தோழமையுடன்

Monday, November 4, 2013

தாஜ் தந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள்

 ‘பால்ய விவாஹம்’ என்ற சிறுகதையை ஆபிதீன் பக்கங்களில் படித்தேன். அதைப் பற்றிய சில எண்ணப் பகிர்வுகள் இவை.

 ‘பால்ய விவாஹம்’ என்ற உடனே அட்ட பழசு – ஹப்பி காலத்து கதை இப்ப எதுக்கு என அவசரப்பட வேண்டாம். விசயம்... புதுசு கண்ணா புதுசு!.

கதைக்குள் புகுமுன் சில முன் குறிப்புகள்….

“இந்த நாவலில் உள்ள அனைத்தும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டு பிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.” – (அ.முத்துலிங்கம் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலின் முன்பக்கத்தில் எழுதிய வரிகள் இவை) 

அ.முத்துலிங்கம் எழுதிய “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நூலை ‘சுயசரித தன்மைக் கொண்ட புனைவு’ என அறிமுகம் செய்கிறது உயிர்மை பதிப்பகம். 


இந்த புத்தகமும் ‘ஆழிசூழ் உலகு’, ‘புலிநகக் கொன்றை’ என இன்னும் சில புத்தகங்களும் சீர்காழிக்கு அவர் வீட்டுக்கு சென்ற போது எனக்கு அன்பளிப்பாக தந்தார் தாஜ். மேன்மக்கள் அன்பளிப்பாக தந்ததை திருப்பிக் கேட்க மாட்டார்கள். தாஜ் மேன்மக்களில் ஒருவர். தாஜ் கொடுத்த புத்தகங்களை சன்னம் சன்னமாக ஒர் ஐந்தாண்டு திட்டம் போட்டு படித்து விடலாம் என இருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ். அது ஒரு புறம் இருக்கட்டும்.

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புகளில் மூன்று அத்தியாயம் படித்தவுடனேயே இந்த ஆள் நகைச்சுவையுடன் எவ்வளவு அழகாக எழுதுகிறார் என மெல்லிய பொறாமை எழுந்தது.  நாமும் இது போல முயற்சிப்போமா என ஆசை எழுந்தது “சீச்சி காப்பி கேட்” என வளுப்பம் காட்டி தன்னைத் தானே பழித்த ‘திராட்சை தோட்டத்து’ நரி ஆழ்மனதில் சென்று புதைந்து கொண்டது.  

 ‘பால்ய விவாஹம்’ தாஜ் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகளின் முதல் அத்தியாயமாகப் படுகிறது. சுயசரித தன்மைக் கொண்ட புனைவு. தாஜ் அ.முத்து லிங்கத்தின் காபி கேட் அல்ல. தனக்கே உரிய ஒரு புதிய பாணியில் இஸ்லாமிய சூழலில் இதை வடித்திருக்கிறார். 

சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையை பற்றி, “சமகாலப்பிரச்சினைகளை கதையாக, உருவகங்களாக, படிமங்களாக உருமாற்றுகிறது. அவை காலத்தைத்தாண்டி தங்களுக்கான அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன.” என ஜெயமோகன் குறிப்பிடுவார்.

தாஜ் சுந்தர ராமசாமியின் சீடர் என்பதால் தாஜின் கதையில் புளியமரத்திற்கு பதில் ஒரு மாமரத்தை வைத்து கதை பிண்ணியிருக்கிறார் என நினைக்கின்றேன்.
தாஜ் கையிலெடுத்திருப்பது சமகால பிரச்சனையல்ல. நாம் கேள்விப்படாத ஒன்றும் கூட. ஆனாலும் சுவராசியமானது. எஞ்சி இருக்கும் மூடநம்பிக்கையிகைகளின் குறியீடாக  காலத்தைத்தாண்டி அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றது என கூறலாம்.

கதையில் ஒரு மாமரம் வருகின்றது. அதைப்பற்றிய இந்த வரிகளை படியுங்கள்….

/காய்ப்பும் இல்லாம, காரணமும் இல்லாம இந்த மரம் எவ்வளவு பெரிய இடத்தை அடைச்சுகிட்டும், கொல்லையை இருட்டா ஆக்கிக்கிட்டும்ல நிக்கிது. எங்க வீட்ல மாடு வளர்க்கிறது கிடையாது. அப்படி வளர்த்திருந்தா, அதை இதுல கட்டிப்போடலாம்! அத்தனைக்கு தாராள இடம்! எந்நேரமும் நிழல்! பொருக்க நிழல் தரும் மரத்தை, மாடுகளும் விரும்பும்! விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் அம்மரத்தை ஏறிட்டுப் பார்க்கவும் பயம். ராட்சஷி மாதிரி பரப்பிகிட்டுல நிற்கிறது! அந்த நேரத்தில், கிணற்றடிக்கு போகும்போதெல்லாம், என் வேலைகளை சுருக்கமுடிச்சுட்டு வீட்டுக்குள் வருவதிலேயே குறியாயிருப்பேன். அதை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்/ .

படித்து விட்டீர்களா?

பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு…..

கொல்லையை இருட்டா ஆக்கிக்கிட்டு….

பெருக்க நிழல் தரும்…..

ராட்சஷி மாதிரி பரப்பிகிட்டு நின்று….. 

ஏறிட்டு பார்க்க பயம் தரும் மாமரம்….

ஒரு சாதராண மரம் ஏன் அத்தகைய பிரியமும், பயமும் கலந்த உணர்வுகளை தந்தது என்ற ‘சஸ்பென்ஸை’ நமக்கு முன் வைத்து காய்க்காத மரமும் – ஓதாத தாஜுமாய்  கதை முன்னகர்கிறது.

இந்த உணர்வுகளின் காரணியாய் அமைந்த ‘பால்ய விவாஹம்’ தான் புதிரின் திரை விலக்கும் அற்புதமான நகைச்சுவை கிளைமாக்ஸ். 

கிளைமாக்ஸுக்கு பிறகு மீண்டும் அந்த மாமர வர்ணனைகளை படித்து பாருங்கள். தப்பித் தவறி மனைவியின் முகம் தெரிந்தால் அ,முத்து லிங்கம் சொல்வது போல ‘அது தற்செயலானது. தாஜ் பொறுப்பாக மாட்டார்.

 கதை சூழலில் வர்ணனைகள் கோழிக் குஞ்சுகளாய் கொஞ்சுகிறது.

/. “எனக்கு மாமியாக்காரின்னு ஒருத்தி இருந்திருந்தாக் கூட, காலங்காத்தாலே இப்படி கத்தமாட்டா?” இது என் அம்மா. மகளின் மறுமொழியை கேட்டு, பாட்டி குனிந்த தலை நிமிராமல் முகம் மலரும்./ என்பது போன்ற வரிகளில் மூலம் “ஐ லவ் யூ பாட்டி” என தாஜ் கதை முழுவதும் பாட்டியின் மீதான தன் ‘லவ்வை’ சொல்லி நம்மையும் பாட்டியை நேசிக்க வைக்கிறார்.

கதையில் வரும் குட்டி தாஜ் பாட்டி சொல்லைத் தட்டாத ஒரு குட் பாய்.

 கதையை படித்து முடிக்கும் போது பாட்டி இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருந்து அந்த குட்டிப் பையனை ஒழுங்கா ஓத வச்சு ஒஸுபான ‘பாயா’ வளர்த்திக்கலாமே!’ என்ற ஆதங்கமும் வருகிறது.

‘உண்மை கலந்த நாட்குறிப்புகளை’ தொடருங்கள் தாஜ்.

கதையின் சுட்டி இதோ : ‘பால்ய விவாகம்’ கதையை ஆபிதீன் பக்கங்களில் படித்து மறக்காமல் உங்கள் கருத்தை பதியுங்கள்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: