தோழமையுடன்

Saturday, July 28, 2012

படைப்பதனால் என் பெயர் இறைவன்!

 படைத்தல் என்றால் சிருஷ்டிகளுக்கு இருப்பை (existence) வழங்குதல் என பொருள்

எந்தப் பொருளையும் படைக்க முடியாதவற்றையா (இறைவனுக்கு) இணை வைக்கின்றனர்?அவைகளும் (இறைவனால்) படைக்கப்பட்டவையே.(7:191) என்கிறது இறைவேதம்.

‘படைக்குதல்’ என்பதை இறைத் தன்மையென்கிறது இந்த இறைவசனம்.

அதே நேரத்தில், இறைவன் தன்னை ‘படைப்பாளர்களில் அழகிய படைப்பாளன்’ என பல படைப்பாளர்களை தன்னுடன் ஒப்பிட்டு கூறுகின்றான்.

அப்படி என்றால் படைக்கும் சிருஷ்டிகளும் இறைத் தன்மை பெற்றவையா? 


படைப்பதனால் என் பெயர் இறைவன்’ என பாடினார் கவிஞர் கண்ணதாசன். 
நாமும் பார்க்கின்றோம் எத்தனையோ சிருஷ்டிகள்  விதவிதமான பொருளகளை படைக்கின்றனர்.

தச்சர் மரசாமான்களை செய்கிறார்.

குயவர் மண்பாண்டங்களை செய்கிறார்.

பொற்கொல்லர் நகைகளை செய்கிறார்.

அப்படி என்றால் படைக்குதல் என்ற ரீதியில்  இவர்கள் இறைவனுக்கு இணையாவார்களா? என்று கேட்டால் நாம் என்ன சொல்வோம்?

“தச்சர் இருக்கின்ற பொருளாகிய மரத்திலிருந்து நாற்காலி, மேசை என்ற புதிய தோற்றத்தை வடிவமைக்கின்றார்.  

படைக்கப்பட்டவை மரத்தின் புதிய வடிவங்கள். அவற்றில் இருக்கும் மூலப்பொருளான மரமோ தச்சரால் படைக்கப்பட்டதல்ல.

 குயவர், பொற்கொல்லரின் நிலையும் இதுவே. அவர்களும் தாங்கள் திறமையை வெளிப்படுத்த களிமண், தங்கம்  வெள்ளி போன்ற மூலப்பொருளின் பால் தேவையானவர்கள்.

பிரபஞ்சத்தை படைக்க இறைவன் எந்த மூலப்பொருளின்பாலும் தேவையற்றவன்.

எதன் பக்கமும், எவர்பக்கமும் எதற்கும் தேவையில்லாதவன் தான் இறைவன்.

இறைவன் தன் படைப்புகளை இல்லாமையிலிருந்து படைக்கிறான். அதாவது இறைவனால் படைக்கப்பட்ட சிருஷ்டியும், அந்த சிருஷ்டி எதைக் கொண்டு காட்சியளிக்கிறதோ அந்த மூலப்பொருளும் இறைவனால் படைக்கப்பட்டது” என்போம்.

இங்கே அறிவியல் படித்த அன்பர்களுக்கு ஒரு அடிப்படை கேள்வி எழலாம். அதை இறுதியில் பார்க்கலாம். அதற்கு முன் சில கேள்விகள்.

தச்சரும், குயவரும், பொற்கொல்லரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.
அவர்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த தேவையான மரமும், களிமண்ணும், தங்கமும் கூட இறைவனால் படைக்கப்பட்டவை.

ஆனால், மரத்தை நாற்காலியாக்கியது யார்?

களிமண்ணிலிருந்து மண்பாண்டத்தை படைத்தது யார்? 

தங்கத்தை அற்புதமான நகையாக்கியவர் யார்?

இந்த படைப்பாற்றல் சிருஷ்டிகளின் செயலல்லவா? என்று கேட்டால் நம் பதில் என்ன?.

மேலே கூறிய இறைவசனதுடன் முரண்படுவது போல் தோன்றுகிறதே. இறைவசனத்தில் முரண்பாட்டிற்கு சாத்தியமே இல்லையே  என தடுமாறுகிறது மனம்.

அறிவுக்கு எட்டாத இந்த புதிருக்கு பதிலை குர்ஆன் சொல்லுகிறது.

உங்களையும் உங்கள் செயல்களையும் அல்லாஹ்வே படைத்தான்.(37:96) என்பது தான் அந்த பதில்.

அதாவது சிருஷ்டிகளுகளும்,  சிருஷ்டிகளில் வெளிப்படும் படைத்தல்  உட்பட அதன் அனைத்து செயல்களும் இறைவனால் படைக்கப்பட்டவை.

அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன். அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன். (39:62)

(நம்பிக்கையாளர்களே தற்காப்புக்காக நீங்கள் போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்றுவிடவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீங்கள் எறியவில்லை. அல்லாஹ் தான் (அதனை) எறிந்த்தான். (8:17)

அல்லாஹுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது.((64:11)

இங்கே நாம் சொல்ல வருவது ‘எல்லாம் அவன் செயல்’ என்பதல்ல.

எல்லா செயல்களும் அவனால் படைக்கப்படுகின்றது என்பதைத் தான்.

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு இறைவசனங்களும் தவ்ஹீதே ருபூபிய்யத்தை விளக்கும்   குர்ஆன் வசனங்கள் என குறிப்பிடுகின்றார் அபு ஆமினா பிலால் பிலிப்ஸ்( Fundamentals of Tawheed – page 14)  

இவைப்பற்றிய மேலான விளக்கங்களை இறைஞானிகளின் சகவாசத்தில் தான் பயில முடியும்.

முன்பே கூறியது போல படைக்குதல் என்பதை அறிவு ரீதியில் சிந்தித்தால் ஒரு அடிப்படை கேள்வி எழுகின்றது.

சுயமாக இருப்பவன் இறைவன் மட்டுமே. அவனைத் தவிர உள்ள அனைத்தும் படைக்கப்பட்டவையே.படைக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் அதன் மூலப்பொருள் இல்லாமல் காட்சிக்கு வராது. அப்படி என்றால் பிரபஞ்சத்தின் மூலத்திற்கெல்லாம் மூலமான பொருள் (Materia Prima) ஒன்று இருக்க வேண்டுமே! அது என்ன? அந்த முலப்பொருள் எதனால் படைக்கப்பட்டது.
தச்சர், குயவர், பொற்கொல்லரைப் போல உலகத்தை படைக்க இறைவன் ஒரு மூலப்பொருளின் பக்கம் தேவையானவன் இல்லையே! அப்படி என்றால் பிரபஞ்சத்தின் மூலத்திற்கெல்லாம் மூலமான பொருள் (Materia Prima) எதனால் படைக்கப்பட்டது.

இதற்கு இறைவேதத்தின் பதில் என்ன?

வானங்களையும், பூமியையும் ‘ஹக்கைக்’ கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.(16:3) என்கிறது இறைவேதம்.

ஹக் என்பதற்கு ‘உண்மை’, ‘சத்தியம்’, ‘தக்க காரணம்’ என பலவாறு பொருள் செய்யப்பட்டுள்ளது. உண்மை, சத்தியம், காரணம் என்பவையெல்லாம் மூலபொருள்கள் அல்ல. அப்படி என்றால் 'ஹக்' என்பது எதைக் குறிக்கின்றது என்பதை உங்கள் மேலான சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

0 0 0

இறைவன் வானம் பூமியின் நூராக இருக்கின்றான்.(24:35) என்கிறது வேதம்.

இறைவனுக்கு  ‘அன்னூர்’ என்றொரு பெயர் இருக்கிறது அந்த பெயருக்கு இமாம் கஸ்ஸாலி [ரஹ்] அவர்கள் ‘அள்ளாஹிர்’ [வெளிப்படையானவன், வெளியானவன்] அதாவது அவனைக் கொண்டே சகலவிதமான வெளியாகுதல் இருக்கிறது’ என்பதாக விளக்கம் கூறியிருக்கின்றார்கள். எவ்வாறெனில் அள்ளாஹிர் என்பது பிறருக்குத் தன்னை வெளியாக்கிக் கொள்வதுதான். இதற்குத் தான் ‘நூர்’ என்று பெயர் (தப்சீர் ஹமீத் பாகம் 4 பக்கம் 828)

இறைவன் தான் நாடியவர்களை தன் நூரின் பால் செலுத்துகின்றான். (24:35) என்கிறது இறைவேதம்.

நம் அனைவருக்கும் இறைவன் அந்த மகத்தான பக்கியத்தை வழங்குவானாக ! ஆமீன். 

தொடர்புடைய சுட்டிகள் :  

இறைவன் இருக்கின்றானா?

படைக்கும் படைப்பினம் 



உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

7 comments:

ஹமீது ஜாஃபர் said...

கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது. படைத்தலைப் பற்றி சொல்லும்போது எங்கள் ஹஜரத் அவர்கள் சொன்ன கருத்தை இங்கே வைப்பது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இக்கருத்தை எனது திண்ணை இணைய இதழில் 'மரணத்தின் விளிம்பில்" என்ற பயணக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். (file:///C:/JAFFER/My%20Thinnai%20Article/Maranathin_vilimbu.htm - இதை சொடிக்கிப் பார்க்கவும்.)

மனிதனுக்கு கலீஃபத்துல்லாஹ் என்ற சிறப்பைக் கொடுத்துள்ளான் இறைவன். அந்த வகையிலே இறைவனின் பிரதிநிதியாக இருந்து பல்பொருட்களைப் படைக்கிறான். நீங்கள் இருக்கும் சூழலில் சற்றே பார்த்தால் இறைவனின் படைப்பைக்காட்டிலும் மனிதனின் படைப்பே அதிகமாக இருக்கும். அதனால் மனிதனும் இறைவனும் ஒன்று என்பதல்ல. சுருங்கச் சொன்னால் இறைவன் மூலத்தைப் படைத்தான், அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களை தினுசு தினுசாக மனிதன் படைக்கிறான். பிரதிநிதித்துவத்தை அவன் வெளிப்படுத்துகிறான் என்று பொருள் கொள்ளலாம்.

இறைவசனங்களான 39:62, 8:17, 64:11 போன்ற சிலவற்றிற்கு உண்மைப் பொருளை விளக்குவது இங்கு உசிதமல்ல. ஷரீஅத்தையும் பேண வேண்டும்.

"ஹக்" என்றால் உண்மை, சத்தியம் என்று பொருள்படும். இப்பொருளை எடுத்துக்கொண்டால் எதிர்மறை வார்த்தையான பொய், அசத்தியம் என்ற நிலை அங்கே வருகிறது. ஆனால் இறைவனைக் குறிக்கும் "ஹக்" என்ற வார்த்தைக்கு எதிர்மறை கிடையாது. இந்த எதிர்மறையற்ற நிலையில்தான் 'அனல் ஹக்' வந்தது. இதை அவாம் என்கிற பாமரர்களால் மட்டுமல்ல கற்றறிந்த ஆலிம்களால்கூட புரிந்துக்கொள்ள முடியாது.

Sha said...

Masha Allah... Very nice :-)

Anonymous said...

Our existense because of HIM

HIS manifestation because of us

புல்லாங்குழல் said...

ஹமீது ஜெஹபர் நானா,

தாங்கள் இணைத்துள்ள சுட்டியின் மூலம் கட்டுரையை அணுக முடியவில்லை. சரி பார்த்து தரவும்

ஹமீது ஜாஃபர் said...

சென்ற 15-11-2007 திண்ணை இதழில் ‘மரணத்தின் விளிம்பிலிருந்து’ என்ற கட்டுரையில் ’இயற்கையையும் செயற்கையையும் ஒருசேரப் பார்க்கும்போது.... என்று தொடங்கும் பத்தியில் மனிதனின் படைப்பைப் பற்றி எழுதியுள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்.

பழைய குறிப்பிலிருந்து இணைய முகவரியை எடுத்ததால் தவறு நிகழ்ந்துவிட்டது, வருத்தமடைகிறேன். கீழே உள்ள முகவரி அல்லது 15 நவம்பர் 2007 இதழில் தேடினால் கிடைக்கும்.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20711153&edition_id=20071115&format=html

புல்லாங்குழல் said...

நானா, சுட்டியில் பார்த்தேன் ரொம்ப திரில்லிங்காக இருந்தது உங்கள் அனுபவம்.

nagoreismail said...

Romba arumaiyaaa irukku...