தோழமையுடன்

Monday, June 10, 2013

இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்

மப்றூக்


லங்கையின் கல்வித்துறைசார் இஸ்லாமிய அறிஞர்களில் குறித்துச் சொல்லத்தக்க ஒருவர் கலாநிதி தீன்முகம்மத்! இவரின் சொந்த ஊர் அம்பாரை மாவத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசம். இலங்கையில் வாழ்ந்ததை விடவும் கற்கவும், கற்றுக் கொடுக்கவுமென இவர் வெளிநாடுகளில் வசித்த காலமே அதிகமாகும்!

இவர் பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:

0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத் தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப் பணிப்பாளராகவும்

நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.

அதற்கு முன்னர், 1988 இல் எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!

தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல் இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.

கலாநிதி தீன்முகம்மத் பல இஸ்லாமிய நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் பலவற்றிற்கும் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பயணித்துள்ள இவர் பல்வேறு தலைப்புக்களில் அங்கு விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

தனது கலாநிதிப்பட்டதுக்காக இவர் எழுதிய – ‘இறை காதல்எனும் தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரையானது இஸ்லாமிய உலகில் மிகவும் கவனத்துக்குரியது.

உலகளாவிய ரீதியில் இஸ்லாமியக் கல்வித்துறையிலே இத்தனை அடைவுகளையும், பதவிகளையும் பெற்றுள்ள தீன்முகம்மத் அட்டாளைச்சேனையிலுள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பழைய மாணவராவார்! இவர் தனது மௌலவிப் பட்டப்படிப்பை இங்குதான் பெற்றுக் கொண்டார்.

ஒரு குறுங்கால விடுமுறையில், குடும்பத்தோடு வந்துள்ள கலாநிதி தீன்முகம்மத்தை அவரின் வீட்டில் இந்தப் பேட்டிக்காகச் சந்தித்தோம்.
இத்தனை பதவிகளுக்கும், தகைமைகளுக்கும் உரித்தானவரா இவர்? என வியக்கும் வகையில் எந்தவிதமான அலட்டல்களுமின்றி மிகச் சாதாரணமாக நம்மோடு உரையாடினார்!

கேள்வி: இறை காதலுக்கும் சூபித்துவத்துக்குமிடையிலான உறவு பற்றிப் பேசுங்களேன்! சூபித்துவம் என்பது பௌத்த, கிரேக்க அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்றும் ஒரு விமர்சனம் உள்ளதே?

பதில்: இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதற்காகத்தான் இறை காதல்என்கிற தலைப்பில் எனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்தேன்.

சூபித்துவம் என்பதை கிரேக்க, பௌத்த அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்று சொல்பவர்கள் எத்தனை கலாநிதிப் பட்டங்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை அவர்களை முட்டாள்கள் என்றுதான் நான் கூறுவேன்.

கிரேக்க அல்லது பௌத்தம் போன்ற தத்துவங்களிலிருந்துதான் சூபித்துவம் உருவானதாகக் கூறுபவர்களில் அதிகமானோருக்கு அவர்கள் கூறுகின்ற தத்துவங்கள் பற்றியே தெரியாது.

இஸ்லாத்தின் அடிப்படையே இறை காதல்தான். இஸ்லாமிய வாழ்க்கை முறை இறை காதலின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது. இதை நடைமுறைப் படுத்துகின்றவர்கள் சூபிகள்! அதனால்தான் இறை காதலைப் பற்றி சூபிகள் அதிகமாகப் பேசுகின்றனர்.

மனிதனை ஒரு போதும் சட்டத்தால் மாற்றிவிட முடியாது. ஆனால், அன்பால் மாற்றி விடலாம். உதாரணமாக, விபச்சாரம் செய்தால் சவூதி போன்ற நாடுகளில் கசையடி வழங்குவார்கள் அல்லது கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஆனால், அங்குள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள். 
சவூதியிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று நிறையக் காசைச் செலவு செய்து தமது உடல் இச்சையை நிறைவு செய்து விட்டு நாடு திரும்புகின்றார்கள். ஆக, சட்டத்தால் ஆட்களைத் திருத்த முடிகிறதா? இல்லை!
சட்டத்தில் எப்போதும் ஓட்டை இருக்கும். எனவே சட்டத்தை மேவி குற்றமிழைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் பலர் அதைச் செய்து விடுகின்றனர்.

ஆனால், அன்பினால் ஒருவரை மாற்றி விட முடியும். ஏன் அன்பிருந்தால் உங்களையே உங்களால் மாற்றி விட முடியும்!

ஒருவருடன் நீங்கள் காதல் நிலையிலிருந்தால், அவருக்காக எதையும் தியாகம் செய்வதற்கு நீங்கள் தயாராகவே இருப்பீர்களல்லவா! இறை காதலும் இப்படித்தான்!

அல்லாமா இக்பால் சொல்லியிருக்கின்றார் காதல்தான் அல்லாவுடைய தூதன் என்று!

அல்லாஹ் மீதான காதல் உங்களிடம் இல்லையென்றால், இஸ்லாத்தை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றவே மாட்டீர்கள். ஆக இறைகாதல் இல்லாத இடத்தில் இஸ்லாம் இல்லை!

இறைகாதலுக்கும் சூபித்துவத்துக்குமிடையிலான உறவு இதுதான்!
மக்களிடம் இறைகாதல் இல்லாமல் போகும் நிலை வந்து விடுமோ என்பதற்காகத்தான் சூபிகள் வெளியாகி, மக்களின் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை காட்டி நிற்கின்றார்கள்.
ஆனால், சில மேற்குதேச சிந்தனையாளர்கள் சூபித்துவத்தை வேறு தத்துவங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகச் சித்தரிக்க முயற்சி செய்கின்றார்கள்.

இஸ்லாம் என்பதை கத்தியும், ரத்தமும், கொலைகளும் நிறைந்ததொரு மார்க்கமாகக்; காட்டுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அன்பையும், காதலையும் பற்றி இஸ்லாம் பேசுவதை அவர்களால் பொறுக்க முடியாது. ஆதனால்தான் சூபித்துவத்தை கிறிஸ்தவத்திருந்தும் வேறு தத்துவங்களிலிருந்தும் பெறப்பட்டதொன்றாகச் சொல்கின்றார்கள்.
உண்மையாகச் சொன்னால், கிறிஸ்தவத்தில் இறைகாதல் என்பதே இல்லை! கிறிஸ்தவ ஞானிகள் இறைகாதலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே கடந்த 800 ஆண்டுகளுக்குள்ளாகத்தான்!

அதாவது முஸ்லிம் சூபிகள் வெளியாகி 400 வருடங்களின் பின்புதான்  கிறிஸ்தவர்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன!
இவைகளையெல்லாம் எனது கலாநிதிப்பட்டத்துக்கான ஆய்வில் மிகத் தெளிவாக விளக்கி, நிரூபித்துள்ளேன். மேலும், இது குறித்து விவாதிக்கவும் நான் தயாராக உள்ளேன்!

கேள்வி: ஒரு முஸ்லிம் ஆத்மீகத்தில் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு முதிர்ச்சி நிலையின் போதாவது, இஸ்லாமிய அடிப்படைக் கடமைகள் ஏதாவதிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா?

பதில்: இல்லை! சித்த சுவாதீனமற்றவர்களுக்கும், சிறுவர்களுக்குமே இஸ்லாமியக் கடமைகளிலிருந்து விடுபட்டிருப்பதற்கு அனுமதியுண்டு! சிலவேளை, ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில்மஜ்தூப்என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான்.
முகம்மது நபியவர்களை விடவும் ஆத்திமீகத்தில் உச்ச நிலையை அடைய எவருக்கும் இயலாது! வொலி மார்களும், சூபிகளும் ஆசை கொள்வது முகம்மது நபியவர்களின் ஆத்மீக நிலையை அடைவதற்ககாக அல்ல. நபியவர்களின் வழியில் முயன்று ஓரளவாயினும் பூரணத்துவம் பெறுவதுதான் அவர்களின் விருப்பம்!

முகம்மது நபி (ஸல்) அவர்களே தொழுகை உள்ளிட்ட எந்தவொரு வணக்க முறைகளிலிருந்தும் கடைசிவரை விடுபடவேயில்லை எனும் போது சாதாரண மனிதர்கள் எவ்வாறு தம்மை விடுவித்துக் கொள்ள முடியும்?
ஒரு முஸ்லிம் சுய சிந்தனையும், புத்தியும், அறிவும் உள்ளவராக இருக்கும் வரையில், இஸ்லாமியக் கடமையினை விடுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருக்கு அனுமதியில்லை! குர்ஆனிலோ, ஹதீஸிலோ அவ்வாறான அனுமதிகள் எவையும் வழங்கப்படவுமில்லை!!

கேள்வி: இசைக்கு இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள இடம் என்ன?

பதில்: இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இசையை ஹறாம் (விலக்கப்பட்டது) எனச் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், அந்தக் கருத்தை நான் முற்றாக எதிர்க்கிறேன். இசையென்பது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டதொரு விடயமாகும்!

இசைக்கருவிகள் சிலவற்றுக்கு எதிராக சில ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால், இசை கூடாது, அதைக் கேட்காதீர்கள் என்றெல்லாம் இஸ்லாத்தில் கூறப்படவேயில்லை.

இதேவேளை, இசைக்கருவிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்ற ஹதீஸ்கள் உறுதியானவைதானா என்பதையும் முதலில் நாம் ஆராய வேண்டியுள்ளது.

இப்னு கைஸ் சிரானி என்கிற இஸ்லாமிய அறிஞரொருவர் 05 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஹதீஸ் கலையில் பெரும் மேதையான இவர் இசை பற்றி கிதாபுஸ் ஸமாஎனும் நூலொன்றை எழுதியிருந்தார். அந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

முதலாவது பகுதியில் இசை கேட்பது கூடாது எனவும், இசையை நிராகரித்தும் வந்துள்ள ஹதீஸ்களையெல்லாம் தொகுத்து அந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரத்துக்கு உதவாதவை என்று அவர் நிரூபித்திருந்தார்.
குறிப்பிட்ட நூலின் இரண்டாவது பகுதியில் இசை கேட்க வேண்டும், இசைக் கருவிகளைப் பாவிக்கலாம் என்பதற்கு ஆதாரமாக வந்த சகல ஹதீஸ்களையும் ஒன்று திரட்டி அவை உண்மையில் ஆதாரபூர்வமானவை என நிரூபித்துள்ளார்.

ஆக இசையென்பது இஸ்லாத்தில் ஏற்கப்பட்டதொரு விடயம் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தப் புத்தகமே நமக்குப் போதுமானதாக இருக்கின்றது.

இசையில்லாமல் மனித வாழ்வே இல்லை!

குர்ஆன் கூட இசையோடும், ராகத்தோடும்தான் ஓதப்படுகின்றது. குர்ஆனின் அற்புதங்களில் அதன் இசைத் தன்மையும் ஒன்றாகும்!

குர்ஆன் வசனங்களிடையேயுள்ள ஓசை நயத்தின் அற்புதத் தன்மையில் மனதைப் பறிகொடுத்த பிரான்சின் இசை மேதையொருவர் அதற்காகவே சில காலங்களுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது!

கேள்வி: அந்நிய கலாசாரத்தை (உதாரணமாக திருமணத்தின் போது தாலி கட்டுதல் போன்றவற்றை) முஸ்லிம்கள் உள்வாங்கிக் கொள்ளலாமா?

பதில்: அந்நிய கலாசாரங்களிலுள்ள எந்தவொரு நடைமுறையும் இஸ்லாத்துக்கு முரணாக இல்லையென்றால், அதை முஸ்லிம்கள் உள்வாங்கிக் கொள்வதில் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை!

தாலி கட்டுவது இந்துக்களின் சடங்கு என்பதற்காக அதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று ஒரு இஸ்லாமியன் நினைத்தால், விலகியிருக்கலாம். ஆனால், ஏதோவொரு வகையில் அந்தக் கலாசாரம் முஸ்லிம்களுக்குள் புகுந்து விட்டது. அதேவேளை, தாலி கட்டுதல் எனும் அந்நியக் கலாசாரமானது இஸ்லாத்துக்கு எந்தவொரு வகையிலும் முரணானதாகவும் இல்லை! எனவே, இதை நாம் பின்பற்றலாம். தவறில்லை!

இந்துக்கள் தாலி என்பதை மிகவும் புனிதமானதொரு அடையாளமாகக் கருதுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறு பார்ப்பதில்லை! மேலும், தாலி கட்டுதல் இஸ்லாமியச் சடங்கு அல்ல என்பதிலும் முஸ்லிம்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

எவ்வாறிருந்த போதிலும், முஸ்லிம்கள் தனி அடையாளமுள்ள ஓர் இனம் என்கின்ற வகையில், தங்களுடைய கலாசாரங்களை மட்டும் அவர்கள் பின்பற்றுவதென்பதே சரியான முறையாகும்!

 கீழ்காணும் சுட்டியில் இந்த நேர்காணலை முழுமையாக பார்வையிடலாம்:

நன்றி : காற்று


(இந்த நேர்காணலை 27ஆகஸ்ட் 2009 ஆம் தேதி வீரகேசரி வெளியீடான விடிவெள்ளிபத்திரிகையிலும் காணலாம்)
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: