தோழமையுடன்

Monday, October 22, 2012

பூச்செண்ட்டுடன் வந்திருக்கும் பச்சைப் பொய் - கவிஞர் தாஜ்



‘வெல்கம் அத்வானிஜி!’ என்ற எனது கட்டுரையை படித்து கருத்து தெரிவிக்க நண்பர் தாஜ் அவர்களை கேட்டிருந்தேன். பதிலுக்கு தாஜ் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட  தாஜின் இந்த கட்டுரை ஒரு விதத்தில் என் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘கேப்பையில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்க போச்சு புத்தி?’ என சாடுகின்றது. அத்வானிஜியின் வார்த்தைகள் அரசியல் காய் நகர்த்தல் என்றாலும் அதை அவர்கள் உண்மையாக்கினால் எவ்வளவு நல்ல விசயம் என்பதை சிந்திக்க தூண்டுவது தான் என் கட்டுரையின் நோக்கம்.யார் ஆரம்பித்து வைத்திருந்தாலும் மதவெறி என்கின்ற புற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும், மனிதநேய வெறி தளைக்க வேண்டும் என்பதில் என்னை விட தாஜுக்கு அக்கறை அதிகம் என்பதே என் நம்பிக்கை. இருந்தும் மனதால் பலமடங்கு என்னை விட இளையவர் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றார். வார்த்தைகளில் இத்தனை கடுமை தேவையில்லை என்றாலும் தாஜ் பொய் சொல்லவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மை.

பூச்செண்ட்டுடன் வந்திருக்கும் பச்சைப் பொய் - கவிஞர் தாஜ்

//
நம்முடன் கூட்டணி அமைப்பதால் தங்களது மதசார்பற்ற நிலைக்கு பிரச்சனை வரும் என சில கட்சிகள் கருதுகின்றன. அவர்களது அச்சத்தை போக்கும் வகையில், மதசார்பின்மைக்கு நாமும் எதிரிகள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும். சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல, இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.முதலில் பாரதீய ஜனதா தலைவர்கள் பல குரலில் மாறுபட்டுப் பேசக் கூடாது. அனைவரும் ஒரே கருத்தையே வலியுறுத்த வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளை சேர்த்து பெரிதாக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மதச்சார்பின்மையை பின்பற்றுவதை உறுதிப்படுத்தி நம்மைப் பற்றிய அச்சத்தை அகற்ற வேண்டும். இப்படி செயல்பட்டால் 1998, 1999-ம் ஆண்டுகளைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றலாம்.இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் இன்னும் இன்டர்நெட்டில் வலம் வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. நபிகள் நாயகத்தை தவறாகக் காட்டும் அந்தப் படத்தை ஏற்கவே முடியாது. எந்த மதமாக இருந்தாலும் அதன் புனிதத் தலைவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது தவறு” 

-அத்வானி/ ஒன் இந்தியா செப்டெம்பர் 29, 2012 //

*
அத்வானியின் இந்த மதசார்பின்மை பேச்சுக்கு ஒரு வரியில் நான் கருத்து சொல்லக் கூடுமெனில், கிழித்து கசக்கி குப்பைத் தொட்டியில் கடாசவேண்டிய வேஷதாரியின் அறிக்கையது என்பேன். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டுமானால், 'அதைத் தொட்டு கிழித்து கசக்கியக் கையை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும் என்பேன்.'

"சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல, இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்." இது அத்வானி அறிக்கையில், நாம் விவாதிக்கும் சாரம். அமெரிக்க யூதர் ஒருவரால், நாயகத்தைப் பற்றிய இழிவான சித்தரிப்புடன் (நான் இன்னும் அந்தத் திரைப்படத்தை.பார்க்கவில்லை. இழிவான சித்தரிப்பு என்று நான் இங்கே குறிப்பிட்டு இருப்பது நம்பகமான தகவலினால் மட்டுமே.) தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை, அத்வானி தன் அறிக்கைக்கு இடையில் குறிப்பிட்டும், அதனை கண்டித்தும் இருப்பதால், அவரது அறிக்கையை, இஸ்லாமியர்கள் தங்களை நோக்கி கூறிய அறிக்கையாக பார்க்கிறார்கள்.

அத்வானியின் குயுக்தியான அந்த அறிக்கை, இஸ்லாமியர்களை குறிவைத்து கொடுக்கப்பட்ட அறிக்கை என்பதை நானும் அறிவேன். அதில் அவர் காட்டியுள்ள பூடகத்தை வாசகர்ளுக்கு தெளிவுபடுத்திக் காட்டவேண்டியே இப்படி அழுத்தம் கொடுத்தும், பிரித்தும் காண்பித்திருக்கின்றேன்.

புத்தம், ஜைனம், கிருஸ்த்துவம் என்று எத்தனையோ சிறுபான்மை மதத்தவர் வாழ்கின்ற இந்தியாவில்..., அந்த அறிக்கை இஸ்லாமியர்களுக்கென்றானது என்கிற பட்சம், அத்வானி இஸ்லாமியர்களை நேரடியாக விளித்து அறிக்கைத் தந்தாலென்ன? ஏன் பூடகமாக அப்படியோர் அறிக்கையை விடணுமாம்? இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்தி அவர் அறிக்கைவிடாத போது, நண்பர் நூருல் அமீன் ஏன் அதனைப் பொருட்படுத்தி 'மன்னிக்கத் தயார்!' என்பது மாதிரி கட்டுரை எழுதணும்? புரியவில்லை!

மேலே கண்ட என் கூற்றுப்படிக்கு, இஸ்லாமியர்களை விளித்து, "இஸ்லாமியர்களுக்கோ, மற்றைய சிறுபான்மை இனத்தவர்களுக்கோ  நாம் எதிரிகள் அல்ல, இதுவரை இஸ்லாமியர்களுக்கோ மற்றைய சிறுபான்மையர்களுக்கோ பாரதிய ஜனதா எந்தவோரு அநீதியையும் செய்யவில்லை, வருங்காலத்திலும் நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரிகளாக செயல்பட மாட்டோம்." என்று அத்வானி வெளிப்படையாக சொல்லும்பட்சமும், அவரது அறிக்கையை கிழித்தெறிபவனாகவே நான் இருப்பேன்.

அடிப்படையில் இப்படியொரு அறிக்கை கொடுக்க அத்வானிக்கு எந்தவொரு தார்மீக அந்தஸ்த்தும் இல்லை. அருகதையற்ற மனிதர். அவரை நான் என்றைக்கும் அருவருப்போடுதான் பார்க்கிறேன். பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான, இவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை எதிர்கொள்ள திராணியற்றவர். 'அதையும் இதையும்' கூறியப்படிக்கு ஓடி ஒளிந்து வருகிற மனிதர்! தங்களது ஆட்சிக்காலத்தில், அவ்வழக்கை நீர்த்துப் போகவைக்க அரும்பாடுபட்டவர்! நேற்றும் சரி இன்றைக்கும் சரி அவரது பேச்சை நான் பொருட்படுத்தியதே இல்லை. அவரது எந்தவொரு அறிக்கையையும் நான் அப்படித்தான் அணுகுபவனாக இருந்து வருகிறேன். அவரை நான் பொருட்படுத்துவேனெனில்..., என்னை மாதிரி மடையனோ, ஏமாளியோ எவனும் இருக்கமாட்டான்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து அங்கே ராமருக்கு கோவில் கட்டியே ஆகணும் என்று ரதமேறி இந்திய வீதிகளில் அரக்கத்தனமாக கர்ஜித்து, ஒன்றாக வாழ்ந்து வந்த பலதரப்பு இந்திய மக்களையும் திட்டமிட்டு பகைமை வளர்த்து, பிரித்து, மத்திய அரசை மேல்தட்டு மக்கள் கைப்பற்றும் சதிக்காக, இவர் ஆடிய அப்படியோர் ஆட்டத்தை அனுஅனுவாக அன்றைக்கு கண்டு மனம் நொந்தவன் நான். எப்படி இந்த மனிதனை மனம் ஒப்பமுடியும்?

இஸ்லாமியர்களையும், மற்றைய சிறுபான்மையர்களையும் இவர்கள் காலங்கலமாக எதிரிகளாக்கி இம்சித்து வருபவர்கள். மஹாத்மா காந்தி, இஸ்லாமியர்களின் கருத்துக்கு செவிசாய்த்தார் என்பதற்காகவே இன்றைய பாரதிய ஜனதாவின் மூத்த தாய் இயக்கமான ஜனசங்கம் அல்லது ஆர்.எஸ்.எஸ்.சை சார்ந்த ஒருவன் கொன்றான் என்பதும் வரலாறு. மதரீதியான மேஜாரிட்டி பலத்தை அவர்கள் கொண்டிருப்பதால், அப்படியொரு மனிதாபிமானமற்ற அநாகரீக நடவடிக்கைகளை துணிந்து நிகழ்த்துபவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து இப்படி அவர்கள் நிகழ்த்தும் அநாகரீக நடவடிக்கைகளினால், அவர்கள் எதிர்பாராத  இரண்டு சங்கடங்கள் அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது.

1. இந்தியாவில் உள்ள மற்றைய ஜனநானயக கட்சிகள், இவர்களை தள்ளிவைப்பது நடந்தது. இவர்களை தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கின்றன. அந்தக் கட்சிகளோடு இவர்களால் கூட்டணி பேரம் பேச முடியவில்லை.

2. சுமார் 230 தொகுதிகளுக்கு மேல் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுவங்கி இஸ்லாமியர்கள் என்றாகி போனதில் இவர்கள் செய்வதறியாது இருக்கின்றனர்.  துரோகம் இழைத்து தொல்லையும் தந்துவந்த இஸ்லாமியர்களிடம் இவர்களால் தேர்தல்களில் ஓட்டுப் பெற முடியவில்லை.

இந்த இரண்டு காரணங்களினால், அதனால் விளையும் சங்கடங்களினால் நொந்துப் போகிறார்கள். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் இந்த காரணங்கள் அவர்களை வாட்டிவதைத்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைக்கும் ஆசை அவர்களுக்கு பூரம் கொள்ள மாட்டேன் என்கிறது. சில சமயம் கிட்டும் வெற்றிகளும் எளிதாக இருப்பதில்லை, தொடர்ந்து அந்த வெற்றியை அவர்களால் தங்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. அவர்களின் கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான துணை இயக்கங்களில் ஏதேணும் ஒன்று இஸ்லாமியர்களை இம்சிக்கிறது. அல்லது ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டியே தீருவோம் என்று உணர்ச்சிப் பொங்க இஷ்டத்திற்கு குரல் கொடுத்து விடுகிறது. காரியம் கெட்டுவிடுகிறது. அந்த துணை இயக்கத்தினர்களை பாரதிய ஜனதாவால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்களை அப்படி தயார் செய்ததே இவர்கள்தான் என்கிற போது எப்படி அவர்களை கட்டுப்படுத்த இயலும்? தவிர, அவர்கள் மனதிற்குள் பேராசை கொண்டிருக்கும் 'தனித்து ஆட்சி' அமைப்பதென்பதும் இயலாமல் போய் கொண்டே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்தில் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வருகிறது! அதையொட்டி அவர்கள் பெரிய பெரிய கணக்கையெல்லாம் போட்டுப்பார்த்து போட்டுப்பார்த்து, இஸ்லாமியர்களிடமும் மற்றைய சிறுபான்மையினரிடமும் ஓட்டுக்களை பெறவும், தங்களை வெறுக்கும் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளிடம் தடையின்றி கூட்டணி அமைக்கவும் தீர விடைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் சென்ற இரண்டு பொதுத் தேர்தல் சமயங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சிக்கார்கள் இப்படியான யோசிப்பை யோசிக்கத் தவறவில்லை.

இஸ்லாமியர்கள் கேட்காமலேயே, ஹஜ் செய்யும் பயணிகளுக்கு சில சலுகைகளை வாஜ்பாயி காலத்தில்அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அடுத்து வந்த பொதுத் தேர்தலில், பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்கிற அவர்களின் பிரதான கொள்கையினையும் கைவிட்டும் பார்த்தார்கள். பிறகு ஒரு தேர்தலுக்கு முன் 'பாக்கிஸ்தானின் தந்தை ஜின்னா' அவர்களை மிகப் பெரிய ஜனநாயகவாதி என்று புகழ்ந்துப் பார்த்தார்கள். இப்படியான எந்தவொரு மாய்மாலத்திற்கும் இந்திய இஸ்லாமியர்கள் மயங்கவில்லை. இவர்களை நம்பவும் தயாரில்லை. இதனால், அவர்களது கூட்டணி வலுவாக ஜெயிக்க முடியவில்லை. ஆக, இப்போது வரவிருக்கும் பாரளுமன்ற பொதுத் தேர்தலை மனதில் கொண்டு, இன்றைக்கு அத்வானி இப்படி ஒரு பூடகமான, அரைக்குறை அறிக்கையின் மூலம் இஸ்லாமியர்களின் காதில் பூச்சூட்ட பூக் கொத்தோடு நட்பு பாராட்டி வந்திருக்கிறார்..

இன்றைக்கு அரசியல் வானில் காட்சிகள் மாறி இருக்கின்றன. இந்திய வாக்காளர்களிடமும், சொந்தக் கட்சிக்காரர்களிடமும் மதிப்பிழந்தவரான அத்வானி இப்படியான ஓர் பொய்யான அறிக்கை முயற்சியில் இறங்குவதற்குப் பின்னால் சில அரசியல் சங்கதிகள் இருக்கிறது.  

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய துணை பிரதமராகவும் ஆக்க இந்திய அளவில் உள்ள ஆதிக்க சக்திகளும், உயர் ஜாதி இந்துக்களும், ஆதிக்க சக்திக் கொண்ட இந்திய உயர்வகுப்பு முதலாளி வர்க்கத்தினர்களும், அவர்களது த்திரிகைகளும், மீடியாக்களும் மறைமுகமாக வரிந்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

வரவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்வைத்து, அவர்களது அரசியல் களம், மறைமுகமான சாணக்கியத்தனத்துடன் வீறுகொண்டிருக்கிறது. இதில் அத்வானியின் பங்கென்பது, இந்த உயர் வகுப்புகாரர்களுக்கு உதவுவது. அவரது இன்றைய இந்த அறிக்கை, அவர் பிரதமாராக விரும்பி பொதுமக்களிடம் நல்லப் பெயர் எடுக்கவும், சிறுபான்மையினர்களிடம் நட்புக் கொள்ளவுமான அறிகையல்ல. அவரது நண்பர் நரேந்திரமோடிக்காகவும் ஜெயலலிதாவுக்காகவும் உதவி புரிகிற அறிக்கை அது!

நண்பர் நூருல் அமீன் அவர்கள், அத்வானியின் அறிக்கையினை குறித்து, கருணைப் பொங்க அலச முற்பட்ட வேளையில், அந்த அறிக்கையின் அதிமுக்கிய வரிகள் குறித்து விமர்சனம் வைக்க தவறிவிட்டார்.

அத்வானி தன் அறிக்கையின் கடைசியில், தனது கட்சிக்காரர்களுக்கு சின்ன வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது சின்ன வேண்டுகோள்தான் என்றாலும், ஆயிரம் அர்த்தம் பொருந்தியது. அதாவது, தனது அறிக்கையினை தனது கட்சிக்காரர்கள் 'தலைக்குத் தலை' அபிப்ராயம் கூறி, இஸ்லாமியர்களிடம் சினேகம் பாராட்டும் காரியத்தை கெடுத்துவிட வேண்டாம் என்பதுதான் அதாவது 'இது தேர்தலுக்கான ஏமாற்றுவேளைதான், மற்றப்படிக்கு அதில் ஒன்றுமில்லை. அவர்களுக்கு வேறு எந்த வாக்குறுதியும் நான் தந்துவிடவில்லை. நீங்கள் உறி காரியத்தை கெடுத்துவிடாதீர்கள். இப்படித்தான், தேர்தல் பொருட்டு ஜின்னாவைப் புகழ்ந்தேன்! நீங்கள் உங்களின் ஜின்னா எதிர்ப்புணர்வையும் என்னையும் விமர்சித்து காரியத்தை கெடுத்துவிட்டீர்கள். அது மாதிரி இப்பவும் நடந்துக்கொள்ள வேண்டாம்' என்பதைத்தான் அத்வானி, அந்த அறிக்கையிலேயே தனது கட்சித் தொண்டர்களுக்கு அப்படி நாசுக்காக தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதாவின் தொண்டர்கள் ஆகட்டும், ஆர்.எஸ்.எஸ். ஸின் தொண்டர்களாகட்டும், அத்தனை பேர்களுமே இஸ்லாமிய எதிர்ப்புணர்வில் திளைப்பவர்கள்!  அந்த அளவில் அவர்களுக்கு அந்த எதிர்ப்புணர்வு வழிமுறையாக ஊட்டப்பட்டு, அது கொஞ்சமும் சிதையாமல் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள்! அதனால் என்னவோ, எந்நேரமும் மந்திரித்துவிட மாதிரி இஸ்லாமிய எதிர்ப்புணர்வுடன் வலம் வருபவர்கள். அவர்களிடம் வாழும் அந்த எதிர்ப்புணர்வை அக்கட்சியின் தலைவர்களாலும் மாற்றிவிட முடியாது! இஸ்லாமியர்களிடம், இப்போது நட்பு பாராட்டி அறிக்கை விடுவது ஒரு தேர்தல் கால பொய்யே என்பதை அவர்கள் சட்டைசெய்ய மாட்டார்கள். ஒருவேளை பொருட்படுத்தினால் உடனே அதற்கு எதிர்வினை செய்ய தொடங்கிவிடுவார்கள். தலைமைக்கோ அது பெரிய தலைவலியாகிப் போகும்  அதனால்தான் அத்வானி தன் கட்சித் தொண்டர்களுக்கு அப்படியொரு சுட்டுதலோடு அறிக்கை தந்திருக்கிறார். பொய் காக்கப்பட வேண்டாமாயென்ன?


இப்படி, தலைவரே தொண்டர்களிடம் அச்சம் கொள்கிற அளவில் அவர்களை 'இஸ்லாத்திற்கு எதிராக' தயார்படுத்தியிருக்கிற நிலையில்; இஸ்லாமியர்களிடம் அத்வானி நட்புப் பாராட்டுவதிலும்தான் என்ன அர்த்தம் இருக்க போகிறது?

உலகத்திலேயே நரேந்திர மோடியை நல்லவர் என்றும், தவறே செய்யாதவர் என்று திரும்பத் திரும்ப கூறிவரும் துக்ளக் சோ, 10.10.2012 தேதியிட்ட துக்ளக்கில்,. "வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணி அதிக மெஜாரிட்டியோடு ஜெயிக்க வேண்டும், நரேந்திர மோடி பிரதமராக அமரவேண்டும். இன்றைய நிலையில் பாரதிய ஜனதாவோடு தடையற கூட்டணி வைத்துக்கொள்ள பிற கட்சிகள் தயங்குகிற நிலை உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான நிலைக் கொண்டதாக பாரதிய ஜனதாவை எல்லோரும் பார்க்கிறார்கள். அதனை மனதில் கொண்டுதான் அத்வானி அப்படியொரு அறிக்கையினை விட்டிருக்கிறார். கட்சிக்காரர்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டாம். அத்வானியின் பேச்சு அனைவருக்கும் புரியாமல் போகாது." என்கிற அர்த்தத்தில் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா தொண்டர்கள் இந்த அறிக்கைக்காக அத்வானியை சாடட்டும் அல்லது சாடாமல் மௌனம் காக்கட்டும், ஆக இந்த அறிக்கை இஸ்லாமியர்கள் மீது நேசம் கொண்ட நிஜமானது அல்ல. தேர்தலை மனதில் கொண்டு விடப்பட்டிருக்கும் பொய்யான, ஏமாற்று அறிக்கை. அவ்வளவுதான்.

அத்வானியோ, துக்ளக் சோவோ பயந்த மாதிரியெல்லாம் அத்வானியின் இந்த அறிக்கையை பாரதிய ஜனதாவின் பிற தலைவர்களோ, தொண்டர்களோ விமர்சனம் செய்யவில்லை. முன்பு மாதிரி அத்வானியை திட்டித் தீர்க்கவும் இல்லை. அவர்கள் மாத்திரமல்ல எந்தவொரு மீடியாவும் அவரது அறிக்கைக்கு மதிப்புக் கொடுத்து விமர்னத்திற்கு உட்படுத்தவில்லை. இந்தியாவின் பிற முக்கிய கட்சித்தலைவர்களும் கூட இதற்கு கருத்தொன்றும் சொல்லவில்லை. அத்வானியின் அறிக்கைக்கு மதிப்பென்பது அவ்வளவுதான்!

எனக்குத் தெரிந்து அத்வானியின் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சன அலசல் செய்திருப்பது நண்பர் நூருல் அமீன் மட்டும்தான். அவர் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இப்போது நானும் அதனை விமர்சனம் செய்திருக்கிறேன். நூருல் அமீன் சொல்லியிருக்காத பட்சம், அத்வானியின் அறிகையினை திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன். மதத்தின் பெயரால், இந்திய மக்களின் நட்புணர்வை கெடுத்த ஒருவருக்கு எவன்தான் மதிப்பு கொடுப்பான்?

ஹாஜா அலி என்றொரு நண்பர் இருந்தார். கூத்தாநல்லூர் வாசி. இப்போது இல்லை. அவர் இல்லாமல் ஆகி சுமார் பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
நண்பர் ஹாஜா அலி, நிறைய வாசிப்பு கொண்டவர். வாசிப்பை மூச்சாகவே கொண்டிருந்தவர். ஜனநாயகவாதி, சுதந்திரத்தை மதிக்கிறவர். சுதந்திர சிந்தனைகள் அவருக்குப் பிடிக்கும்.. கெட்டியான இலக்கியவாதி, வலதுசாரி சிந்தனைக்கு மட்டுமே செவிசாய்ப்பவர். ஆம், கம்யூனிஸ்டுகள் அவருக்கு ஆகாது. பல அர்த்தங்களோடு அமெரிக்காவின் மீது ஏக மதிப்பு வைத்திருந்தவர். இலக்கியத்தில் பெயர் போட்ட அத்தனை பெரிசுகளையும் தீர வாசித்தவர், துக்ளக் சோவை மதித்தவர். ஒரு பாராளுமன்ற பொதுத் தேர்தல் காலத்தில், அவரிடம், 'யாருக்கு ஓட்டுப் போடப் போகின்றீர்கள்?' என்று கேட்டேன். சிரித்துவிட்டு சொன்னார்.

 
"ஒரு உண்மையான வெளிச்சம் வருகிற காலம் வரை, இஸ்லாமியனுக்கு ஏது தாஜ் அந்த சான்ஸ்.? பாரதிய ஜனதா கூட்டணிக்கு, எதிராக நிற்கும் கூட்டணிக்கு ஓட்டுப் போடுவதென்பது மட்டும்தான் இந்திய முஸ்லிம்களின் செயலாக இருக்கும்" என்றார். அப்பவும் இப்பவும் எனக்கு அதுதான் சரியென்று படுகிறது.

***
-தாஜ்




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

1 comment:

Unknown said...

சலாம்,சகோ.நூருல் அமீன்

சகோ.தாஜ் சொல்வது நூறு சதவிகிதம் சரியே ...அதில் மாற்றுக்கருத்து இல்லை...