தோழமையுடன்

Thursday, April 21, 2011

அல்லாஹ் என்பது யார்?



அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இறைவன், கடவுள் என்பது பொருள்.  அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும். இதை தான் வலைப்பக்கத்தின் முகப்பிலேயே போட்டிருக்கின்றீர்களே பின் ஏன் ரிபிட்டேஷன் அவனைப் பற்றி வேறு ஏதாவது சொல்லுங்கள் என்கின்றீர்களா!

இதுவும் நீங்கள் அறிந்த விசயம் தான். மீண்டும் ஞாபகத்திற்காக இதோ…
 அல்லாஹ் என்னும் இறைவன் என்பது மனிதன், வானவர், ஜின் (பூதம்) போன்ற எந்த இனத்தையும் சார்ந்தவனில்லை.

உருவம், வடிவம், நிறம், இடம் என்ற நாமறிந்த எந்த அமைப்பிலும் கட்டுப்பட்டவனில்லை. ஆண்,பெண், அலி என்ற பாலினம் அவனுக்கு இல்லை. 

அவனுக்கு பெற்றவரும் இல்லை. பிள்ளைகளும் இல்லை.

ஊண், உறக்கம், வசிப்பிடங்களின் தேவை அவனுக்கு இல்லை.

சுருக்கமாக சொன்னால் நாமறிந்த எந்த ஒன்றை போலவும் அவன் இல்லை. இப்படி இல்லை, அப்படி இல்லை  என்றால் மனித மனம் உருவாக்கிய மகத்தான கற்பனையோ? என்று மயங்க வேண்டாம்.

மனம் என்பதே அவன் இருப்புக்கு சாட்சிதான். மனம் என்னும் மகத்தான அற்புதத்தை வழங்கியவன் அவன்.

நாம் அறிந்த அனைத்தையும் எதை கொண்டு அறிகின்றோமோ அந்த மனம், புல்னுணர்வு, அறிவு, மூளை இன்னும் அனைனைத்தையும் வழங்கியவன். இல்லாத ஒன்றை இறைவன் என சொல்லவில்லை. தன் தானே சுயமாக  இருப்பவனைத் தான் நாம் இறைவன் என்கின்றோம்.
இறைவன் என்பதற்கு முதல் தகுதியே அவன் வேறு யாராலும் படைக்கப்பட்டவனாக இல்லாமல் தன் தானே சுயமாக இருக்கும் சுயம்புவாக இருப்பதுடன் அவன் என்றும் இருப்பவனாக, அழிவே இல்லாதவனாக இருப்பது அவசியம்.

அவனே ஆதி, அவனுக்கு முன் என்ற நிலையே இல்லை. அவனே அந்தம், அவனுக்கு பின் என்ற நிலையும் இல்லை. அவனே மறைவானவன். அவன் சொந்த நிலையால் அனைவருக்கும் மறைவானவன், அவனே வெளியானவன். அனைத்து கோலங்களிலும் தன் அழகிய பண்புகளால் வெளியானவன்.

அப்படி ஒன்றே ஒன்றான ஒற்றை மூலத்தை, யாராலும் படைக்கப்படாத பரபிரம்மத்தை, எல்லோறையும் இடைவிடாமல் படைத்துக் கொண்டிருக்கும் கர்த்தனைத் தான் அல்லாஹ் என குறிப்பிடுகின்றது குர்ஆன் வேதம்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன்:
மயர்விலா மதி நலன் அருளினன் எவனவன்:
அயர்விலா அமரர்கள் அதிபதி எனவனவன்:
துயரிலா சுடரடி தொழுதெழென் மனனே! என்ற குமர குருபரர் கூறிய வரிகளில் (என் ஞாபகத்தில் இருந்து எழுதுகின்றேன். தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.) நான் கண்டு கொண்டதும் அந்த உருவிலா பேரருளாளனைத் தான்.

சுடரடி தொழும் தொழுகை என்றதும் நினைவுக்கு வரும் பள்ளிவாசல் என்பது அல்லா சாமி குடியிருக்கும் கோயில் அல்ல. அது கூட்டு பிரர்த்தனைக்காக இறைவன் அருளிய ஏற்பாடு. “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை!” என சொல்லுவதில்லை என நாகூர் ஹனிஃபா பாடுவார். அப்படி “இறைவா!” என்று அழைப்பவருடன் இருந்து அப்படி அழைக்க நாவை அசைப்பவன் அவன். அழைத்த பின் வர அவன் நம்மை விட்டு தூரமாய் இல்லை. நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான். எல்லா இடங்களுமே அவனைக் கொண்டு இருக்க இடப் பெயற்ச்சி என்பது அவனுக்கு இல்லை. திரும்பும் திசை எல்லாம் அவன் இருப்பதால் அவனை முன்னோக்க உடலை திருப்ப வேண்டியதில்லை. மனதை – கவனத்தை திருப்பினாலே போதும்.

வானம், பூமியில் உள்ள அனைத்தும் அவனையே வணங்குவதாக கூறுகிறது இறைவேதம். இதை அறியும் பாக்கியம் தான் ஏகத்துவ மெய்ஞானம்.

7 comments:

Chitra said...

திரும்பும் திசை எல்லாம் அவன் (God) இருப்பதால் அவனை முன்னோக்க உடலை திருப்ப வேண்டியதில்லை. மனதை – கவனத்தை திருப்பினாலே போதும்.


......சிந்திக்க வைத்த இடம் இது.

புல்லாங்குழல் said...

எப்போதும் போல முதல் கருத்து. நன்றி சகோதரி!

பிறைத்தமிழன் said...

அழைத்தால் வருவான் எனும் நிலைக்கப்பார்ப்பட்டவன் !
மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன் ! ஆம்
நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்
சூரியக்குடும்பத்தில் அங்கம் வகிக்கின்ற புவி உள்ளிட்ட ,
அனைத்து கோள்களையும் படைத்து பரிபாலிக்கின்றவன் !
" இறைவன் "
எங்கும் நிறைந்த ஏகப் பரம்பொருள் ! ஆம்
எல்லா இடங்களுமே அவனைக்கொண்டு இருக்க
இடப்பெயற்சி என்பது அவனுக்கு இல்லை
சகோதரர் நூருல் அமீன் அவர்களே ;
வலைத்தளங்கள் விலைத்தலங்கலாகவும்,
விளயாட்டுத்தலங்கலாகவும் மாறிவிட்ட
இக்காலத்தில் இறைவன் பற்றிய ஞான த்தை
சிறிதும் ஊனமின்றி கையாள்வதற்கு இந்த
பிறைத்தமிழனின் ,
நன்றிகலந்த பாராட்டுக்கள்.........

Pebble said...

//திரும்பும் திசை எல்லாம் அவன் இருப்பதால் //
Is this correct on Islamic perspective?

புல்லாங்குழல் said...

பிறைத் தமிழன் உங்கள் கருத்துக்கு நன்றி!

Dear Pebble,

உங்கள் கேள்விக்கு நன்றி! இது எனது சொந்த கருத்தல்ல “எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) “ என்பது குர்ஆனில் வரும் வாசகம். அதே நேரத்தில் எல்லாம் அவனல்ல. இதை விளங்க “இறைவன் இருக்கின்றானா?” என்ற கீழ்கண்ட சுட்டியை பார்வையிட அன்புடன் வேண்டுகின்றேன்:

http://onameen.blogspot.com/2010/08/blog-post_27.html

அன்புடன்,
அமீன்

ஸாதிகா said...

//அவனே வெளியானவன். அனைத்து கோலங்களிலும் தன் அழகிய பண்புகளால் வெளியானவன்.

// என்னே சத்தியமான வரிகள் .அருமை பகிர்வு சகோ

புல்லாங்குழல் said...

நன்றி! சகோதரி ஸாதிகா. ஞான வரிகளில் உங்கள் நுட்பமான வாசிப்பு தாங்கள் ஆன்மீக பாதையில் பயணிப்பவர் என்று உணர முடிகின்றது.