தோழமையுடன்

Saturday, May 11, 2013

திரை நீக்கும் தொழுகை!

 தொழுகை “பாவம்” எனும் அழுக்குகளையும் வேற்றுமையினால் (கைரியத்*) ஏற்படும் மனகளங்கங்களையும் அல்லாஹ்தாலாவின் தரிசனையை விட்டும் தூரப்படுத்தும் சிருஷ்டிகள்(அனைத்தையும்) விட்டு மனதை பரிசுத்தபடுத்துகிறது. 

வேற்றுமைகளை விட்டும் சுத்தமாகும் தருணம் கல்பின் திரைகள் நீங்கிவிடுகின்றன.- (நூல்:ஹிகம்).

"கைரியத*" என்பது  இறைவனை விட்டு மனதால் பிரிந்து தனியே தன்னை விளங்கும் நிலையை குறிக்கும். இதை பற்றிய ஆழமான விளக்கத்தை முறையான இறைஞான அறிஞர்களை அணுகி பெறுதல் நலம். இந்த கட்டுரையை விளங்க இந்த அளவு விளக்கமே போதுமானது.

 0 0 0

இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது என் சங்கைக்குரிய குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார்கள். அப்போது அவர்கள் செய்யும் வணக்கங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது.  தனியே தொழக் கூடிய   தொழுகையில் வேத வசனங்களை ஓத ஆரம்பித்தால் உலகை மறந்த பேரின்பத்தில்  லயித்து விடுவார்கள். இறைவேதத்தின் ஆழமான அர்த்தங்களில் மூழ்கிய பேரின்ப நிலையில் ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் பல முறை ஓதுவார்கள்.  அவர்கள் தொழுது முடிக்க வெகு நேரமாகிவிடும். இதை பல முறை பார்த்து வியந்திருகின்றேன்.

அப்போதெல்லாம் அவர்கள் இவ்வளவு லயித்து தொழுகின்றார்கள். நாம் எத்தனை அலங்கோலமாய் தொழுகின்றோமே! அதன் காரணம் என்ன என்ற சிந்தனை என்னை வாட்டும்.

 என் குருநாதரின் உபதேசத்தின் வாயிலாய் வெளிப்படையில் தொழுகையின் நிலைகளையும், ஓதல்களையும் மட்டும் அறிந்திருந்தால் போதாது உள்ளமும் சேர்ந்து தொழ வேண்டும் என்பது புரிந்தது.

யாரைத் தொழுகின்றோமோ அந்த தொழப்படுவோனுடன் (மஃபூதுடன்) உள்ளம் தொடர்பு கொள்ளாத தொழுகையும் ஒரு நல்வணக்கமாகுமா?


அகிமிஸ்ஸலாத்த லி திக்ரிஎன்கிறது இறைவேதம். தொழுகை என்பது இறைஞாபகத்திற்காக என்பது இதன் விளக்கம்.

இறைஞாபகம் (திக்ர்) என்றால் என்ன?

இறைவனின் பெயரை நாவால் உச்சரிப்பது மட்டுமா இறைஞாபகம்.

நான் என் மகன் தாரீக்கை ஞாபகம் செய்கின்றேன்  என்றால் நாவினால் மட்டும் தாரீக்தாரீக் என அவன் பெயரையா உச்சரித்துக் கொண்டிருப்பேன்.

என் மனம் அவன் நினைவின் பக்கம் திரும்பிவிடாதா?

ஆகவே ஒருவரை ஞாபகம் செய்வது என்றால் ஞாபகம் செய்யப்படுவரின் பக்கம் நம் மனதை - கவனத்தை செலுத்துதல்  அவசியம்

அந்த வகையில், தொழுகையில் தொழுபவர் தொழப்படுவனை முன்னோக்கி திரும்பிவிட வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

அடுத்ததாக  சிந்தித்து பாருங்கள். நாம் நம் முன்னே இருப்பவர்களை ஞாபகம் செய்வோமா? செய்ய மாட்டோம். நம் முன்னே இல்லாதவர்களைத் தான் ஞாபகம் செய்வோம்.


பிரிவின் போது தான் ஞாபகம்.

முன்னே இருந்தால் தரிசனம், உரையாடல் என உறவாடல் தொடங்கிவிடும்.

எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) என்கின்ற போது இறையை தூரமாக விளங்கி ஞாபகம் (திக்ர்) செய்வது ஏன்?

இறை முன்னிலையை பெற்றுக் கொள்வதில் எது நமக்கு தடையானது? எது நமக்கு திரையானது?

புலன் உணர்வுகளின் இயலாமையும் – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டித் தந்த இறைஞான விளக்கங்களை அறியாமையும் தான் 'இறைமுன்னிலையை' பெற்றுக் கொள்வதில் நமக்கு திரையாய் போனது.

நீங்கள் இறைவனைக் கண்களால் பார்க்க முடியாது (லா துப்ஸிரூன்) என்று குறிப்பிடும் இறைவசனம் நமது புறப்பார்வையின் இயலாமையைக் குறிக்கின்றது.

இந்த உலகில் பருப்பொருளின்(Matter) தன்மையற்ற இறையை தரிசிக்க பருப்பொருள் தன்மை கொண்ட கண்களால் இயலாது என்பது பொதுவிதி. பெருமானார் விதிவிலக்கு. (மறுமையில் நாம் இறைவனைக் காண முடியும் என்பதை அறிவோம். இந்த உலகத்திலேயே மறுமையின் திரை நீங்கியவர்கள் பெருமானார். தொழுகையிலே சுவர்க்கத்து கனியை பார்த்தது, அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) தவழ்ந்து சென்று சுவர்க்கத்தில் நுழைவதை பார்த்தது போன்ற எத்தனையோ சம்பவங்கள் அதற்கு சாட்சி.)

கண்களால் இயலாது என்றாலும் பொருள்களின் தன்மையற்ற ஆன்மாவால் இறைவனை தரிசிக்க முடியும்.

இறைவனை தரிசித்து “நீ தான்  எங்கள் நாயன்” என சாட்சி சொன்னது நம் ஆன்மா. புலனுணர்வுகளின் ஆக்கிரமிப்பால் மறதியெனும் மேகம் அதில் சூழ்ந்துள்ளது

 வேத விளக்கங்களாய் அமைந்த நபியின் போதனை ஆன்மாவிற்கு அதன் ஆதி நிலையான 'அகப்பார்வை' நிலைக்கு மீட்க்கும் அழைப்பாய் அமைந்துள்ளது. 

இந்த நபிமொழியை கவனித்து பாருங்கள்:

அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) என்ற நபி தோழர் கூறியதாவது

நாங்கள் ஒரு போரில் (கைபரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும் போதும், ஒரு கணவாயில் இறங்கும் போதும் உரத்தக் குரலில் அல்லாஹூ அக்பர் (இறைவன் மிகவும் பெரியவன்)’ என்று கூறிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மக்களே! உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மென்மையாக கூறுங்கள்) ஏனெனில் நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும், (எல்லோரையும்) பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தனது வாகன ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளாரோ அதை விட நெருக்கமாக நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் இருக்கின்றான்என்று கூறினார்கள்.

தப்ஸீர் இப்னுகஸீர்என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில் இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற தலைப்பின் கீழ் புகாரி ஷரீஃபில் உள்ள இந்த நபிமொழியை இப்னு கஸிர் (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 465-466).

'அல்லாஹ் நம்மோடிருக்கின்றான்' என்பதை விளங்கியவர்கள் நபித் தோழர்கள். அவர்களுக்கு எத்தனை இதமான நினைவூட்டலிது.

ஆகவே, 'திக்ரு' எனும்  நினைவூட்டல் என்பதே நாம் அறிந்திருந்த ஆனால் மறந்திருந்த  "இறை முன்னிலையை, இறை நெருக்கத்தை" மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வருவதற்காகத் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

00000


Shibli (rah) said : Wadu is separation and Salat is adhesion. 

Man lam yanfasal lam yattasal. “ He who did not separate did not adhere".

  
அபுபக்கர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் : ஒலு என்பது பிரிவு. தொழுகை என்பது இணைப்பு. யார் பிரியவில்லையோ அவர்கள் இணைப்பை பெற மாட்டார்கள்.


என்ன ‘பிரிவு’ இது? என்ன ‘இணைப்பு’ இது?

இன்ஷா அல்லாஹ் தொடர்சியை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: