையைக் கொண்டு காட்சியில் இருப்பது இறைவனும், இறைமையும் தான்.

மேலதிகமாக இரவல் நிலையில் காட்சியளிப்பது தான் சிருஷ்டியும் அவற்றின் தன்மைகளும்.

உருவங்கள் இறையல்ல. உருவங்களும் அதன் தன்மைகளும் சிருஷ்டிகளுக்கே சொந்தம். 

சிருஷ்டிகளுக்கு உள்ளமையில்லை. உள்ளமையும் அதன் தன்மைகளும் இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.

கவிஞர்கள் கூறிய வார்த்தைகளிலேயே மிகவும் உண்மையான வார்த்தை ‘லபீத்’ என்ற கவிஞர் கூறிய “அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் அல்லாத அனைத்தும் பொய்யானவையாகும் (பாதில்).” (என்ற வாசகமாகும்.)
(புகாரி எண் : 3841 )

பாதில் - பொய் என்றால் உள்ளமையற்றது என பொருள்.

இங்கே மஸ்னவி ஷரீஃபில் ஜலாலுதீன் ரூமி(ரஹ்) கூறுவது நினைவு கூறத் தக்கது:

மா அதம் ஹாயியம்
வ ஹஸ்த்தி ஹாயே மா.
தூ உஜுதே முத்லகே ஃபானி நுமா.

நாமும் எமது இருப்பும் அதமானது.
நீயோ உஜூதே முத்தலக்கானவன்.
இன்னும் ஃபானியைக் காட்டக் கூடியவனாக இருக்கின்றாய்.
(மஸ்னவி பாகம் 1 – கவி 742)

நம்மையும் நம் செயல்களயும் படைத்தவன் இறைவன்.


كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

(இறைவன்) ஒவ்வொரு நேரத்திலும் (ஒவ்வொரு) காரியத்தில் (தஜல்லியில்) இருக்கின்றான். 55:29 என திருமறை கூறுகின்றது.

இங்கே உபயோகப்படுத்தப்படும் ஷான் என்ற வார்த்தை நிலை - state என்பதை குறிக்கும்.

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஷானில் இறைவன் இருக்கின்றான். அவனது உலூஹிய்யத்துடைய ஷானைக் கொண்டு அவன் காட்சியளிக்கும் போது உலகம் காட்சியளிக்கின்றது. அவனது உலூஹிய்யதுடன், ருபூபிய்யதும் சேர்ந்து காட்சியளிக்கும் போது உலகம் இயங்குகிறது. நம்மையும் நம் செயல்களயும் படைத்தவன் இறைவன். 

அல்லாஹ் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்தான்.(37:96) என்கிறது இறைவேதம்.

இவை பற்றிய மேலான விளக்கத்தை 'ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் கேளுங்கள்' என்ற இறைவேத வழிகாட்டலுக்கேற்ப தகுந்த குருநாதர்களை அணுகி விளக்கம் பெற முயலுங்கள்.

0000

என் குருநாதர் ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் இறையன்மையின் (மஈயத்) நுட்பத்தை விளக்க தன் கையிலிருக்கும் வெள்ளி மோதிரத்தை காட்டி, முடிந்தால் மோதிரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு வெள்ளியை என்னிடம் தாருங்கள் என்பார்கள்.

மீண்டும் முல்லாவிலிருந்து துவங்குங்கள்.....

 ஒரு வேளை அந்த மர்மத்திரை விலகி நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: