தோழமையுடன்

Monday, September 24, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்


பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன.”என்று சகோ. ராஜாராம் கோமகன்  தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஆதங்கத்தை ஆபிதீன் பக்கங்களில்  கண்டேன்.


 இன்றைய இந்த மோசமான சமூக சீரளிவிற்கு தனிமனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்ற குற்ற உணர்வும் அதன் மீட்சிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற சிந்தனையும் மனதில் ஓடியது. சற்றே அந்த வேதனைக்கு ஒத்தடமாக அமைந்த இந்த பதிவை படித்ததும் இது போன்ற செய்திகள் அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என எண்ணம் எழுந்தது. அந்த நோக்கத்துடன் எளிமையாகவும், நகைசுவையாகவும் எழுதும் கவிஞர் அப்துல்கையூமின்  “ நாகூர் மண்வாசனை” பக்கத்திலிருந்து இந்த பதிவை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம் - அப்துல் கையூம்


 சிலநாட்களுக்கு முன்பு இறைவனிடம் கையேந்துங்கள் என்ற நாகூர் ஹனிபாவின் பாடலைப் புகழ்ந்து அந்த பாட்டின் மகிமையை, அப்பாடல் மக்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்பை சிலாகித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். இணையதளத்தில் குறிப்பாக குழுமங்களிலும், பிற வலைப்பதிவுகளிலும், முகநூல்பக்கங்களிலும் அந்த பதிவுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது.


அப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர் என்ற விஷயத்தையும் நாம் அப்பதிவில் கண்டோம். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் அப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.
வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.

நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார். இதை மதநல்லிணக்கம் என்று சொல்லுவதா அல்லது இரு பழைய நண்பர்களின் உணர்ச்சிமயமான சந்திப்பு என்று சொல்லுவதா என்று எனக்கு புரியவில்லை.

மதச்சகிப்புத்தன்மை சிறுகச் சிறுக வெகுவாகவே குறைந்து வரும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற மனிதநேய உறவுகள்  இன்னும் முழுமையாய் மரித்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது இந்த பரஸ்பர சந்திப்பு.


(சுவாமி நித்யானந்தா விஷயத்தில் மதுரை ஆதீனம் அவர்களின் பெயர் சர்ச்சைக்குள்ளான விஷயம் இங்கு நமக்குத் தேவையில்லாதது. உடல் நலிவுற்றிருக்கும் ஒரு நண்பனை நேரில் கண்டு நலம் விசாரித்து, அன்பை பொழிந்த அந்த மனிதநேயப் பண்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்)
- அப்துல் கையூம்


நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனத்தின் சந்திப்பு அடங்கிய அந்த அபூர்வ காணொளியின் சுட்டியை இணைக்க முயன்றேன்.முடியவில்லை. அதனால் சகோ. கையூமின்  சுட்டியிலிருந்து அதை பார்வையிட வேண்டுகின்றேன். நன்றி! - ஒ.நூருல் அமீன்

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

3 comments:

அப்துல் கையூம் said...

மதநல்லிணக்கக் கருத்துக்கள் மக்களை வெகுவாகச் சென்றடைய வேண்டும் என்ற உங்களது நோக்கம் பாராட்டுக்குரியது. எனது பதிவை மீள்பதிவு செய்து இன்னும் பலரபேருக்கு எட்ட வைத்ததற்கு என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-அப்துல் கையூம்

Unknown said...

salam brother ,

whr is my comments if we say the truth u won"t accept FEAR ALLAH(sub)

புல்லாங்குழல் said...

வஅலைக்கும் சகோ!

உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கலாம். அதை வெளிப்படுத்தும் முறையும் கண்ணியமாக இருக்க வேண்டும். இதை படித்து பாருங்கள். இன்று ஒரு நண்பர் இந்த வாசகங்களை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்

��We are very good Lawyers for our mistakes.
Very good Judges for other��s mistakes��

நாம் ஒரு கருத்தை முன் வைக்கும் போதும், எதிர் கருத்தை முன்வைக்கும் போதும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்தால் தேவையற்ற ஃபத்வாக்கள், மனோஇச்சையின் படியான சர்ச்சைகள் இல்லாமல் போகக்கூடும் இன்ஷா அல்லாஹ். நம் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுடனும் செயல்படும் இறைஞானத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக! ஆமீன்.